1898ஆம் ஆண்டில் உ.வே.சாமிநாதையர் மணிமேகலையை அச்சுக்குக் கொண்டுவந்தார். வழக்கமாகத் தன்னுடைய நூல்களுக்கு விரிவான முன்னுரைகளைக் கொடுக்கும் உ.வே.சா. இந்த நூலுக்கும் அத்தகைய ஒரு முன்னுரையைக் கொடுத்திருக்கின்றார். அந்த முன்னுரையில் தமிழ் அறிஞர்களால் இந்நூல் சரியான வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்று கூறி, அத்தகைய புரிதலுக்காகத் தான் பல்வேறு தகவல்களை இந்தப் பதிப்பில் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்.

1894ஆம் ஆண்டில் திருமயிலை சண்முகம் பிள்ளையால் வெளியிடப்பட்ட மணிமேகலைப் பதிப்புடன் ஒப்பிட்டால் இரண்டு பதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக உள்ளதை எவரும் மேலோட்டமாகவே காணமுடியும்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்ச்சாதிகள் தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை அண்டிப் பிழைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்ற பழந்தமிழ் நூல்கள் உயர் சாதித் தமிழர்களின் வீடுகளில் உள்ள பரண்களில் சமாதி ஆகி விட்டன. ஒருசில ஆங்கில அரசாங்க அதிகாரிகளும் கிறிஸ்தவப் பாதிரிமார்களும் பெரும்பாடுபட்டதனால் ஏசுநாதர் மூன்றாம் நாளில் விழித்தெழுந்ததைப் போல சமாதி நிலையிலிருந்து மீண்டும் உயிர்பெற்று அச்சுக்கு வந்தன. அதே காலத்தில் கால்டுவெல் போன்றவர்களின் ஆய்வுகளினால் உலகச் சிந்தனையாளர்கள் மத்தியில் தமிழ்மொழி தனக்கான ஒரு இடத்தைப் பெற்றுச் சிறப்படைந்தது.

இந்த நிகழ்வினால் தமிழ்மொழியைப் புறகணித்துவிட்டு ஆங்கிலம் பயின்று அதிகாரி களானாலும் ஆங்கிலேயர்களின் அடிமைகள் நாம் என்று உணர்ந்த உயர்சாதியினர் தமக்கான தனித்துவமான அடையாளத்தைத் தமிழ்மொழி கொடுக்கும் வல்லமை உடையது என்பதைப் புரிந்துகொண்டனர். இந்தப் புரிதலானது பழந்தமிழ் நூல்களைச் சமகால விவாதத் திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடையே ஏற்படுத்தியது. எனவே மடிந்து கொண்டிருக்கும் அந்நூல்களுக்கு மறு உயிர்ப்பு கொடுக்க அவர்களை உந்தியது. அந்த உந்தலின் விளைவாகப் பழந்தமிழ் நூல்கள் அச்சுவாகனம் ஏற ஆரம்பித்தன. இந்த நிகழ்முறையின் ஒரு விளைவுதான் மணிமேகலையின் பதிப்பு.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அன்றைய நடைமுறையில் இருந்ததை உ.வே.சா. என் சரித்திரத்தில் மணிமேகலை பற்றி எழுதிய பகுதிகள் உறுதியாக்கு கின்றன. பெரும்பாலான பழந்தமிழ் நூல்களுக்குப் பழங்காலத்திலேயே யாராவது ஒருவரால் உரை எழுதப்பட்டு இருந்தது. அந்தப் பழைய உரையின் வாயிலாக அந்நூலை அச்சுக்குக் கொண்டுவந்த பதிப்பாசிரியர் அந்நூல் கூறும் செய்திகளை வாசகர் களுக்கு விரிவாக விளக்க முடிந்தது. அத்தகைய பழைய உரை இல்லாத ஒருசில நூல்களில் மணிமேகலையும் ஒன்று.

