2009 ஆம் ஆண்டில் கழகத்தின் களப் பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு

ஜனவரி
 
8 சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கழகம் கருப்புக்கொடி. 1000 கழகத்தினர் கைது.
 2008 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த 10 மனிதர்களில் கழகத் தோழரும் - பகுத்தறிவுப் பரப்புரையாளருமான தோழர் சிற்பி ராசன் அவர்களை ‘ஆனந்த விகடன்’ தேர்வு செய்தது. “ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சாமி சிலைகளை செதுக்கிச் செய்யும் சிற்பிகளை உருவாக்கியவர் ராஜன். இவரும் சிஷ்யர்களும் செய்து அனுப்பிய சிலைகள் இன்று உலகம் எங்கும் பல கோயில்களில் அருள்பாலிக்கின்றன. இதுதான் ‘மவுனப் புரட்சி’ என்று ‘ஆனந்தவிகடன்’ எழுதியது.
 
11 சத்தியமங்கலம் அருகே அரியம்பாளையத் தில் பெரியார் பஞ்சாலை கழகம் கழகத்தால் தொடங்கப்பட்டது.
 
18 கோவை வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கு, கழகம் கறுப்புக்கொடி; 50 தோழர்கள் கைது.
 
19 கழகத் தலைவர் கொளத்தூர் மணி - த.தே. பொ.க. பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான், 31 நாட்கள் சிறைவாசத் துக்குப் பிறகு கோவை சிறையிலிருந்து பிணையில் விடுதலை. ஈரோட்டில் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை - தேச விரோத மானவை என்ற தி.மு.க. ஆட்சி இவர்களை கைது செய்தது.
 
29 ‘குடிஅரசு’ வழக்கில் கழகத்துக்கு எதிராக தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி, தஞ்சை ரத்தினகிரி தாக்கல் செய்த மனு. உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.
 ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் கொடியை எரித்ததாக பழனி கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.
 
31 இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை எதிர்த்து, தஞ்சையில் விமான நிலையத்தை முற்றுகையிடச் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் மணியரசன் உட்பட 255 தோழர்கள் கைது.
 
பிப்ரவரி

3 மயிலாடுதுறை வந்த மத்திய அமைச்சர் மணி சங்கர அய்யருக்கு, கழகத்தினர் கருப்புக் கொடி; கைது.
 
15 வீரமரணமடைந்த முத்துக்குமாருக்கு வீர வணக்கம் செலுத்தும் கழகக் கூட்டம். பேரெழுச்சியுடன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது.
 
17 சுப்ரமணியசாமி மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் இன உணர்வு வழக்கறிஞர்கள் முட்டைகளை வீசினர்.
 
20 சிங்கள அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கு வதற்கு தமிழன் பணமா என்ற கேள்வியுடன் வருமானவரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை கழகம் சென்னை, கோவை, ஈரோடு நகரங்களில் தோழமை அமைப்புகளுடன் நடத்தியது; தோழர்கள் கைது.
 
22 ஈழத் தமிழருக்கு ஆதரவு கோரி, சேலத்தில் 8 நாட்கள் தொடர் பிரச்சாரக் கூட்டங்களை கழகம் நடத்தியது. சிற்பி ராசன் ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார்.
 
மார்ச்

2 இந்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தைக் கண்டித்து, பிப். 26 அன்று திண்டுக்கல்லில் கழகக் கூட்டத்தில் பேசியதற்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீண்டும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். புதுவையில் உண்ணாவிரதமிருந்த மாணவர்களிடையே இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப் பட்டார்.
 
5 கழகத் தலைவர் கொளத்தூர் மணியை ஓராண்டு வெளியில் வர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதன் மூலம் தேர்தல் பரப்புரை உரிமையை தி.மு.க. ஆட்சி பறித்துள்ளது என்று கழக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு.
 
9 கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் கைதைக் கண்டித்து, தமிழர் ஒருங் கிணைப்பு சார்பில் சென்னை தியாகராயர் நகரில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சீமான், நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.) கைதைக் கண்டித்து, கழக சார்பில் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
 
23 பெரியார் திராவிடர்க ழக மாநில செயற்குழு சேலத்தில் கூடியது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்ததோடு, காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரசை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்யவும் தீர்மானித்தது.
 
ஏப்ரல்

13 இந்திய அரசே, போரை நிறுத்து என்ற முழக்கத்தோடு சென்னை, கோவை, இராணுவ அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை கழகம் நடத்தியது. தோழர்கள் கைது.
 
