தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி - 8

இந்தியத் தேசியம் பொய் என்று மெய்ப்பிக்கும் முயற்சியில் தோழர் பெ. மணியரசன் கடைசியாகக் கேட்கும் வினா: சோவியத்துத் தேசியம் உருவானதா? ஆம் என்பதே என் விடை. சோவியத்துத் தேசம் உருவானதா? என்று கேட்டால் இல்லை என்று அவர் சொல்வார், நானும் சொல்வேன். ஆனால் தேசத்துக்கும் தேசியத்துக்குமான வரலாற்று-இயங்கியல் உறவை விளங்கிக் கொள்ளாததால் இரண்டும் ஒன்று என எந்திரத்தனமாக முடிவெடுக்கிறார். 

குமுக அறிவியல் நோக்கில் இந்தியத் தேசம் என்ற ஒன்று இல்லாததால் இந்தியத் தேசியம் என்பதும் இல்லாத ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்து, இந்த முடிவுக்கு மாறான வரலாற்று உண்மைகளை பெ,ம. வசதியாக ஒதுக்கித் தள்ளி விடுகிறார் அல்லவா, சோவியத்துத் தேசியம் தொடர்பாகவும் இதே இயங்காவியல் அணுகுமுறையையே கைக்கொள்கிறார். குமுக அறிவியல் நோக்கில் சோவியத்துத் தேசம் என்ற ஒன்று இல்லை என்பதிலிருந்து சோவியத்துத் தேசியம் என்ற ஒன்றே உருவாகவில்லை என்ற பிழையான முடிவுக்குச் செல்கிறார். 

தேசபக்தி, நாட்டுப் பற்று, தாயகம் காத்தல், தந்தையர் நாடு போன்ற உணர்வுகளுக்கும் இவற்றுக்கு வடிவங்கொடுக்கும் கருத்தியலுக்கும் தோழர் பெ.ம. என்ன பெயர் கொடுப்பார்? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்தான் தேசியம். 

இன்றைய இந்தியாவில் ஆளும் கட்சியால் ஒருவகைப் பிற்போக்குத் தேசியம் முன்னிறுத்தப்படுகிறது. தேசபக்தி, நாட்டுப்பற்று என்று பற்பல பெயர்களால் இது வலியுறுத்தப்படுகிறது. இந்தத் தேசியத்துக்கு எதிரானவர்கள் தேச விரோதிகள் என்று தூற்றப்படுகிறார்கள். பிற்போக்கான தேசியத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தேசியம் என்றாலே முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. முற்போக்குத் தேசியம் போல் பிற்போக்கு தேசியமும் உண்டு. 

இலங்கைத் தீவு இருவகைத் தேசியங்களுக்கும் களமாக இருந்து வருகிறது. சிங்களப் பேரினவாதம் சிங்களத் தேசியம் என்று வண்ணிக்கப்படுவது தோழர் பெ.ம.வுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சிங்களப் பேரினவாதிகளை Sinhala nationalists (சிங்களத் தேசியவாதிகள்) என்று தமிழ்த் தேசிய (தமிழீழ) இலக்கியத்திலேயே குறிப்பிடுவதும் உண்டுதான். 

ஜார் மன்னன் ஆட்சியை எதிர்த்து உருசிய மக்களோடு பிற தேசிய இன மக்களும் சேர்ந்து போராடினார்கள். அப்போது உருசியா என்ற சொல் ஒருபுறம் மா-உருசியத் தேசம் அல்லது தேசிய இனத்தைக் குறிப்பதாகவும், மறுபுறம் ஜாராட்சிக்கு உட்பட்ட மொத்த உருசியாவைக் குறிப்பதாகவும் இருபொருளில் ஆளப்பட்ட்து. உருசியக் குமுகியக் குடியாட்சியத் தொழிலாளர் கட்சி (Russian Social Democratic Labour Party – RSDLP) என்பதில் உருசியா என்ற சொல் மொத்த உருசியாவையும் குறித்தது. “மா-உருசியப் பெருமிதம்” என்று லெனின் சொல்வது உருசியத் தேசிய இனத்தை மட்டும் குறிக்கும்.

சோவியத்து என்ற சொல் 1905ஆம் ஆண்டு முதல் உருசியப் புரட்சியின் போதே புழக்கத்துக்கு வந்து விட்டாலும், தொழிலாளர்களின் அரசியல் அதிகாரப் போராட்டத்துக்குரிய அமைப்பைக் குறிப்பதாக இருந்ததே தவிர நாட்டைக் குறிப்பதாக இல்லை. 1917 பிப்ரவரி-மார்ச்சுக் குடியாட்சியப் புரட்சியின் போதும், நவம்பர் குமுகியப் புரட்சியின் போதும் கூட தொழிலாளர்கள்-உழவர்கள்-படைவீர்ர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் செலுத்தவுமான அமைப்பாக இருந்ததே தவிர நாட்டின் பெயராக மாறவில்லை. எனவே அந்தக் கட்டத்தில் சோவியத்துத் தேசியம் என்ற ஒன்று உருவாக வாய்ப்பில்லை. 

