V. P. Singh“மனிதனாக பிறந்தவன் யாருக்கும் பயனின்றி சாகக் கூடாது” என்ற மாமேதை காரல் மார்க்ஸின் வைர வரிகளுக்கு ஏற்ப வுரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமில்லாமல் மக்களின் மனங்களிலும் வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்டவர்தான் இந்தியப் பிரதமராக வெறும் 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே இருந்த திரு.விஸ்வநாத் பிரதாப் சிங். இந்தியா சுதந்திர பெற்று பல்லாண்டு காலம் கடந்தும் பரந்துபட்ட இந்நாட்டு மக்களிடையில் கல்வி, வேலை வாய்ப்பில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சமநிலைப்படுத்த மண்டல் குழுவின் அறிக்கை மிக பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிறைவேற்றி இந்திய வரலாற்றில் ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்ற வரலாற்று நாயகன் வி.பி.சிங் பிறந்த நாள் ஜுன் 25-இல் அவரது வாழ்வின் சில துளிகள்.

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர் தனது வாரிசாக சிறு வயதில் வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். படிப்பில் மிகச் சிறந்து விளங்கினார்.

வினோபாவாவின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தனது சொந்த நிலங்களை தானமாக வழங்கினார். இதுதான் அவரது பொது வாழ்வின் முதல் நிகழ்வு.

1969-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அரசியல் வாழ்வில் தனது நேர்மையாலும், ஏழை எளிய மக்களின் மீதான அக்கறையும், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்ற எண்ணமும் அவரை தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.

சட்ட மன்ற உறுப்பினராகிய இரண்டாண்டுகளில் 1971-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இவரின் திறமையைக் கண்ட இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக்கினார்.

1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம் நாள் உத்திர பிரதேத்தின் 12-ஆவது முதல் அமைச்சரானார். அப்போது உத்திரபிரதேசத்தின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இருப்பினும் கொள்ளைச் சம்பங்களைக் கட்டுப்படுத்த முடியாததால் பதவி விலக முன்வந்தார். பதவியேற்ற இரண்டு வருடங்களில் பதவியை விட்டு விலகினார்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நிதியமைச்சர் ஆனார். இந்திய நாட்டின் நிதியமைச்சர்களில் திறம்பட செயலாற்றியவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததற்காக இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்கள், பல உயர்குடிகள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடத்தினார் மற்றும் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக உடனே அவரை நிதி அமைச்சரிலிருந்து மாற்றி (1987 டிசம்பர் 24) பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். அத்துறையிலும் நேர்மையுடன் செயல்பட்டு, போர்பஸ் நிறுவனத்திடம் ஆயுதம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது, உடனே யாருடைய அமைச்சரவையில் உள்ளோம் என்பதை பற்றி துளியும் கவலைபடாமல் உண்மையை கண்டறிய நேர்மையாக முறைகேடுகளை வெளிக் கொண்டுவர விசாரணைக்குழு அமைத்தார்.

உடனே அமைச்சரவையிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீக்கப்பட்டு, கட்சியின் அனைத்து பொறுப்புகளும், உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதே அலகாபாத் இடைதேர்தலில தீவிர பரப்புரை மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் சுதந்திரம் பெற்று 28 ஆண்டுகள் ஆனபின்னரும், சில ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியினால் தொடர்ந்து தள்ளிபோகிக் கொண்டே இருந்தது. திரு. மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது நீதியரசர் பி.பீ.மண்டல் தலைமையில் நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க குழு அமைக்கப்பட்டது.

அக்குழு நாடு முழுவதும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு பயணம் மேற்கொண்டு இரண்டாண்டுகள் தீவிர ஆலோசனைக்குபின் அறிக்கையை வழங்கியது. பின்னர் வந்த அரசுகள் அதனை நிறைவேற்ற தயங்கி அதனை அப்படியே 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டது.

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்து, 1989 நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டு 143 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத நிலையில் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க ஆட்சி அமைத்தார்.

தேவிலாலை பிரதமராக பரிந்துரைந்தார், ஆனால் அவர் ஏற்கவில்லை அதன்பின் 1989 டிசம்பர் 2-ஆம் நாள் இந்தியாவின் 7-ஆவது பிரதமராக பதவியேற்றார். இந்தக் காலக்கட்டத்தில்தான் திரு. பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருதும், அம்பேத்கர் திருவுருவப்படமும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

வி.பி. சிங் பிரதமர் ஆனதும் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தனது ஆட்சியே போனாலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியோடு, திரு. ராம்விலாஸ் பஸ்வான் பிற்படுத்தப்படுத்தப்டோர் நல அமைச்சர், அத்துறையின் செயலாளர் திரு.பி.எஸ்.கிருஷ்ணன், இ.ஆ.ப.,(இந்த மூன்று பேரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது) ஆகியோர்களின் முழு ஒத்துழைப்புடன், இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களின் நெருக்கடிக்கு மத்தியில், இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1990-ஆம் ஆண்டு மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் இந்தியாவின் ஏழை எளிய நடுத்தர இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்தியில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை தவிடு பொடியாக்கி, பல விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இவ்வாறு பல நெருக்கடிகளை தாண்டி நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் இன்னும் பல துறைகளில் முழுமையாக அமுல்படுத்த இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சியான தன்னுடைய ஒரு உரையில் சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர், தன்னுடைய லட்சியத்துக்காக உயிர் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார்.

தன் வாழ்நாளின் இறுதிவரை தான் கொண்ட கொள்கையால் தடம் மறாமல் பதவி சுகங்களை விட நாட்டின் வளர்ச்சியும், மக்களின் முன்னேற்றமும், சமூக நீதியும் முக்கியமென வாழ்ந்த மகத்தான தலைவர் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்று நேய் மற்றும் சிறுநீரக பிரச்சனையின் காரணமாக தன்னுடைய 77-ஆவது வயதில் காலமனார். என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் கதாநாயகனாக வி.பி.சிங் சிறந்து விளங்குகிறார்.

- சுபா

Pin It