உ.வே.சா. இந்நூலைப் பதிப்பிக்க எடுத்துக் கொண்ட காலத்தில் சமண மதம் பற்றிய தத்துவங்களை விளக்கி கூறுவதற்கு சமணப் புலவர்கள் தமிழ்நாட்டில் நிறையபேர் இருந்தனர். ஆனால் பௌத்த மதத் தத்துவங்களை அறிந்து சொல்வதற்கு ஒரு தமிழர்கூட இல்லை. உலகிலேயே பௌத்த மதம் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வு நூல்கள்கூட அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தன. அத்தகைய நூல்களைப் பற்றிய செய்திகளைத் தன்னுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் சிலரால் தெரிந்துகொண்ட உ.வே.சா.

அந்நூல்களை விசாரித்து வாங்கினார். இவருக்கு ஆங்கிலம் தெரியாததனால் இவருடைய சக ஆசிரியர் ரங்காச்சாரி என்பவர் அந்நூல்களை வாசித்து இவருக்கு விளக்கினார். இத்தகைய செய்திகளுடன் சிவஞான சித்தியார் பரபக்கத்தில் பௌத்த மதம்பற்றிய பகுதிக்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதிய விரிவுரைகளை வாசித்தும் சிவஞான போத நூலுக்கு சிவஞான முனிவர் எழுதிய விரிவுரையில் பௌத்தம் பற்றி அவர் கூறுகின்ற செய்திகளைத் தொகுத்து கொண்டும் உ.வே.சா. புத்த சரித்திரம், பௌத்த தர்மம், பௌத்த சங்கம் என்ற பெயரில் சுமார் 130 பக்கங்களில் ஒரு விரிவான கட்டுரை எழுதி மணிமேகலையின் முதற் பதிப்பில் சேர்த்திருக்கின்றார். இதுவல்லாமல் மணி மேகலை கதைச்சுருக்கம், மணிமேகலையில் வந்துள்ள வேறுகதைகள், புத்த தேவனுடைய பெயர்கள் என்று பல்வேறு செய்திகளை இந்நூல் வாசகர்களுக்கு உதவி புரிய வேண்டி இணைத்திருக்கிறார். இப்படி வேறு எவரும் செய்ய முடியாத பல்வேறு குறிப்புகளை உழைத்து இணைத்த உ.வே.சா.

29ஆவது காதையான தவத்திறம் பூண்டு தர்மம் கேட்ட காதையில் 49ஆவது அடிக்குமேல் உள்ள பகுதிகள் தனக்கு விளங்கவில்லை என்றும் உள்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள அறிஞர்களிடம் விசாரித்தபோதும் அவர்களில் ஒருவரும் இந்தப் பகுதிகளை விளக்கிச் சொல்ல முன்வரவில்லை என்று கூறி 49ஆவது அடிக்குமேல் உள்ள பகுதிகளுக்குத் தன்னால் குறிப்புரை எழுத முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

மணிமேகலை அச்சுக்கு வந்தபோது இவ்வாறான பிரச்சனைகளைச் சந்தித்தது போல பின்வந்த காலங்களில் இந்நூலின் வாசகர்களும் ஆராய்ச்சியாளர்களும் வேறு சில பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்நூல் எந்தக் காலகட்டத்தில் தோன்றி இருக்க முடியும்? இந்நூல் பேசும் பௌத்த தத்துவங்கள் தேரவாதமா? மகாயானமா? மணிமேகலைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் உள்ள உறவு என்ன? இளங்கோவடிகளும் சாத்தனாரும் ஒரே காலத்தவர்களா?

இப்படிப் பலப்பல வினாக்கள், அவை ஏற்படுத்திய விவாதங்கள், இவ்விவாதங்களின் அடிப் படையில் எழுந்த ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் இந்நூலைப் புரிந்துகொள்வதற்கான செயல்பாடுகள் நிகழ்ந்தன. இவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்க்கும் நமக்கும் எல்லா ஐயங்களும் அகன்றுவிட்டன என்று கூறக்கூடிய நிலை இன்றும் உருவாகவில்லை. எனவே விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டே உள்ளன.

