திராவிடர் இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலகக்காரர் தோழர் பெரியார். திராவிடர் இனமான மீட்புப்பணியில் எந்தப் பொருளையும், நிகழ்வையும் ஆரியர், திராவிடர் இனப்போராட்டமாகவே பார்த்து, திராவிடர் இன மீட்சிக்கு அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு நிலையை மேற்கொண்டு, புத்தருக்குப் பின்னால் பார்ப்பன ஆதிக்கக் கட்டமைப்பை முற்றிலும் துடைத்து எறியப் போராடியவர் தோழர் பெரியார்.

தன்னுடைய தலைமை மாணவராக இருந்த தோழர் அண்ணா அவர்கள் தோழர் பெரியாரையும், பெரியார் இயக்கத்தையும் விட்டுப் பிரிந்து தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 1967 இல் இராஜாஜி மற்றும் சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றிக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைக் குறித்து இன்றைய இளைய தோழர்கள் அறிந்து கொள்ளவும், இன்றைய தமிழக அரசியலோடு ஒப்பிட்டுக்கொள்ளவும் மீள்பதிவுச் செய்யப்படுகிறது.

periyar ANNA 600உணர்ச்சிப் பெருக்கில் பெரியார்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 1967 சட்ட மன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வந்த வேளையில் பெரியாரின் எண்ணம் காமராசரையே சுற்றிச் சுற்றி வந்தது. காமராசரை ஒழித்தால் சமதர்மத்தை ஒழித்தது போலாகும் என்பதால் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்க நினைக்கின்றனர். இன்று நாட்டில் நடப்பது இனப்போரே ஆகும். மத, மூட நம்பிக்கையாளர்களால் சமதர்ம ஆட்சியை ஏற்படுத்திட முடியாது. மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஆச்சாரியாருக்குக் கண்ணீர்த் துளிகளே நாற்காலி ஆகி விட்டனர். எனவே அவர்களையும் புறக்கணியுங்கள் என்று தாம் பேசிய கூட்டங்களில் விவரித்தார்.

சுதந்திரம் அடைந்தது முதல் இந்த நாட்டை ஆண்டு வந்த பலம் பொருந்திய காங்கிரசை அகற்ற, அண்ணா பிற கட்சிகளைத் தன்னுடன் கூட்டணியாகச் சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தார். ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காயிதே மில்லத் அவர்களின் முஸ்லீம் லீக், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசு கட்சி, மூக்கையா தேவரின் பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருந்தன.

பெருந்தலைவர் காமராசரின் ஆட்சியில் தமிழகம் பெரும் முன்னேற்றங்களைக் கண்டதோடு பெரியாரின் கனவுகளை நனவாக்கி நல்லாட்சி புரிந்தது என்பதால் நிபந்தனையற்ற தனது ஆதரவைக் காங்கிரஸ் இயக்கத்திற்கு அளிக்க வேண்டியவரானார் பெரியார். அதற்கேற்ப தனது 88 வது பிறந்தநாள் விழா அறிவிப்பில்,

“எனது கனவுகள் நனவாக, நேரிடையாகச் செயல்படுவது எனக்குத் திருப்தி அளிக்கக்கூடியது அல்லவா? எனவே நான் எனது இலட்சியத்தில் மனக் குறையடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கிறேன். இதை 4, 5 மாதங்களுக்கு முன் காமராசர் வெளியிட்டார்.”

பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதாகப் பேசினார்.

“இனி எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால் அது மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை, காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலத்தை என்றுமே அடைய முடியாது என்பதோடு அதிக காலம் நிலைக்கவும் முடியாது. ஆகையால் அதை ஒரு குறையாகக் கருத வேண்டியதில்லை.

ஆனால் சண்டித் தொல்லையாகவே கருதுகிறேன். மனிதன் துன்பத்திற்கு ஆளாகாவிட்டாலும், தொல்லைக்கு ஆளாவது சகஜம் தான். எனது அருமைத் தோழர்களுக்கு, தேர்தல் முடியும் வரை காங்கிரசை நிபந்தனையின்றி ஆதரித்து, காங்கிரஸ் முழு வெற்றியடையப் பாடுபட வேண்டுமென்பது தான் எனது கட்டளை போன்ற விருப்பமாகும்.

