பண்டித ம.கோ களஞ்சியம் நூலினை முன்வைத்து...

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி (1845) இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் (1914 ) தனது 69 ஆவது வரை வாழ்ந்த அயோத்தி தாசப் பண்டிதர் தமிழினம், தமிழ், சாதிபேதமற்ற சமூக விடுதலை, போன்ற தளத்தில் தமிழ்ச் சமூக சீர்திருத்தத்தின் ஆதிக்குரலாக ஒலிப்பவர்.

usha mahadevan book

தமிழ்த்தாத்தா உ வே சா வும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் ஆறுமுக நாவலரும் மக்கும் தருவாயில் அழிவை நோக்கிக் கிடந்த தமிழ் இலக்கிய இலக்கணச் சுவடிகளைப் போட்டி போட்டுக் கொண்டு அச்சாக்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலமென்பது தமிழ் பிழைத்து அச்சில் நடைபோடத் தொடங்கிய பொற்காலம். சி.வை.தாமோதரம் பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், தமிழ்த்தாத்தா உ வே சா இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்த் தொண்டின் பெருவாரியான புகழ்த்தளத்தில் ஆக்கிரமித்திருந்தனர் என்பது ஆ.இரா.வெங்கடாசலபதியின் கருத்து.

இவரின் தமிழ்ப்பணியின் எழுத்துக்களம் விவேகோதயம், நச்சினார்க்கினியன் ஆகிய இவர் நடத்திய இதழ்களாகும். இவ்விதழ்கள் நாட்டுப்பற்று மொழிப்பற்று ஆன்மிகப் பற்று, உலகப்பற்று ஆகிய விழுமியங்களைத் தாங்கி வந்தன. விவேகோதயம்தான் நான் விரும்பிப் படிக்கும் மாத இதழ் என வ.உ.சிதம்பரனார் கூறியிருப்பதும், பணநோக்கமற்ற இதழாளர் ம.கோ என சுப்ரமணிய சிவாவும் கூறியிருப்பது நோக்கத்தக்கது. தமிழறிஞர்கள் அரசஞ்சண்முகனார், கதிரேசஞ்செட்டியார் போன்றவர்கள் நச்சினார்க்கினியன் இதழில் எழுதியுள்ளனர். திருச்சி தேசியக் கல்லூரியில் 1919 முதல் மறைகிற 1927 வரை முதல் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

தமிழ்மொழியின் முகச்சாயலை அறிவியல் தோற்றம் காண பல அரியக்கட்டுரைகள் எழுதியுள்ளார். கார்க், தாவரங்கள் பரவும் விதம், புலால் உண்ணும் பூண்டுகள், நற்பவளம், முத்து, கறையான், எறும்புகள், தேனும் தேனீயும், வானம்பாடி, பரிசளிக்கும் பறவை, அக்பரின் காலக்ஷேபம், போன்ற தலைப்பில் அமைந்த மகோவின் கட்டுரைகள் தமிழ் உரைநடை வளர்ச்சியின் தொடக்க சாயலாகவும், அறிவியல் தமிழின் அற்புத முகமாகவும் விளங்குகின்றன. பவளப் பூச்சி என்ற ஒன்று தன் இனப்பெருக்கத்தை ஆண் பெண் உறவாகவும் செய்கின்றன, தனியாகவும் செய்கின்றன. பெண் பவளப் பூச்சி சுக்கிலத்தை தனக்குள்ளே சேமித்து வைத்து இனவிருத்தி செய்கின்றன. தாவர இனத்தின் பதியம் விருத்திபோல. மாறாகவும் கடல் நீரைக் கொண்டும் விருத்தி வாழ்வை எய்துகின்றன. வெளியில் சென்றுதான் இனப்பெருக்க ஏற்பாட்டை அமைத்து கொள்கின்றன. மனிதகுலம் சொந்த குடும்ப தொகுப்பிலிருந்தே திருமண பந்தத்தை எற்படுத்திக் கொள்கின்றனர். வெளி இனத்தொகுப்பிலிருந்து திருமண பந்தத்ததை ஏற்படுத்திக் கொள்கின்ற காலமே எதிர்காலத்திற்கு சிறந்தது என்று மனிதகுல மேம்பாடிற்கு மிகச் சிறந்த செய்தியாக முன்வைக்கிறார் ம.கோ.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்" என்ற வரியைப் பாரதி எழுதுவதற்கு முன்பே மொழி பெயர்ப்புப் பணியின் நீதிமன்ற தீர்ப்பை முதன்முதலில் தமிழ்ப்படுத்திய நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார். அவருக்குப் பின் மொழிபெயர்ப்பில் நின்று ஒளிர்ந்த முக்கிய மானவர்களில் ஒருவர் ம.கோபாலகிருஷ்ணய்யர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதிக நூல்கள் எழுதியவரும் பத்துக் கம்பன் என்று போற்றப்பட்டவருமான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கூட அறிவியல் தமிழ் குறித்து சிந்தித்தார் என்பது தென்படவில்லை. 1896 களிலேயே ஆங்கிலக் கவிதைகளைக் கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டார் ம.கோ. என்று 'பண்டித ம.கோ.களஞ்சியம்' என்ற 688 பக்கம் கொண்ட அரிய நூல் விளக்குகிறது.

ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பை அகவற்பாவில் எழுதியதை "நமது அய்யரின் மொழிபெயர்ப்பானது தெரிந்தவர்க்கின்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பு என்றே தெரியாது" என்று மகாகவி பாரதி மதிப்பிடுகிறார். பாரதியாரின் முதல் கவிதை இரக்கம் எனும் தலைப்பில் முதல் பிரசுரமாய் அச்சில் வந்த இதழ் மதுரையில் வெளியான விவேகபாநு எனும் இதழாகும்.

அந்த இதழில் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை அக்காலத்திலேயே மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார் ம.கோ

வால்ட்டர் ஸ்காட் என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை படித்த ஜி.யு.போப் "ஆங்கிலக் கவிதையை நான் படிக்காமல் முதலில் உங்கள் மொழிபெயர்ப்பை படித்திருந்தால் 'மூலம்' உங்களுடையதுதான் என நம்பியிருப்பேன் அவ்வளவு சிறப்பாக இருந்தது என முன்பின் அறிமுகம் இல்லாத ஜி.யு போப் அவர்கள் தனக்குக் கடிதம் எழுதியதாக நன்றி பாராட்டுகிறார். அவர் நடத்திய விவேகோதயம், நச்சினார்க்கினியம் ஆகிய இதழ்களின் முழுமைத்தொகுப்புகளைத் தேடிக் கிடைக்கப் பெற்றால் (இருபது இதழ்கள்தான் கிடைத்திருக்கிறது) அறிவியலின் முன்னோடி, மொழிபெயர்ப்புக்கலையை முன்நகர்த்தியவர்களுள் ஒருவர், சொந்த சமூகத்தை எதிர்த்து முந்தி நின்று தமிழ் வளம் பேசியவர் என ஆய்வாளர்கள் கட்டியம் கூற அதிக வாய்ப்புள்ளது. இன்று அது இல்லாமல் ஆய்வுலகம் மௌனம் சாதிக்கும்படியாய் ஆகிவிட்டது. தமிழ் ஆய்வுலகம் நச்சினார்க்கினியன், விவேகோதயம் போன்ற இதழகள் அனைத்தும் தொகுத்தல் வேண்டும். சமூக விடுதலைக்காக ஒரு தமிழ்க் குரலாக (ஒரு பைசா தமிழிழன் மூலம்) அயோத்திதாசப் பண்டிதர் முந்தி நின்றாலும் ம கோவின் எழுத்துப்போக்கு சமூகத்தை அதனதன் சுயவிருப்போடு வாழ்ந்து ஒன்றுபடுத்தவும், நவீன தமிழை வடிவமாற்றம் செய்யவுமான முன்னெடுப்பாகத் தெள்ளத் தெளிவாக முன் முகம் காட்டுகிறது ம.கோ வின் எழுத்துகள்.

அக்பரை பற்றியதொரு மொழிபெயர்ப்பில் "சககரவர்த்தி எச்சாதியரையும் எம்மதத்தையும் தூஷிப்பதே இல்லை நகைத்துப் பரிகாசம் செய்வதும் கிடையாது. அவர்தம் காலத்தை விருதாவாகக் கழித்ததே இல்லை. தம்முடைய கடமையைச் சரிவரச்செய்வதில் கருத்தும் கவலையுமாக இருந்து செய்துமுடிப்பார். அவருடைய சன்மார்க்க ஒழுக்கங்களின் விஷேசப் பயனால் அவர் செய்யும் ஒவ்வொரு கிரியைகளும் ஈஸ்வரார்ப்பணமென்றே அறிதல் வேண்டும்" என்று மகா அக்பரைப் புகழும் மொழிபெயர்ப்பில் இந்தப் பண்பு ஈஸ்வரார்ப்பணம்தான் காரணம் என்று தன் சொந்த மத உணர்வால் அக்பருக்கு மாலை போடும் மாண்பு கவனிக்கத்தக்கது.

