மதவெறிக்கு எதிராக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், தமது களப்பணியின் மூலம் வலுவான போராட்டத்தை தீஸ்தா செடல்வாட் தளராது தொடர்கிறார். மும்பை கலவரத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு, முழு நேரப் பத்திரிகையாளர் பணியைத் துறந்து, 1993 இல் "கம்யூனலிசம் காம்பட்' இதழை தொடங்கினார்.

மும்பை, குஜராத், ஒரிசா என தொடரும் பட்டியலில், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் நிகழ்த்தும் படுகொலைகளைத் தடுக்க, உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகிறார். 11.12.2008 அன்று சென்னையில் நடைபெற்ற "மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள்' என்ற கருத்தரங்கில், தீஸ்தா ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.

தமிழில் : மீனாமயில்

நண்பர்களே!

கடந்த 25, 30 ஆண்டுகளாக இந்தியாவின் ஒவ்வொரு கணமும் மிக நெருக்கடியானதாகவே இருந்து வந்திருக்கிறது. மீளக்கூடியதா என்று கணிக்க முடியாத நெருக்கடிகளாகவே அவை இருந்தன. 1992 டிசம்பர் 6 அன்று அப்படியொரு தாக்குதல் நடந்த நிலையில் நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவிற்கான உண்மையான சவால் என்னவென்று நம்மை நாமே கேட்போமானால், என்னைப் பொருத்தவரையில், முதன்மையான சவாலாக நான் கருதுவது, பெரும் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியையே ஆகும்.

நமது சமூக, அரசியல் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற நிலைக்கும், ஜனநாயகத் தன்மைக்கும் இருக்கும் மற்றுமொரு மிகப்பெரிய சவாலாக நான் கருதுவது, நமது சிந்தனை ஓட்டங்கள் மற்றும் நாம் கொண்டிருக்கும் கருத்தியல்கள். சிறுபான்மைக் கருத்தியலோ, பெரும்பான்மைக் கருத்தியலோ - அவை அதிகமாக வேற்றுமை, தனித்துவத்தின் பெயரால் வேற்றுமை, பிறரின் மீதான வெறுப்புணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகளையே தூண்டுகின்றன.

இதுபோன்ற சிந்தனைகளாலும், கருத்தியல்களாலும் ஏற்கனவே ஒரு முறை மொத்த நாடும், மிக மோசமான வேதனையை அனுபவித்திருக்கிறது. இந்து வலதுசாரிகளும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் வலதுசாரிகளும் இந்த நாட்டைப் பிரிவினையை நோக்கித் தள்ளினார்கள். 1947இல் அதை நாம் சந்தித்தோம். மகத்தான இந்த மண்ணில் மேலும் பிரிவினைகளை நம்மால் தாங்க முடியாது.

வெகு காலத்துக்கு முன்பு ஆங்கில ஊடகங்கள் கருத்தியல் சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டிருந்தன. வெறுப்புக் கருத்தியலின் மூலத்தைக் கண்டறியும் பணியை, எங்களது இதழ் "கம்யூனலிசம் காம்பட்' தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறது. காந்தியை கொன்ற கருத்தியல் அதுதானா? அல்லது பாமியன் புத்தர் சிலைகளை அழித்த கருத்தியலா அது? பாமியனில் புத்தர் சிலைகள் அழிக்கப்படுவதற்கு முன்னரே தாலிபான் தன் பெண்கள் மீதும், சொந்த மக்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்தது. இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அடிப்படைவாதமும், மதவாதமும் அதன் சொந்த மக்களுக்கே முதல் எதிரி.

சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் நாம் மதவாதம் குறித்துப் பேச முடியாது. நாட்டின் வேறு எந்தப் பகுதியை விடவும் திராவிடப் பண்பாட்டின் இதயமாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த அடிப்படை நன்றாகத் தெரியும். எவ்வாறு சாதியத்தின் மூலம் தன் சொந்த மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, மிகக் கடினமாக வேலைகளை அவர்கள் மீது திணித்ததோடு மட்டுமின்றி, அதை இழிவாகவும் சித்தரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து மதத்தின் கொடூர முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியமும் மதவாதமும்; சாதியத்துக்கு எதிரான வன்முறையும், மதவாதத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றுதான். அதனால் மதவாதத்தை எதிர்க்கின்றவர்களும், சாதி வெறுப்புக்கு எதிரான சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

நாடாளுமன்றத்தைப் போல் அல்லாமல் நமது பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்ததோடு, தலித் பெண்கள், முஸ்லிம் பெண்கள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கிராம அளவிலான அரசியலில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது.

ஆனால் என்ன மாதிரியான மதச்சார்பற்ற ஜனநாயக சமூகம் நம்முடையது? மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலித் பெண்மணி, சனவரி 26 அன்று தேசியக் கொடியை ஏற்ற முற்படும் சொந்த கிராமத்திலேயே நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என எங்கும் இதே நிலைதான். தன் தேசம், நாட்டுப்பற்று, தேசியம் என்றெல்லாம் சொந்தம் கொண்டாட ஒரு தலித் பெண்ணுக்கு உரிமையில்லை. அதனால் அறுபதாண்டுகளை கடந்துவிட்ட சுதந்திர இந்தியாவில் - இன்று உண்மையான, உயிர்த் துடிப்புள்ள ஜனநாயகத்துக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம். ஆனாலும், சச்சார் குழு அறிக்கை குறிப்பிடுவதைப் போல, 55 ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்தினரின் நிலை மிக மோசமாகி வரும் சூழலே இங்கிருக்கிறது. பசியாலும் பட்டினியாலும் அன்றாடம் ஏழாயிரம் குழந்தைகள் இந்தியாவில் உயிரை விடுகிறார்கள். பஞ்சாப், அரியானா, குஜராத் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள "உயர் சாதி' மக்கள், பெண் குழந்தைகளைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கொன்று விடுவதைப் பார்க்கிறோம். பெரும்பான்மையினருக்கு சமூக, பொருளாதார உரிமைகளை அனுமதிக்காத இந்த ஜனநாயகம், எந்த வகையானது? இந்தத் தருணத்தில் இதைத்தான் நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காத குற்றவியல் நீதி அமைப்பின் தோல்வி என்ற கருவிற்கு நான் திரும்பி வருகிறேன். நமது மாவட்ட நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும், அவ்வளவு ஏன் உச்ச நீதிமன்றத்திலும் கூட, ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுறுவதற்கு சுமார் 15 - 20 ஆண்டு காலம் ஆகிறது. ஒரு சொத்து தகராறு வழக்கு மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு கூட நீடிக்கும். தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமம் எனும் போது, நமது குற்றவியல் நீதி அமைப்பு ஒவ்வொரு நாளும் நீதியை மறுத்துக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

இந்த ஒட்டுமொத்த சூழலில், வரலாற்றில் கும்பல் குற்றங்கள் நடந்தேறிய முக்கியமான நாட்களை நாம் பார்ப்போம். உழைக்கும் மக்களாக இருந்ததால், சிறுபான்மையினர் என்பதால், தலித்துகளாக இருந்ததால் அவர்கள் மீது கும்பல் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அத்தகைய வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.

1984இல் நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட போது, நாட்டின் தலைநகரில் மூவாயிரம் சீக்கியர்களும், இந்தியா முழுவதும் ஏழாயிரம் சீக்கியர்களும் கொலை செய்யப்பட்டனர். இதுவரை மூன்று வழக்குகளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கை திரும்பப் பெறச் சொல்லி எச்.கே.சி. பகத்தால் மிரட்டப்பட்ட சீக்கிய விதவைகளில் ஒருவரான தர்பன் கவுர், தனக்கு நீதி கிடைக்கும் என்று இன்னும் நம்புகிறார். 24 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டது. தனக்கு நீதி கிடைக்கக்கூடும் என்று அவர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

