periyarசமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இம்மூன்றுமே ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமை என்று 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் தேசம் உலகுக்கே வழிகாட்டியது.

பிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தபோது, நம் தமிழகத்தில் சனாதனக் கொள்கை என்கிற சமத்துவமற்ற, சகோதரத்துவமற்ற பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருந்தது.

சனாதனம் என்பது வெறும் நால்வருணப் பிரிவினை மட்டுமன்று, மனிதத் தன்மையற்ற மூடச்சமூகமாக மனிதர்களை மாற்றி வைத்த கொடுஞ் சித்தாந்தமே சனாதனம்.

சனாதனம் பெற்றெடுத்த பிசாசுகளாய் ஆயிரக்கணக்கான சாதிகள் நாடுமுழுக்க நடைபோட திக்கற்ற சமூகமாய் நம் சமூகம் வாழ்ந்த காலகட்டத்தில் தான், திராவிடச் சிந்தனை மலரத் தொடங்கியது.

திராவிடம் என்பது மொழியை, இனத்தைக் குறிக்கும் சொல்லாக மேற்கத்திய அறிஞர்கள் எல்லீஸ், ஹட்சன், கார்ல்டுவெல், ஜி.யு.போப் ஜே.எச்.நெல்சன், மவுண்ட் ஸ்டூவர்ட் போன்றோர் பயன்படுத்தி இருந்தாலும், திராவிடம் என்ற சொல்லுக்குச் சமூகநீதி அரசியல் அடையாளத்தை 19ஆம் நூற்றாண்டு இறுதியில் 1885இல் பண்டிதர் அயோத்திதாசர், ரெவரெண்ட் ஜான்ரத்தினம் இணைந்து திராவிடப் பாண்டியன் என்கிற இதழ் வெளியிட்டு அத்துடன் சமூக இயக்கமாக 'திராவிட மகாஜன சபை' என்கிற அமைப்பையும் உருவாக்கித் திராவிடம் என்பதைக் கருத்தியலாக்கினார்கள்.

பார்ப்பனியக் கருத்தியலுக்கு நேரெதிராகத் திராவிடக் கருத்தியல் கட்டமைக்கப்பட்டது அது 1908இல் கோவில்பட்டியில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் முதல், திராவிடர் மாணவர் விடுதி, திராவிடன் பத்திரிக்கை, திராவிடப் பள்ளி என்று சாதிபேதமற்ற பார்ப்பனரல்லாதோர் அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்லாக தமிழகத்தில் வலம் வருகிறது திராவிடம்.

பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதே என் முழுவேலை என்று அறிவித்து விட்டுப் பார்ப்பனர்களுக்கு எதிரான வலுவான அமைப்பைக் கட்டமைக்கத் திராவிடத்தைப் பயன்படுத்தினார்.

"ஆரியர்கள் இந்நாட்டுக்குள் எப்போது வந்தார்களோ அப்போதே ஆரியர் Vs திராவிடர் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆரிய வேதம், ஆரிய ஆதிக்கம், ஆரியப் பிரச்சார சபா, ஆரிய வர்ணாசிரம தர்மப் பிரச்சார சபா என்கிற ஆதிக்கம் எதுவரையில் இந்நாட்டில் இருக்குமோ அதுவரை நமது திராவிட முன்னேற்ற இயக்கம் இருந்துவர வேண்டியது தான்.

அத்துடன் மதம் என்று சொல்லிக் கொண்டு வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் முதலியவைகள் பேரால் ஆரியப் பிரச்சாரம் செய்து வரும் வரையில் திராவிடமும் இருந்து கொண்டே இருக்கும் என்று 26-6-1927இல் கோவில்பட்டியில் நடந்த 18வது திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் பேசினார்."

பார்ப்பனர்களை ஆரியர் என்ற சொற்களிலே பெரியார் அழைக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். ஆங்கில இந்து நாளேடு இந்தியாவை ஆரிய வர்த்தம் (ஆரிய தேசம்) என்றே எழுதி வந்தது.

இதெல்லாம் பாசிச ஹிட்லர் நாங்கள் ஆரிய இனம், நாங்கள் தான் உயர்ந்தவர்கள், எங்கள் விந்தே உயர்ந்தது என்று சொல்லி உலகையே கொலைக்களமாக்கி, ஆரியன் என்றாலே ஆபத்தானவன் என்ற பார்வை உலகம் முழுக்க பரவியபோது நம் நாட்டு ஆரியர்கள் தங்களின் இன்னொரு பெயரான பிராமணன் என்ற சொற்களில் தங்களை அழைத்து கொண்டார்கள். பெரியாரோ பிராமணர் என்பதற்குப் பதில் அவர்களின் தொழிற்பெயரான பார்ப்பனர் என்று ஆரியர்களை அழைக்கத் தொடங்கினார்.

பெரியாரைப் பொருத்தவரை நாம் வேறு பார்ப்பனர் வேறு என்ற அடிப்படைச் சித்தாந்தமே அவர் அரசியலாக இருந்தது.

பார்ப்பனரை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலமே சாதி, மத, கடவுள், சாஸ்திர புராணங்களின் தொல்லையில் இருந்தும், கொடுமையில் இருந்தும் மக்களைக் காக்க முன்னேற்ற முடியும் என்பதே பெரியாரின் பார்வையாக இருந்தது.

அத்துடன் பெரும்பான்மை மனித சமூகத்தின் குருட்டுப் பழக்கமாக இருந்துவந்த மூடநம்பிக்கைகள், பொருள் தெரியாத சடங்குகள், மதத்தின் பேரால் நடக்கும் வெறுப்பு பிரச்சாரங்கள், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள், ஆகியவற்றை அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாக சமத்துவமாக வாழ்வதை நோக்கிப் பரப்புரை செய்வதற்குத் திராவிடம் என்கிற கருத்திலைத் தன் ஆயுதமாகக் கையாண்டார்.

சாதியற்ற பார்ப்பனரல்லாதோர் கூட்டமைப்பைப் பார்ப்பனியத்திற்கு எதிராக வலுவாகக் கட்டமைத்துப் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கி பார்ப்பனர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சாவுமணி அடித்தது பெரியாரின் திராவிடக் களச் செயல்பாடு.

கல்வி, அரசு வேலைவாய்ப்பு, வகுப்புவாரியான பிரதிநிதித்துவம் (அ) இடப்பங்கீடு என்று இந்தச் சமூகத் தளத்தில் பார்ப்பனரல்லாதோர்க்கு மறுக்கப்பட்ட அனைத்தையும் போராடி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப் பெரியார் தன் வாழ்நாள் முழுக்கப் பயணப்பட்டார்.

சமூக மாற்றம், அரசியல் மாற்றத்திற்கு மட்டுமில்லாமல் பெண்கள் ஒன்றும் ஆணின் அடிமையல்லர் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தி பெண்களுக்கான உந்து சக்தியாகப் பெரியாரின் பேச்சும் செயலும் இருந்தன.

இப்படி திராவிடத்தாலும், பெரியாராலும் நூற்றாண்டாகத் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட சமூகநீதியை இந்த 2020ஆம் ஆண்டில் இந்துத்துவ, பாசிச சக்திகளின் ஊடக பலத்தாலும், மதவெறுப்பு அரசியலாலும் சிதைந்துவிடாமல் நாம் காப்பற்ற வேண்டும் என்றால் பெரியார் கையில் எடுத்த திராவிடக் கருத்தாக்கம் மீண்டும் தமிழகம் முழுக்கப் பரவ வேண்டும்.

- இக்லாஸ் உசேன்

Pin It