தேர்தலுக்குப் பிறகு பெரிய புரட்சிப் பணி நமக்கு இருக்கிறது. அதற்குள் தோழர்கள் தங்கள் குடும்பப் பணிகளையும் முடித்துக்கொண்டு, போர்முனைக்குச் செல்லும் போர்வீரன் போல் தாய், தந்தை, மனைவி மக்களிடம் பயணம் சொல்லிக் கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும்.”

என்று சட்டமன்ற தேர்தலுக்கு திராவிடர் கழகத் தோழர்களுக்குத் தனது எண்ணத்தை வெளியிட்டார்.ஆனால் பெரியாரின் எண்ணத்திற்கு ஏற்ப காங்கிரசின் செயல்பாடுகள் இல்லை.

தள்ளாத வயதிலும் தாம் மேற்கொண்ட முடிவால் காங்கிரசை ஆதரித்து நாடு முழுதும் பிரச்சாரம் செய்தார் பெரியார். ஆனால் முடிவோ வேறாக இருந்தது. மகத்தான வெற்றியை திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணி பெற்றது. தனிப் பெரும்பான்மையோடு தேர்தலில் திமுக வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காமராசரும் தன் விருதுநகர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

காங்கிரசின் படுதோல்வியும், குறிப்பாகக் காமராசரின் தோல்வியும் பெரியாரை மிகவும் பாதித்தது. ஆச்சாரியாரைக் கூட்டு சேர்த்துக்கொண்டு அண்ணா வென்றதில் கூடுதல் எரிச்சல் அடைந்திருந்தவர் அது குறித்துத் தனது கருத்தை வெளியிட்டார்.

“பொதுவாக காமராசர் தோல்வியைத் தவிர மற்ற தோல்வி எதுவும் எனக்கு அவ்வளவாகக் கவலை தரவில்லை. நமது மக்கள் ஜனநாயக உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்பது எனது வெகுநாளைய கருத்து. இப்போதைய வெற்றியை மாற்றவேண்டும் என்பதில் இந்த வெற்றியை அளித்த மக்களின் யோக்கியதையைச் சரிவர நிர்ணயிப்போமானால், நாம் ஒன்றும் தனி முயற்சி எடுத்துப் பாடுபட வேண்டியதில்லை.

நம் உயிர் போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறோம். பொதுவாக, இதுபோன்ற பார்ப்பனர் வெற்றி பற்றி எனக்கு இதற்குமுன் மூன்று அனுபவங்கள் உண்டு. மூன்றிலும் பார்ப்பனர் வெற்றி நிலைத்த பாடில்லை. ஆதலால் இன்றையப் பார்ப்பனர் வெற்றி பற்றியும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை என்றே நம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நானும் அதிகக் கவலைப்படவில்லை.

பொதுவாக நம் நாட்டுக்கு இப்படி ஓர் நிலை வரக்கூடும் என்று கருதியே 1963 ல் காமராசர் தமிழ்நாட்டு முதல் மந்திரி பதவியைவிட்டு அகில இந்தியக் கட்சிப் பணிக்குச் சென்றபோதே நான் கூடாது என்று பத்திரிகையில் எழுதியதோடு “தங்கள் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்” என்று தந்தியும் அனுப்பினேன்.

அவர் விலகியதன் பயனாகத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுவதுடன், பொறுப்புள்ள ஆட்சி அமைவதற்கில்லாமலே போய்விட்டது. வடநாட்டிலும் பொறாமை, துவேஷம், கோஷ்டி ஏற்பட இடம் ஏற்பட்டுவிட்டது.

காமராசர் தோல்வியைப்பற்றி, பலர் என்னிடம் வந்து துக்கம் விசாரிக்கும் தன்மைபோல், தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல்,

“1967 பிப்ரவரி 23 -ந் தேதி தோல்வியைப்பற்றிக் கவலைப் படுவதைவிட 1966 நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில், அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன். நானும் அப்படியே நினைத்துத்தான் சரிபடுத்திக் கொண்டேன்”.