புது டில்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளுக்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, போபால் விஷவாயு கசிவு துயரம் நடந்தது. பன்னாட்டு நிறுவனத்தால் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டு வந்த ஆலைகளிலிருந்து கசிந்த மிதைல் அய்ஸோனைட் நச்சு வாயுவினால் மூவாயிரம் பேர் உயிரிழந்தனர். தப்பிப் பிழைத்தவர்கள் இன்றும் அந்த வாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு, மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிகச் சிறிய அளவிலான இழப்பீடு கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பல அரசாங்கங்கள் மாறிவிட்ட நிலையிலும் நம் நாடு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மறு உருவமான "டவ் கெமிக்கல்ஸை' மகாராஷ்டிராவிற்குள் அனுமதித்து, இரு கைகூப்பி அதை வரவேற்றிருக்கிறது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பது இதுதான்.

ஜஜ்ஜார் (அரியானா), திருநெல்வேலி என இன்னும் பல இடங்களில் தலித்துகள் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார் கள்? கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் அத்தகைய கொடுமை நடந்தது. பனிக்கால தலைநகரமான நாக்பூரிலிருந்து வெகுதொலைவில் இல்லை அந்த தலித் குடும்பம். அய்ந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் இரண்டு பெண்கள் கொடூரமாக வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள்.

பிறர் கொலை செய்யப்பட்டார்கள். ஏன்? ஏனென்றால் அந்த குடும்பத்தின் தாய் சுரேகா போட்மாங்கே, தனது கிராமத்திற்கு திரும்பிச் சென்று, தன் நிலத்தைப் பெற்று, தலை நிமிர்ந்து வாழ்ந்தார். தன் பிள்ளைகளை ஆண், பெண் என்ற பாரபட்சமின்றி படிக்க வைத்தார். சாதி ஆதிக்கத்துக்கு தலை வணங்க மறுத்தார்.

வரலாற்றுப்பூர்வமாக, தமிழ் நாட்டைப் போலவே மகாராட்டிராவிலும் வலுவான சாதி எதிர்ப்பு இயக்கம் இருந்திருக்கிறது. ஜோதிபா புலேவில் தொடங்கி சாவித்திரிபாய் புலே, பாபாசாகேப் அம்பேத்கர்... அதற்கு முன்னரும் கூட துக்காராம், ஏக்நாத், நாம்தேவ் போன்ற ஞானிகள் சாதி ஆதிக்கத்திற் கும் சாதிய கட்டமைப்பிற்கும் சவாலாக இருந்தனர். இருப்பினும், மகாராஷ்டிராவில் அப்படியொரு கொடூர நிகழ்வு நடந்தேறியதை நம்ப முடியவில்லை. அவர்கள் முன்னோக் கிச் செல்வதைவிட பின்தங்கி இருப்பதையே இது காட்டுகிறது.

இப்போது நாம் 1992 டிசம்பர் 6 நிகழ்வுக்கு வருவோம். பாபர் மசூதி இடிப்பு. இந்த ஒரேயொரு பயங்கரவாத செயல், அடுத்தடுத்து பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப்படுத்துதலுக்கும் வழி வகுத்தது. ஆனால் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன் 1985 - 1992 வரை வரலாற்றை ஆராய்வோமானால், ரத யாத்திரை எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் கலவரங்கள் நிகழ்ந்தன.

இங்கு நான் இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட், மல்யானா, ஹாஷிம்புரா மற்றும் பகல்பூர் ஆகிய இடங்களில் 1987 - 89 ஆண்டுகளில் 51 முஸ்லிம் சிறுவர்கள், உத்திரப்பிரதேச ஊர்க் காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்றும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆதாரங்கள் தொலைந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே இரவில் பகல்பூரில் உள்ள இரண்டு கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு சில தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால் கையில் தடிகளையோ, கத்தி மற்றும் துப்பாக்கிகளையோ வைத்திருந்தவர்கள்தான் தண்டிக்கப்பட்டனர். மாறாக, இந்தப் படுகொலைகளை செய்ய திட்டம் தீட்டியவர்கள், வெறுப்புணர்வைப் பரப்புவதில் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் எந்த தண்டனையுமின்றி தப்பினர்.

