பார்ப்பனியம் என்பது என்ன?

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்துணைக் கண்டம் முழுவதும் கோலோச்சி வருகிற ஒரு ஆளும் வர்க்க கருத்தியலாகவும், நடைமுறையாகவும் பார்ப்பனியம் உள்ளது. பார்ப்பனியம், தொழில் பிரிவினையோடு இருந்த மக்களை பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றியது.

brahmins 333வர்ணங்களாகவும் அதனடிப்படையில் பல்வேறு சாதிப் பிரிவுகளாகவும் மக்களை பிளவு படுத்தி பார்ப்பனர்களை மண்ணுலகத் தேவர்களாக சித்தரித்துக் கொண்டது. நான்காம் வர்ணத்தவர்களான, சூத்திரர்களையும் ஐந்தாம் பிரிவான பஞ்சமர்களையும் அடிமைச் சேவகம் செய்யப் பிறந்தவர்கள் என வகைப்படுத்தி இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் பல்வேறு ஸ்ருமதிகள், உபநிடதங்கள் என எழுதி அதை மக்களை ஏற்க வைத்துள்ளது.

பார்ப்பனியம், சாதிய ஒடுக்குமுறை மட்டுமல்லாது பல்வேறு தேசிய இன மொழிகளையும் நீச மொழி என்றும் அந்த மொழிபேசும் மக்கள் அனைவரும் நீசர்கள் என்றும் கூறுகிறது. சமக்கிருதத்தை தேவ மொழி என புகழ் பாடி மக்களை ஏற்கச் செய்துள்ளது.

இவ்வாறு பார்ப்பனியம் என்பது பல படித்தான சாதிகளைக் கொண்ட சமூக அமைப்பாக உள்ளது. அத்தோடு அனைத்து மொழிகளையும் அந்த மொழி பேசும் மககளையும் இழிவு படுத்தி தனது சமஸ்கிருத மேலாண்மையை நிறுவி உள்ளது.

பார்ப்பனியம் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமறை என இரண்டு முகங்களைக் கொண்டது என்பார் கார்முகில்.

இந்திய சமூகத்தின் மீது பற்றுக்கொண்டு இதை மாற்றத் துடிக்கும் யாராக இருந்தாலும் பார்ப்பனியத்தின் கடந்த இரண்டாயிர ஆண்டுகால வரலாற்றில் அது நிலபிரபுத்துவ ஆட்சிமுறையின் பாதுகாவலனாக இருந்ததையும் அதற்கு பிறகு ஏகாதிபத்திய மூலதனத்தோடு இணைந்து மக்களை ஒடுக்கி வருவதையும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சம காலத்தில் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் பார்ப்பனியத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடி உள்ளனர்.

அதே வேளையில் சமூக மாற்றத்தை தமது வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் பார்ப்பனியத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் உள்ள உறவை புரிந்து கொள்ளாமல் இருந்துள்ளோம் என இந்திய சமூக வரலாற்றை மீளாய்வு செய்த தோழர் கார்முகில் தன்னாய்வாகக் குறிப்பிடுகிறார்.

சாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்

சமுதாய வளர்ச்சிப் போக்கில் உலகம் முழுவதும் நில உடமைச் சமூகம் தோன்றியதும் அந்த நில உடமைச் சமூகத்தை அரசர்கள் அல்லது மன்னர்கள் ஆண்டதும் பொது விதியாக உள்ளது. இந்த நில உடமைக் காலத்தில் மக்கள் எளிய வேலைப் பிரிவினையோடு பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்ந்துள்ளனர்.

பெரும்பான்மை மக்கள் வேளாண்மையைச் சார்ந்தே இருந்துள்ளனர். மற்ற சிலர் வேளாண்மைக்கான துணைத் தொழில்களிலும் அரண்மனைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்துமே வாழ்ந்துள்ளனர். இந்த சமூக அமைப்பில் மன்னர்களைச் சார்ந்தும் அல்லது மன்னர்களாகவுமே இருந்த ஒரு உழைக்காத பிரிவு தனது சுரண்டல் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள உருவாக்கியதே வர்ணாஸ்ரமக் கோட்பாடு. இந்த வர்ணக் கோட்பாடுதான் பல்வேறு படிநிலைச் சாதிகள் உருவாவதற்கான அடிப்படை கொண்டது.

சங்க கால தமிழ் சமூகத்தில் சுமார் கி.மு 500 களுக்கு முன் சாதியப் பாகுபடுகள் அதாவது பார்ப்பனியம் இல்லை. இதற்கு சான்றாக சங்க இலக்கிய நூல்கள் திகழ்கின்றன.

ஆரியவர்த்தம் என சொல்லப்படும் கங்கைச் சமவெளிப் பகுதியிலேயே பார்ப்பனியம் தோன்றி பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது.