பதினெட்டு வயதிலேயே பண்டித ம.கோபாலகிருஷ்ணய்யர் தமிழ்ப் பணி ஆற்றத்தொடங்கியிருக்கிறார் என்பது 1896 களில் வெளிவந்த அமிர்த குணபோதினி, ஞானபானு, வித்யாபானு போன்ற பத்திரிகையில் எழுதியிருப்பதன் மூலம் உணர முடிகிறது. எஃப் .ஏ படிப்பில் தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியராக வெளியேறிய மறு பொழுதே தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவராக மாறினார்.

ஆங்கில அறிவின் மதிப்பு கொடிகட்டிப் பறந்த காலத்தில் தன் தமிழாசான் மகாவித்துவான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ் கற்றதன் தாக்கம் தமிழ்ப் பேராசிரியராக மாறுவதற்கு அழுத்தமான காரணமாகிப்போனது. 1904க்குப் பிறகு பத்திராதிபர் பண்டித ம.கோபாலகிருஷ்ணய்யர் என்ற பெயர் தாங்கி வந்த, தான் நடத்திய நச்சினார்க்கினியன், விவேகோதயம் போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்புகள், அரிதான அறிவியல் தகவல்கள் அடங்கிய மொழிபெயர்ப்புகள், அரியபண்டைய தமிழ் நூலகளின் அறஞ்சார் மேற்கோள்கள் அமைந்த தமிழர் வாழ்வைப் பேசும் கட்டுரைகள், ஆகியவை சேர்த்து ம.கோ.வின் அரும்பொருட் திரட்டு பாகம் 1, 2, என 1915இல் வெளியிட்டிருக்கிறார். ஆங்கில மொழி எழுத்தாளர்கள் டாக்டர் வாட்ஸ், சர் வால்ட்டர் ஸ்காட், தாமஸ் காமல், P.B .ஷெல்லி, சேக்ஸ்பியர் S.T. காலரிட்ஜ், தாமஸ் கிரே, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஆகியோர்களின் கவிதைகளில் சிலவற்றை தமிழ்மரபின் கட்டமைப்பிலேயே மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அப்போதே முன்வெளியிட்டுத் திட்டத்தில் 625 பேர் புத்தகத்திற்கு முன் பணம் கட்டியுள்ளனர் .இவரால் உருவாக்கப்பட்ட மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம் வெளியிட்ட இந்த நூல்களின் வெளியீட்டு விழாவின்போதே விற்றுத் தீர்ந்து மறுபடி ஆயிரம் படிகள் போடும் அளவிற்கு விற்றுத் தீர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தமிழப் பதிப்புப் பரவல் என்பது அக்காலத்தின் அசாத்திய தமிழ்ப்பணியாகும்.

மன்னர் பாஸ்கர சேதுபதி, பெத்தாச்சி செட்டியார், பாண்டித்துரை தேவர் என கொடை குண மனிதர்களோடு பண்டிதர் நெருக்கமாக இருந்தது ஒரு காரணம் மேலும் மதுரை தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் பணி, மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்க தலைவர் பணி, மதுரை விவேகானந்த சபையின் தலைமைச்செயலர் பணி என வேறு எந்த தமிழறிஞரும் செய்யாத களப்பணியாற்றிய செயல் செம்மலாக ம.கோ.விளங்கியதால் தமிழ் அன்பர்களின் நிறைந்த ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பது தெரியவருகிறது. நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்தபோதும் வரவேற்புக் கவிதை வாசிக்கும் பொறுப்பை தமிழுலகம் இவருக்கே நல்கியிருக்கிறது. சிகாகோ சென்றுவந்த வீரத்துறவி விவேகானந்தரை மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சென்று வரவேற்கும் அளவிற்கு தமிழ்ப் பணிகளுக்கு களப்பணி அடையாளமாக விளங்கியுள்ளார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. அவர் எழுதிய கட்டுரைகள் 'பு' தல்வர் கடமை, முரண் அல்லது விசுவநாதன்' 'மௌன தேசிகர்' ஆகிய மூன்று செய்யுள் நாடகங்களோடு சேர்த்து செம்பதிப்பாக ம.கோவின் மகன் வழிப்பெயர்த்தி (திரு.கோ.சித்தமூர்த்தி திருமதி இராஜலெட்சுமி இணையரின் மகள்) சென்னை இந்து கல்லூரியின் பணி நிறைவு பெற்ற ஆங்கிலப் பேராசிரியருமான முனைவர் உஷா மகாதேவன் காவியா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். இது ம.கோ வைப்பெயர்த்தெடுத்து இன்றைய தமிழ்கூறு நல் உலகிற்கு கை அளித்த தேவையான பணியாகும். சென்ற ஆண்டு ம.கோ வின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டபோது அரசு கொடுத்த பரிவுத் தொகையைத் திருச்சி தேசியக் கல்லூரியில் இயங்கிவரும் ம.கோபாலகிருஷ்ணய்யர் அறக்கட்டளைக்கு அனுப்பிவிட்டது பண்டிதரின் குடும்பம்.

