சமூக - பொருளாதார காரணிகளை புறந்தள்ளிவிட்டு, மொழியினால் மட்டுமே இந்தியாவின் ஒரு தேசிய இனத்தைக் கட்டமைத்துவிட முடியாது என்பதை ஆந்திராவில் நடக்கும் தெலுங்கானா பிரிவினை கிளர்ச்சி உணர்த்துகிறது. ஆந்திராவின் வருவாயில் 40 சதவீதப் பங்கினை வழங்கும் தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்பது, இப்பகுதி வாழ் மக்களின் கோரிக்கையாகும். ஒரே தெலுங்கு மொழியை பேசினாலும், ஒரே மாநில நிர்வாகத்தின் கீழ், தொடர்ந்து வாழ முடியாது என்று தனி மாநிலம் கோரி போராடுகிறார்கள்.  

ஏற்கனவே ஜார்கண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மொழி வழி மாநிலத்தின் கோரிக்கையை முன் வைத்து, முதன்முதலாக போர்க் கொடி உயர்த்திய ஆந்திராவிலேயே இப்போது, தெலுங்கானா கோரிக்கை வலிமை பெற்று விட்டது.

ஒரே மொழி பேசுகிறவர்களாக இருந்தாலும், தங்கள் மீது பாகுபாடு காட்டப்படும்போது ஒரே மாநிலமாக கூடி வாழ்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஒரே நிலப் பகுதிக்குள் சாதிப் பாகுபாடுகள் - பொருளாதாரப் பாகுபாடுகள் - நீடிப்பதற்கான காரணம். ‘இந்திய தேசியம்’ என்ற பார்ப்பன பனியா ஆட்சியமைப்பும், அவர்களின் இன ஒடுக்கக் கொள்கைகளும்தான்! அவர்கள்தான் முதன்மையான எதிரிகள் என்பதும் - கவனத்தில் கொள்ள வேண்டும்.

திராவிட எதிர்ப்பில்தான் தேசிய இனங்களின் விடுதலை அடங்கியிருக்கிறது என்று திராவிட எதிர்ப்பை பேசப் புறப்பட்டிருப்பவர்கள் தெலுங்கானா பிரிவினை கிளர்ச்சியை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மொழிவழி தேசியம் - சிதைந்து விடக்கூடாது என்று தெலுங்கானா கிளர்ச்சியை எதிர்க்க முடியுமா? என்பதையும் சிந்திப்பது நல்லது! 

பெரியார் வரலாற்றில் பொய் கலப்பது - யார்?

 வீரமணி - தமது அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள ‘குடிஅரசு’ முதல் தொகுதியைப் பற்றிய பாராட்டுக் கட்டுரை ஒன்று கி.வீரமணி நடத்தும் ‘விடுதலை’ ஞாயிறு மலரில் (28.11.2009) வெளி வந்திருக்கிறது. தஞ்சையைச் சார்ந்த மருத்துவர் சு. நரேந்திரன், அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 

“அய்யாவின் வாழ்க்கை வரலாற்றில் தவறியும் பிழை, தவறு, பொய் கலந்து விடலாகாது. பலரும் கருதுவதுபோல, புரோகிதர் பணம் பிடுங்கும் உத்தியை விளக்கும் ‘தண்ணீர் இறைத்த கதை’ அய்யாவின் வாழ்க்கையில் நடந்தது அல்ல. ‘ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட கதை’ என்று அய்யாவே, (இத்தொகுப்பில்) பக்.93 இல் எழுதிய ‘தெய்வ வரி’ கட்டுரை விளக்குகிறது” - என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் கட்டுரையில் எழுதிய ஒரு சம்பவத்தை பெரியாரின் வார்க்கையில் நடந்த நிகழ்ச்சியாகவே கி.வீரமணி தயாரித்த ‘பெரியார்’ திரைப் படத்தில் தான் காட்டினார். தவறிப்போய்கூட பெரியார் வரலாற்றில் பிழை, தவறு, பொய் கலந்துவிடக் கூடாது என்று மருத்துவர் நரேந்திரன் கி.வீரமணிக்கு, வீரமணி ஏட்டிலேயே சுட்டிக்காட்டி, கட்டுரை எழுதியிருப்பதை பாராட்டத் தான் வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It