1922 திசம்பர் 30ஆம் நாள் சோவியத்துக் குமுகியக் குடியரசுகளின் ஒன்றியத்தை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒப்பமிடப்பட்ட பிறகுதான் சோவியத்துக் குமுகியக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) என்ற அரசு / நாடு பிறந்தது. இதன் சுருக்கப் பெயர்தான் சோவியத்து ஒன்றியம் அல்லது சோவியத்து யூனியன். இதையொட்டியே உருசியப் பொதுமைக் கட்சி (போல்சவிக்) என்ற பெயரும் சோவியத்து ஒன்றியப் பொதுமைக் கட்சி (போல்சவிக்) என்பதாக மாற்றப்பட்டது. பிறகு அடைப்புக்குறியில் இருந்த போல்சவிக் கைவிடப்பட்டு சோவியத்து ஒன்றியப் பொதுமைக் கட்சி ஆயிற்று. சோவியத்துக் குமுகியக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics – USSR) என்பது குமுக அறிவியல் நோக்கில் ஒரு தேசமன்று என்பதில் நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. 

ஆனால் சோவியத்து ஒன்றியத்தில் இடம் பெற்ற தேசங்களிடையே குமுகியக் கட்டுமானமும் குமுகியப் பண்பாடும் ஒரு புதிய ’நாம்’ உணர்வைத் தோற்றுவித்தன. இந்த நாம் உணர்வு ஒரு புதிய நாட்டுப்பற்றுக்கு அடிப்படை ஆயிற்று. குமுகியத் தாய்நாடு அல்லது குமுகியத் தந்தையர் நாடு (SOCIALIST FATHERLAND) என்ற உணர்வும் அதையொட்டிய கருத்தியலும் உருப்பெற்றன. இது முதலியத் தேசியம் அன்று, குமுகியத் தேசியமே (சோசலிசத் தேசியம்) என்பது தெளிவு. சோவியத்து ஒன்றியத்தில் உறுப்புகளாக இருந்து குமுகியக் கட்டுமானத்தில் ஒன்றுபட்டு நின்ற பல்வேறு தேசங்களுக்கிடையே எழுந்த தோழமையையும் அதன் வெளிப்பாடாகிய பண்பாட்டையும் சோவியத்துத் தேசியம் என்று குறிப்பிடுகிறோம். 

இந்த சோவியத்துத் தேசியம் எப்போது எப்படி முழுமையாக வெளிபட்டது? எத்தகைய வீரமும் ஈகமும் அதிலிருந்து விளைந்தன? வரலாற்றில் அதன் வகிபாகம் என்ன? என்பதையெல்லாம் தோழர் பெ.ம.வுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு கருத்து சரியானதா அல்லவா? என்பதற்கு இறுதியான ஆய்வுக் களம் நடைமுறை வாழ்க்கைதான். சோவியத்துத் தேசியம் என்ற கருத்தும் இப்படித்தான் இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை எதிர்த்து சோவியத்து மக்கள் (ஒன்றுபட்ட மக்களினங்கள்) குமுகியத் தந்தையர் நாட்டைக் காக்க (in defence of the socialist fatherland) நடத்திய போரில் தன்னை மெய்ப்பித்துக் கொண்டது. 

இரண்டாம் உலகப் போரில் சோவியத்து ஒன்றியம் சந்தித்த மொத்த உயிரிழப்புகள் சற்றொப்ப 2.6 கோடி. அப்போதைய சோவியத்து மக்கள்தொகையான 19 கோடியில் இது சற்றொப்ப 14 விழுக்காடு ஆகும். உலக வரலாற்றிலேயே ஆகக் கொடியதான அந்தப் பெரும்போரில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கணிப்பதில் மாறுபாடுகள் இருப்பினும் இழப்புகளின் அட்டவணையில் சோவியத்து ஒன்றியமே முதலிடத்தில் உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு அடுத்த இடத்தில் சீனம் 2 கோடி உயிர்களை இழந்தது. உலக அளவில் அப்போதைய மக்கள்தொகை சற்றொப்ப 230 கோடி, உயிரிழப்புகள் சற்றொப்ப 3 விழுக்காடு. 