20 ஆம் நூற்றாண்டுதான் இந்த உலகை அழகாக்க வந்த நூற்றாண்டு என்றே கூலாம்.

மொழியைப் பொருத்தமட்டில் அறிவியல் தமிழ் எனும் முகம் தமிழுக்குக்குக் கிடைக்க அப்பாசாமி, சுப்புரெட்டியார்/சுஜாதா, மணவை முஸ்தபா போன்றவர்கள் அறிவியலை தொழில்நுட்பத்தை, கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

12 தொகுதிகள் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியத்தை (2012) பெரிய அளவில் வெளியிட்டது. இணையப் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் சொல்லகராதிகளை வெளியிட்டுள்ளது, மணவை முஸ்தபா அறிவியல் சொல்லகராதி வெளியிட்டது மட்டுமல்லாமல் கணினிக் கலைச்சொல் அகராதிகள் வெளியிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி பண்டிதர் அயோத்திதாசர் அறிவியல் தமிழ் குறித்து சிந்திக்கவில்லை. மிகப்பெரிய ஆளுமைகளாக அப்போது விளங்கிய உவே.சாமிநாதய்யர் சி.வைதாமோதரம் பிள்ளை, இலங்கை ஆறுமுகநாவலர் போன்றவர்கள் புத்தகப் பதிப்பாக்கப் பணியில் மிகத்தீவிரமாக முனைந்து முனைந்து செயல்பட்டார்கள். அறிவியல் தமிழ் குறித்தோ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழிபெயர்ப்பது குறித்தோ சிந்திக்கவில்லை. மாயூரம் வேதநாயகம்பிள்ளை மொழிபெயர்ப்புத் துறையில் முந்தி நிற்கும் அறிஞராக உள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அறிவியல் தமிழுக்கான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டதை மகோ களஞ்சியத்தின் மூலம் அறிய முடிகிறது. இது அறிவியல் தமிழின் செயல்பாட்டுக்கான தொடக்கப் புள்ளிச் செயல்பாடாகவே உணர முடிகிறது. வைணவ சமயத்தில் மூழ்கி வாழ்ந்திருந்த அயோத்திதாசர், வைதீக நெறியை தூக்கிப் பிடிப்பவர்கள், சமற்கிருத மொழி ஆதிக்கம், சமூக வேறுபாடுகளை நியாயம் செய்தல், தாய்மொழி உணர்வை இழிவு செய்தல், ஆகிய காரணங்களால் தனது மதத்தை விட்டு மெல்ல மெல்ல பெளத்த மதத்திற்கு மாறினார் அயோத்திதாசப் பண்டிதர்.

பண்டித ம.கோ அவர்கள் ஆரிய வைதீகப் பண்பாட்டை விட்டு விலகாதவராகவும் அதே சமயம் வள்ளுவரின் வாழ்வியல் நெறியை வைதீக நெறியைவிட அதிகமாக தூக்கி பிடிக்கும் போக்கும், தமிழ்நெறியில் வாழ்வைப் போற்றிப் பின்பற்றி நிற்பவராகவும் அமைந்துள்ளது ம.கோவின் வாழ்வு. மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் பெண்களுக்கான தனிப்பள்ளி அமைதல் வேண்டும். பெண்களுக்கு தொழிற்கல்வி கற்பித்து பெண் சமூகத்தை வளர்த்தல் வேண்டும் என்று கூறுகிறார் ம.கோ.

