கன்னியாகுமரி மாவட்டக்காரர்களில் நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளை காலை 6:00 மணியிலிருந்தே கேட்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அ.இ.வானொலி நிலையம் காலையில் இந்து கிறிஸ்தவ பாடல்களைத் தொடர்ந்து பெரும்பாலும் நாகூர் அனிபாவின் பாடல்களை ஒலிக்கச் செய்வார்கள். அதிலும் ஹஸ்பிரப்பி ஜல்லல்லாஹ் என்ற பாடலும் பாத்திமா அன்னை பாத்திமா என்ற பாடலும் அடிக்கடி கேட்கும். கேட்பவர்களில் இஸ்லாமியர் உட்பட பலருக்கும் நம் மாவட்டத்துக் கவிஞர் எழுதிய பாடல்கள் இவை என்பது தெரியாது

abdul kapoorநாகூர் அனிபா பாடி பரவலாக அறியப்பட்ட சில பாடல்களை எழுதிய அப்துல் கபூரின் சொந்த ஊர் திருவிதாங்கோடு. அந்த ஊரில் சிலரிடம் நான் பேசிய போது கூட எல்லோரும் அறிந்த அந்தப் பாடல்களை எழுதியவர் கபூர் என்பதை அறியவில்லை. 90களின் ஆரம்பத்தில் அவரை நான் சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் வாய் விட்டு சிரித்தார். பதில் சொல்லவில்லை.

அப்துல் கபூரை 1990 இல் தக்கலையில் அவரது வீட்டில் சந்தித்தேன். கபூரின் தம்பி பேராசிரியர் முகமது பரூக் எனக்கு நெருக்கமானவர். அவர் சொல்லி நான் கபூரை பார்க்கப் போனேன். முகமது பருக் அப்போது பாளையங்கோட்டை சதகத்துல்லா அப்பா கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். நான் அவரை நாகர்கோவில் பாவலர் நகரில் அவரது மகளின் வீட்டில் சந்தித்தபோது அப்துல் கபூர் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

90களில் ஆரம்பம் என்று நினைக்கிறேன் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரமுள்ள தக்கலை ஊரிலிருந்த அப்துல் கபூரை பார்க்கச் சென்ற போது எளிதாக அவரது வீட்டை அடையாளம் கண்டுவிட்டேன். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக இருந்த மீரான் பிள்ளை அப்துல் கபூரின் வீட்டு நூலகத்தைப் பற்றி விரிவாகவே என்னிடம் சொல்லி இருக்கிறார். அபூர்வமாக அவரிடம் இருந்த புத்தகங்களைப் பற்றி முகமது பருக்கும் சொல்லி இருந்தார்.

நான் காலையில் பத்து மணிக்கு கபூரின் வீட்டுக்குப் போனேன். ஒரு மணி நேரம் உரையாடலாம். அதற்கு அனுமதி தருவாரா என்று யோசனை. ஆனால் மாலை 5 மணி வரை பேசிக்கொண்டிருந்தேன். பகல் அவரது வீட்டிலேயே சாப்பிட்டேன், அவரது நூல் நிலையத்தில் ரொம்ப நேரம் செலவழித்தேன். அபூர்வமான புத்தகங்கள், குறிப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு எழுத தோதான இடம் என்று தோன்றியது. அந்த நூல் நிலையத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன என்று கபூர் சொன்னார். அவரது மறைவுக்குப் பின் அவருடைய நூற்களை எல்லாம் திண்டுக்கல் நைனார் முகமது நினைவு பள்ளிக்கு வழங்கி விட்டதாக அறிந்தேன்.

