‘செருப்பை’ அலட்சியப்படுத்திட முடியுமா? முடியவே முடியாது. ‘உனக்காக நான் செருப்பாய்த் தேய்கிறேன்’ என்று கூறும்போது தியாகத்தின் குறியீடாகிறது. ‘உன்னை செருப்பாலே அடிப்பேன்’ என்று ஆத்திரத்துடன் கூறும்போது அங்கே அவமதிப்பின் குறியீடாகி விடுகிறது. அதுதான் மனித உடலைத் தாங்குகிறது. காலில் போடும் செருப்பு, பல நேரங்களில் கைகளுக்கு வந்து விடுகிறது. அப்போது அது போர்க் கருவியாகி விடுகிறது. அமெரிக்க அதிபருக்கு (புஷ்) சரியான பாடம் கற்பிக்க ஈராக் பத்திரிகையாளனுக்கு கிடைத்த ஆயுதம்கூட செருப்புதான். அந்த பத்திரிகையாளன் கையில் எடுத்த செருப்பு, உலகத்தின் கவனத்தையே திரும்ப வைத்தது. ஆக, கவன ஈர்ப்புக் கருவியாகவும் செருப்பு செயல்படுகிறது. 

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கூட செருப்பின் மகிமை தெரியும். சீக்கிய பத்திரிகையாளர் தமது சமூகத்துக்கு இழைத்த அநீதிக்கு எதிராக ப. சிதம்பரத்தை நோக்கி வீசி எறியப் பயன்படுத்தியதுகூட - இதே செருப்புதான். ஆண்களும், பார்ப்பனர்களும் ஆதிக்கசாதியினரும் போடும் செருப்பை, தீண்டப்படாதவர்களும், பெண்களும் போடக் கூடாது என்று எழுதப்படாத சட்டங்கள், இந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தன. இப்போதும் அந்த சட்டங்கள் மறைந்துவிடவில்லை. ஆக - செருப்பு - சாதி, ஆண் ஆதிக்கத்தின் குறியீடாகவும் பயன்பட்டிருக்கிறது. 

இராமபிரான் ‘வனவாசம்’ போனபோது, அவன் தம்பி, பரதன், இராமனின் செருப்பைத் தான் இந்தப் “புண்ணிய பாரதத் தாயின்” அரியணையில் வைத்ததாக இராமாயணம் கூறுகிறது. செருப்பின் ஆட்சி 14 ஆண்டுகாலம் இந்த நாட்டில் நடந்தது என்று கதை எழுதி வைத்திருக்கிறான். அதுதான் ‘ராமராஜ்யத்தின்’ பெரும் சிறப்பு என்று பார்ப்பனர்கள், புராணீகர்கள் தங்களது புராணப் பேச்சுகளிலும் காலட்சேபங்களிலும் பெருமையுடன் எடுத்துச் சொல்லி கசிந்துருகி வருகிறார்கள். அவ்வளவு மானங்கெட்ட நாடு இது! பாரதத்தை ராமன் செருப்பு ஆட்சி செய்த காலம் பிறகு தலைகீழாக மாறியது. அதே ராமனை ‘சூத்திரனும்’, ‘பஞ்சமனும்’ செருப்பால் நையப் புடைத்த வரலாறும் தமிழ்நாட்டில் நடந்தது. அந்த சாதனையைச் செய்த கிழட்டுச் சிங்கம்தான் ஈரோட்டு பெரியார். 

‘ஸ்ரீ’ரங்கத்தில் (திருவரங்கம் என்றும் தமிழில் கூறுவோர் உண்டு) தூக்க மாத்திரைகள் ஏதுமின்றியே - காலம் காலமாக நீங்காத் துயில் கொண்டிருக்கும். “சுறுசுறுப்பான” பகவான் ‘ரெங்கநாதன்’. அவனது செருப்புகூட பக்தர்களுக்கு ‘ஆசி’ வழங்குகிறது. ‘பகவானின்’ செருப்பை வெள்ளியால் செய்து ‘பக்தர்கள்’ தலையில் வைத்து ஆசி வழங்குவதை ‘சடகோபம் சாத்துதல்’ என்று கூறுகிறார்கள்.  

