கீற்றில் தேட...

 தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியனார். பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்ட 'நம்பியகப்பொருள்' போன்ற நூல்களில் இவர் அகத்தியருடைய பன்னிரண்டு மாணவர்களில் முதன்மையானவர் என்று புராணரீதியாகக் கூறுகின்ற செய்திகளும் உண்டு. தொல்காப்பியத்தைத் தமிழ்மொழியின் இலக்கணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து பயின்றுவருகின்றனர். ஆனால், 'அகத்தியம்' எனும் இலக்கண நூலை இன்றுவரை யாரும் பார்த்ததாகவோ படித்ததாகவோ செய்திகள் இல்லை. உண்மை இவ்வாறிருக்கையில் தொல்காப்பியர், அகத்தியருடைய தலைமாணாக்கர் என்று சொல்லப்படுகின்ற கதையை எப்படி ஏற்றுக் கொள்வது?

 20 ஆம் நூற்றாண்டில் கே.என்.சிவராஜப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் போன்ற பெருந்தமிழறிஞர்கள் அகத்தியர் வரலாறு குறித்த நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். அவற்றுள் அகத்தியரைப் பற்றி எழுதப்பட்டுள்ள தமிழ் நூலில் குறிப்பிட்டுள்ள செய்திகள் புராணத் தன்மையுடைனவாகவே இருக்கின்றன. தொல்காப்பியரைப் போல வரலாற்றுடன் தொடர்புப்படுத்தக்கூடிய எந்தவிதமான சான்றுகளும் அகத்தியரைப் பற்றி இல்லை என்று அந்த அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். எனில் அகத்தியர் குறித்த பதிவுகள் எந்த அடிப்படையில் தமிழ் இலக்கண, இலக்கிய உலகில் புகுந்திருக்கின்றன என்பதையும், அந்தச் செய்திகளின் வழியாகத் தமிழ் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் எவ்வாறு உருவாயின என்பதையும் காணவேண்டும். அதற்குச் சில கருத்தோட்டங்களாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகவல்களில் கூறப்பட்டுள்ள அனைவருக்கும் இடையிலிருக்கும் பொதுக்கூறு - சிவபெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்பதே.

மேலும், இவர்கள் அனைவரும் இமயமலையில் உள்ளதாகக் கூறப்படும் கையிலாயத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வான்வழியாகப் பறந்துவந்தவர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர்.

 இமயமலை, கையிலாயம் பற்றிய இதுபோன்ற புராணவியல் பதிவுகளுக்குச் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களிலேயே அதுபற்றிய குறிப்புகள் உள்ளன.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வடஇந்திய மன்னர்களை வென்று தங்கள் கொடிகளை இமயத்தில் நாட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது இமயமலையில் சிவபெருமானின் கையிலாயம் உள்ளமை, சங்க இலக்கியப் பதிவுகள் ஒன்றில்கூட இல்லை என்பதைத் தான். தமிழில் கையிலாயத்தைப் பற்றிய கதைகள் பின்வருமாறு அமைகின்றன.

 (1) அகத்தியர், பூமியைச் சமநிலைக்குக் கொண்டு வர சிவபெருமானால் கையிலாயத்திலிருந்து தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவராகப் புராணக் கதைகள் கூறுகின்றன. அத்துடன் சிவபெருமானிடமிருந்து வடமொழியையும் தமிழையும் கற்றுக்கொண்டு அவற்றைத் தோற்றுவித்தார் என்றும் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

 (2) தமிழ்நாட்டில் வேள்விகளின் அடிப்படையிலான 'தீ'யை வழிபடுகின்ற கடவுள் வணக்கமுறை மாற்றமடைந்து, ஆகம அடிப்படையிலான இறை உருவங்களை வணங்குகின்ற வழிபாட்டுமுறை தோற்றம் பெற்றது. அப்படி முதலில் தோன்றிய தமிழ் 'ஆகமநூல்' திருமூலரின் 'திருமந்திரம்' தான். திருமூலர் தான் எழுதிய நூலுக்குத் 'தமிழ் ஆகமம்' என்றே பெயர் வைக்கிறார். திருமந்திரம் எனும் பெயர் அவர் வைத்ததன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சேக்கிழார் பெரியபுராணத்தில் பின்வருமாறு தெளிவாகக் கூறுகின்றார்.