காமராசரின், காங்கிரசின் தோல்வியைத் தன் தோல்வியாகக் கருதிய பெரியாரின் மனம் இப்படியிருக்க, இமாலய வெற்றியை பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அண்ணா பாராளுமன்றத்திற்காகத் தென் சென்னைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சட்டசபை தி.மு.க. தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெற்றது. தாம் கண்ட தலைவரும், கொண்ட தலைவரும் அவர் ஒருவரே என்று எந்தப் பெரியாரைப்பற்றி அண்ணா கூறினாரோ, அந்தப் பெரியாரை விட்டு விலக நேரிட்டதோடு, அவரால் 18 ஆண்டு காலம் ஏச்சுக்கும், பேச்சும் ஆளானாரோ அந்தப் பெரியாரைக் காணவேண்டும். அவரிடம் வாழ்த்துப் பெற வேண்டும் என்ற தனது எண்ணத்தைக் கழக முன்னணியினருக்குத் தெரிவித்தார். ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர் அவர்கள். பெரியாரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற அண்ணாவின் உறுதி 02..03.1967 அன்று நிகழ்ந்தது.

திருச்சியில் இருந்த பெரியாரைச் சந்திக்க நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோருடன் காரில் புறப்பட்ட அண்ணா, தன் குழுவினருடன் சென்று பெரியார் தங்கியிருந்த இல்லம் சென்றார். அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற அன்னை மணியம்மையார், தந்தை பெரியாரிடம் விவரம் கூற, உணர்ச்சிவயப்பட்டவராக இருந்த பெரியாரிடம் சென்ற அண்ணா, “அய்யா நலமாக இருக்கின்றீர்களா?” என்று கேட்க, தடுமாற்றத்துடன் “சுகமாக இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நலமா? ரொம்ப சந்தோஷம்” என்றார். உணர்ச்சிப் பெருக்கில் இருவர் கண்களிலும் கண்ணீர்.

06.03.1967 அன்று தாம் முதலமைச்சராகப் பதவி ஏற்க இருப்பதைச் சொன்ன அண்ணா, தங்கள் ஆசி பெற்றுச் செல்லவே வந்தோம் என்றார். சிற்றுண்டிக்குப்பின் விடை பெற்ற அண்ணாவிடம், என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள் என்றார் பெரியார். அச்சமயம் அவர்களின் மனதில் என்னென்ன ஓடின என்பது அவர்கட்கே வெளிச்சம்.

உணர்ச்சிப் பெருக்கில் மெளனமாகிப் போன பெரியாரிடம் “நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்லித்தரவேண்டும்” என்றார் அண்ணா. சற்று நினைத்துப் பார்த்தால், வரலாற்றில் இப்படியொரு சூழ்நிலை எந்தத் தலைவருக்காவது நிகழ்ந்துள்ளதாவெனில் இல்லை என்பதே உண்மை.

இந்த அமைச்சரவை தந்தை பெரியாருக்குக் காணிக்கை

நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் என்றாலும் நம்மைக் குறை கூறிப் பிரிந்து சென்றவர்கள், நம்மிடம் அன்றாடம் ஏச்சையும், பேச்சையும் வாங்கி கட்டிக் கொண்டவர்கள், கொஞ்ச நஞ்சமல்ல, பதினெட்டாண்டு காலம் இத்தகைய நிலையில் வளர்ந்தவர்கள் என்றாலும் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் ஏதும் கொள்ளாமல் நிலைநிறுத்தியதோடு, வளர்ந்து, உயர்ந்து இன்று ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஆளாகி எவ்வித விரோத எண்ணமுமின்றி, தம் வாழ்நாளில் வேறு ஒருவரைத் தம் தலைவரென ஏற்றுக்கொள்ளாக் காரணத்தால் திறந்த மனதோடு வெற்றி பெற்றதும் உடனடியாகக் ஓடோடி வந்து தம்மிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற அண்ணாவையும், அவர்தம் தம்பிமார்களையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த நிலையில் இருந்தார் பெரியார்.

இருந்தாலும் பார்ப்பனத் தலைவர் ராஜாஜியின் ஒத்துழைப்போடு அண்ணா வெற்றி பெற்றது முழு அமைதியை அவருக்குத் தரவில்லை.அவர் அமைதி பெறும் வகையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தேறின.

