chandrakanthanநெடி துயர்ந்த தோற்றம், எப்போதும் பாரதியை நேசிக்கும் உள்ளம். ஜெயகாந்தனைக் குருவாக வரித்துக் கொண்ட நேயம். மார்க்சியத் தெளிவும், காந்திய ஒழுக்கமும், நேருவின் சோசலிசப் பார்வையும் கொண்ட தமிழ் இயக்கம், இவையாவும் ஓருருக் கொண்ட பேரியக்கத்தின் பெயர் சந்திரகாந்தன்.

அவருக்கு இட்ட பெயர், குப்புசாமி. அழைத்த பெயர் சந்திரன். அவர் தாமே புனைந்துகொண்ட பெயர் சந்திரகாந்தன். சுருக்கமாய், சகா. இவர் பெற்ற பிள்ளை, அரவிந்தன். அப்பெயர் விளங்க, ‘அரவிந்தப்பன்’ என்ற பெயரிலும் மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்தவர்.

சிறுகதையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், கவித்துவம் ததும்பக் கதைசொல்ல வல்ல இவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியவர். ஜெயகாந்தனின் சஹ்ருதயர் வட்டத்து உறுப்பினர்களுள் ஒருவர்.

நாவலாசிரியர் ஆ.சந்திரபோஸ் அடிக்கடி இவர் பற்றிச் சொல்லும் ஒரு வாசகம், ‘சந்திரகாந்தன் ஓர் அற்புதமான தோழன். நெல்லிக்காய்களாய் இருக்கும் நபர்களையெல்லாம் ஒருங்கிணைத்து இயக்கம் கட்டவல்ல தோழன்.’ தன்னலம் துளியும் இன்றிப் பொதுநலம் தவிர வேறு எந்நலமும் அறியாத அறத்தின் வடிவம் சந்திரகாந்தன்.

தன் முகவரியைத் தமிழ் முகவரியாய்ச் செய்யவல்ல எழுத்தாற்றல் உள்ளபோதும், தான் மேற்கொண்ட வங்கிப் பணியையே முதன்மையாய்க் கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து அதனை நிறைவு செய்வதைத் தவமாகக் கொண்டிருந்தார். அவர்களைச் சுற்றத்தினருக்கும் மேலாக மதித்தார்.

அவருக்கு இருந்த திறமைக்கும் ஆற்றலுக்கும் வலியவந்த எந்தப் பதவி உயர்வையும் ஏற்றதில்லை. அவை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, சிவகங்கை மாவட்டக் கிளைகளில், அதுவும் சிங்கம்புணரியில் பல ஆண்டுகளும், நெற்குப்பையில் சில ஆண்டுகளும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

இந்தியன் வங்கியை, இந்தியாவைப் போல நேசித்தார். இவரது யூனியன் இயக்கப்பணிகளும் மகத்தானவை. உழைக்கும் தோழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும், கடமை தவறாமல் பணிபுரிய நெறிப்படுத்துவதிலும் ஆசான் நிகர்த்தவர்.

கலை இலக்கியப் பெருமன்ற மதுரைக் கிளையின் விழுதென எழுந்தவர். சிவகங்கை மாவட்டக் கிளையை ஒருங்கிணைக்கவும் செயற்படுத்தவும் முனைந்து நின்றவர். புதுக்கோட்டை, அறந்தாங்கிக் கிளைகளின் பல நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்றவர். ஓய்வுபெற்றபின், முழுமூச்சாய்ப் பெருமன்றத்தின் ஆக்கப்பணிகளிலும், தாமரை இதழ் வளர்ச்சிப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

‘கடவுள் அறியக் கடவுள் பொய்’ என்று கடைசிவரைக்கும் நாத்திகம் பேசியவர். ஆனால், கடவுளை நம்புகிறவர்களைக் கடவுளைவிடவும் அதிகமாகக் கடைசிவரையிலும் நம்பியவர். ‘உச்சபட்ச நாத்திகமும் உச்சபட்ச ஆத்திகமும் ஒரு புள்ளியில் இணையும்’ என்பதை உணர்ந்தவர்; உணர உரைத்தவர்.