‘பகவான்’ செருப்பை தலைமீது வைத்து ‘ஆசி’ பெறுவதில் நமது சொரணைக் கெட்ட தமிழனுக்கு அவ்வளவு ஆனந்தம்! ‘பாதுகை’, ‘பாதரட்சகை’ என்று செருப்புகளுக்கு புனிதப் பெயர்களையும் பார்ப்பனர்கள் சூட்டி வைத்துள்ளனர். நாம் போட்டால் ‘செருப்பு’; அது ஆண்டவன் செருப்பு என்றால் ‘பாதுகை’. நாம் பயன்படுத்தினால் ‘தண்ணீர்’; அதையே புரோகிதன் பயன்படுத்தினால் ‘தீர்த்தம்’. நம்மிடம் இருக்கும்போது பசுமாட்டு ‘மூத்திரம்’; அதுவே அவாளிடம் போகும்போது ‘கோமியம்; பஞ்ச கவ்யம்’. நம்மிடம் இருந்தால் ‘காசு’, அவாள் தட்டில் விழுந்தால் அதுவே ‘தட்சணை’. இப்படிப் பட்டியல் நீளும். அவையெல்லாம் கிடக்கட்டும்.  

செருப்பு புராணத்தை ஏன் இப்போது பாடிக் கொண்டிருக்கிறாய் என்று வாசகர்கள் கேட்பது புரிகிறது! துடைப்பம், மாட்டுச் சாணம் பற்றி எல்லாம் கூட அவசரமாக விவாதிக்க வேண்டியது அவசியமாகிவிட்டதய்யா!  

துடைப்பம் கூட குப்பைகளை அகற்றுவதுதான்! ஆனால், செருப்புக்கும் சாணிக்கும் கிடைத்துள்ள ‘புனித அங்கீகாரம்’ என்ன காரணத்தினால் துடைப்பத்துக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது குறித்து ஆராய்ச்சிகளை நடத்த அறிஞர்கள் முன் வருவார்களாக. 

செருப்பு - சாணம் - துடைப்பம் பற்றிய ஆராய்ச்சிகள், அதன் புகழ் மிக்க வரலாறுகள் எப்படி இருந்தாலும் - இப்போது அவைகள், போர்க் கருவிகளாக பயன்படுகின்றன என்பதுதான் மிக முக்கியம். இந்தக் கருவிகளை ஆயுதங்களாக ஏந்தி வீதிக்கு வந்திருக்கிறார்கள் - மான உணர்ச்சியுள்ள தோழியர்கள்! 

காஞ்சிபுரம் - மச்சேசுவரன் கோயில் கருவறையை - படுக்கையறையாக்கி - நீலப்படக் காட்சிகளை ஓடவிட்டிருந்த தேவநாதன் என்ற ‘பிராமண’ அர்ச்சகர், காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு காவல்துறையால் கொண்டு வரப்பட்டான். அவனுக்கு ‘பூர்ண கும்ப’ மரியாதை அளிக்க விரும்பிய - காஞ்சி மக்கள் மன்ற தோழியர்கள், செருப்பு, துடைப்பம், சாணம் ஆகிய ‘போர்க் கருவிகளோடு’ வந்து நையப்புடைத்ததாக ஏடுகளில் செய்திகள் வந்ததைப் பார்த்தபோது ஆனந்தக் கடலில் மகிழ்ந்து போனோம். வீதிக்கு வீரத்துடன் வந்து, தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்திய காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழியர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! 

காஞ்சிபுரம் ‘முன்குடுமி’ ஜெயேந்திரனாக இருந்தாலும் அவனது அடியொற்றி செயல்பட்ட மற்றொரு முன்குடுமி தேவநாதனாக இருந்தாலும் - உங்களின் முகத்திரையைக் கிழித்து எறிவோம் என்று, இவாள்களின் பிடறியைப் பிடித்து உலுக்கும் காஞ்சி மக்கள் மன்றமே!

தொடரட்டும் உமது போராட்டம் என்று வாழ்த்தி - பாராட்டுகிறோம்!

உண்மையில் இந்தக் காட்சிகள்தான் குறுந்தகடுகளாக்கப்பட்டு, நாடு முழுதும் பரப்ப வேண்டும் என்பதே எமது விருப்பம்!  

நாடு முழுதும் கர்ப்பகிரகத்துக்குள் இன்னும் பல தேவநாதன்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்கிறார்,  காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசுவரி!

ஆக, பிய்ந்து போன செருப்புகளுக்கும் பழைய துடைப்பங்களுக்கும் நிறையவே வேலை இருக்கிறது. காசு கொடுத்து புதிதாக மட்டும் வாங்கி விடாதீர்கள். தோழர்களே!

- கோடங்குடி மாரிமுத்து 

Pin It