"அந்தி இளம் பிறைக் கண்ணி

அண்ணலார் கயிலையினில்

முந்தை நிகழ் கோயிலுக்கு

முதற்பெரு நாயகம் ஆகி

இந்திரன் மால் அயன் முதலாம்

இமயவர்க்கு நெறி அருளும்

நந்தி திருவருள் பெற்ற

 நான் மறை யோகிகள் ஒருவர்" (பெரியபுராணம்.578)

“தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்ப" (மேலது.600)

 என்று தமிழ்மொழியில் ஆகமப்பொருளை விளக்கும் நூல் எழுதுவதற்காகத் திருமூலர் கையிலாயத்திலிருந்து வந்ததாக சேக்கிழார் கூறுவது கவனிக்கத்தக்கது.

(3) தமிழர்களின் தத்துவம் என்று கூறப்படுகின்ற சைவ சித்தாந்தத்தின் முதல் நூலான 'சிவஞானபோதத்தை' எழுதியவர் 'மெய்க்கண்டார்.' அவருக்கு இத்தத்துவத்தை உபதேசம் செய்தவர் 'பரஞ்சோதி முனிவர்' ஆவர். இவர் கையிலாயத்திலிருந்து வந்ததாகவும் தன்னுடைய ஆசிரியரின் பெயரான 'தத்துவஞான தரிசினி' எனும் வடமொழிப் பெயரை 'மெய்க்கண்டார்' எனத் தன் மாணவருக்குத் தமிழில் பெயரை மாற்றிவைத்து அருள்புரிந்தார் என்றும் சைவசித்தாந்த மரபுச் செய்திகள் கூறுகின்றன.

 கடவுள் வணக்கமும் கலாசோரமும் இவ்வித மாற்றங்களுக்கு உட்பட்ட பின்னர் தமிழ்நாட்டு வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கிலும் அதுவரைக் காலமும் இல்லாத புதியவை கலக்கத் தொடங்கின. அவை;

 தமிழக வரலாற்றில் கி.பி. 8, 9, 10 ஆகிய நூற்றாண்டுகளில் வருணாசிரமமும் சாதியமும் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோரெனப் பிரித்த செய்தியை அக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டுகள், இலக்கண நூல்கள் ஆகியவற்றினால் அறிய முடிகிறது. பல்லவர் காலத்திலும் அதையடுத்து வந்த சோழப்பேரரசுக் காலத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பவர்களுக்கான தனி குடியிருப்புகள் மட்டுமன்றித் தனியே சுடுகாடுகளும் இருந்தமையைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் (8, 9, 10 ஆகிய நூற்றாண்டுகளில்) பன்னிருபாட்டியல் போன்ற பிரபந்த இலக்கண நூல்கள் தோன்றின. இதே காலத்தில் எழுதப்பட்ட யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் குறிப்பாக யாப்பருங்கலத்திற்கு எழுதப்பட்டுள்ள விருத்தியுரையில் 'வடமொழிவழித் தமிழாசிரியர்' என்று ஒருவகையான தமிழாசிரியர்களைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே உரையில் அதையடுத்து வருகின்ற செய்திகளும் நூல்களும் அதுவரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து மாறுபட்ட புதுமையான செய்திகளைக் கொண்டுள்ளன. யாப்பருங்கல விருத்தியுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வித்தியாசமான நூல்கள் பின்வருமாறு;

(1) சோதிடம்,

(2) சொகினம்,

(3) வக்கினகிரந்தம்,

(4) மந்திரவாதம்,

(5) மருத்துவநூல்,

(6) சாமுத்திரியம்,

(7) நிலத்துநூல்,

(8) ஆதேநூல்,

(9) பத்துவிச்சை,

(10) ஆடைநூல்,

(11) அணிகலநூல்,

(12) அருங்கலநூல்,

(13) குறுவேட்டுவச் செய்யுள்,

(14) உலோகவிலாசனி,

(15) பெருவளநல்லூர்ப் பாசாண்டம் ஆகியனவாகும்.