பாரதியைக் குருவாகவும், ஜெயகாந்தனை ஆசானாகவும், குன்றக்குடி அடிகளாரை ஞானத்தந்தையாகவும் கொண்டு எழுந்த ‘தொடரும்’ இயக்கத்தின் தலைவர். ஆனால், கடைநிலைத் தொண்டரிலும் கடை நிலையராகத் தன்னை நிறுத்திக் கொண்டு, எங்களை முன்னுக்குக் கொண்டுவந்தவர்.

பற்றற்றுப் பணி செய்கிற பக்குவம், இவருக்கு இயல்பிலேயே வாய்த்தது. எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் விலகி நின்று தன் பணிகளை மட்டுமே திட்டமிட்டுச் செய்து கொண்டிருப்பார். மிகச்சிறந்த ஜனநாயகவாதி.

எதற்கும் ஆசைப்படாத, எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்கிற இலட்சியப் பெருநோக்கிலிருந்து எப்போதும் விடுபடாத இயல்பு இவருக்குப் பிறவியிலேயே அமைந்துவிட்டது. ‘இயல்பு அலாதன செய்யேல்’ என்பது இவரது வாழ்வின் அடிப்படை அறம். அதனையே உபதேசமாகவும் தந்தவர். ‘தோழர்’ என்று இவர் உச்சரிக்கும் நேர்த்தியும், ‘தோழா’ என்று அழைக்கும் பாணியும் புன்னகை தவழும் இவரது அன்பு முகத்தை முன்கொண்டுவந்து நிறுத்தும்.

‘சார்’ என்று அழைத்தாலும், ‘தோழர்’ என்று குறிப்பிட்டாலும், ‘அண்ணன்’ என்ற உறவையும் உரிமையையும் கொள்கிற வாய்ப்பை எம் போன்றோருக்குத் தந்திருந்தார். எங்கள் வீட்டின் தலைப்பிள்ளை, சந்திரகாந்தன். இப்படி என்னொத்த எத்தனையோ உயிர்த் தோழர்களோடும் இத்தகு உறவை - ஒப்புக்காக அல்லாமல் - உணர்ந்து கடைப்பிடித்து ஒழுகிய உன்னத மனிதர்.

தன் குடும்பத்துக்கும் மேலாகத் தோழர்களின் குடும்பங்களை நேசித்தவர். அவர்களின் குடும்ப உறுப்பினராகவே திகழ்ந்தவர். அக்குடும்பங்களில், பெற்றோருக்கும் மற்றோருக்கும் கட்டுப்படாத முரட்டுத்தனம் கொண்ட இளைஞர்களையும், அறம் பிறழாது விவாதித்து விளங்கவைத்து ஒழுங்குபடுத்தியதில் இவருக்கு இணை யாருமில்லை.

தம்மில் மூத்தோருக்குள்ளும் ஏற்படுகிற பிணக்குகளைப் போக்கி நல்லிணக்கம் கொள்ளவைக்கிற குடும்ப வழக்கறிஞரும் நீதிபதியும் ஆக இவர் திகழ்ந்தார். அந்த அனுபவங்களை மட்டுமே, இவர் எழுதியிருந்தால், அவை பல நாவல்களாகப் பெருகியிருக்கும்.

சமகால வாழ்வின் அபூர்வ மனிதகணங்களைத் தெரிவுசெய்து சித்திரிக்கும் சந்திரகாந்தன் கதைகளில் மண் மணமும் மக்கள் நேயமும் இழையோடும்; எப்போதும் மார்க்சியப் பார்வை அடிநாதமாகத் திகழும்; தர்க்க நியாயங்கள் எழும். வாசக மனங்களின் முன் வினாக்களை எழுப்பி விவாதிக்கும் பாத்திரங்கள் இவருடையவை.

இரத்தமும் சதையுமாகத் தான் கண்முன் கண்ட நிகழ்கால மாந்தர்கள் பலர் இவரது படைப்புகளில் பாத்திரங்களாக உலவுகிறார்கள். வரலாற்றுப்பின்புலமும், சமூகப் பிரக்ஞையும் கொண்ட அம்மனிதர்களின் உள்ளக்கிடக்கையைத் தன் சித்தாந்தப் பின்புலத்தோடு இணைத்துக் கதை எழுதுவதில் கைதேர்ந்தவர் சந்திரகாந்தன்.