15 காங்கிரஸ் துரோகத்தை அம்பலப்படுத்தி, கழகம் வெளியிட்ட குறுந்தகட்டால் பதறிப் போன தி.மு.க. ஆட்சி நள்ளிரவில் கழகத் தோழர்கள் வீடுகளை சோதனையிட்டது. ஈரோடு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், கோவை கதிரவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
 
16 தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கொளத்தூர் மணி, சென்னையில் அறிவுரைக் குழுமத்தின் முன் நேர் நின்று தன்னை தமிழக அரசு உள் நோக்கத்துடன் கைது செய்ததாக வாதிட்டார்.
 
27 கொளத்தூர் மணி பேச்சில் சட்டவிரோதம் ஏதுமில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி யது செல்லாது என்று கூறி தீர்ப்பளித்தது. தோழர் கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி தாக்கல் செய்த கேபியஸ் மனு மீது கழக வழக்கறிஞர் துரைசாமி வாதாடினார்.
 
மே

1 ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனங்களை கோவை நீலாம்பூர் புறவழிச் சாலையில் மறித்து போராட்டம் நடத்திய கழகப் பொதுச்செயலாளர், கோவை இராம கிருட்டிணன் உட்பட கழகத்தினரும், ம.தி.மு.க., ஆதித் தமிழர் பேரவையினரும் கைது செய்யப்பட்டனர். தமிழகமே பர பரப்புடன் வியந்தது. கோவை இராமகிருட் டிணன், பெரம்பலூர் லட்சுமணன், சூலூர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

2 மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து, கழகத்தினர் பிரச்சாரம் செய்ததைத் தொடர்ந்து, வேட்பாளர் தயாநிதி மாறனின் ஆட்கள் இராயப்பேட்டை கழக அலுவலகத்தை சூறையாடி, பெரியார் சிலையை சேதப் படுத்தியதோடு, கழகத் தோழர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். கழகத்தைச் சார்ந்த 2 பெண்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
5 சோனியா தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதையொட்டி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.
 
ஜூன்

8 கோவை இராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து, கோவையில் நடந்த கண்டன கூட்டத்தில் கழகப் பொறுப் பாளர்களோடு வை.கோ., தா.பாண்டியன் பங்கேற்றுப் பேசினர்.
 
11 கழகத் தோழர்கள் மீதான பொய் வழக்குகளை சந்திக்க கழகம் வழக்கு நிதி திரட்டியது.
 
13 காங்கிரசுக்கு எதிராக கழகம் வெளியிட்ட குறுந்தகடுகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் இராம. இளங்கோவன் 51 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை.
 
22 சென்னையில் அறிவுரை கழகத்தின் முன் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட் டிணன் நேர் நின்று, தமது கைது உள் நோக்கம் கொண்டது என்று எழுத்துப் பூர்வமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். கோவை இராமகிருட்டிணன் சார்பில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நேர் நின்று வாதாடினார்.
 
26 தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரை, கரூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
 
ஜூலை

9 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்ட தோழர் பெரம்பலூர் இலக்குமணன் அறிவுரைக் குழுமத்தின் முன் நேர் நின்று தனது கருத்துகளை பதிவு செய்தார். தோழர் கேசவன் நீதிபதிகள் முன் வாதாடினார்.
 
21 பல்வேறு ஊர்களிலிருந்து தி.க.விலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்.
 
27 பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடக் கூடாது என்று கி.வீரமணி தொடர்ந்த வழக்கில், வீரமணி மட்டுமே பெரியார் நூலுக்கு பதிப்புரிமை கோர முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு வழங்கினார். பெரியாரை நீதிமன்ற காகிதக் கட்டுக்குள் ‘புதைத்து விடக் கூடாது’ என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
 செங்கல்பட்டில் ஈழப் போராளிகளை பல ஆண்டுகளாக விசாரணையின்றி அடைத்து வைத்திருக்கும் சிறை முகாம்களை இழுத்து மூடக் கோரி காஞ்சியில் மக்கள் மன்றத்துடன் இணைந்து கழகம் ஆர்ப்பாட்டம்.
 
28 3 மாத சிறைவாசத்துக்குப் பிறகு தோழர்கள் கோவை இராமகிருட்டிணன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
 
ஆகஸ்டு

8 சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில், அம்மன் தேர், சேரிக்குள் நுழைய, ஆதிக்கசாதிகள் எதிர்த்ததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டக் கழகம் சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 
9 சென்னை பொது மருத்துவமனையில் எலும்புருக்கி நோய்த் துறையில் ‘கணபதி ஹோமம்’ நடத்தப்பட இருப்பதை அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் விரைந்து செயல்பட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சில மணி நேர இடைவெளியில் சுவரொட்டி ஒட்டி துண்டறிக்கைகள் வழங்கி, காவல்துறையில் முறையிட்டு, யாகத்தை தடுத்து நிறுத்தினர்.
 
16 ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் மாநாடு போல் கழகக் கூட்டம் நடத்தப்பட்டு, ரூ. 50000 வழக்கு நிதி வழங்கப்பட்டது. பெரம்பலூர் இலக்குமணன், மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் கீழ் குடியரசுத் தலைவர் ரத்து செய்தார்.
 