சாதிய சமூகத்தின் கடமைகளை மனுஸ்மிருதி எனும் சட்ட நூல் வகுத்துள்ளது.

இந்துக்களின் புனித நூல் எனக் கொண்டாடப்படும் பகவத் கீதையில் வர்ணாஸ்ரமக் கடமைகளை கிருஷ்ணன் சொல்வதாக சொல்கின்றனர்.

"சூத்திரர்களின் வேலை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களுக்கு சேவைசெய்வது, அவர்களுடைய ஆணைகளை நிறைவேற்றுவது, வீடுகளில் நீர் நிரப்புவது, ஸ்நானத்திற்கு வகை செய்து வைப்பது, அவர்களுடைய வாழ்க்கைப் பணிகளில் வசதி செய்துகொடுப்பது, அவர்களுடைய அன்றாட. வேலைகளில் முறைப்படி உதவி செய்வது, பசுக்களைப் பராமரிப்பது, அவர்களுடைய. பொருட்களைக் காப்பது, துணிதுவைப்பது, முடி திருத்துவது முதலிய அத்தனை ஸேவைகளையும் செய்து மகிழ்விப்பது, அல்லது அவர்களுக்குத்தேவையான கருவிகளை தன் தொழில் திறமையால் தயார் செய்து கொடுத்து தன் வாழ்க்கையைக் கழிப்பது-இவையெல்லாமே' பரிசர்யை' ஆகும்." (பக்கம்-974/, சிறிமத் பகவத்கீதை - சிறீ ஜயதயால் கோயந்தா)

இதே பக்கத்தில் விளக்க உரையில்

மனுஸ்ம்ருதி(1/91) கூறுகிறது :"நான்காம் வர்ணத்தவருக்கு பகவான்் ஒரு கடமையைத்தான் விதித்தார். குறைகாணாமல் மூவர்ணத்தாருக்கும் ஸேவை செய்வதே அது. "இன்று, இது குறித்து அதிகாரம் இருந்த மக்களால் உருவாக்கப்பட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் ஆலோசித்துப் பார்த்தல் ஸமுதாயம் என்ற உடலின் சீரான அமைப்பிற்குத் தேவையானதே வர்ணதர்மம் என்பது புலனாகும். இது மனிதன் வகுத்த திட்டமேயன்று. வர்ணதர்மத்தை பகவான் படைத்தார், பகவானே சொல்கிறார்'சாதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாக' (அதே பக்கத்தில். )

பார்ப்பனியம் என்கிற இந்து மதம் தனது வேத நூலான கீதையில் சாதியம் என்பது பகவனால் படைக்கப்பட்டது என பிரகடனம் செய்கிறது. உழைக்காத ஒட்டுண்ணிகள் 'உயர் பிறவிகள்'. உழைக்கும் மக்கள் இழிபிறவிகள் இது தான் இந்து இலக்கியங்கள் போதிக்கும் தர்ம நெறிகள்.

பார்ப்பனிய வர்ண சாதி தர்ம நெறிகளையே இந்துப் பண்பாடு என்றும் இந்தியர் அனைவரையும் பிணைத்திருக்கும் ஆன்மீக அம்சம் என்றும் இந்திய தேசியத்தை உருவாக்கிய மூலவர்கள் சரியாகவே கூறி வந்தனர். காந்தியே தன்னை ஒரு சனாதன இந்து என்றும் வர்ணாஸ்ரமதர்மத்தை வேதங்களில் கூறியிருப்பது போல நம்புகிறேன் என்கிறார் (ஆதாரம்:Young India, oct. 1921)

பார்ப்பனியத்தின் சாதி ஒடுக்குமுறை முகத்தையும் அதை நியாயப்படுத்தும் இந்து இலக்கியங்களையும் அம்பேத்கரும், பெரியாரும் மிகச்சரியாகவே அம்பலப்படுத்தினர். ஆனால் மிகப்பெரும் அறிவாளிகளைப் பெற்றிருந்த இந்திய பொது உடமை இயக்கம் நிலபிரபுத்துவத்தை சாதிய நிலபிரபுத்துமாக புரிந்துகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட்களை வழி நடத்தும் கட்சித் திட்டம் (1943 களில் முனவைக்கப்பட்டது) பார்ப்பனியம் பற்றியோ அதன் நிலபிரபுத்துவ கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை.

அனைத்து மதத்தைச் சார்ந்த மன்னர்களும் பார்ப்பனிய ஆதரவாளர்களாக இருந்தது ஏன் அடுத்து பார்ப்போம்

சாதிய நிலப்பிரபுத்துவத்தை பாதுகாக்கும் பார்ப்பனியத்தை எல்லாப் பிரிவு ஆட்சியாளர்களும் ஆதரித்தனர்.