இந்தியாவில் சாவித்திரி பூலேதான் பெண்கல்விக்காக பிரத்தியேகமாக தனிப்பள்ளி (திண்ணைப்பள்ளி) அமைத்தார் என்பது வரலாறு; அதன்பிறகு மகாகவி பாரதி பெண்கல்வியைப் போற்றியது வரலாற்றில் உரத்த குரலில் கேட்கிறது.இதற்கு இடையில் 1915க்கு முன்பே நமது கோபாலகிருஷ்ண ஐயரின் பெண் உரிமைக்குரல். வரலாற்றுப்பக்கங்களில் கேட்டும் கேட்காததுபோல் இருக்கிறது என்பது வருத்தம்தான். பாரதியாரை விட நான்கு ஆண்டுகள் மூத்தவராக இருந்த ம.கோ 1904இல் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய ஐயர் அவர்கள் நாட்டுப்பற்று, தமிழ்ப்பற்று, ஆங்கில அறிவு உள்ள ஓர் இளைஞன் வேண்டும் என்றபோது சட்டென பாரதியைத்தான் சொல்ல முடிந்தது. அதன்பிறகு இந்தியா பத்திரிகை தொடங்கியதால் பாரதி மித்திரனிலிருந்து வெளியே வந்து பிறகு குடும்ப சூழல் மோசமாகி தன் இறுதிக் காலத்தில் பணமுடை இல்லாமல் இருக்க திரும்பவும் சுதேசமித்ரனில் வேலைக்குச் சேர்ந்ததால் ராஜாவைப் போல சுதேசிமித்திரன் பாரதியாரைப் பார்த்துக் கொண்டதாக தெரிகிறது. இதன் நுண்ணிய பின்னணியாய் அய்யா ம.கோ இருக்கிறார்.

பேராசிரியர் பணி, எழுத்துப்பணி, இதழியல் பணி, ஆகியவைகளை நுட்பமாக செய்தார். பாடவகுப்பைத் தாண்டி பொதுவெளியில் தமிழ் பேசி தமிழ் மாணவர்களை உண்டாக்கினார். எழுத்தில் மொழிபெயர்ப்பு, அறிவியல் சிந்தனை, நாடகத்தமிழ் என தமிழை விரிவாக்கம் செய்தார் இதழின் மூலம் நாட்டுப்பற்றை மொழிப்பறறை உண்டாக்கினார். விவேகானந்தர் எழுதிய ஆங்கிலக் கவிதைகளை (Song of the Sanyasin) சந்யாசி கீதம் என்று மரபுப்பாவில் மொழிபெயர்த்துள்ளார்.

"உறைவிடம் எதுவும் வேண்டாம் உனக்கென/நின்னைக் கொள்ளும் வீடெது/ நேயவிசும்பே கூரை/பசும்புல் படுக்கை/தற்செயலாகத்/தான் கிடைப்பதுவே / உண்டியாகும்/ அவ் உண்டி நன் றாக/அட்டிருப்பினும் /அது கெட்டிருப்பினும் எணேல் /

என்று போகிறது மொழி பெயர்ப்புப் பாடல்.

"மன்மதன் தொடுத்த/மலர்க்கணை ஒருபால்/

தீங்குரல் இசைத்த/மாங்குயில் ஒருபால்/

மருக்கமழ் மந்தமாருதம் ஒரு பால்/

செந்தழல் சாறெனும்சந்தனம் ஒருபால்/

அதிதியர் தருவெங்கதிர்மதி ஒருபால்/

தத்தையே விளைக்கும் தத்தைகள் ஒருபால்/

ஆகுல மேதரு மாகுலம் ஒருபால்/

என்றனை வருத்திநின்றன அந்தோ /

இது 'விசுவநாதன் அல்லது கடமை முரண்' எனும் நாடகத்தில் வரும் உரையாடல் எளிமையும் கவித்துவமும் உணர்ச்சியும் மேலோங்கும் வகையில் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரின் நாடக உத்தியை அடியொற்றி நாடகப் படைப்பை மேலும் செழுமைப்படுத்த சோதனை முயற்சியாக தமது செய்யுள் நாடகங்களை யாத்துள்ளார்.