கபூர் எனக்கு ஆலிப் புலவரின் மிஃராஜ் மாலை என்ற நூலின் பிரதி ஒன்றைத் தந்தார். அது 1953ல் வெளியிடப்பட்டது. அதற்குரிய மூல ஓலை நாகர்கோவில் கோட்டாற்றில் இருப்பதாகச் சொன்னார். மிஃராஜ் மாலை தமிழில் வந்த முதல் இஸ்லாமிய காப்பியம். அது அரங்கேறிய இடம் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலின் ஒரு பகுதியான கோட்டாறு என்ற இடத்தில் அங்குள்ள வேம்படி பள்ளியில் (மைதீன் பள்ளி) அந்த நூல் அரங்கேறியது. அது குறித்த பழைய வரலாற்றை விரிவாகவே சொன்னார்.

அவருடன் நான் உரையாடியபோது தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார். அவர் நிறைய எழுதி இருக்கலாம் என்று தோன்றியது. அவர் கல்லூரியில் பேராசிரியராக மட்டும் இருக்கவில்லை. நிர்வாகப் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு எழுத நேரம் இல்லாமல் ஆகிவிட்டது. அது எழுத்துககுத் தடையாக இருந்திருக்கலாம்.

இலங்கை, தமிழறிஞர் முகமது உவைஷ் எழுதிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் பற்றி பேச்சு வந்த போது கபூர் "இன்னும் அந்த நூலில் விடுபட்டவை உண்டு. அச்சில் வராத இஸ்லாமிய இலக்கியங்கள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம். மு.அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாற்று தொகுதிகளில் அச்சில் வராத நூல்களைப் பற்றி குறிப்புகள் உண்டு. அதுபோல அச்சில் வராத ஏட்டு வடிவில் உள்ள இஸ்லாமிய இலக்கியங்களையும் உவைஸ் சேர்த்திருக்கலாம். என்றார். நான் "நீங்கள் எழுதலாமே" என்றேன். "காலம் கடந்து விட்டது" என்று சொல்லி சிரித்தார்.

காட்டு பாவா சாஹிப் அப்துல் கபூர் (26 மே 1924 - 11 பெப்ரவரி 2002) கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோடு ஊரில் அஞ்சு வண்ணம் குடியிருப்பில் பிறந்தவர். அஞ்சு வண்ணம் என்பது மிகப் பழைய அராபிய வணிகக் குழுவின் பெயர். பிற்காலச் சோழர் காலத்தில் இந்தப் பெயரில் ஒரு வணிகக் குழு இருந்தது என்பதை சான்றுகளுடன் சதாசிவ பண்டாரத்தார் சொல்கிறார். கல்வெட்டுக்களிலும் சான்று உண்டு. அப்படியான பாரம்பரியம் மிக்க குடியிருப்பில் பிறந்தவர்.

கபூரின் தந்தை காட்டு பாவா சாஹிப் தாய் முகமது அம்மாள் இவர்களின் மூத்த மகன் அப்துல் கபூர். இவர் பிறந்த காலகட்டத்தில் திருவிதாங்கூரில் சேது லட்சுமி பாய் என்பவர் பகர அரசியாக இருந்தார் (1925-1931). இந்த அரசின் காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளில் மலையாளமே பாடமொழியாக இருந்தது. அதனால் கபூர் சிறுவயதில் பள்ளியில் மலையாளத்தையும் மார்க்க மொழியான அரபி மொழியையும் படித்தார்.

கபூர் பிறந்த ஊரான திருவிதாங்கோடு பாரம்பரியம் உடையது. ஒரு காலத்தில் வேணாட்டின் தலைநகராக இருந்தது. திருவிதாங்கோடு என்ற பெயர் தான் பிற்காலத்தில் திருவிதாங்கூர் என மருவியது. இங்கே பழைய கோட்டை ஒன்று இருந்தது. இன்றும் கூட மலையாள மொழியின் வாசனை இங்கு வீசத்தான் செய்கிறது.