சோவியத்து குமுகியத் தந்தையர் நாடு சந்தித்த உயிரிழப்புகள் வெறும் புள்ளிக்கணக்குகள் அல்ல. இவை அம்மக்களும் அரசும் நடத்திய வெஞ்சமரின் வீரத்துக்கும் ஈகத்துக்குமான சான்றுகள். சோவியத்து மக்களின் (அனைத்து மக்களினங்களின்) கூட்டு உணர்வுக்கு -– சோவியத்துத் தேசியம் என்ற உணர்வுக்கும் கருத்துக்கும் குருதிச் சான்றுகள் (இரத்த சாட்சிகள்). 

தேசிய இனச் சிக்கலில் பாட்டாளி வகுப்பின் அணுகுமுறைக்கு மூன்று அடிப்படைகளைப் புரட்சித் தலைவர் இலெனின் வலியுறுத்துவார். ஒன்று: அனைத்துத் தேசிய இனங்களுக்கும் தன்தீர்வுரிமை. இரண்டு: தேசிய இனங்களிடையே நிகர்மை. மூன்று: வெவ்வேறு தேசிய இன உழைக்கும் மக்களிடையே ஒற்றுமை. 

நவம்பர் புரட்சி (உருசியக் குமுகியப் புரட்சி) தேசியத் தன்தீர்வுரிமையையும் நிகர்மையையும் நிலைநாட்டியது, அரசதிகாரம் கொண்டு உறுதி செய்தது. வெவ்வேறு தேசிய இன உழைக்கும் மக்களிடையே ஒற்றுமை என்ற அடிப்படையில் எதிர்ப்புரட்சியையும் அயல் தலையீட்டையும் முறியடித்தது மட்டுமல்ல, ஒரு புதிய குமுக ஒழுங்கைக் கட்டியெழுப்பவும் செய்தது. சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் இடந்தராத அந்த அமைப்பு இந்த ஒற்றுமையை நிலைப்படுத்தியது. நிலைபெற்ற இந்த ஒற்றுமை பாசிசத்துக்கு எதிரான செருக்களத்தில் மென்மேலும் திண்மை பெற்றது. இதுதான் ”சோவியத்துத் தேசியம்” உருவான விதம். 

உருசியத் தேசம் - உருசியத் தேசியம், உக்ரைன் தேசம் – உக்ரைன் தேசியம், ஜார்ஜியத் தேசம் – ஜார்ஜியத் தேசியம்… இன்னும் இது போல் பல தேசிய இனங்களும் தேசியங்களும் இருப்பினும் வரலாற்றுக் காரணிகளால் பல்வேறு தேசங்களுக்கும் பொதுவான ஒரு புதிய தேசியமாக சோவியத்துத் தேசியம் எழுந்தது. இதனை ஒரு வகையில் பன்னாட்டுத் தேசியம் (சர்வதேசியம்) என்றும் குறிப்பிடலாம்.

தமிழ்த் தேசியமே கூட இன்றைய உலகில் ஒரு தேசிய இனத்தின் தேசியமாக மட்டுமல்லாமல் ஒரு வகையில் பன்னாட்டுத் தேசியமாகவும் மலர்ந்திருப்பதைத் தோழர் பெ.ம. ஒப்புக்கொள்வார். 

சோவியத்துத் தேசியம் குமுகியக் கட்டுமானத்தில் பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருந்த அளவில் நேர்க்கூறும், பாசிச வன்படையெடுப்பை முறியடிப்பதற்கான ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருந்த அளவில் எதிர்க்கூறும் கொண்டு விளங்கிற்று. 

சோவியத்துத் தேசியம் தொடர்பான வரலாற்றுப் பார்வையை இந்தியத் தேசியத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஓரளவு நீண்ட காலத்துக்குக் களத்தில் துடிப்புடன் இயங்கச் செய்த ஒரு தேசியம் எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? முற்போக்கோ பிற்போக்கோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படி ஒன்றே பொய் என்றால் எப்படி? பொல்லாததாகக் கூட இருக்கட்டும். இல்லாதது என்றால் எப்படி? தோழர் பெ.ம.வும் அவரைப் போலவே கருதக் கூடிய தோழர்களும் சிந்தித்துப் பார்க்கட்டும். 

(முதல் பகுதி முற்றும்)

(தோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழியாக எழுதத் தொடங்கிய கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இத்துடன் முடிகிறது. இது மார்க்சிய நோக்கில் தேசியம், இந்தியத் தேசியம், தமிழ்த் தேசியம் என்னும் பொருள் குறித்தானது. அடுத்த பகுதி பெரியாரும் திராவிடமும் தொடர்பானது. சிறிது இடைவெளி விட்டு எழுதுவேன்.) 

Pin It