அடுத்து, வெறுப்பின் சுவடுகள் கர்நாடகத்தை அடைந்தன. தென்னகம் இப்படிப்பட்ட சக்திகளை உள்ளே அனுமதிக்கும் என்பதை என்னைப் போன்றவொரு வரலாற்று மாணவர் நம்பமாட்டார். 1980களிலும், குறிப்பாக 1992இல் நாம் பார்த்தபடி, மத பெரும்பான்மையினருக்கு ஆதரவாகவும், ஒன்றுமறியாத சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்ட காவல் துறையின் பாரபட்சத்தன்மையை மும்பையில் 92 டிசம்பரிலும், 93 ஜனவரியிலும் பார்த்தோம். எண்பதுகள் முழுவதும் இதைத்தான் நாம் காண நேர்ந்தது. அதன் பிறகு பாபர் மசூதி இடிப்பு. அதைத் தொடர்ந்த பம்பாய் தாக்குதல்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட சிறீ கிருஷ்ணா அறிக்கையையும் நாம் பார்த்தோம்.

நண்பர்களே! 1984, 1992 அதன் பிறகு குஜராத் 2002. இதற்கிடையில் 1998இல் தொடங்கி இந்தியாவின் கிறித்துவ சிறுபான்மையினர் மீது நடைபெற்ற திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இப்போது அல்ல, 1998இல் தொடங்கியே ஒரிசாவும், கர்நாடகாவும் உச்ச கட்டமாகக் குறி வைக்கப்பட்டன.

1998 - ஓராண்டில் மட்டும் கிறித்துவ பாதிரியார்கள் மற்றும் கிறித்துவ நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட 48 தாக்குதல்களை, அனைத்திந்திய கத்தோலிக்க சங்கத்தோடு இணைந்து நாங்கள் பதிவு செய்தோம். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஏன் தமிழ் நாட்டிலும் தாக்குதல்கள் வெவ்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டன. வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் முஸ்லிம்கள் ஆற்றும் தொண்டைப் புறக்கணித்து அவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டனர். தலித் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கிறித்துவர்கள் ஆற்றும் தொண்டு இழிவுபடுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையை செய்யத் தவறியது. குற்றவாளிகள் எந்தக் கட்டுப் பாடுமின்றி சுதந்திரமாக உலவ நாம் அனுமதிக்கிறோம்.

2002இல் நடந்ததை நாம் அறிவோம். 2002 எதை அர்த்தப்படுத்துகிறது? 2002 என்னவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது? அது முடிந்து போன கதை அல்ல. நான் வரலாற்றைக் கண்டுபிடிக்க முனைவதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் கும்பல் வன்முறைகள், குற்றங்கள் நிகழ இந்த சமூகமும், நாடும் அனுமதிக்கிறது. குற்றவாளிகளை தண்டிக்காமல் விடுவித்து, மிகத் தீவிரமான தனிமைப்படுத்துதலையும் காழ்ப்புணர்வையும் உருவாக்குகிறது. ஒரு சமூகம், நாடு என்ற அளவில் இதை சரி செய்யத் தவறிவிட்டோம். உண்மையை ஒப்புக் கொள்ளத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூட நமக்கு விருப்பமில்லை.