கபூர் இந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். இவர் படித்த கல்லூரி மிகப் பழைய கல்லூரி (தோற்றம் 1866). இந்தக் கல்லூரியில் தான் மனோன்மணியம் சுந்தரனார் பேராசிரியராக இருந்தார். இன்டர்மீடியட் வகுப்பு அப்போது மிக உயர்வாக கருதப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். கபூர் படித்த காலத்தில் கேரளப் பல்கலைக்கழகம் இல்லை. இவர் படித்த கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அடங்கிய கல்லூரியாக இருந்தது. தமிழ் பாடத்திட்டம் கூட சென்னை பேராசிரியர்கள் தாம் முடிவு செய்தார்கள்

கபூர் இன்டர்மீடியட்டில் தமிழைப் பாடமாக எடுத்தார். இதில் முதல் வகுப்பில் தேறினார். இவர் இளமையிலேயே அரபி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளை அறிவதற்குரிய வாய்ப்பு இருந்தது. கபூர் இன்டர்மீடியட் முடிந்ததும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழைப் பாடமாக எடுத்து பி.ஏ. ஆனர்ஸ் படித்தார். இந்தப் படிப்பில் ஒருமுறை தோற்றால் பி.ஏ என்ற பட்டத்தை மட்டும் தான் போட முடியும். பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் முழு தகுதி பெற்றால் சில ஆண்டுகள் கழித்து எம்.ஏ பட்டம் போட்டுக் கொள்ளலாம்

கபூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த காலகட்டத்தில் நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், பி.சி. அலக்சாண்டர் (தமிழக கவர்னராய் இருந்தவர்) ஆகியோர் படித்தனர்.

தமிழ் அறிஞர்கள் பி.ஸ்ரீ, கா.அப்பாதுரை ஆகியோரைப் போன்று கபூரும் ஒரே இடத்தில் நிலையாக பணி செய்யாதவர். அண்ணாமலை பல்கலையில் படிப்பை முடித்த உடனேயே சென்னையில் ஒரு கல்லூரியில் பணியில் சேர்ந்தார். (இந்தக் கல்லூரி இப்போது காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி) இவர் பணிபுரிந்த ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணா அவர்களை கல்லூரியில் பேச அழைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார். பணியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை விலகிவிட்டார். இந்தக் கல்லூரியில் கபுரின் மாணவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்ஷா.

பின்னர் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார் (1947-1952). இங்கே மாணவர்களுக்காக கவிதை அரங்கை அறிமுகப்படுத்தினார். கவிதை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் கல்லூரியில் இவர் பணி செய்த போது திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிர்வாகத்தினர் அழைப்பிற்கு இணங்க அந்தக் கல்லூரியில் நான்காண்டுகள் பணி செய்தார் (1952 - 1956). அச்சமயத்தில் இவரது அன்புக்குரிய மாணவர்களாக இருந்தவர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம். மணவை முஸ்தபா ஆகியோர்.

திருச்சியில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய போது திருச்சி வானொலி நிலையத்தில் இலக்கியம் பற்றி தொடர்ந்து பேசினார். இந்தப் பேச்சு பின்னர் "இலக்கியம் ஈன்ற தமிழ்" என்னும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பணி செய்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பாடம் நடத்தி இருக்கிறார்.

மதுரை உத்தமபாளையம் ஹாஜி ராவுத்தர் சௌதிய்யா கல்லூரி நிர்வாகம் கபூரை தங்கள் கல்லூரிக்கு முதல்வராக வருமாறு அழைத்தது. இவர் அங்கே ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார் (1956 1962) தமிழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள் கல்லூரி முதல்வராக முடியும் என்று நினைத்துப் பார்க்காத காலகட்டத்தில் கபூர் கல்லூரி முதல்வரானார். இவர் முதல்வரான பிறகுதான் சுப அண்ணாமலை, ஏ.சி. செட்டியார், வ.சுப.மாணிக்கம் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள் முதல்வரானார்கள்.

பின்னர் அதிராம பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் முதல்வர் பணி. இக்காலகட்டத்தில் சென்னை பல்கலை கழகத் துணைவேந்தர் சுந்தரவடிவேலு கபூரை சிறந்த முதல்வர் எனப் பாராட்டி இருக்கிறார்.