 அதே நூலில் வேறுசில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யாப்பிலக்கணம் சார்ந்த விளக்கங்கள் தொல்காப்பியத்தில் உள்ளவற்றிலிருந்து விலகித் தமிழின் யாப்பிலக்கண மரபு புதிய பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டது என்பதை அந்நூலில் உள்ள

 "இனி, ஒரு சாரர், சந்த அடி பலவாய் வருவனவற்றைச் 'சந்தத்தாண்டகம்' என்றும் தாண்டக அடி பலவாய் வருவனவற்றைத் 'தாண்டகச் சந்தம்' என்றும் சந்த அடியும் தாணடக அடியும் ஒத்து வருவனவற்றைச் 'சமசந்தத் தாண்டகம்' என்றும் வழங்குவர்.

 நான்கடியும் ஒத்து வருவனவும், நான்கடியும் ஒவ்வாது வருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும், பிறவாற்றால் வருவனவும், மாராச்சையும், மிசோகிருதியும் முதலாகிய சாதியும், ஆரிடமும், பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும், பிங்கலமும், மாபிங்கலமும், சயதேவமும், ஞானசாரியமும், சந்திரகோடிசேந்தமும், மயூரத் திரிசந்தமும், மேடகத்திரிசந்தமும் முதலாகிய சந்தோபிசிதிகளுள்ளும், பாட்டியல் மரபு, மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் பகுதியுடையார் (அந்த விவரம் தெரிந்தவர்கள்) வாய்க்கேட்டுக் கொள்க.

 இனி, காக்கைப் பாடினியாரும், பாட்டியல் உடையாரும், வாய்ப்பியம் உடையாரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர், இவற்றையும் இனத்தின் பாற்படுத்து வழங்குவர்" (யாப்பருங்கலவிருத்தி, கழக வெளியீடு, ப.486) - எனும் உரை விளக்குகிறது.

இதே காலத்தில் இயற்றப்பட்ட யாப்பருங்கலக்காரிகையில் 'கந்தம் மடிவில்' என்று தொடங்குகின்ற தற்சிறப்புப் பாயிரத்திற்கு இந்நூலின் உரையாசிரியர் எழுதிய விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களும் புதுமையாயாகவே உள்ளன. அவை;

 “பாளித்தியம் என்னும் பாகத இலக்கணம், பிங்கலம் என்னும் சந்தோபிசிதம், குணகாங்கியம் என்னும் கருநாடகச் சந்தம், மயேச்சுரர் யாப்பு, இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை, அருமறையகத் தட்டகவோத்தின் வருக்கக் கோவை, உருபாவதாரத்திற்கு நீதகச் சுலோகம், வேதத்திற்கு நிருத்தம், வியாகரணத்திற்குக் காரிகை, அவிநயர் யாப்பிற்கு நாலடி நாற்பது" (மேற்கோள்)

 இந்நூல்களின்வழி யாப்பிலக்கணத்தை அன்று தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த மற்ற மொழி நூல்களுடன் ஒப்பிட்டுக்காட்டுவது இன்றைய நிலையிலும் புதுமையான 'இலக்கண ஒப்பீட்டு' முறையாக உள்ளது. இன்றும் தமிழில் யாப்பிலக்கணத்தைப் பயிலுகின்ற மாணவர்களின் பாடநூலாக யாப்பருங்கலக்காரிகை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'பன்னிருபாட்டியல்' என்ற பிரபந்த இலக்கண நூலின் பதிப்புரையில் பாட்டியல் நூல்களை இயற்றிய ஆசிரியர்களாக 15 புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை;

(1) அகத்தியர், (2) அவிநயனார், (3) இந்திரகாளியார்,

(4) கபிலர், (5) கல்லாடர், (6) கோவூர்கிழார், (7) சீத்தலையார்,

(8) செயிற்றியனார், (9) சேந்தம்பூதனார், (10) நற்றத்தனார்,

(11) பரணர், (12) பல்காயனார், (13) பெருங்குன்றூர்கிழார், (14)பொய்கையார் (15) மாபூதனார் ஆகியனவாகும்.