அருமையுடன் நமை வளர்த்த/

அன்னையினைக் காண்பதற்கோ / அறிவு சான்ற/

தரும குணமிகு நமது /

தந்தையினைக் காண்பதற்கோ /

தன்னேரில்லாப் பெருமையொளிர் /

நம் தமையன் ஜெகதீசற் காண்பதற்கோ / பெரிய தங்காய் /

உரிமை பெறு விண்புகுந்தாய்/

சிறுமை ஏதும் அறியா நல்

உள்ளத்தாளே/

என்று சகோதரியின் மரணத்தை இரங்கற்பா எழுதி உருகுகிறார்.

பொன்னைப் பெறலாம்/

புகழைப் பெறலாம் இவ்வுலகில் /

உன்னைப் பெறலாமோ

ஓதுவாய்/

அன்னை தனைப் பயந்த

அய்யாவே / என்று பாடி அவரின் தாத்தா சிவயோகி அவர்கள் மறைவிற்கு தன் கவியால் உருகுகிறார்.

ஓர் மகவும் இல்லை எனும்

ஒச்சம் அற/

வயது முப்பத்து ஒன்றிலேனும்/

ஏர்மகன் ஈன்று மகிழச்செய்தனையே /

எம் பேற்றை எண்ணி எண்ணி/

ஆர்வமுடன் மனக்கோட்டை கட்டினமே/

அந்தோ அவ்வருமை வாய்த்த

சீர்மகனை ஈன்ற இரண்டாம் வாரம்/

சிவலோகம் சேர்ந்திட்டாயே"

என்று தன் சகோதரி மறைவைக் கவிதை ஆக்குகிறார்.

பாமர ஒப்பாரிப் பாடலின் சொல் நெகிழ்வுடன் மரபுக் கட்டமைப்பில் பாடிய கையறுநிலைப்பாடல் வகையில் முக்கியமான வடிவமாகும். கண்ணீரையும் தமிழ்க் கவிதையாக்கிவிட்டு ஆறுதல் அடைந்த தமிழ்ப் பெருமகனார் ம.கோ.

பரிதிமாற்கலைஞர், உ.வே.சா போன்றோரை அற்புதமான பாராட்டு மழையைப் பொழிகிற தமிழ்வானமாகத் திகழ்கிறார். இராமநாதபுரம் மன்னர் இராஜராஜேஸ்வரன் துரையை

'ஈசபக்தியால் சிறந்தான்/ இசை சிறந்தான்/ எழில் சிறந்தான்/ ஈசனார்தம்/ தாசபக்தியில் சிறந்தான்/ தயை சிறந்தான்/ தகை சிறந்தான்/ தன்னேரில்லாத் / தேசபக்தியற்சிறந்தான்/ திருச்சிறந்தான்/ தெருச் சிறந்தான்/ தெய்வீக சீர்/ இராசபக்தியிற் சிறந்தான்/ இராஜராஜேசன்/ எங்கள் இராசன் வாழி/என்று பாடும் செந்தமிழ் வாழ்த்தால் தன் மனவளத்தைக் காட்டு வதன்றி மொழி வளத்தில் நிமிர்ந்து நிற்கிறார் பண்டிதர்.

அன்மையில் வெளியான ஆயிரம் பக்கத்திற்குமேல் உள்ள 'பாரதி விஜயம் 'என்ற நூலில் கூட பாரதியினுடைய தம்பி சி.விசுவநாதன், பாரதியியல் ஆய்வாளர் சீனி.விசுவநாதன் உள்ளிட்டோரின் கூற்றாக ம. கோ வின் அடி நாள் தொண்டை முன்னுரையிலேயே மொழிகிறார், அந்த நூலின் தொகுப்பாசிரியர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் அவர்கள்.

ஆனாலும் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிஞர் ம.கோ.வின் தொண்டுச்சுவடு இப்போதுதான் கண்களுக்குப் தெரியத் தொடங்கி இருக்கிறது. அறத்தின் பாற்பட்டதே இல்வாழ்க்கை என்று வள்ளுவம் பேசுவதை எல்லா தளத்திலும் தன்னுணர்வு நிலையில் அறத்தைப் பின்பற்றியவர் தமிழைக் கற்றலே ஒரு அறம், தமிழ் கற்றலில் நிற்றல் இன்னொரு விழுமிய அறம், தமிழ்ச் சமூகத்தை உலக வளர்ச்சியை நோக்கி உந்தித்தள்ளல் உலகம் தழுவிய அறம் என்ற முப்பரிமாண நோக்கில்தான் அவரின் அனைத்துச் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. உலகை வென்ற தமிழன் தேய்ந்துபோனதற்கு பல காரணங்களை உளவியல் பார்வையில் ஆய்வு செய்து அதிர வைத்தார் க.ப.அறவாணன். அவர் கூறும் மிக முக்கிய காரணங்களில் முதன்மையான ஒன்றை இன்றை தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும்.