2002 (குஜராத்) கொடூரம், பிப்ரவரி 27க்கு வெகுகாலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அது, சிறுபான்மையினரை திட்டமிட்டு தனிமைப்படுத்தியது. குஜராத்தின் நகரங்களை ஒரு சமூகத் தினர் மட்டும் வசிக்கும் இடமாக ஒதுக்கி வைத்தது. சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களை எழுதியது. இனப்படுகொலைகள் நடத்தப்படுவதற்கு முன்னர், சுமார் அய்ந்து முதல் பத்தாண்டுகள் வரை திட்டமிட்டு இவை செயல்படுத்தப்பட்டன. இனப்படுகொலை என்பது ஓரிரவில் நிகழ்வதல்ல. மாய தந்திரத்தைப் போல அது நடந்துவிடாது. திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனப்படுகொலைகளை, பெரும்பான்மை சமூகம் அமைதி காப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கிறது. குஜராத் அதற்கு மிகச் சரியானதொரு எடுத்துக்காட்டு.

நண்பர்களே! பிப்ரவரி 29, 2009 இல் இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் ஆகியிருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்குகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. இன்று கூட, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட சென்னையைச் சேர்ந்த முன்னாள் சி.பி.அய். இயக்குநர் ராகவன் தலைமை வகிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு - கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடாபாத்யா, ஓட் மற்றும் சர்தார்பூர் படுகொலைகளை மறுவிசாரணை செய்து கொண்டிருக்கிறது. வழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று அல்லது நான்காண்டுகளாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது என்று சொல்லி இந்த வழக்குகளை கிடப்பில் போட, குஜராத் அரசு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தது.

ஆனால் 468 சாட்சிகள், பயங்கரமான வாழ்சூழலிலும் துணிச்சலோடு உறுதியோடும் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களோ, நடுத்தர வர்க்கத்தினரோ அல்லர். தங்களது விவசாய நிலத்தில் கூடாரம் அமைத்து வாழ்கிறவர்கள். தங்களுக்கான நீதியைப் பெறுவதில் மட்டும் மன உறுதியோடு இருக்கிறார்கள். இந்த அமைப்பு அவர்களுக்கு உதவவில்லை. அவர்கள் மன உறுதியில் இருந்து தளர்ந்துவிடாமல் இருக்க நாங்கள் தொடர்ந்து துணையாக இருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயந்துவிடவில்லை.

ஜாகிரா செய்த செயலுக்காக நான் அவரை குற்றம் சொல்ல மாட்டேன். மிகப்பெரிய சூதாட்டத்தில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. இத்தனைக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வடோதரா தான் காரணம். பணத்தை எளிதாக தூக்கி எறிந்துவிடலாம். பலவீனமான இளம்பெண் அவள். உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு இன்னும் என்னிடம் இருக்கிறது. பொய் சாட்சி சொன்னதற்காக அவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் பொய் சாட்சி சொல்வதற்காக அவருக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாஸ்கருக்கு ஒரு மாதம் கூட தண்டனை வழங்கப்படவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு இருக்கிறது. இந்த நீதி அமைப்பு பாரபட்சமிக்கது என்று கூறியதற்காக, உச்ச நீதிமன்றத்தின் கோபத்திற்கு நான் ஆளாகியிருக்கிறேன். உங்கள் முன்னால் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், குஜராத்தைப் பின் தொடர்ந்து ஒரிசா மற்றும் கர்நாடகாவிலும் இதே வன்முறைகள். ஒரிசாவில் இன்றும் பயங்கரம் தொடர்கிறது. சுமார் 35,000 பேர் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். சூலை மாதம் தொடங்கி மூன்று முறை அங்கு சென்று வந்திருக்கிறேன்.

குஜராத்தில் இன்னும் புதை குழிகள்(Mass Graves) உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரின் இறந்த உடல்களை உரிமை கொள்ள அனுமதிக்கப்படாத கல்லறைகள் இன்றும் குஜராத்தில் இருக்கின்றன. கல்லறைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் உதவி செய்தோம். காரணம், கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புகளை ஒப்படைக்க, உதவி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. குஜராத்தில் இன்னும் கதை முடிந்துவிடவில்லை. சிறிய அளவிலான வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. வெளியில் தெரியாமல் இனப்படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் "கேமரா'க்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டன.