இந்துத்துவ அறிவாளிகள் 'இந்து' என்பது ஒரு மதம் அல்ல, இது ஒரு வாழ்க்கை முறை என பெருமை பொங்கக் கூறுவர். அவர்களின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானது. ஆம் வர்ண- சாதி முறையைப் பாதுகாப்பதுதான் பிறவிக் கடமை இந்துமத இலக்கியங்கள் எனப் போதிக்கின்றது.

சூத்திரர்களும், பஞ்சமர்களும் உடமை வர்க்கமாக உள்ள பார்ப்பன, சத்திரிய, வைசியர் எனும் பூநூல் அணியும் இருபிறவியாளர்களுக்கு மனமுவந்து தொண்டூழியம் செய்வதே இறைவனுக்கு உகந்த வழிபாட்டுமுறை என நிறுவப்பட்டதே இந்துக் கோட்பாடு.

இப்படியாக மக்களை பிறவி அடிமைகளாக வைத்து சுரண்டலை புனிதமாக்கிக்கொண்ட பார்ப்பனிய இந்து மதத்தை சுரண்டும் எல்லாப்பிரிவு மன்னர்களும், ஆட்சியாளர்களும் பாதுகாத்துப் போற்றினர்.

இந்திய சமூகத்தில் வர்க்கப் பிரிவினை சாதியப் பிரிவினையாகவும் இருக்கிறது. இங்கு ஒடுக்கும் வர்க்கத்தினர் ஒடுக்கும் மேல்தட்டு சாதியினராக அதாவது ஆதிக்க சாதியினராக உள்ளனர். ஒடுக்கப்படும் வர்க்கத்தினர் உழைக்கும் மக்களாகவும் கீழ்தட்டு சாதியினராகவும் உள்ளனர்.

வரலாற்றில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நிலபிரபுக்களாக அறியப்படவில்லை. நிலமற்ற கூலி உழவர்களாக சூத்திர, சண்டாளர் பிரிவு மக்களே உள்ளனர். சமூகத்தில் அங்கிகரிக்கப்படாத(மலம் அள்ளுதல், துப்புரவு செய்தல் ) வேலைகளுக்கு என்றே குறிப்பிட்ட சாதிகள் உள்ளது இன்றளவும் நீடித்து வருகிறது.

இவ்வாறு நிலபிரபுத்துவ சுரண்டலை சாதியப் பகுப்பாக்கி அதையே புனிதம் எனப் போதிக்கும் பார்ப்பனியத்தை சிற்றரசர் முதல் பேரரசர் வரை ஆதரித்தனர். வேற்று மதத்தவர்களான பிரிட்டிஷ்காரர்களும், மொகலாயரகளும் வேற்று மதத்தவராய் இருந்த போதும் வர்ண-சாதி முறையைக் காப்பாற்றியே வந்துள்ளனர்.

மௌரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர், குஷானர், சார்வாகனர், சுல்தானியர், முகலாயர், மராட்டியர், விஜயநகர அரசர்கள், சேர, சோழ, பாண்டியர்கள் என அனைத்து ஆட்சியாளர்களும் வர்ண-சாதி தர்மத்தை அதாவது பார்ப்பனியத்தை பாதுகாப்பதில் வேறுபாடற்று இருந்துள்ளனர். தமிழ் சமூகத்திலும் நில உடமை உற்பத்தி விரிவடைந்தபோது அதைப் பாதுகாக்க பார்ப்பனியத்தை உள்வாங்கி வளர்த்துள்ளனர் தமிழக மன்னர்கள்.

வடபுலத்தில் போல தமிழ் நாட்டில் நான்கு வர்ணங்கள் இல்லை. இங்கிருந்த சூத்திர மன்னர்களை சத்திரியர்களாகத் தரம் உயர்த்தி தம்மோடு இணைத்துக்கொண்டனர் பார்ப்பனர்கள்.

சாதிய நில உடமைச் சுரண்டலை பாதுகாத்து வளர்க்க தமிழ் சமூகத்தை பார்ப்னிய மயமாக்க மன்னர்கள் பார்ப்னர்களுக்கு நிலங்களையும், பொன்னையும், பொருளையும் வாரி வழங்கியுள்ளனர். ஆற்றுப் படுகைகள் இன்றளவும் பார்ப்பன சக்திகள் வசமும், மடங்களின் வசமும் இருப்பதை நாம் காணமுடியும்.

இவ்வாறு பார்ப்பனிய சக்திகள் இரண்டாயிரமாண்டுகளாக ஆட்சியிலுள்ளவர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தமது தலைமை ஆதிக்கத்தையும், ஒட்டுண்ணி வாழ்க்கையையும் பாதுகாத்து வந்துள்ளனர்.

பார்ப்பனியத்தின் ஒரு முகத்தைப் பார்த்தோம். அதன் இன்னொரு முகம் தேசிய இன ஒடுக்குமுறையாகும்.

வரும் தலைப்புகளில் அது பற்றி பேசுவோம்.

- கி.வே.பொன்னையன்

Pin It