சில நாட்களுக்கு முன்னால், அர்ச்சகர் சீதாராமன் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜே. சத்தியநாராயண அமர்வு “தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்கவும், கண்ணியமான ஆடை அணிந்து வருவதையும் இந்து சமய அறநிலையத் துறை உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.

மேலும் ''அரசியல் சாசனத்தின் 25வது பிரிவின் கீழ், அனைத்து நபர்களும் சுதந்திரமாக மதத்தைப் பின்பற்றுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கோவில் வளாகத்திற்குள் அத்தகைய சுதந்திரம் விதிமுறைகளுக்கு உட்பட்டது. கோவிலில் நடக்கும் வழிபாடுகளில் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்த விதிகளை ஆகமங்கள் வகுத்துள்ளன. அதன்படி, கோவிலின் கண்ணியம் மற்றும் புனிதம் பேணப்படுவதை கோவில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எனவே, கோவிலுக்குச் செல்லும் நோக்கத்தில் இருந்து பக்தர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், வளாகத்திற்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்துவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம்,'' எனவும்,

அத்தோடு ”கோவில் சிற்பங்கள் மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு செல்போன் தடை தேவை. அதனால், செல்போன் பயன்பாட்டிற்குத் தடை மற்றும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கோவிலுக்கு வரும்போது கண்ணியமான உடை அணிந்து வர வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.archakasஆனால் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான இந்து சமய அறநிலையத் துறை உத்தரவுக்கு இதே உயர் நீதிமன்ற மதுரைக் கிளைதான் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், வடபபழனி பழனி முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புப் பலகைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அப்போது வைக்கப்பட்டன. 

அதன்படி கோயிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில்தான் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அப்போது தடைவிதித்தது. தற்போது, தான் ஏற்கெனவே கொடுத்த உத்தரவுக்கு முரணான உத்திரவைக் கொடுத்துள்ளது.

இப்போது கூட வழக்கு கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நீதிபதிகள் தங்களின் ஆன்மீக இந்து சனாதனப் பாசத்தோடு ஆடை கட்டுப்பாடு போன்ற உத்தரவுகளையும் பிறப்பித்து இருக்கின்றார்கள்.

பாரம்பரியம், புனிதம், ஆகமம் என்ற போர்வையில் தொடர்ச்சியாக தனிமனித உரிமையில் தலையிடுவதையும், பார்ப்பனப் பண்பாட்டை நிலை நிறுத்துவதையும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் சங்கிகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள்.

டிரவுசர், பேன்ட், ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் போன்றவற்றைப் பார்த்து மனம் குமுறும் நீதிபதிகள் எப்போதாவது அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே என்றோ, அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றோ, இல்லை இன்றும் பல கோயில்களில் தலித்துகள் உள்ளே நுழைய மறுக்கப்படுவதைப் பற்றியோ மனம் குமுறி இருக்கின்றார்களா?

சங்கிகளால் பார்ப்பன சனாதனத்தை நிலை நிறுத்த வழக்கு தொடுக்கப்படுவதும், அதை நீதிபதிகள் சட்டப்படியே நிறைவேற்றித் தருவதும் மோடி ஆட்சியில் சீரும் சிறப்புமாக கீழமை நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

கோயிலில் செல்போன் கொண்டு வருவது ஆகம மீறல் என்றால் கோயிலில் மின் விளக்குகளைப் பயன்படுத்துவதும், பேன் பயன்படுத்துவதும், சிசிடிவி கேமரா பயன்படுத்துவதும், தனி மனிதர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்வதாகச் சொல்லி பிச்சை எடுப்பதும், கட்டணம் வசூலித்துக் கொண்டு கடவுளைக் காட்டுவதும் ஆகம மீறல் இல்லையா? அப்போது கோயிலின் புனிதம் கெட்டுப் போகாதா?

வைணவக் கோவில்களில் சைவக் கடவுள்களை வைத்து பிச்சை எடுப்பதும், சைவக் கோயில்களில் வைணவக் கடவுள்களை வைத்து பிச்சை எடுப்பதும் நடக்கவில்லையா?

ஆகமங்களின்படி திருமணமாகாதவர்களும் மனைவியை இழந்தவர்களும் பூஜை செய்ய முடியாது. ஆனால் பல கோவில்களில் இந்த விதிகள் மீறப்படுகின்றன.

சிவாலயங்களில் பரிசாரகர் பிரிவுக்குரிய சிவாச்சாரியார்கள் மட்டுமே நிவேதனம் தயாரிக்க வேண்டும். ஆனால் தீட்சை கூடப் பெறாத ஸ்மார்த்தர்கள் நிவேதனம் தயாரிக்கின்றார்களே! அதுமட்டுமா கோவில் மடப்பள்ளியில் தயாரிக்காமல், வீட்டில் சமைத்து எடுத்து வருவதும் நடக்கின்றதே.