''தமிழர் எண்ணியது கோடி பேசியது இலட்சம் எழுதியது ஆயிரம் அச்சிட்டது நூறு பின்பற்றியது பூச்சியம்"

என்ற விமர்சனத்தை தமிழர்கள் பேச இயலாதவர் கண்ட கனவுபோல கடக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் மத்திய அரசின் செம்மொழி நிறுவனம் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 643.84 கோடிகளும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு 22.94 கோடிகளும் ஒதுக்கீடு செய்து மொழியை பாரபட்சத்தோடு பார்க்கிற கொடுங்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில் நாம் பண்டித கோபாலகிருஷ்ண அய்யரை உரத்த குரலில் ஏன் பேச வேண்டும் என்றால் அவர் சொல்கிறார் அற்ப சந்தோஷிகளிற் சிலர், தமிழ் மொழிகள் யாவும் ஸம்ஸ்கிருதத்தின் திரிபென்று சாதிக்கிறார்கள். வேறு பெருமூடர் ஸம்ஸ்கிருத பதங்கள் எல்லாம் தமிழின் திரிபுகள் என்று பிரசித்திப்படுத்தி அவ்வாறு கூறற்கு, அச்சமின்றி அருவருக்கத்தக்கதும் சுத்த அபத்தமானதுமான காரணங்களைக் கற்பித்துத் தம்போன்ற குருட்டபிமானிகளின் துதிப் பெற்றுக் காலங்கழிப்பாராயினர். இவ்விரு திறத்த கூபமண்டூகங்களும் நாணித் தலைகவிழ்ந்து வாயடங்கி நிற்குங் காலமே தமிழ்க்கு கேஷம காலமாகும்.

“சுயபாஷாபிமானம் மிகுதியாக எவ்வளவு இருந்த போதிலும், பிறபாஷாத்துவேஷம் என்பது அணுவளவும் இல்லா திருத்தலே மேன்மை துவேஷ புத்தியால் விளையும் தீங்கும் விபரீதமும் மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்”.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தத் தமிழை தொல்காப்பியர், கபிலர் உள்ளிட்ட ஏராளமான அந்தணர்கள் வளர்த்து வந்தார்கள். அதே அந்தணர்களாகிய நீங்கள் தாய்த்தமிழை இழிவு செய்தால் உங்கள் முன்னோர்களையே இழிவு செய்ததாக அர்த்தம் என்கிறார் ம.கோபாலகிருஷ்ணய்யர்.

1878 இல் பிறந்து 1927 இல் மறைந்த ம.கோ அவர்கள் நாற்பத்து ஒன்பதே வருடம்தான் வாழ்ந்துள்ளார். தமிழுக்கான விடுதலைக் குரலாகட்டும், தமிழர்களுக்கு முன்னிருத்திய திருக்குறள் அறக்கருத்தாகட்டும், அறிவியல் பார்வைக் கட்டுரைகளாகட்டும், ஆங்கிலப் பாடல்களை மொழிபெயர்த்தல் ஆகட்டும், பெண்கல்வி மேம்பாடு, நாடகம், உரைநடை ஆகிய முன்னெடுப்பாகட்டும் வாழ்வில் படித்ததை அறத்தொடு நின்று பின்பற்றி வாழ்ந்த பண்பு செம்மார்ந்து தெரிகிறது. குடும்பப் பின்புலம் நன்றாய் இருந்தும் நாற்பத்து ஒன்பது வயதிலேயே மனசாட்சி வழுவா வாழ்வறிஞர ஏன் மறைந்தார் என்ற கேள்வி உறுத்தியவாறு நம் முன்நிற்கிறது. எதிர்நீச்சல் போடுபவரை இந்த உலகம் எல்லோரையும் கரைசேர விடுவதேயில்லை.

-முனைவர் அகவி

Pin It