இவற்றுள் சிலர் சங்ககாலத்துப் புலவர் பெயர்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. பிற்காலத்தில் (அதாவது கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளில்) இவர்களால் உருவாக்கப்பட்ட 'பாட்டியல் இலக்கணநூல்'களைப் பற்றியும் சிற்றிலக்கியங்களைப் பற்றியும் பேராசிரியர் மு.அருணாசேலம், ஆய்வுக் குறிப்புகளை எழுதியுள்ளார். அதாவது, பாட்டியல் என்ற புதுநெறியின் விளக்கமாகப் பத்தாம் நூற்றாண்டில் கிடைப்பது பன்னிரு பாட்டியல் என்ற ஒரு சிறுநூலே. இதன் துணைகொண்டும் யாப்பருங்கல விருத்தி, நவநீதப் பாட்டியலுரை, வசேணந்தி மாலையுரை என்பவற்றின் துணைகொண்டும் பார்க்கும் போது, ஒன்பதாம் நூற்றாண்டில் பாட்டியல் என்ற புது இலக்கண நெறியில் கடல் போன்ற ஒரு பெருவளர்ச்சியும் விரிவும் ஆழமும் ஏற்பட்டிருந்தன என்பது தெளிவாகப் புலப்படுகிறது. அக்காலத்தும் முன்னும் எழுந்த நூல்கள் இந்திர காளியார் செய்த இந்திர காளியம், அவிநயனார் செய்த அவிநயம், பரணர் பாட்டியல், பொய்கையார் பாட்டியல், செயிற்றியனார் செய்த செயிற்றியம் என்பன சிறப்பாய்க் குறிப்பிடத் தக்கன. இவையன்றி வேறு எண்ணற்ற நூல்களும் தோன்றியிருந்தன. உரைகளை நன்கு ஆராயும்போது, இவற்றுள் பல முத்தமிழும் குறித்த நூல்களென்றும் அறிகிறோம். இவை யாவும் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று விரிவாக ஆராயப் பெறும். ஆனால், இந்த நூல்களில் ஒன்றுமே இன்று கிடைக்கவில்லை; நூல்கள் இறந்து போயின என்றே தெரிகிறது.

 இவற்றின் சாரமாகப் பத்தாம் நூற்றாண்டில் இவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஒரு சிறு நூலே பன்னிரு பாட்டியல் என்பது. பாட்டியல் நூல்கள் இரு பிரிவனவாக இருந்தன. ஒன்று அகத்தியர் என்பவர் நெறி; மற்றது யாமளேந்திரர் செய்த இந்திர காளிய நெறி. வச்சணந்தி மாலை இந்திரகாளியத்தின் வழியது என்று அதன் உரையால் அறிகிறோம். நவநீதப் பாட்டியலும் சிதம்பரப் பாட்டியலும் அகத்தியர் பாட்டியலின் வழி (பத்தாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு 1972 - 211&12)

 மேற்குறிப்பிட்ட இலக்கிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து நோக்கும்போது 9, 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்கள் பெரும்பான்மையும் (பெரியபுராணம், கம்பராமாயணம் உட்பட) மனுநீதியையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதனால் இந்நூல்கள் வருணாசிரமத்தை ஆதரித்துவந்துள்ளன. இதன் சமகால வளர்ச்சியாக வருகின்ற பிரபந்த இலக்கணத்தைக் கூறும் நூல்களிலும் சிற்றிலக்கியங்களிலும் வருணாசிரமமும் சாதியமும் இலக்கியத்தைப் படைப்பதற்கு அடிப்படையான கொள்கைபோல் மாறிவிட்டன. இம்மாற்றம் அக்காலக் கல்வெட்டுகளிலும் பதிவாகியுள்ளன. இதைச் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதிகளிலும் அக்காலக்கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் இடம்பெறச் செய்து வளர்த்துவந்தோர் அனைவரும் இமயமலையைச் சார்ந்த கையிலாயத்திலிருந்து வந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது முன்பே விளக்கப்பட்டது. அதுமட்டுமல்ல பிற்காலங்களில் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர்களும் திருவாவடுதுறை ஆதீனத்தாரும் தங்களைத் திருக்கயிலாயப் பரம்பரையினர் என்று கூறுவதில் பெருமைப்பட்டனர் (இந்தச் செய்தி திருவாவடுதுறை மற்றும் தருமபுர ஆதீனங்கள் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களிலும் பதிவாகியுள்ளன). அதற்குச் சான்றாக அந்த ஆதீனங்களால் வெளியிடப்பட்ட இரு முக்கிய நூல்களின் முன் பக்கத்தை இணைத்துள்ளேன் (பின்னிணைப்பு-1).