1967 க்கு பின்னர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிறை பள்ளியில் முதல்வரானார். இந்தப் பள்ளியில் ஏழு ஆண்டுகள் பணி செய்தார். இக்காலகட்டத்தில் இப்பள்ளி மாணவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவதற்காக இவர் இயற்றிய ஹஸ்பிரப்பி ஜல்லல்லாஹ் என்ற பாடலை நாகூர் ஹனிபா பின்னர் மேடையில் பாடினார்.

கும்பகோணம் அல் அமீன் உயர்நிலை உறைவிடப்பள்ளியில் நான்காண்டுகள் நிர்வாகப் பணியில் இருந்தார். பெரிய கல்லூரிகளில் பேராசிரியர், முதல்வர் என்னும் பதவிகளில் இருந்தவர். உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக நிர்வாகியாக பொறுப்பில் இருப்பதில் தயக்கம் காட்டவில்லை.

கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு திருவனந்தபுரம் திராவிட மொழி இயல் நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். ஏறத்தாழ 35 ஆண்டுகளாய் கல்விப் பயணத்தை முடித்துவிட்டு சொந்த ஊரான திருவிதாங்கோட்டுக்கு அருகில் உள்ள தக்கலை என்ற ஊரிலே குடியேறினார். தன் இறுதிக் காலம் வரை இங்கேயே வாழ்ந்தார்.

கபூர் கல்விப் பணியாற்றிய காலத்தில் தமிழ்ப் புலவர் குழுவின் உறுப்பினர் அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு உறுப்பினர். சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர். தமிழக அரசு பாடநூல் குழு உறுப்பினர் என்னும் பல பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

இவர் கல்விப் பணியாற்றிய காலத்தில் கல்விக்களஞ்சியம், தீன் வழி செம்மல், தமிழ் செம்மல், இறையருள் கவிமணி, நபிவழிச் செம்மல் என்னும் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இவருக்கு கவரவ டாக்டர் பட்டம் (டி. லிட்) கொடுத்தது இலங்கை, சிங்கப்பூர் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு இஸ்லாம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் உரையாடுவதற்குப் பயணம் செய்திருக்கிறார்.

 கபூரின் மனைவி ஜமீலா பீவியின் தந்தை அகமது கான் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். இவர் மலையாளத்தில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். கபீருக்கு ஒரே மகன் ஜமால் முகமது அப்துல் கபூர் தன் 78 ஆம் வயதில் தக்கலையில் மறைந்தார் (11-2 - 2002 வெள்ளிக்கிழமை).

அப்துல் கபூர் கல்வியாளர், இஸ்லாமிய மத சொற்பொழிவாளர், குழந்தைகளின் இலக்கியங்களைப் படைத்தவர், நான்கு மொழிகளை அறிந்தவர். சிறந்த நிர்வாகி என பல முகங்கள் கொண்டவர். மதினா இதழின் கவுரவு ஆசிரியராக இருந்தவர். இதில் நடுநிலையுடன் செயல்பட்டவர் என்பதை அறிஞர் கி.வா.ஜகநாதன் பாராட்டி இருக்கிறார்

நாயகமே என்ற இவரது முதல் நூல் இலங்கை திருக்குரான் இயக்கத்தினரால் வெளியிடப்பட்டது (1954). இவர் 7 உரைநடை நூல்களையும் 12 கவிதை தொகுப்புகளையும் ஒரு பிரார்த்தனை நூல் சிறுவர் தொகுப்பு என மொத்தமாக 23 நூல்களைப் படைத்துள்ளார். இவர் இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை.

