தமிழ் மொழியின் கவிதை அழகையும் இலக்கணப் பரப்பையும் வெளிப்படுத்திக் காட்டியவர்கள் சமண சமயத்தினர் தான்1. ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் சமணர்களாலும் பௌத்தர்களாலும் படைக்கப்பட்டன. அவற்றுள் கவிதைச் சிறப்புமிக்க நூல்கள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய மூன்றும் தான். இவற்றுள் தான் தோன்றிய காலத்திலிருந்து முதன்மை பெற்ற நூலாக சூளாமணி திகழ்ந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டில் சமய சாதிய அரசியல் காரணங்களால் சூளாமணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் நடுநிலையான தமிழ் அறிஞர்களின் உள்ளத்தில் அது முதன்மை பெற்றே இருந்தது. தெ. பொ. மீ. கூறுகிறார். “பாடல்கள் முழு மணிகளாய் உள்ளன. வருணனைகள் எழிலுடனும் ஈர்ப்புடனும் அமைந்துள்ளன. சூளாமணி ஆசிரியரின் இயற்கை வருணனை மனிதனோடு அதனை ஒன்றச் செய்கிறது. மரங்களையும் செடிகொடிகளையும் குகைகளையும் இயற்கை அரண்மனைகளாகவும் திருமண மன்றங்களாகவும் வருணனை செய்கின்ற இடத்தில் அவர் சிறந்தோங்குகின்றார்”2. தமிழ் மொழியின் அழகை வெளிப்படுத்தும் கவிதைகள் நிரம்பிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலை அழியவிடாது காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு ஏற்பட்டது. எனவே ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிடுவதற்காக பெரும்பாடுபடுகின்றார். இதற்காக அவர்பட்ட துன்பங்களை சூளாமணி முன்னுரையில் விரிவாகக் கூறுகின்றார்.

kamban_40019-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருந்தன. எனவே இத்தகைய நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. அப்படி ஒன்றிரண்டு சுவடிகள் கிடைத்தாலும் அவைகள் பெரும்பாலும் முழுமையாக இல்லாமல் சிதைந்து இருந்தன. எனவே அவற்றை வைத்துக் கொண்டு மூல ஆசிரியர் என்ன எழுதியிருப்பார் என்று காண்பதற்கே பெரும்புலமையாளர்களும் போராட வேண்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தாமோதரம் பிள்ளைக்கு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து ஒரு சுவடியும் கரூர் வேங்கடராம அய்யங்காரிடமிருந்து ஒரு சுவடியும் கிடைக்கின்றன. தஞ்சாவூரில் நீதிபதியாக இருந்த கனகசபை முதலியார் என்பவர் வேதாரண்யம் அருமை பெருமாள் முதலியார் மகன் அநந்த விஜய முதலியார் பிரதி ஒன்றும் பெருமண்டூரிலிருந்த ஒரு சைவப் புலவர் பிரதி ஒன்றும் அனுப்பி வைக்கின்றார். விழுப்புரத்தில் முன்சீப்பாக இருந்த இராமச்சந்திரையர் என்பவர் வீடூர் சைனப்புலவர் அப்பா சாமி சாஸ்திரி என்பவரிடமிருந்து ஒரு பிரதி வாங்கி அனுப்புகிறார். இதன் பின்னர் “ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்” நூலைப் பிற்காலத்தில் எழுதிய கனகசபை பிள்ளையின் பிரதி ஒன்றைக் காவல்துறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி நாயுடு என்பவரிடமிருந்து பெறுகின்றார். இவற்றைக் கொண்டு நூலை அச்சிட்டு விடுகின்றார். இந்த நேரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பிரதி கிடைக்கின்றது. முன் பார்த்த பிரதிகளுக்கு எல்லாம் மாறாக காஞ்சிபுரம் பிரதி இருந்ததாகவும் இதனால் நூலை மீண்டும் திருத்தி அச்சிட்டதாகவும் கூறுகின்றார்.