06.03.1967 அன்று தன்னோடு நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, மதியழகன் கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக் பாட்சா மற்றும் முத்துசாமி ஆகியோரை அமைச்சர்களாக இணைத்துக்கொண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற  அண்ணா “இந்த அமைச்சரவை தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார். தம் ஆயுளுக்குள் இது நிகழும் என்று முன்னமே எண்ணியிருந்திருப்பாரோ? 01.01.1962 நாளிட்ட விடுதலையில் அவர் எழுதிய ஓர் அறிக்கையில் இருக்கும் இந்த வரிகள் அதனை உறுதி செய்யும் முகத்தான் உள்ளனவே?

“இனி கண்ணீர்த்துளிக் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால் பார்ப்பன வெறுப்புக் காரணத்தைத்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்திற்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம்”

பெரியாரின் எண்ணமும் நிலையும் இவ்வாறு இருக்க திராவிடர் கழகத்தார் சிலரின் எண்ணம் வேறாக இருந்தது. அவர்கள் அண்ணா திரும்பி வந்து பெரியாரைச் சந்தித்ததும், பெரியார் அவர்களை அரவணைத்ததும் அவர்களுக்கு ஏற்பில்லை. அதனை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஆனால் அந்தக் கருத்துக்களைப் பெரியார் ஏற்கவில்லை. தம் வாழ்வில் இன நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர், அதற்காக எதையும் விலை கொடுக்கத் தயாரானவர் என்ற காரணத்தால் தன் தொண்டர்களின் எண்ணங்களுக்குத் தெளிவான தனது பதிலை 09.03.1967 விடுதலையில் விரிவாகக் கூறினார்.

“தேர்தல் முடிவுக்குப் பின்னிட்டு நான் தெரிவித்த எனது கருத்தாகிய அறிக்கைகளைப் பற்றி எனது தோழர்களிடையிலும், காங்கிரஸ்காரர்களிடையிலும், பொது மக்களிடையிலும் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிலரை நேரில் பார்த்த அளவிலும், சிலரால் எனக்கு எழுதப்பட்ட கடிதங்களைப் பார்த்த அளவிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னைக் கண்டு பேசிய பிறகு எனது கருத்து மாறிவிட்டதாகவும் எனது எதிர்ப்பு உணர்ச்சியை நான் கைவிட்டு விட்டதாகவும் எதிரிகளுக்கு ஆதரவாகப் போவதாகவும், இதனால் எதிர்காலம் மிகவும் மோசமாய்ப் போய்விடுமென்றும், நாம் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் எதிரிகள் தலை கால் தெரியாமல் ஆடுவார்கள் என்றும் இதனால் சாதாரண மக்களும், நம் கழகத் தோழர்களும் பழி வாங்கப்படுவார்கள் என்றும், என்னை நம்பியவர்களை நான் காட்டிக் கொடுத்து விட்டதாக ஆகுமென்றும், முடிவாக நானும் எதிரிகளைக் கண்டு பயந்துபோய் வளைந்து கொடுத்து விட்டேன் என்றும், பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டேன் என்றும், இந்த நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லையென்றும் தெரிவித்திருப்பதோடு, சிலர் கடுமையான பதங்களைப் பிரயோகப் படுத்திக் கீழ்த்தரமான தன்மையில் கையெழுத்தில்லாத கடிதங்கள் மூலமும் தெரிவித்திருக்கிறார்கள்.

இவற்றைக் கண்டு நான் ஆச்சர்யப்படவில்லை. மனதில் இதைப்பற்றி எவ்வித கலக்கமும் கொள்ளவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட சமயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் யாருடைய யோசனையையும் நான் கேட்க வேண்டுமென்று கருதி இருந்தவனல்ல. அன்றியும் பிறர் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிச் சிந்தித்து நடக்கவேண்டும் என்ற கவலை கொண்டவனுமல்ல. மற்றறென்ன வென்றால் இப்படிப்பட்ட சமயத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவன் என்றும், அதற்கு நான் ஒருவன் தான் நடுநிலைமையில் இருப்பவன், இருக்க வேண்டியவன் என்றும் கருதிக்கொண்டிருப்பவன்.