 ஆதீனங்கள் தமிழ் வளர்ச்சியில் பங்கு பெற்று வந்தவர்களே என்றாலும் அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் வளர்ச்சி என்பது வருணாசிரமத்தையும் சாதியத்தையும் பாதுகாத்ததைச் சேக்கிழார், “மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கமாகும்" (பெரியபுராணம்.600) என்று 12 ஆம் நூற்றாண்டிலேயே அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் புலமைப்படைத்திருந்த சிவஞான முனிவர் போன்ற சைவ அறிஞர்கள் கூட 'சூத்திரர்' என்பதை ஏற்றுக்கொண்டு தங்களை 'சற்சூத்திரர்' என்று புனிதப்படுத்திக் கொள்வதும் வரலாறுச் செய்திகளாகப் பதிவு பெற்றுள்ளன. சிவஞானபோதப் பேருரையில் சிவஞான முனிவர், தன்னைச் 'சற்சூத்திரர்' என்பதோடு பார்ப்பனர்கள் மனிதர்களைப் போலவே உள்ளாதால் அவர்களை அவ்வாறு எண்ணுவோர்க்குப் பார்ப்பனர் இம்மண்ணுலகின் தெய்வங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறுவதாவது, “சற்சூத்திரர் அதற்சூத்திரர் என்னும்

வேறுபாடு சிவாகமங்களினும் பராசரமிருதி முதலியவற்றினும், புராணங்களினும், 'சூத்திராணாம்' என்னும் பாணினிசூத்திரத்தின் மாபாடியங் கையடங்களினும், பிறவற்றினும் கண்டுகொள்க. இவ்வேறுபாடு அறியாதோர் சூத்திரர் என்னும் பொதுப்பெயரே பற்றிச் சற்சூத்திரரையும் அசற்சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர்; மனிதர் என்னும் பொதுப்பெயரே பற்றி மறையோரையும் அவ்வாறு சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர் போலும் என்று ஒழிக" (சி.சு.மணி., சிவஞானபோதப் பேருரை, 1994:80) எனும் இம்மேற்கோளின்வழி சைவசமயம் வைதிகத்தை எதிர்கொண்டவிதத்தை அறிந்து கொள்ளலாம்.

 மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போது சங்க இலக்கியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் தமிழ்க் காப்பியங்களும் தொல்காப்பியத்தையே இலக்கணமாகக் கொண்டு செயல்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. 8, 9, 10 ஆகிய நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட நூல்களில் அகத்தியர் மரபு என்ற ஒன்று முன்னிலைப்படுத்தப்படுகிறது. பிற்காலத் தமிழ் இலக்கியங்களான பிரபந்த மரபை வழிநடத்திய அகத்தியர் மரபு சனாதன, சாதியத்தின் அடிப்படையில் தமிழ் எழுத்துக்களை ஆண் எழுத்துகள், பெண் எழுத்துகள், அலி எழுத்துகள் என்று வகைப்படுத்தியது. மேலும், 'சூத்திரர்' என்று தமிழரை வகைப்படுத்தி அவர்களுக்கான சூத்திர எழுத்துக்களாக ழ, ள ஆகிய இரண்டையும் உரிமையாக்கியது. இந்த ழ, ள ஆகிய எழுத்துகளைப் படைத்த கடவுள் 'யமன்' என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு எல்லாவகையான பிற்போக்குத்தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழிநடத்தியவரே அகத்தியர் எனும் மாமுனி. அம் மாமுனி மரபிலிருந்து இயற்றப்பட்ட 'நவநீதப் பாட்டியலு'க்கு விரிவாக எழுதப்பட்ட உரையுடன் கூடிய நூலின் இணையதள இணைப்பு பின்னிணைப்பு இரண்டில்.

பின்னிணைப்பு-1

tamil books 749

பின்னிணைப்பு-2

tamil book qr code 295

- பொ.வேல்சாமி