யதார்த்த வாழ்வின் நிதர்சன உண்மைகளைத் தத்துவச் செறிவோடு கவித்துவமாகச் சொல்லத் தெரிந்தவர். சொலவடைகள், பழமொழிகள், இவற்றினூடே சொல்லாய்வுகளையும் செய்து அவற்றுக்குள் பொதிந்திருக்கும் தொன்மங்களைப் புலப்படுத்திவிடுவார். சிங்கம்புணரி வட்டார மொழிகளை எழுத்துநடையில் பதிவிட்ட சிறப்பு இவர்தம் கதைகளுக்கு உண்டு. சான்றுக்கு ஒன்று.

‘அவன்’ என்பது ஒருமை. ‘அவர்கள்’ என்பது பன்மை. மரியாதைக்குரிய ‘அர்’ விகுதியை விடுத்துப் பன்மையாக, ‘அவன்கள்’ என்று பொருள் கொள்ளும் வண்ணம் சொல்கிற வார்த்தையை எழுத்துநடையில் இவர் கொண்டு வந்தார். ‘அவனுக’, ‘அவனுங்க’ என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில், அதே ஒலிப்பு முறையில், ‘அவங்ய’ என்று எழுதினார். அதேபோல், ‘பேச்சாக்குறது’ என்ற சொல்லுக்கு இவர் தந்த விளக்கம், ஒரு புதிய கண்டுபிடிப்பு என்றே சொல்ல வேண்டும்.

பக்கங்களைக் கணக்கில் வைத்துக்கொண்டோ, பத்திரிகைகளைக் கவனத்தில் கொண்டோ, இவர், தம் கதைகளை எழுதியதில்லை. தனக்குள் கதையை நிகழ்த்திக் கொண்டும், கதாபாத்திரங்களைப் பேசவிட்டும் வாத, தர்க்க நியாயங்களை எழுப்புகிற அந்த உரையாடலில், செயற்கைப் பூச்சு நிகழாமல் பார்த்துக் கொண்டும், அவர் தீவிரமாகச் சிந்திப்பார். தன்னளவில், முழுமையாகிற வரைக்கும் அதை எழுதுதற்காகப் பேனாவைத் திறந்ததில்லை. பெரும்பாலும் அடித்தல் திருத்தல் இவர் எழுத்துக்களில் வந்தது இல்லை.

தாமரை, கல்பனா, தொடரும், ஆகிய இதழ்களிலும், முகநூல் பகுதியிலும் வெளிவந்த இவரது கதைகள் குறைவானவை. எனினும் சிறுகதை உலகில் தனித்தன்மை பெற்று நிறைவானவை.

அழகாக எழுதுவார். அவர், சொல்லச் சொல்ல எழுதிய அனுபவம் எனக்கு உண்டு என்பதால், எழுதுவதுபோலவே சொல்லுவார். அதுபோலவே வாழ்ந்தும் நிறைந்தார். எழுத்து, சொல், இயக்கம் அனைத்திலும் அப்பழுக்கில்லாத ஒழுங்கின் திருவுரு சந்திரகாந்தன். குற்றங்கடிவதில் ஈவிரக்கம் அற்றவர்.

எல்லாவற்றுக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதை இவரைப் போல் துல்லியமாகக் கணக்கிட்டு எவராலும் எடுத்துரைக்க முடியாது. எப்போதும் அந்த இன்னொரு பக்கத்தையே முன்னிறுத்தி யோசித்ததால்தான், இவரால் முன்பக்கத்தையே முற்றாகத் துறக்க முடிந்தது போலும்.

தங்குதடையில்லாமல் பொங்கிப் பெருகும் அன்பின் ஈரத்தில் பாச வழுக்கலுக்கு இடமேயில்லை. சாதி, சமய, இன, மொழிக் கூறுகளில் மக்களுடன் இணைவு கொண்டிருந்தாலும், அவற்றைக் கடந்தே வாழ்ந்தவர். இணைத்து வென்றவர்.