நம்முடைய இன்றைய காலத்திற்கும் சி.வை.தா., உ.வே.சா. போன்றவர்கள் நூல்களை வெளியிட்ட காலத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் நிலவியதை நாம் தவறாது கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைக்கு நூல்களை அச்சிட்டு முறையாக விளம்பரப்படுத்தியும், அரசு நூலகங்களிலும் விற்பனை செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய வசதிகள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் பாதி காலம் வரையிலும் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எனவே நூல்களை வெளியிடுபவர்கள் ஜமீன்தார்களையும் பெரும் வணிகர்களாகிய செட்டியார்களையும், நிலப்பிரபுகளையும் ஆதீனங்களையும் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பெரிய மனிதர்களையும் அண்டி அவர்களுடைய உதவிகளைப் பெற்றுத்தான் நூல்களை வெளியிட வேண்டிய நிலை இருந்தது. எனவே அந்த கால கட்டத்தில் வெளியான பெரும்பாலான நூல்களில் முதல் பக்கத்தில் அத்தகையவர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஒரு நூலுக்குப் பலரிடம் உதவிகள் பெற்றிருந்தால் முன்னுரையின் இறுதியில் அந்த உதவியவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். அன்றைய நூல் வெளியீடுகளின் ஒரு பகுதியாக இந்த உதவியவர்கள் இருந்துள்ளனர். சூளாமணி நூலுக்கு முழுமையாகப் பணம் கொடுத்தவர்கள் பர்மாவில் வசித்த சி.வை.தாவின் தம்பி இளைய தம்பிப் பிள்ளையும் அவருடைய நண்பர் சிலரும் ஆவார்கள். சூளாமணி முன்னுரையின் இறுதியில் இவர்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போடி நாயக்கனூர் ஜமீன்தார் ‘திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர்’ என்பவர் கொடுத்த பணத்தை ‘இலக்கண விளக்கம்’ நூலை வெளியிடப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.

அடுத்து செம்மையான ஏட்டுச் சுவடிகள் கிடைக்காத நூல்களில் உள்ள பிழையான அல்லது புரியாத பகுதிகளைப் பதிப்பாசிரியர் தன்னுடைய அனுபவத்தின் மூலமாகத் திருத்தி வெளியிடலாமா என்பதைப்பற்றி விவாதிக்கின்றார். எட்டு வகையான விளக்கங்களில் சில பகுதிகளைத் திருத்தி வெளி யிடுவது தவறாகாது என்கின்றார். அதற்குத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட வீரசோழிய நூலைக் குறிப்பிடுகின்றார். தான் ஏடுகளில் உள்ள வாறே வெளியிட்டதனால் படிப்பவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்தது தான் பலன் என்கின்றார். இன்றைய நிலை வரை எந்தப் புலவனும் அதற்கான திருத்தத்தைக் கூறவில்லை என்கிறார். பிற்காலங்களில் நூல் பதிப்பை மேற்கொள்பவர்களுக்கான ஒரு ஆய்வுக் குறிப்பாக இந்தப் பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

“இவ்வாறு பலவகையாலும் சிறப்புற்ற இந்நூல் முதன்முதலாக 1889-ஆம் ஆண்டில் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களால் அச்சிடப் பட்டது. அதன்பின் யாரும் முழு நூலைப் பதிப்பிக்க முன் வராமற் போயினமையால் தமிழகத்தில் இவ் வருமையான நூல் கிடைப்பது அருமையாயிற்று. இக்குறை நீங்கத் தாமே ஒரு பதிப்பை வெளியிடக் காலஞ்சென்ற மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமி நாதையரவர்கள் கருதியதுண்டு. அக்கருத்து அவர்கள் காலத்திலே நடைபெறாமற்போனது தமிழகத்தின் துர்ப்பாக்கியமே. ஐயரவர்கள் காலத்துக்குப் பின் அவர்கள் குமாரர் பரி கலியாண சுந்தர ஐயரவர்களைப் பல ஜைன அன்பர்கள் இந் நூலைப் பதிப்பிக்கும்படி அடிக்கடிதூண்டி வந்தனர். எவ்வாறேனும் இந்நூலை ஐயரவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களோடு ஒரு நல்ல பதிப்பாகக் கொண்டுவர அவர்களும் முயன்றார்கள். அதற்காக அவர்கள் பேராசிரியர் திரு. அ. சக்ரவர்த்தி நயினார், எம். ஏ. அவர்களிடம் இருந்த நான்கு ஏட்டுச் சுவடி களைப் பெற்று வந்தனர். அவை - 1. பாண்டிப்பிரதி 2. வீடூர்ப்பிரதி 3. பெருமண்டூர்ப்பிரதி 4. ஆலக் கிராமப்பிரதி என்பனவாகும். அவற்றோடு சென்னைக் கீழ்த்திசைக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருந்து ஒரு காகிதப் பிரதியையும் பெற்றனர். மேற்கூறிய ஐந்து பிரதிகளுடன் இந்நூல் நிலையத்தில் ஐயரவர்களால் பார்த்து வைக்கப்பெற்ற ஓர் ஏட்டையும் ஒப்பிட்டுப் பாடபேதங்கள் குறிக்கப் பெற்றன.”