சிறுபான்மையினரில் வசதி படைத்தவர்கள் சமரசமாகிவிட்டனர். இதைச் சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் போராட்டத்தை தாங்களே நடத்திக் கொள்ள தனித்துவிடப்பட்டனர். இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான இடத்தையும் தளத்தையும் நாம் உருவாக்கினால், ஆறிய காயத்தை மேலும் மேலும் கிளறுவதாக குற்றம் சாட்டப்படுகிறோம். என்னுடைய கேள்வி என்னவென்றால், ரத்தம் வெளியேற அனுமதிக்காத எந்த காயமாவது ஆறுமா?

குஜராத்தில் நடந்த இனப்படுகொலை அரசே கூலி கொடுத்து நடத்திய பயங்கரவாதம். கிறித்துவர்கள் மற்றும் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் பயங்கரவாதத் தாக்குதல்களே! பெண் கருக்கொலையும் பயங்கரவாதச் செயல்தான். பயங்கரவாதத்தைப் பற்றி நாம் இன்று பேசும் போது, எங்கு தொடங்கி எங்கு முடிப்பது? தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட, தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சி செய்த கயர்லாஞ்சி கொடூரங்கள், பயங்கரவாதம் இல்லையா? இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும் இடங்களில் அவை அச்ச உணர்வை உருவாக்கவில்லையா?

1992 - 1993இல் பொக்ரான் அணு சோதனைக்குப் பிறகு மும்பையில் 12 பயங்கரவாத குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அண்மையில் பெங்களூர், அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரை விட்டுவிடுவோம். நாம் கருத்திலேயே எடுத்துக் கொள்ளாத பகுதிகள் அவை. ஊடகங்களுக்கு அவை பற்றி கவலை கொள்ள நேரமில்லை. நம் நாட்டின் அமைதியை சீர்குலைக்க விரும்புகிற வெளிப்புற எதிரிகளைப் பற்றி இந்தியர் என்ற முறையில் நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக நமது மக்களுக்கிடையே நடந்த பல பரிவர்த்தனைகளால், வேறுபட்ட மாநிலங்களைச் சேர்ந்த நாம் ஒற்றுமையோடு வாழத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

பாகிஸ்தானில் உள்ள அய்.எஸ்.அய்.யின் பிரிவுகளோ அல்லது அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் கூலி கொடுத்து அனுப்பிய தாலிபான் குழுக்களோ - நான் இதை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற, அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் மத பயங்கரவாதிகளுக்கு கூலி கொடுத்தன. நாம் வரலாற்றை மறந்துவிடக் கூடாது.

"அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளால் அவிழ்த்து விடப்பட்ட மிருகம், இன்று நம்மிடையே தான் உலவிக் கொண்டிருக்கிறது' என சர்தாரி (பாகிஸ்தான் அதிபர்) குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் அந்த மிருகத்தின் கைகளில் சிக்கி பெருந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான பயங்கரவாதம் இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், நம் மக்கள் மீது நாமே நிகழ்த்தும் பயங்கரவாதத் தாக்குதல், தனிமைப்படுத்துதல், வன்முறை, அநீதி இவற்றைக் கட்டுப்படுத்த நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

1992-93இல் தொடங்கி இன்று 15 ஆண்டுகளாக, இந்தியாவில் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தங்கள் குறித்து நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல் துறை சீர்த்திருத்தம்.

நம் மக்களை கீழாக நடத்துவதற்காக பிரிட்டிஷ் காலனியாதிக்க முதலாளிகள் உருவாக்கிய காவல் துறைச் சட்டம் தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. நூறாண்டுகளுக்குப் பின்னரே நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் காவல் துறையை அரசியல் சாசனப்படுத்தவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. அதனால் நம் காவல் துறை இந்திய மக்களுக்கு சேவை செய்வதில்லை. மாறாக, அவர்கள் நம்மை அடக்கியாள விழைகிறார்கள்.

இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும். ஓய்வு பெற்ற மூத்த காவல் துறை அதிகாரிகளும், 1979 - 1989 வரையிலான தேசிய காவல் துறை ஆணையத்தின் அறிக்கைகளும் காவல் துறை சீர்திருத்தத்தை தீவிரமாக வலியுறுத்தியுள்ளன. ஆனால் நமது அரசியல் சக்திகள், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாயினும், காவல் துறை மீதிருக்கும் தங்கள் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

காவல் துறையிடமிருந்து பாரபட்சமற்ற நடத்தையை கோருவது, நமது காவல் துறையை ஜனநாயகப்படுத்துவது பற்றியது. காவல் துறையில் சிறுபான்மை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது, நமது காவல் துறையை ஜனநாயகப்படுத்துவது மற்றும் பொறுப்பேற்க வைப்பது தொடர்பானது. ஆகவே, காவல் துறை சீர்திருத்தத்தை மக்கள் இயக்கங்கள் வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக, நீதித்துறையின் கடுங்கோபத்திற்கு உள்ளானாலும் தாழ்வில்லை. நீதித்துறை சீர்திருத்தத்தை நாம் கோர வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நாம் நீக்கியாக வேண்டும். ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால், அந்த நீதிபதியின் மீது தனிப்பட்ட நோக்கம் ஏதும் எனக்கு இல்லாத பட்சத்தில், அந்தத் தீர்ப்பை விமர்சிக்க எனக்கு உரிமை இருக்க வேண்டும். எல்லா ஜனநாயக நாடுகளும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டன. ஆனால் நமது நீதித்துறை மட்டும் அதை விரும்பவில்லை. தீர்ப்பை விமர்சிக்க தடை விதிக்கும் பழமையான சட்டமான நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நாம் கட்டாயமாக நீக்கியாக வேண்டும். இந்நாட்டு மக்களின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டு எந்தத் துறையும், எந்த அமைப்பும் மேலானதாக இருக்க முடியாத பட்சத்தில் நமது நீதித்துறைக்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?

அரசியல்வாதிகளை நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அரசியல்வாதிகளை திட்டுவது நமக்கு எளிதாகவும் இருக்கிறது. அரசியல்வாதிகள் பரவாயில்லை. அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை யாவது மக்களிடம் திரும்ப வரவேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு முறை ஒரு காவலர் நியமிக்கப்பட்டுவிட்டால், ஒரு முறை ஒரு நீதிபதி பொறுப்பேற்றுவிட்டால், அவர்கள் மீது மக்கள் கண்காணிப்போ, சோதனையோ எங்கே இருக்கிறது? அதிகாரிகள் மீதான நேர்மையான பரிசோதனை நிச்சயம் வேண்டும்.

ஆனால் பான்வாரி தேவி வழக்கில் வழங்கப்பட்டதைப் போன்ற ஒரு தீர்ப்பு அளிக்கப்படுமானால்... பான்வாரி தேவி தலித் சமூகத்தைச் சேர்ந்த மிகத் துணிச்சலான பெண். ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவர். அவர் ஒரு சமூக சேவகி. பான்வாரி தேவி தன் சேவையை தொடராமலிருக்க, அவருக்கு பாடம் கற்பித்து அவரை தனிமைப்படுத்த விரும்பிய ஆதிக்க சாதி ஆண்கள், அவரை மிகக் கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார். ராஜஸ்தான் நீதிமன்றம் என்ன சொன்னது? “உயர் சாதி ஆண்கள் ஒரு போதும் கீழ்சாதிப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்க வாய்ப்பே இல்லை'' என்று தீர்ப்பளித்தது. ஆக, ஒரு நீதிபதி இப்படியொரு தீர்ப்பை வழங்குவாரெனில், அதை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ நமக்கு உரிமை இல்லையா?