இந்தியாவையும் சோவியத் யூனியனையும் அளவு கடந்து நேசித்தவர். உலக இலக்கியங்களை, குறிப்பாக, சோவியத் இலக்கியங்களை ஆழக் கற்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் பயின்றது கணிதம். பின்னர் ஆர்வ மிகுதியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாக, முதுகலைத் தமிழ் பயின்றார்.

முனைவர் பட்ட ஆய்வுக்கு நிகராக, இவர் பாரதியிலும் கம்பனிலும் தோய்ந்து எழுதிய கட்டுரைகள் இன்னும் நூல் வடிவம் பெறாதிருக்கின்றன. தன் பெயர் குறிப்பிடாமலேயே, தொடரும் இதழில் கடைசிவரைக்கும் இவர் தந்து கொண்டிருந்த தொடர், ‘சாபவிமோசன யாத்திரை.’

கம்பனை முன்னிறுத்தித் தொடர்ந்த இந்த ஆய்வுத் தொடரில், வான்மீகம் தொடங்கி, உலகக் காப்பியங்களையெல்லாம் தேடிக் கற்று விவாதித்து எழுதினார். அது தொடர்பாக, காரைக்குடி கம்பன் கழகத்தில் ஓர் ஆய்வுரையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இஸ்கஸ், இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசியச் சம்மேளனம் ஆகியவற்றின் கிளைகளைச் சிங்கம்புணரியில் சக தோழர்களை இணைத்து நிறுவி, எத்தனையோ விழாக்களை நடத்தியவர். அவற்றுள் மிகமுக்கியமானது, ஜெயகாந்தன், தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ‘இராஜராஜன் விருது’ பெற்றதற்காகச் சிங்கம்புணரியில் இவர் நடத்திய மிகப்பிரம்மாண்டமான பாராட்டுவிழாக் கூட்டம்.

மக்கள் கூடும் சந்தைக்கிழமையான ஒரு வியாழக்கிழமையில், சிங்கம்புணரி ‘மக்கள் மன்றத்தில்’ தோன்றி, ஜெயகாந்தன் பேசிய பின்னர், அந்த ஞானப் பரம்பரையில் ஒருவராகத் தங்கள் பகுதிக்கு வாய்த்த ஜெயகாந்தனாகச் சந்திரகாந்தனைச் சிங்கம்புணரி வட்டாரம் தேர்ந்துகொண்டது.

இராமநாதபுரத்துக் காவனூரைச் சொந்த ஊராகக் கொண்ட குப்புசாமியைத் தன் ஊர் சந்திரகாந்தன் என்ற எழுத்தாளனாகச் சிங்கம்புணரி ஈர்த்துக் கொண்டது, அப்போது, இதுவும் இராமநாதபுர மாவட்டத்தின் ஓரூராக இருந்தது. பின்னர் சிவகங்கையைத் தலைநகராகக் கொண்டு பிரிக்கப்பட்டபோது, சிவகங்கையை இலக்கிய கங்கையாக மாற்றிய கவிஞர் மீரா மரபில், சிங்கம்புணரியை இலக்கியபுரியாக மாற்றிய எழுத்தாளராகச் சந்திரகாந்தன் இருந்தார்.

அவரைத் தேடித் தமிழகத்தில் இருந்து பல எழுத்தாளர்கள் இந்த ஊருக்கு வருகை தருவது தொடர்ந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை வரவழைத்து, நேரு நூற்றாண்டுவிழாவை நடத்தினார். 1990களில் தொடரும் உருளச்சிதழைத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அதன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார்.

நமது அருமைத் தோழர்கள், ஜெயகாந்தன், பொன்னீலன், தனுஷ்கோடி இராமசாமி, பேராசிரியர் தி.சு.நடராசன், தோழர் சி.ஏ.பாலன், தோழர் மகேந்திரன் உள்ளிட்ட பல தோழர்கள் இங்கு வந்து இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுப் பெருமை சேர்த்திருக்கின்றனர். இராமநாதபுரம் கலை இலக்கியப் பெருமன்ற விழாக்களையும் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்.