1954-ஆம் ஆண்டில் உ. வே. சா. நூலகம் இந் நூலை மீண்டும் வெளியிட்ட நோக்கத்தை எழுது வதுடன் நூலின் பெயர்க்காரணம், நூலாசிரியருடைய பெயர், நூலின் காலம், நூலாசிரியரான தோலா மொழித்தேவரை ஆதரித்த மன்னன், இந்நூலை மேற்கோள் காட்டிய புகழ்பெற்ற உரையாசிரியர்கள் போன்ற ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் தந்துள்ளனர். மேலும் உரை எதுவும் எழுதப்படாதிருந்த இந் நூலுக்கு ச.கு.கணபதிஐயர், வி.துரைசாமிஐயர் ஆகியவர்களைக் கொண்டு குறிப்புரையும், 12 இயல்களைக் கொண்டுள்ள இந்நூலின் ஒவ்வொரு இயலுக் கான கதைச் சுருக்கம், அரிய சொற்களுக்கான விளக்கமாக “அரும்பத அகராதி” நூலின் உள்ளே வருகின்ற மக்கள் பெயர், ஊர்ப் பெயர்கள் போன்ற வற்றை விளக்கும் “அபிதான விளக்க அகராதி” இந்நூலின் மூல நூலாகக்கருதப்படுகின்ற ‘ஸ்ரீ புராணம்’ என்ற நூலின் ஒரு பகுதியில் மணிப் பிரவாள நடையில் கூறப்பட்டுள்ள கதைப்பகுதி, என்று நூல் விளக்கத்திற்கான பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்கள் பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான உரையும், உரைவிளக்கங்களும் இல்லாதிருந்தது.

இந்தக் குறையை மனதில் கொண்டு சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1962-இல் பொ.வே.சோம சுந்தரனாரையும் சு. அ. இராமசாமிப்புலவர் என்பவரையும் கொண்டு பொழிப்புரையும் விளக்க வுரையும், கதைச் சுருக்கமும் எழுதி இந்நூலை வெளியிட்டனர். இந்நூலுக்கான அணிந்துரையிலும் கதைச் சுருக்கத்திலும் பொ. வே. சோமசுந்தரனார் நூலிலுள்ள கவிதைச் சிறப்பை எடுத்துக் காட்டும் பாடல்களைச் சுட்டி விளக்குகிறார். கூடவே அவர் குறிப்பிடும் இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வையாக உள்ளன. பெரும்பாலான சைவ சமயம் சார்ந்த புலவர்கள்4. இந்நூல் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக எழுதுகின்றனர். இத்தகையவர்- களுடைய கருத்து பொருந்தாது என்று சோம சுந்தரனார் கருதுகிறார். சமணர்களைக் கடுமையாக வெறுத்த சைவர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம் 9, 10 நூற்றாண்டுகள். எனவே அந்த காலகட்டத்தில் இந்நூல் தோன்றி இருக்க முடியாது என்றும் தேவார ஆசிரியர்களின் காலத்திற்கு முந்தியதாகத் தான் சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி போன்ற நூல்களின் தோற்றம் இருக்க முடியும் என்றும் எழுதுகிறார். தன் கருத்திற்கு நீலகேசி நூலைப் பதிப்பித்து அந்நூலுக்கு 300 பக்கங்களுக்கு மேல் முன்னுரை எழுதி அதில் சமண சமய நூல்களின் காலத்தையும் ஆராய்ந்து விளக்கிய பேராசிரியர் சக்ரவர்த்தி நயினாரை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்நூலின் பதிப்புரையில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இக்கருத்தை மறுத்து எழுதி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

சோம சுந்தரனார் விளக்கம் எழுதி வரும்போது பல பாடல்களுக்கு உரை எழுதுவது கடினமாக, இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இந்நூலின் 275 ஆம் பாடல்5. வெகுகாலம் பொருள் விளங்காமல் இருந்ததாகவும் இந்நூலினுள் வருகின்ற சமண சமய தத்துவங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு அத்தத்துவங்களை விளக்கும் நீலகேசி நூலைப் படிக்கும் போது நீலகேசி நூலின் உரையாசிரியர் சமயதிவாகர முனிவர் பாடல் 576க்கு எழுதிய விளக்கத்திலிருந்து தான் இந்தப் பாடலுக்கான பொருளைப் புரிந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.

