sv shekarபெண் ஊடகவியலாளரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிவிட்டு, அதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தபின் ஓடி ஒளிந்து கொண்ட ஒரு கோமாளி நடிகர், இப்போது திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் குறித்து, மிக இழிவாகவும், தரக்குறைவாகவும் முகநூல் நேரலையில் பேசியுள்ளார். கழகத்தினரை மட்டுமின்றி, அதனைச் செவிமடுக்கும் பொதுவானவர்களைக் கூடச் சினம்கொள்ள வைக்கும் வகையில் அந்தப் பேச்சு அமைந்துள்ளது.

கிருஷ்ணரைப் பற்றியும், அவரது லீலைகள் பற்றியும் ஆசிரியர் ஆபாசமாகப் பேசிவிட்டாராம். உடனே அந்த வீராதி வீரர், பொங்கி எழுந்து ஆசிரியர் குறித்தும், கடவுள் மறுப்பாளர்கள் குறித்தும், இதனை விட இழிவாகப் பேச முடியாது என்ற அளவில் பேசியுள்ளார்.

சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் குறிப்பிட்ட கிருஷ்ண லீலைகள் எதுவும் அவர் எழுதியதில்லை. புராணங்களில் உள்ள ஆபாசங்களை, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் நூலிலிருந்து எடுத்துப் படித்தார். அவ்வளவுதான். அதுவும் கூட எதற்காக என்றால், பொள்ளாச்சியில் நடைபெற்றது போன்ற பாலியல் வன்முறைகளுக்கெல்லாம் காரணம் பெரியாரும், வீரமணியும்தான் என்று துக்ளக் ஏடு எழுதி வீண் வம்பை இழுத்ததால், யார் காரணம் என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அதனைப் படித்துக் காட்டினார்.

கோமாளி நடிகரும், வேறு சில வன்முறை அமைப்புகளும் இப்போது ஆசிரியர் மீது கோபப்படுவது போலக் காட்டிக் கொள்வதற்குக் கூட, கிருஷ்ணர் மீது உள்ள பக்தி காரணம் இல்லை. இதனைக் காரணமாக வைத்து, வரும் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் நோக்கம். அந்த கோமாளியின் பேச்சின் இறுதியிலேயே அந்தப் பூனையும் வெளிவந்து விடுகின்றது. "எனவே யாரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்" என்று அந்த உளறல் முடிகிறது.

தரங்கெட்ட அந்தப் பேச்சைக் கேட்டுச் சினம் கொண்டு, நம் உணர்வாளர்கள் எதிர்வினையாற்றுவார்கள், அது தேர்தலில் ஒரு பிரச்சினையாகிவிடும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் யாரும் அந்தப் பேச்சை மதிக்கவுமில்லை, விடை சொல்லவுமில்லை.

இதுபோன்ற ஏமாற்று வேலைகள் எல்லாம் மிகப் பழையவை. 1971இல் பெரியார் சேலத்தில் இராமரைச் செருப்பால் அடித்துவிட்டார் என்று ஊர் ஊராகப் போய்ச் சொன்னார்கள். அப்போது இராமர் இவர்களிடம் பட்டபாடு மிகவும் பரிதாபத்திற்குரியது. இராமரைச் செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு என்று கேட்டு ஒப்பாரி வைத்தனர். இறுதியில், திமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது. சேலத்திலும் கூட திமுகதான் வெற்றி பெற்றது.

இந்தக் கோமாளிகளுக்கு நாம் சொல்லவேண்டிய விடை ஒன்றே ஒன்றுதான். அதனை மக்கள் ஏப்ரல் 18 அன்று சொல்வார்கள். நீங்கள் என்னதான் தலைகீழாய் நின்று பார்த்தாலும், திமுகவையும், மக்களையும் பிரிக்க முடியாது என்பதை அன்று மக்கள் உணர்த்துவார்கள்.

ஆதலால், நம் தோழர்கள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு, அவர்களுக்கு எந்த விடையும் சொல்ல வேண்டியதில்லை. மாறாக, அவர்களின் கதறலை அமைதியாக ரசித்திட இது ஓர் அரிய வாய்ப்பு என எண்ணி மகிழ்வோம்!

Pin It