கபூரின் இலக்கியம் ஈன்ற தமிழ் என்ற நூல் அகில இந்திய வானொலியில் பல்வேறு காலங்களில் பேசிய 11 பேச்சுகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் தேசிங்கு ராசன் கதை, இராமப்பையன் அம்மானை, கட்டபொம்மன் கதை போன்றவை முக்கியமானவை. 5000 ஆண்டுகளாக மேலை நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு பற்றி விவரிக்கும் ஒரு கட்டுரை உண்டு. அறவாழ்வு என்ற நூல் (1977) முழுக்கவும் அற இலக்கியங்கள் பற்றியது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற நூலில் அரபு மொழி, தமிழ் மொழி ஆகிய இரண்டின் தொன்மை பற்றிய செய்திகள் வருகின்றன. அதோடு இந்தியப் பண்பாட்டில் இஸ்லாமிய இசையின் பங்கு இந்திய மொழிகளில் உருது கலப்பால் வளம் பெற்ற மொழிகளின் சிறப்பு முகலாய மன்னர்கள் இலக்கியத்திற்கு அளித்த நன்கொடை குறிப்பாக பாபர் ஷாஜகான் தாரா ஷிகோ ஆகியோரின் கவிதைகள் பற்றிய செய்திகள் இந்நூலில் வருகின்றன.

வாழும் நெறி இஸ்லாம் என்ற நூல் (1985) இஸ்லாம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு. முக்கியமாக இஸ்லாமிய இலக்கியவாதிகள் வலியுறுத்தும் இறை நம்பிக்கை, தொழுகை, ஈகை, நோன்பு, ஹஜ் புனித பயணம் ஆகிய ஐம்பெரும் கடமைகளை இலக்கியம் வழியில் ஆராய்கிறார். இறுதிக்கட்டுரை அரபு மொழியின் தனித்தன்மையை விவரிப்பது இதில் பல உதாரணங்களைச் சொல்லி அரபு மொழியின் சிறப்பை வெளிப்படுத்துகிறார்.

அரபு மொழியில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருப்பதே அதன் பழமையைக் காட்டும். பருவங்களை குறிக்க தனித்தனியே சொற்கள் உள்ளன. மான் என்னும் விலங்கின் எட்டு பருவங்களுக்குத் தனிச்சொற்கள் உள்ளன. பகல் நேரத்துக்கு தனித்தனி சொற்கள் உள்ளன.

காது கேளாதவர்களின் தன்மையை குறித்து நாலு சொற்கள் உள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள "அறிவுத்துறையில் முஸ்லிம்கள் " என்ற கட்டுரையில் இசுலாமியர்களின் ஆரம்ப கால அறிவியல் நவீன அறிவியல் தொடர்பு பற்றிய பல தகவல்கள் உள்ளன. கிரேக்கர்களின் மருத்துவ அறிவுக்கு அரபியர்களின் பங்களிப்பு அதிகம் என்னும் செய்தி, குருடர்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் மருத்துவ விடுதி அமைத்தது என்பன போன்ற பல விஷயங்கள் இக்கட்டுரையில் உள்ளன

தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பது என்னும் மரபு 19 ஆம் நூற்றாண்டில் தான் உருவானது. இதற்கு கவிமணி, பாரதி, அழ வள்ளியப்பா என்ற ஒரு நீண்ட வரிசை உண்டு. இதில் அப்துல் கபூருக்கும் இடம் உண்டு. கபூர் கல்லூரியில் மட்டுமல்ல பள்ளியிலும் ஆசிரியராக இருந்தவர். அந்த அனுபவம் எளிய பாடல்களை சிறுவர்களுக்காக எழுத வைத்திருக்கிறது. இவரது அரும்பு என்ற தொகுப்பு (1969) முக்கியமானது. நம்முடைய பழைய பாடல்களைக் குழந்தைகளுக்காக மாற்றி அமைத்த பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன

புறநானூற்றில் உள்ள நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்னும் பாடல் வரியை

நல்லவை செய்யும்

நாட்டம் நல்குவாய்

அல்லவை தவிர்க்கும்

ஆற்றல் அருள்வாய்

என்று கூறுகிறார். மேலும் புதிரோ புதிர், கதை கதையாம் ஆகிய தலைப்பில் உள்ள கவிதைகளும் எளிமையானவை.

- அ.கா.பெருமாள்