கடவுள் இல்லாத சமயத்தை எப்படி மக்களிடம் விளக்கிச் சொல்வது என்ற கேள்வி சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஏற்பட்டது. ‘ஊழ்’ என்ற கருத்தாக்கத்தை இருவரும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தக் கருத்தாக்கத்தை நடைமுறையில் உள்ள வாழ்வியலாக மாற்றிக் காண்பிப்பதற்கு ‘மறுபிறப்பு’ என்பதை எடுத்துக்கொண்டனர். இவை உருவாவதற்கான காரணங்களாக மனிதர்கள் அன்றாட வாழ்வில் செயல்படும் நடவடிக்கைகளே அடிப் படையாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

மற்ற மனிதர்களுக்கு மனதாலும் உடலாலும் நன்மை பயக்கச் செய்யும் நடவடிக்கைகளை ‘புண்ணியம்‘ என்றும், தீமை பயக்கக் கூடிய நடவடிக்கைகளை ‘பாவம்‘ என்றும் வரையறுத்துக் கொண்டனர். இவற்றின் அடிப்படையில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தங்கள் கதைப் போக்குகளை உருவாக்கிக் கொண்டன. அந்த உருவாக்கம் தமிழ்க் காவிய உத்திகளுடன் இணைக்கப் பட்டு, காப்பியங்களாக உருப்பெற்றன.

இக்காப்பியங்களின் உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் ‘பொருளியல்‘ என்ற இயலில் கூறப்படும், ஓர் இலக்கிய உருவாக்கத்தில் சுவையைக் கூட்டுவனவும் ஆவலை மிகுதிப்படுத்துவனவு மாகிய உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பேசாப் பொருளைப் பேசச் செய்வது, கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அகற்றுவது, மரங்கள், சிலைகள் போன்ற உணர்வற்ற பொருள்களையும் பேச வைத்து மனித உணர்வுகளுடன் உறவாட வைப்பது போன்றவை ஆகும்.

இந்த உத்திகள் தமிழில் கதை கூறும் மரபுடன் இந்த நூல்களைச் செம்மையாக இணைத்துச் சுவை கூட்டின. (தொல் பழங்காலத்துக் கதைகூறும் உத்திகள் இவை) இவ்வாறான இலக்கிய உத்திகளுடன் அந்தக் காலகட்டத்தின் யதார்த்த நடவடிக்கைகளும் காவியப் பூர்வமாக இணைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி மாநகரம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களின் ஊடாகக் காட்டப்படும் நிகழ்வுகளும் தத்துவம் தொடர்பான குறிப்புகளையும் தருக்கம் பற்றிய விளக்கங்களையும் எடுத்துக் கொண்டு இந்நூலின் காலத்தைப் பலரும் வரையறுக்க முயற்சி செய்தனர். கி.பி. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.

5ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இந்நூல் தோன்றி இருக்கலாம் என்ற கருத்தைக் கூறியுள்ளனர். யவனர்கள் பற்றிய குறிப்புகள் கிரேக்க நாட்டின் வணிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு முந்தியது மணிமேகலையின் காலம் என்று நம்மைக் கருதவைக்கின்றது. அந்தக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு ஆகும். மற்றொன்று மேற் குறிப்பிட்ட நகரங்களைப் பற்றிய வருணனை என்பது இன்று உள்ள பெரும் நகரங்களைப் போன்று உள்ளது.