ஆனதால் எனது கருத்தைத் தெரிவித்துக் கொண்டதற்காக மற்றவர்கள் என்மீது ஆத்திரப் பட்டவர்களானால், அதற்காக வருத்தப்படுவதோ, அல்லது என் கருத்தைத் திருத்திக் கொள்வதோ மாற்றிக்கொள்வதோ என்றால் அது எனது பதவிக்கு அழகல்ல என்றுதான் நான் கருதிக்கொள்ள வேண்டும்.

இன்றைய நிலைமை மிகமிக அதிசயமானதும், நெருக்கடியானதும் ஆகும். இராஜாஜி இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது என்ன சொன்னார்? ‘இராமன் குரங்குகளைப் பயன்படுத்திக்கொண்டது போல் நான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். இவர்கள் கைக்கு ஆட்சி வரும் படியாகக் காங்கிரசைத் தோற்கடித்தால்தான் காங்கிரசுக்கும் காங்கிரஸ் ஆதரவாளர் களுக்கும் வெட்கம் வரும். காங்கிரசுக்குச் செருப்பால் அடித்தது போன்ற அடி கொடுக்க வேண்டுமானால் இவர்களைக் கொண்டு காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும்’ என்பதாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொன்னார்.

அந்தப்படியே காங்கிரசைத் தோற்கடித்து இவர்களைக் கொண்டு வந்து பதவியில் வைத்து விட்டார். பதவிக்கு வந்தவர்களும் இராஜாஜியால்தான் பதவிக்கு வந்தோம் என்று கருதி நன்றிமேல் நன்றி தெரிவித்து, ஆசிர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நமது கடமை என்ன? உட்கார்ந்து கொண்டு அவமானப்பட்டதாகக் காட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நாமாக அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதா?

கூடுமானவரை தொல்லை கொடுக்க வேண்டிய அவசியம் நேரிடாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியையாவது செய்து பார்த்து விடுவதா? நாம் தொல்லை கொடுப்பது என்று ஆரம்பித்துவிட்டால் குதூகலமாய்ப் பின் விளைவுகளைப்பற்றிக் கூட எண்ணாமல் நமக்கு ஆதரவு கொடுக்க மக்கள் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இதனால் பதவியிலிருப்பவர்கள் தொல்லைப்படலாமே தவிர மாறுதலடைந்து விட முடியுமா? அவர்களைப் பாதுகாப்பதற்கென்று பார்ப்பனர், பத்திரிகைக்காரர், பணக்காரர் முன்வருவார்கள். நாம் இந்த நான்கு தரப்பாரையும் சமாளிக்க வேண்டும். நம்மால் சமாளிக்க முடியும். ஆனால் பொது மக்கள் மீது இப்போது அவ்வளவு சுமை ஏற்ற வேண்டுமா?அவ்வளவு அவசியம் நமக்கு இருக்கிறதா?

ஏனென்றால் அண்ணாதுரை தீர்க்கதரிசி அல்லவானாலும் கெட்டிக்காரர். எவ்வளவு சீக்கிரம் அவர்களை (பார்ப்பனர்களை) விட்டு வெளியேற முடியுமோ வெளியேறி நமது மந்திரியாக ஆனாலும் ஆகக்கூடும். நமக்கே அண்ணாதுரை மந்திரி சபையை ஆதரித்து மறுபடியும் அவரே  வந்தால் தேவலாம் என்று கருதும் படியான நிலைமை வந்தாலும் வரலாம்.

நாம் காமராசரின் கையைப் பலப்படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் இருந்தோம், இருக்கிறோமே தவிர காங்கிரசின் அடிமையல்லவே. அதுவும் நிபந்தனையற்ற அடிமை அல்லவே. அப்படியிருந்தால் பக்தவச்சலம் கண்டன நாள் கொண்டாடி இருப்போமா? இன்றுதான் ஆகட்டும். நாம் எந்த அளவில் இந்த மந்திரி சபையை ஆதரிப்பவர்களாக ஆகிவிட்டோம்? கொஞ்ச நாளைக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்கின்ற நிலையில்தானே இருக்கிறோம்.