வருடம் தவறாமல், தேவகோட்டை பாரதிவிழாவில் பங்கேற்றுப் பணி செய்த பண்பாளர் சந்திரகாந்தன். புதுச்சேரி கலைஇலக்கியப் பெருமன்ற விழாக்களிலும் பங்கேற்று உரைநிகழ்த்தியிருக்கிறார். 2019 சென்னைப் புத்தகத் திருவிழாவில் ஜெயகாந்தன் குறித்த தொடரும் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியவர். ஜெகாதா, ஆர்.எஸ். சண்முகம், மு.பழநியப்பன் உள்ளிட்ட தோழர்களின் நட்பு வட்டத்தில் சந்திரகாந்தன் ஒரு மையப்புள்ளி.

‘மார்க்சிய ஞானரதம்’ என்று போற்றப்பெறும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், இவரது ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ‘புல்லைப் புசியாத புலிகள்’(1986), சப்தக்குழல் (1994) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ‘எர்னஸ்டோ சே குவேரா’ மொழிபெயர்ப்பு நூலையும் சந்திரகாந்தன் தந்திருக்கிறார்.

நியூ செஞ்சுரி நிறுவனம், விரிவான விளக்கங்களுடன் பாரதியார் கவிதைகள் நூலை எளிய மக்கள் பதிப்பாகக் கொண்டுவர விரும்பியபோது, இவரே அப்பணியைச் செய்து முடித்தார். அனைத்துக் கவிதைகளையும் கைப்பட எழுதி, பிழைதிருத்தித் தொகுத்தளித்தபோது, உடனிருந்து பணிசெய்து பார்த்த அனுபவமும் உண்டு.

அந்தக் காலகட்டத்தில், ‘மகாகவியின் கல்விக்கொள்கை’ என்ற தொடரைத் “தொடரும்' இதழுக்காக எழுதிக் கொண்டிருந்தார். ஒரு பத்தி எழுதுவதாக இருந்தாலும் அதற்கான தரவுகளை எத்தனையோ நூல்களில் இருந்து திரட்டித் தொகுத்து, விவாதித்து எழுதுவது இவரது வழக்கம். வார விடுமுறை நாட்களில் மதுரை நியூ செஞ்சுரி நிறுவனத்திற்குத் தவறாமல் வந்துவிடுவார்.

புதிதாய் வரும் எந்த நூலாயினும் உடனே படித்து விவாதிப்பதும், தக்க இளம்படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குள் பொதிந்திருக்கும் முற்போக்குச் சிந்தனைகளைக் கிளர்த்தி, உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதும் இவர் வழக்கம்.

அமரர்களாகிவிட்ட தோழர்கள் உலகநாயகம், நவபாரதி, ‘சகுந்தலை’ என்ற புனைபெயரில் எழுதிய ஆ.சந்திரபோஸ் ஆகியவர்களின் தோழமையில் உருவான இலக்கிய இயக்கம் சந்திரகாந்தன். கவிஞர் பரிணாமனின் கவிதைகளை ரசிப்பதிலும் அப்படியே பாடி விளக்குவதிலும் அவரைத் தூண்டி தொடர்ந்து எழுதவைப்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்தினார்.

என்.சி.பி.எச். வெளியீடாக ‘வைகையில் வெள்ளம் வரும்’ (கல்பனா, மாத இதழ், மலர்- 2. இதழ்-4, 1980) என்ற நாவலைத் தந்த இவர், பின்னர், ஸ்ரீசெண்பகா பதிப்பக வெளியீடுகளாக, ‘தழல்’(2003), ‘அண்டரண்டப்பட்சி’(2004) ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். தொடர்ந்து, ஆளுக்கொரு கனவு (2000), குதிரைவீரன் கதை (2019) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.

மேலும், ‘இருபதாம் நூற்றாண்டின் சில சிறுகதைகள்’ என்று மகாகவி பாரதியார் தொடங்கி இவர் எழுதிய சிறுகதை வரைக்குமான பத்துக் கதைகளைத் தொகுத்தளித்திருக்கிறார். இவரது படைப்புகள் பல கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பெற்றிருக்கின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழு உறுப்பினராக இருந்து, இவர் எழுதிய கதைகளும், நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.