18 இராணுவ வாகன மறிப்பு போராட்டத்தில் சிறைச் சென்ற தோழர்களுக்கு சென்னையில் பாராட்டுக் கூட்டம். கழகப் பொறுப்பாளர்களுடன் வைகோ பங்கேற்றார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத்தினர் கோவை இராமகிருட்டிணன், இலக்குமணன், சூலூர் வீரமணி மற்றும் ம.தி.மு.க. தோழர்கள் சந்திரசேகர், வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் பாராட்டப்பட்டனர்.
செப்டம்பர்
 
15 ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையத்தில் பெரியார் சிலை திறப்பு விழாவை திருச்சி சவுந்தர்ராசன் சிறப்பாக நடத்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், இயக்குனர் சீமான் பங்கேற்றனர்.
 
28 செங்கல்பட்டு, பூந்தமல்லியில் சிறப்பு முகாம் என்ற பெயரில் இயங்கும் சிறை முகாம்களை இழுத்து மூடக்கோரி, சென்னையில் கழகம் ஆர்ப்பாட்டம்.
 
29 சென்னையில் பெரியார் அண்ணா பிறந்த நாள் விழாவை மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் மாநாடு போல் சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.
 
அக்டோபர்

29 ஈழத்தில் முள்வேலி முகாம்களை இழுத்து மூடக் கோரி, பல்வேறு ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
 
31 சென்னையில் அரசு நிதி உதவியோடு நடைபெறும் ‘சேவாதள’ பள்ளியில் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை எதிர்த்து கழகத்தினர் நேரில் சென்று நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, கட்டாய சமஸ்கிருத பாடத்தை நிறுத்தினர்.
 
நவம்பர்

7, 8 ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையத்தில் கழகத்தின் பயிற்சி முகாம்.
 
14, 15 கரூர் அருகே வீரராக்கியம் அரவணம்பேட்டையில் கழகத்தின் பயிற்சி முகாம்.
 
22 முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசு கட்ட முயற்சிக்கும் புதிய அணைக்கு - ஆய்வுக்கு அனுமதித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு - கோவையில் கு. இராமகிருட்டிணன் தலைமையில் கழகம் கறுப்புக்கொடி; தோழர்கள் கைது.
 
23 பசுக்களைப் பாதுகாக்க பசுவதை தடை சட்டம்கோரி, ஆர்.எஸ்.எஸ்.சின் விசுவ மங்கள கோமாதா யாத்திரை குழு சேலம் வந்தபோது எருமை, ஆடு, கோழிகளுடன் ஊர்வலமாக சென்று, “நாங்கள் என்ன பாவம் செய்தோம்?” என்ற கேள்வியோடு பார்ப்பனர் கலாச்சாரத்தில் வேத காலத்தில் மாட்டுக்கறி உண்பதை விளக்கி, துண்டறிக்கைகளை கழகத்தினர் வழங்கினர். தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதே குழுவினர், நவம்பர் 20 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் வந்தபோது சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அதே போன்று துண்டறிக்கைகளை வழங்கினர்.
 
26 தமிழ் ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் தழுவிய மாவீரர்களின் நினைவு நாளன்று மாவீரர் நாளை சென்னை, திருப்பூர் உட்பட பல்வேறு ஊர்களில் கழகத்தினர் நடத்தி, வீர வணக்கம் செலுத்தினர். மேட்டூர் அருகே விடுதலைப் புலிகள் பயிற்சி நடந்த பகுதியான புலியூரில் கழகத்தினர் குடும்பத்தோடு, மெழுகுவர்த்தி ஏற்றி, மாவீரர் நாளில் வீரவணக்கம் செலுத்தினர். புதுவையில் கழக சார்பில் கரும் புலி காப்டன் மில்லர் பெயரில் புதிய அரங்கம் ஒன்று கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

 சென்னையில் நடந்த சாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நினைவு நாள் கூட்டத்தில் மீண்டும் கிராமங்களில் நிலவும் தீண்டாமைக்கு எதிரான கிளர்ச்சியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

டிசம்பர்

4 1996 இல் பெரியார் நினைவிடத்தைப் பார்வையிடச் சென்ற கழகத் தோழர்கள் தமிழ்ப்பித்தன், வெண்மணி உட்பட 12 தோழர்களை பெரியார் திடலைக் கைப்பற்ற வந்ததாக மூர்க்கத்தனமாக தி.க.வினர் தாக்கியதோடு, தோழர்கள் மீது வீரமணியை கொல்ல முயன்றதாக பொய் வழக்கும் தொடர்ந்தனர். 16 ஆண்டுகளாக தோழர்கள் அலைகழிக்கப்பட்டனர். டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை - எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தி.க. தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
 
- நமது செய்தியாளர்