காங்கிரஸ்காரரை நினைத்துக்கொண்டு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பக்தவச்சலமே இவர்களுக்கு ஆறு மாத வாய்தா கொடுத்திருக்கிறாரே. நான் அப்படி வாய்தாகூடக் கொடுக்க வில்லையே? சமயம் எதிர்பாருங்கள் என்பதாகத்தானே சொல்கிறேன்? இதனால் நான் பயந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதனால் எனக்கு உள்ள மரியாதை எவ்வளவு? தோழர்களே மனதை விட்டுவிடாமல் உறுதியான மனத்தைக் கொண்டு எதையும் சிந்தியுங்கள்.”

பெரியாரின் விரிவான, விளக்கமான இந்த அறிக்கையால் திராவிடர் கழகத் தொண்டர்களும், நடுநிலை வகிப்போரும் அமைதி கொண்டனர்.பதவியேற்ற அண்ணா தனது அமைச்சரவையைப் பார்ப்பனர் எவரும் இல்லாதவாறு அமைத்தார். பதவியேற்பின்போது உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வரலாற்றில் முதன்முறையாக, “கடவுள் சாட்சியாக” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் “உளமார” எனச் சொல்லிப் பதவியேற்றது போன்ற நடவடிக்கைகள் பெரியாரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தன.

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி வைத்துத் தேர்தலில் வென்ற ராஜாஜி எப்படியும் அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று எண்ணியது ஈடேறவில்லை என்ற காரணத்தால் சபாநாயகர் தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைய நேரிட்டது. அதன் பின் ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த ராஜாஜி ‘தேன் நிலவு முடிந்து விட்டது’ என்றார். பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கையை அண்ணா கைவிடவில்லை என்ற நிலையில் பெரிதும் ஆனந்தமடைந்தார் பெரியார்.

பெரியாரும் அண்ணாவின் ஆட்சியும்

எதிர்பாராத வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதையும், தம்மினத் தலைவராம் ஆச்சாரியாரின் துணையோடு வெற்றி பெற்ற பின்னர்,அவர் விரும்பியவாறு அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணித்த தையும்,அனைத்திற்கும் மேலாக எவரும் எதிர்பாராத திருப்பமாகத் தந்தை பெரியாரைச் சந்தித்த அண்ணா ஆட்சியே அவருக்குக் காணிக்கை என்றதும் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு மிகுந்த எரிச்சலையூட்டின.

‘கண்ட்ரோல் என்பதே எனக்குப் பிடிக்காது’ என்று ஆச்சாரியார் சொல்வது போலவும் ‘அதனால்தான் என்மீதுள்ள உங்கள் கண்ட்ரோலை நான் மெல்ல மெல்ல விலக்குகிறேன்’ என்று அண்ணா கூறுவது போலவும் கேலிச் சித்திரம் வெளியிட்டது ஆனந்த விகடன்.

பெரிய சிம்மாசனத்தில் பெரியார் அமர்ந்திருப்பது போலவும், அண்ணாவும், அமைச்சர் பெருமக்களும் எதிரே மரியாதையோடு நிற்பதை ஆச்சாரியார் ஒளிந்திருந்து பார்ப்பது போலவும் ‘யாமிருக்க பயமேன்’ என்ற தலைப்பில் நகைச்சுவைப் படம் வெளியிட்டது சுதேசமித்திரன்.

அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் பெரியார் விடுதலையில் ஆட்சியாளர்கட்கான பல அறிவுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். மக்களின் உணவுப் பிரச்சனைகளைச் சமாளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி அளிப்பது, அதிலும் ஆங்கிலவழிக் கல்வியின் முக்கியம் ஆகியன பற்றி எழுதினார்.

16.04.1967 அன்று சென்னை கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற மின் பெயர்ப் பலகையை முதலமைச்சர் அண்ணா திறந்து வைத்தார். அரசுக் கோப்புகளிலும் நடைமுறைகளிலும் மரியாதை நிமித்தமாகக் கூறப்பட்டு வந்த $, $மதி, குமாரி போன்ற வடசொற்களுக்கு மாற்றாக திரு, திருமதி, செல்வி என்ற சொற்கள் பயன்படுத்தப்படும் என்ற அரசாணை 26.04.1967 அன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுகளால் மகிழ்ந்தார் பெரியார்.

இதே ஏப்ரல் மாதத்தில் சிதம்பரம் நகரில் திராவிடர் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களைப் பாராட்டிப் பேசினார் பெரியார்.

