தமிழ்நாட்டில் இதுவரை - 95 சிந்தனையாளர்கள் - தமிழறிஞர்கள் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. இதில் தி.மு.க. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள 28 அறிஞர்கள் நூல்களோடு 87 தமிழறிஞர்கள் நூல்களை அரசுடைமையாக்கியுள்ளது.

2006 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 65 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, மரபு உரிமையாளர்களுக்கான பரிவுத் தொகையாக ரூ.4 கோடியே 86 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்.17 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில், கவிஞர் கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோர் நூல்களை அரசுடைமையாக்கும் அறிவிப்புக்கு அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு வந்து விட்டது. கண்ணதாசன் மீது தான் கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக கலைஞர் - கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது குடும்பத்தைக் கலந்து ஆலோசிக்காமலே கண்ணதாசன் நூல்களை அரசுடைமையாக்குவதில் அவ்வளவு பற்றுக் காட்டும் கலைஞர், பெரியார் நூல்களை அரசுடைமையாக்காதது ஏன்? பெரியார் மீது அவருக்கு பற்று கிடையாதா?” என்று கழகத் தோழர் நெமிலி திலீபன் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். நல்ல கேள்விதான். பெரியார் மீது உள்ள பற்றைவிட இப்போது வீரமணி மீது கூடுதல் பற்று இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கலைஞர் இருக்கிறார், போலும்!

பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எஸ்.வி.ராஜ துரை, பெரியார் நூல்களை மட்டும் நாட்டுடைமையாக்காமல், கலைஞரும் - வீரமணியும் முட்டுக் கட்டைப் போடுவது ஏன் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக ‘முரசொலி’யில் சின்னக் குத்தூசி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு ஒன்று விசாரணையில் இருப்பதால், அது பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை என்கிறார் சின்ன குத்தூசி. ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியாரின் எழுத்துப் பேச்சுகளை ஆண்டுவாரியாக தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோதுதான் கி.வீரமணி அதற்கு தடை கோரும் வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடரப்பட்டது 6 மாத காலத்துக்கு முன்புதான்.

2006 ஆம் ஆண்டிலிருந்து அரசு பொறுப்பேற்று 65 தமிழறிஞர் நூல்களை நாட்டுடைமையாக்கிய தமிழக அரசுக்கு பெரியார் நினைவுக்கே வராமல் போய்விட்டதா என்பதை மிகச் சிறந்த நினைவாற்றல் உள்ள சின்னக்குத்தூசி அவர்கள் தான் விளக்க வேண்டும். உ.வே.சா. நூல்களை அவரது அறக்கட்டளைதான் வெளியிட வேண்டும் என்று கூறுவதுபோல் பெரியார் நூல்களை அவர் தொடங்கிய அறக்கட்டளை வெளியிட்டு வருவதாக “பெரியார் கண்ட திராவிடர் கழகத்தினர்” கூறுவதால் தமிழக அரசு நாட்டுடைமையாக்கவில்லை என்று சமாதானம் கூறுகிறார், சின்னக் குத்தூசி.

நூல்கள் நாட்டுடைமையாக்குவதற்கான காரணங்களை விளக்கும் சின்னக் குத்தூசி - “மறைமலையடிகள், திரு.வி.க. போன்றோரின் நூல்கள் வெகுகாலத்துக்குப் பிறகும் மறுபதிப்புச் செய்யப்படாமல் நூலகங்களில் மட்டுமே காணக் கூடியவைகளாக இருந்த நிலையை மாற்றி - இந்தப் புதிய தலைமுறையினர் அனைவரது கரங்களிலும் திகழச் செய்ய வேண்டும் என்பது ஒரு காரணம்” என்கிறார்.

‘கல்கி’யின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகுதான், இன்றும் புத்தகச் சந்தைகளில் ‘கல்கி’ நூல்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்துக் கொண்டிருப்பதை பூரிப்போடு எடுத்துக் காட்டுகிறார். இப்படி இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லவும் - பல்லாயிரக்கணக்கில் புத்தக சந்தைகளில் விற்கப்படுவதற்குமான தேவையும் - அவசியமும், பெரியார் சிந்தனைகளுக்கு இல்லையா என்பதே நமது கேள்வி! சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வரும் பெரியார் நூல்கள் அப்படி புத்தக சந்தைகள் முழுதும் விற்கப்படவில்லை என்பதோடு, ஒரு குறிப்பிட்ட ‘வட்டத்துக்குள்’ முடங்கிப் போய் நிற்பது சின்னக்குத்தூசிக்குத் தெரியாதா?

பெரியார் கருத்துகளை - வீரமணி தவிர, வேறு யாரேனும் வெளியிட்டுவிட்டால் திரித்து விடுவார்கள் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.

பெரியாருடைய தனித்துவம் வாய்ந்த பேச்சும் - எழுத்தும் எவருமே திருத்தி - திரிபுவாதம் செய்ய முடியாமல் ‘வெட்டு ஒன்று - துண்டு இரண்டாக’ இருப்பது தானே! ‘நெளிவு சுளிவுகளுக்கு’ திரிபு வாதங்களுக்கு இடம் தராமல் இன்று வரை ‘பார்ப்பன’ சக்திகள் தங்களுக்கு சாதகமாக கையில் எடுத்துக் கொள்ளாத ‘நெருப்புத் துண்டமாக’ விளங்கும் பெரியார் கருத்துகளை எவராலும் திரித்து விட முடியாது. அத்தகைய பேச்சு எழுத்துகளை வெளிவராமல் இருட்டடிப்புக்கு உள்ளாக்குவதுதான் - ஆபத்து. தங்களது திரிபுவாதங்களுக்கு ஏற்ப பெரியார் அறக்கட்டளையின் உரிமையாளர் கி.வீரமணி தான், இத்தகைய இருட்டடிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்.

காலவரிசைப்படி பெரியார் எழுத்து பேச்சுகளைத் தொகுக்காமல், தலைப்புகளின் கீழ் பெரியார் கருத்துகளை வெட்டியும் சுருக்கியும் வெளியிடுவது, பெரியார் பற்றிய முழுமையான பரிமாணத்தை மறைக்கும் இருட்டடிப்புதானே! அதைத் தானே வீரமணி செய்து வருகிறார்! பெரியார் சிந்தனையாளராக திராவிடர் இயக்க எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சின்னக் குத்தூசி அவர்கள் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து விலகி, இதிலும் தி.மு.க.வின் - வீரமணியின் வழக்கறிஞராகவே தன்னுடைய அடையாளத்தைப் பதிவு செய்யலாமா, என்பதே நமது கேள்வி.

Pin It