குறிப்பாக மணிமேகலையில் வருகிற சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் உள்ள சுடுகாடு, இடுகாடு பற்றிய குறிப்புகள் முற்றிலும் இன்றைய பெரு நகரங்களில் மட்டுமே காணக் கூடிய காட்சிகள் ஆகும். இத்தகைய காட்சிகளை இருபதாம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ யாரும் கற்பனை செய்துகூட கூறமுடியாது என்பது மிகையானதல்ல. இவையெல்லாவற்றுடனும் சேர்த்து அடுத்து வந்த காலங்களில் ஏற்பட்ட நிலவுடைமை மாற்றங்கள் ஏற்படுத்திய கிராமச் சமுதாயக் காட்சி களையும் இணைத்துப் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட காலத்தை விட்டு வேறொரு காலகட்டத்திற்கு இந்தத் தகவல்களை நாம் பொருத்த முடியாது என்பது திண்ணம்.

நூலாசிரியர் சாத்தனார் 26 காதைகளில் யதார்த்தத்தையும் புனைவையும் கலந்து காவியச் சுவையுடன் கதையை நகர்த்துகின்றார். புத்த பகவானின் கருணையையும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை களையும் மனத்தெளிவையும் இந்தப் பகுதியில் மணி மேகலைப் பாத்திரத்தை மையமாக வைத்துக் கதையை நகர்த்துகின்றார்.

மற்ற பாத்திரங்களெல்லாம் மணி மேகலையின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. மக்களின் பசியைத் தீர்த்தல், அநாதைகளுக்குப் புகலிடம் அளித்தல், மருத்துவச் சேவை அளித்தல், அறம் போதித்தல் போன்ற பௌத்த நடைமுறைகளைக் காவியப் புனைவுகளாக ஆசிரியர் சுவையுடன் கட்டமைக்கின்றார். இருபத்து ஏழாவது காதையிலிருந்து எதிர்க்கருத்து உள்ளவர்களும் மற்ற மதத்தினரும் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளித்து விளக்கம் கூறும் முகமாக மற்ற நான்கு காதைகளை அமைக்கின்றார்.

இந்தக் காதைகளில் அறவண அடிகளை முதன்மைப் பாத்திரமாக வடிவமைக்கின்றார். இந்தக் காதைகள்தாம் இந்நூல் முதன்முதலில் பதிப்பிக்கப்படும் காலத்தில் புரியாதவை என்று கருதப்பட்டவை ஆகும். இன்றைய நிலையிலும் இப்பகுதிகளில் உள்ள செய்திகளை நாமெல்லாம் குழப்பமின்றி புரிந்து கொண்டோம் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.

1905ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த திருநாராயண அய்யங்கார் எழுதிய ‘அநுமான விளக்கம்‘ என்ற நூலும் மாபெரும் புலவரான ந.மு. வேங்கடசாமி நாட்டார் இருபத்தாறு காதைகளுக்கு மேற்பட்ட பகுதிகள் தனக்கு விளங்கவில்லை என்று கூறி, தன் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையை வைத்து மற்ற நான்கு காதைகளுக்கு எழுதிய விளக்க உரையும் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய முழுநூலுக்கான உரை விளக்கமும் பேராசிரியர் சோ.ந. கந்தசாமி ‘பௌத்தம்‘ என்ற நூலில் இறுதி நான்கு காதைகளுக்கு எழுதியுள்ள விளக்கமும் இவர்களைப் போன்ற பேராசிரியர்கள் பலரும் எழுதியுள்ள விளக்கங்களுக்குப் பிறகும் அந்தப் பகுதிகள் இன்றும் போதிய விளக்கத்தைப் பெறாமல் இருட்பகுதிகளாகவே இருக்கின்றன.

பாலி நூல்கள், திபெத்திய மடாலயங்களில் உள்ள நூல்கள், அண்மைக் காலத்தில் வெளிநாட்டவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள மணிமேகலையைப் பற்றிய ஆய்வுகள் போன்றவற்றையெல்லாம் ஒருசேரப் படித்துச் சிந்திக்கும் எதிர்காலத் தலைமுறையினர்தாம் இத்தகைய பகுதிகளைத் தெளிவாக விளக்க முடியும்.

(2014 ஜனவரி 10ஆம்தேதி மாநிலக் கல்லூரியில் நடந்த மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவச் சுருக்கம்)

Pin It