மேலும், ‘தொடரும்’ இதழின் சிறப்பு வெளியீடுகளாக வந்துள்ள ‘தொடரும் சிறப்பு மலர்' (1993), ‘தொடரும் ஒளித்திரள்’ (2002) ‘ஜெயகாந்தம்' (2020) ஆகியவற்றின் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்திருக்கிறார். சாகித்திய அகாதெமிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுக் கதைகள் வாசித்தும், கட்டுரைகள் எழுதியும், உரைகள் நிகழ்த்தியும் இருக்கிற சந்திரகாந்தன்.

இந்திய மொழிச் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். முகநூலில், “கட்செவிப் புலன'த்தில் இவர் எழுதிய விமர்சனங்கள் சிறப்பானவை. தொடரும் இதழில் சடாயு என்ற பெயரில் ‘சாவடி’ எனும் தொடர் எழுதிய சந்திரகாந்தன் முகநூலில், அய்யம்பெருமாள் எனும் பெயரில் எழுப்பிய கேள்விகள் சமகாலப் போக்குகளைப் பகடி செய்து எழுப்பப்பட்ட ஆய்வுபூர்வமான ஐயங்கள்.

கவிஞர் மீரா, தோழர்கள் ஜெயகாந்தன், பொன்னீலன், இளசை மணியன், நா.தர்மராஜன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அடிகளாரின் உதவியாளர் மரு.பரமகுரு ஆகியோரைப் பேட்டி கண்டு விரிவாகத் தொடரும் இதழில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தவர் சந்திரகாந்தன்.

தான் எழுதுவதைவிடவும் தன் காலத்துப் படைப்பாளிகள் நிறையவும் நிறைவாகவும் எழுதவேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். அவரால், இலக்கிய உலகில் புகுந்த இளம்படைப்பாளிகள் பலர். கலை இலக்கியப் பெருமன்றக் களப்பணியாளர்களாகவும் அவர்கள் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வைரவிழாக் காணும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த சந்திரகாந்தனின் எதிர்பாராத மறைவு பேரிழப்பு. கொரோனாவுக்குப் பின்னர், அவர் செய்யத் திட்டமிட்டிருந்த களப்பணிகளும், எழுத்துப்பணிகளும் எவ்வளவோ? அவர் படித்து முடித்து அடிக்கோடிட்டிருந்த பக்கங்களை மையப்படுத்தி, யோசித்து வைத்திருந்த சிந்தனைகள் எத்தனையோ?

22.09.1957 அன்று அருணாசலம் - சேதுபருவதம் தம்பதியருக்குத் தலைப்பிள்ளையாகப் பிறந்த சந்திரகாந்தனின் திருமணம் ஜெயகாந்தனின் தலைமையில் இராமநாதபுரத்தில் நிகழ்ந்தது. அவருக்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்தவர், உமாமகேஸ்வரி. மகன் அரவிந்தன்.

உடன்பிறந்த தம்பி தங்கையர்க்குத் தந்தைநிலையில் நின்று இவர் ஆற்றிய கடமைகள் மிக நேரியவை. அவற்றை விடவும் சக தோழர்களின் இல்லத்து நிகழ்வுகளில் இவர் இருந்து பங்கேற்றுப் பணி செய்தவை எழுதித் தீராதவை. அவர் இல்லை எனில் நாங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு என்னொத்த தோழர்களைக் கண்டெடுத்துத் தமிழுக்குத் தந்த இலக்கியத் தளபதியை இழந்து தவிக்கிறது, பெருமன்றம்.

எதிர்பாராத விதமாக, 9.05.2021 அன்று ஞாயிற்றுக் கிழமை நண்பகலில், ‘தழல்’ நாவல் தந்தவரைத் தழல் தின்னக் கொடுத்துவிட்ட வெக்கையும் வெறுமையும் இன்னும் அடங்கவில்லை. அவர்தம் எழுத்துக்களை முழுதாகத் தொகுத்து வெளியிடுவதும், அவர் விட்ட பணிகளைத் தொடர்ந்து செய்வதும் அவருக்குச் செய்யும் உரிய அஞ்சலியாக உணர்கிறோம். அவரது இருப்பு முற்றுப் பெற்றுவிட்டாலும், அவர் தொடர்ந்த “தொடரும்' என்றும் தொடரும்.

- கிருங்கை சேதுபதி

Pin It