காமராசர் என்ற சொக்கத் தங்கத்தின் மேலிருந்த ஈடுபாடு காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கத் தொடங்கிய அன்றைய நிலையிலும், காங்கிரசைப் புறந்தள்ளவில்லை என்பதும், தமது செயலுக்காக அவர் சிறிதும் தயங்கவில்லை என்பதும், காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை அண்ணாவைச் சார்ந்தோர் விரும்புவரோ என்ற அய்யம் இல்லாமல் கலந்துகொண்டது வியப்பளிப்பதோடு அன்றைய அரசியல் நாகரிகத்திற்கும் பெரியாரின் தனித்துவத்துக்கும் இது ஓர் உதாரணமாய்த் திகழ்ந்தது என்றால் மிகையில்லை.

சமதர்மத் திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் மகிழும் வகையில் 19.04.1967 அன்று தனியார் மின் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அண்ணா வெளியிட்டார்.

28.04.1967 அன்று பெரம்பலூர் மாவட்டம், ஓகளூர் என்ற ஊரில் அரசுப் பள்ளியில் புதிய கட்டடத் திறப்பு விழா அமைச்சர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரியார், முதல்வர் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

அண்ணாவின் ஆட்சியை அவ்வப்போது பாராட்டி வந்த பெரியார் சில விஷயங்களைக் கண்டிக்கவும் தயங்கவில்லை. ரூபாய்க்கு ஒருபடி அரிசித் திட்டத்தை தவறு என்றார். ‘இதனால் மிக்க நட்டம் ஏற்படும். இந்த அரிசி விலை குறைப்பே நியூசன்ஸ், அனாவசியத் தொல்லை’ என்றார்.

07.06.1967 அன்று திருச்சி மாநகரில் பெரியார் மாளிகையில் பெரியாரால் நடத்தி வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் மகள் உஷாவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா ஆற்றிய வரலாற்று சிறப்பு வாய்ந்த உரை இதோ:

“என்னுடைய பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவரான பெரியார் அவர்களே, நமது தமிழ்நாட்டில் மட்டும் வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும் ஒருவர் எஞ்சினீயராகவும் ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி, அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான். இவன் அவனுக்கு அடுத்தவன் எஞ்சினீயராக இருக்கிறான். அவன் சிறியவன் வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள் என்று கூறிப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார்.

அதுபோலப் பெரியவர்கள், நம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், அவன் என்னிடமிருந்தவன், இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை இந்தியாவிலேயே, உலகிலேயே பெரியார் ஒருவருக்குத்தான் உண்டு.

காங்கிரசில் இருப்பவர்களைப் பார்த்து, திமுகவில் இருப்பவர்களைப் பார்த்து, கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து இவர்கள் என்னிடமிருந்தவர்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன், இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர் ஒருவரையே சாரும்.

அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோது கூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை. அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகிறேன்.

சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கம் அல்ல. மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் இயக்கமாகும். சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவு இயக்கம். தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக் கொண்டது. பகுத்தறிவுவாதிகளாகிய நாங்கள் பகுத்தறிவால்தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம்.

சுயமரியாதை இயக்கம் வளர்ந்து பெண்ணுரிமையைப் பெற்றிருக்கிறது. ஆலயங்களில் நுழையும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழர்களின் குடும்பங்களில்பல, சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தி யிருக்கின்றன. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் அதனால் ஏற்படும் தொல்லைகளைப் பொருட் படுத்தாது, மக்களுக்காகத்தானே சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்தற்கு உரியவர்கள் ஆவார்கள்.

எங்களது ஆட்சியில், விரைவில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படிச் செல்லத் தக்கதாகச் சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படிச் செல்லத்தக்க தாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியாரவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நெடுந்தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டு வந்து கொடுப்பதைப்போல, நாங்கள் பெரியாரிடம் இக் கனியைச் (சட்டத்தை) சமர்ப்பிக்கின்றோம். எனக்கு முன் இருந்தவர்கள்கூட இதைச் செய்திருக்க முடியும். எனினும் நான் போய் நடத்த வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சியடைகிறேன்.”