அவர் குறிப்பிடும் செய்தி இன்றைய நிலையில் புதுமையானதாகவே உள்ளது. அதாவது மாதுளம் விதைகளை நடும் போது அந்த விதைகளில் செவ் வரக்கு பூசி நட்டால் செந்நிற மலர்களும், காரரக்கு பூசி நட்டால் கருமைநிற மலர்களும் பூக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற எந்தப் பழைமையான தமிழ் நூலிலும் இத்தகைய செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலம் வரையிலும் இத்தகைய சமண சமயம் சார்ந்த நூல்களுக்குச் சரியான கால வரையறை செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் சுமார் 1300 ஆண்டுகள் பல துறை களிலும் செல்வாக்குச் செலுத்திய இந்நூற்களின் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டில் தன் முத்திரையைப் பதித்த பகுதிகள் இருண்டே உள்ளன. இந்திய மொழிகள் எவற்றிலும் காணப்படாத பல தன்மைகளை உள்ளடக்கி நீண்ட நெடுங்காலமாக நம் மொழியைப் பெருமைப்படுத்தி வருகின்ற இத்தகைய நூல்கள் இன்றைய இளைஞர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.

குறிப்புக்கள் 

1.     அச்சமணர் தமிழ் மொழியில் தெள்ளறிவு பெற்றுப் புலவர்களாகத் திகழ்ந்தனர். அன்றியும் அவர்கள் நாட்டிலுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் இடம்பெற்று அரிய தமிழ்ப்பணி இயற்றி வந்தனர். தனிப் பாடல்கள், பெருங் காப்பியங்கள், சிறு காப்பியங்கள், நீதிநூல்கள், சமய நூல்கள், பிரபந்தங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள், உரைகள் ஆகிய பலதுறை நூல்கள் இயற்றுவதிலும் அவர்களது ஞானம் மேலோங்கி விளங்கியதைக் காண்கின்றோம்.

       தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணி

       டாக்டர் உ. வே. சா. நூலகம் 1954. முகவுரை

2.     தமிழ் இலக்கிய வரலாறு, தெ. பொ. மீ பக். 123

       தமிழாக்கம் மு. இளமாறன்

       தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் நினைவு அறக்கட்டளை மதுரை-2000

3.     1930களில் ‘கலாநிலையம்’ பத்திரிகை நடத்திய சேஷாசலம் அய்யர், இராமரத்தின அய்யருடன் சேர்ந்து சூளாமணி பாடல்கள் 238-க்கு உரை எழுதி வெளியிட்டிருந்தனர். இவர்களின் தொடர்பால் இப்பாடல்களையும் அதன் உரைகளையும் படித்த தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அந்த 238 பாடல்களின் கருத்தையும் உரை நடையில் எழுதி, அந்தப் பாடல் களை இணைத்து 1944-இல் ஒரு நூலாக வெளி யிட்டுள்ளார். இதே கால கட்டத்தில் நான்கு இயல்களுக்கு வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதியதாகக் குறிப்பு உள்ளது.

4.     மு. அருணாசலம் எழுதுகிறார் “குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டத்தரமான கதைகள், குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள்; காரணம் தன் புருஷனைத் தானே மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றமையால். ஆகையால் முனிச் சந்திர முனிவனை தெருட்டமுயன்று தோல்வியுற்ற காளிக்கு வலிமை தருபவளாகவும் குண்டலகேசியை வெல்லக்கூடியவளாகவும் இருக்கத் தக்க ஒரு ‘பெரிய பிசாசு’ தேவைப்பட்டது.

       10-ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு - பக்-77 தி பார்க்கர் பதிப்பகம் 2005.

       மு. அருணாசலம் போன்ற நிறைவான தமிழ்ப்புலமை பெற்ற அறிஞரே இப்படிக் கூறினால் மற்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள். ஒன்று சமண சமயம் சார்ந்த நூல்களைப் புறக்கணிப்பது அல்லது தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற சமணசமயம் சார்ந்த நூல்களை விதண்டாவாதத்தால் அச்சமயம் சார்ந்த நூல்கள் அல்ல என்று விவாதித்துக் குழப்பி விடுவது. இதுவும் முடியாவிட்டால் அருணா சலம் போன்று மட்டரகமான நூல்கள் என்று சேற்றை வாரி இறைப்பது. 20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் இச்செயல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It