கோவிலுக்குரிய நடைமுறைகளின்படி பூஜை செய்யாமல், அர்ச்சகர்களுக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்லி பூஜை செய்வதும் நடக்கின்றது.

ஆகம விதியின்படி அர்ச்சகர் ஊதியம் பெறக்கூடாது. அதனால் தேவலோக தோசம் வருவதோடு ஆலயத்தில் புனிதமும் கெடும். ஆனால் பல கோயில்களில் இவர்கள் மாத சம்பளம் பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முடிந்தவரை பக்தர்களிடமும் சுருட்டிக் கொள்கின்றார்கள்.

ஸ்மார்த்தத்தில் உருவ வழிபாடு இல்லை. எனவே ஸ்மார்த்தப் பார்ப்பனர்களுக்கு கோயில்களே இல்லை. எனவே, ஆகமும் இல்லை. ஆகமமே கிடையாது என்பதால் அவர்களால் அர்ச்சகராக இயலாது. ஆனால் பல ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் சிவாலயங்களில் பூசை செய்து கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் 187 கோயில்களில் 218 ஸ்மார்த்தர்கள் அர்ச்சகர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

அதுமட்டுமல்ல 2011-ம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கீட்டின்படி சமஸ்கிருத மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெறும் 803 ஆகும். இவர்களில் ஆண்கள் 402 பேரும், பெண்கள் 401 பேரும் ஆவார்கள். அர்ச்சகர்களாக பெண்களை அனுமதிப்பதில்லை என்பதால் சமஸ்கிருதம் தெரிந்த அர்ச்சகர்களின் எண்ணிக்கை வெறும் 402 மட்டுமே ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 32,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் பார்ப்பனக் கும்பல் வடமொழியில் அர்ச்சனை செய்துகொண்டு இருக்கின்றது. இந்தக் கேடி பார்ப்பனர்கள்தான் தமிழை நீச பாஷை என்று கொச்சைப்படுத்துபவர்கள்.

இத்தனை அத்துமீறல்கள் பல ஆண்டுகளாக தமிழகக் கோயில்களில் பார்ப்பனக் காலிகளால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்த நீதிபதியும் இந்தக் குற்றங்களைக் களைய வேண்டும் என்று இதுவரை குரல் கொடுத்ததே இல்லை.

சங்கி நீதிபதிகளைப் பொருத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றார்கள். ஒன்று நேரடியான பார்ப்பன சங்கிகள்; இன்னொன்று பொறுக்கித் தின்பதற்காக பார்ப்பனியத்துக்குத் துணைபோகும் சூத்திர சங்கிகள்.

இவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்குக் காரணமே ஆர் எஸ் எஸ் திட்டங்களை சட்டப்படியே சாதித்துக் கொள்ளத்தான்.

இவர்கள் நீதிமன்றங்களில் தங்கள் முன்னால் என்ன வழக்கு வந்தாலும் அந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாமல் திருவாய் மலர்ந்து பார்ப்பன விசத்தைக் கக்குவார்கள்.

உதாரணமாக நீங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை, கதவுகள் இல்லை, பீங்கான் கழிப்பறை குழம்பு (Toilet Basin) இல்லை, மின்விளக்கு இல்லை என்று வழக்கு தொடுத்தால் சம்மந்தமே இல்லாமல் ஏன் கழிப்பறையில் மோடியின் புகைப்படத்தை வைக்கவில்லை என்றோ, ஏன் மலம் கழிக்க வருபவர்கள் வந்தே மாதரம் பாடவில்லை என்றோ கேள்வி கேட்பார்கள். இன்னும் மனநிலை பிறழ்ந்த தீவிர சங்கி நீதிபதி என்றால் சிசிடிவி கேமரா வைத்து அரசு இதை எல்லாம் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்திரவிடுவார்கள்.

இதுதான் சங்கிகளில் உலகம். அந்த உலகத்தில் வறுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் எதுவுமே இல்லை. அந்த மகிழ்ச்சியான உலகத்தில் கழிப்பறைக்கு கதவோ, தண்ணீரோ எதுவுமே தேவையில்லை. மோடியைத் துதிப்பதும் சனாதனத்தைக் காப்பதும் மட்டுமே மனிதப் பிறவிகளின் ஒரே பணி. அந்த புனிதப் பணியைத்தான் நீதிபதிகளும் கூட செய்து கொண்டிருக்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It