முதலைமைச்சர் அண்ணாவின் இந்த உரையைக் கேட்ட பெரியார் அவர்கள், மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கே சென்று இந்த உரையை “நான் அருள் வாக்காகவே கருதிப் பாராட்டுகிறேன்”

எனப் புகழ்ந்தார்.

20.06.1967 அன்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஒரு தி.மு.க. உறுப்பினர் “பெரியாருக்குத் தியாகிகள் பென்ஷனும், அரசு மானியமும் வழங்கப்படுமா?” என்று கேட்ட கேள்விக்குப் பதிலுரைத்த முதலமைச்சர் அண்ணா, “இந்த அமைச்சரவையையே அவருக்கு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோமே”  என்றார்.

சொன்னதைச் செய்யும் கொள்கை கொண்ட அண்ணா 28.11.1967 அன்று தமிழ்நாடு இந்து திருமண (திருத்த) மசோதா என்ற பெயரில் சட்டம் கொண்டுவந்து ‘சுயமரியாதைத் திருமணம் சட்டப்படியாக செல்லுபடியாகும்’ என்று ஆணை பிறப்பித்தார். இது மட்டுமின்றி இந்த ஆணையில் இதற்கு முன் நடைபெற்ற அனைத்துச் சுயமரியாதைத் திருமணங்களும் செல்லும் என்றும் சட்டம் இயற்றப் பட்டிருந்தது. 06.12.1967 அன்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் மகளின் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் அண்ணா அவர்கள், “இந்தத் திருமணச் சட்டம் பெரியாருக்குக் காணிக்கை” என்றார்.

தன் கொள்கைகள் தன் கண் முன்னே ஈடேறி வரும் உன்னதமான காட்சிகளைக் கண்டு பெரியார் மட்டற்ற மகிழ்வில் திளைத்திருந்தார்.

அண்ணா அவர்கள் நம் நாட்டுக்கு நிதி என்றுதான் சொல்லவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படி துணிந்து ஆட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு மன்றங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா அவர்கள் படம் இருக்கவேண்டும். ஏனெனில் வரலாறு தோன்றிய காலம் முதல் இம்மாதிரிப் பகுத்தறிவாளர் ஆட்சி ஏற்பட்டதே கிடையாது. - தோழர் பெரியார், விடுதலை, 10.09.1968

அண்ணா அவர்கள் நமக்கு கிடைத்ததற்கரியது கிடைத்தது போன்றவராவார்கள்; அவர் போனால் அடுத்த அந்த இடத்திற்குச் சரியான ஆள் இல்லை என்று சொல்லும்படி அவ்வளவு பெருமை உடையவர்கள் நமது நல்வாய்ப்பாக அவரது தலைமையில் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது தமிழர் கடமையாகும். - தோழர் பெரியார், விடுதலை, 06.11.1968

அண்ணா ஒருவர்தான் எந்தப் புரட்சியும் கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக்கொன்று உண்டாக்கினார். ஆனால் அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரை, பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவுப் பெற்று நிறுவியவராவார். - தோழர் பெரியார், விடுதலை, 23.12.1969

யார் ஆள்கிறார்கள் என்பதைவிட எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, வகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைக்கு ஆதரவாகப் பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்த பதவிப் பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யதாது திருப்தி அளிக்கிறது. - தோழர் பெரியார், விடுதலை, 15.09.1967

திராவிட முன்னேற்றக்கழகம் என்பது சற்றேறக் குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு, அடக்கப்பட்டுத் தலை நிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும். - தோழர் பெரியார், விடுதலை, 11.03.1971

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலே பார்ப்பனர் தவிர்த்த மற்றத் திராவிடர் சமுதாயத்திற்குச் சிறப்பாகச் சமூகத்துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக்கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும் படியான நிலையில் இருந்து வருகிறது. - தோழர் பெரியார், விடுதலை, 11.03.1971

தி.மு.கழக ஆட்சியின் மூலந்தான் தமிழன் தான் அடைய வேண்டிய பலனை அடையமுடியும். ஆகவே இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். - தோழர் பெரியார், விடுதலை, 19.02.1973

சான்றுகள்:

1. விடுதலை நாளிதழ்கள்,

2. பெரியார் 95 நூல் - இனியன் பதிப்பகம், சீர்காழி.

Pin It