நமது உளவுத்துறை குறித்தும் சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். மக்கள் கண்காணிப்பிலிருந்து விலகியிருக்கும் மற்றொரு துறை இது. மத்திய, மாநில உளவு நிறுவனங்கள், அந்நிய உளவு நிறுவனமான "ரா' இவை இரண்டுமே நாடாளுமன்றத்தின் எந்த ஆய்வுக்கும் உட்படாமல் இயங்குகின்றன. எவ்வளவு நிதி இவற்றுக்கு தரப்படுகிறது, அதை எப்படி இவை செலவழிக்கின்றன, எப்படி இயங்குகின்றன, எந்த மாதிரியான இயக்கங்களை இவை ஆதரிக்கின்றன என எதுவுமே கண்காணிப்புக்கு உள்ளாகவில்லை. ஆகவே, காவல் துறை மற்றும் நீதிமன்ற சீர்திருத்தங்களை அடுத்து உளவுத்துறையின் சீர்திருத்தத்தை கையிலெடுக்க மக்கள் இயக்கங்களை துரிதப்படுத்துகிறேன். மத்திய உளவுப்பிரிவில் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்களுக்கு அதிகமாக நீங்கள் பார்க்க முடியாது.

இந்திய உளவுத்துறையில் இந்து வலதுசாரி கொள்கையை நோக்கிய கருத்தியல் மாற்றம் நிகழ்த்திருக்கிறது. மிகுந்த பொறுப்புணர்வோடு இதை நான் சொல்கிறேன். நான் படித்திருக்கிறேன். நான்டெட் வழக்கைப் புலனாய்வு செய்து கொண்டிருந்த போது இந்த உளவுத்துறையின் அதிகாரி ஒருவர், பூனாவில் பஜ்ரங்தள் ஆட்களுக்கு ஆயுதங்களை தயாரிப்பதற்கும், அவற்றைப் பொருத்துவதற்கும் பயிற்சியளித்துக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டு பிடித்தோம். உளவுத்துறை ஏதோ ஒரு வகையான மக்கள் ஆய்விற்கும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் எழுதிய மூன்று புத்தகங்களை இங்குள்ளவர்களுக்கு நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். அவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றாலும், "இந்திய உளவுத்துறையின் சேவை - தொழில் ரீதியாக திறம்பட்டதோ, பொறுப்புமிக்க செயல்பாடுகளைக் கொண்டதோ அல்ல. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி பணியாற்ற வேண்டிய தேவை அதற்கிருக்கிறது' என்ற ஒரு விஷயத்தில் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளான இவர்கள் மூவரும் ஒத்துப் போகிறார்கள்.

முதல் புத்தகம் மலாய் கிருஷ்ணதஹார் எழுதிய Open Secrets India’s Intelligence Unveiled ; இரண்டாவது புத்தகம் வி.கே.சிங் எழுதியIndia’s External Intelligence : Secrets of Research and Analysis Wing; மூன்றாவது புத்தகம் டி. ராமன் எழுதிய The Cowboys of RAW : Down Memory Lane தயவு செய்து இந்த புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் இந்திய உளவுத்துறை பற்றி திகைப்பும் அதிர்ச்சியும் ஊட்டும் தகவல்களை அவை சொல்கின்றன.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இந்த ஆய்வுகள், இந்திய உளவுத்துறை அரசியல் சார்ந்ததாக இயங்குகிறது. அரசியலால் தூண்டப்பட்ட உளவு வேலைகளே ஊக்குவிக்கப்படுகின்றன. மாறாக, உண்மையான உளவு என்பது இல்லை. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்க, ஆர்.எஸ்.எஸ். ஆட்களை களத்தில் இறக்கும் எண்ணம் கூட முன்னாள் அரசொன்றுக்கு இருந்ததாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. இந்தப் போக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே இங்கு உரையாற்றாமல், சில பரிந்துரைகளை செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவிற்கான சவால்கள் பற்றிப் பேசும் போது, கல்வித்துறையோடு முடிக்க விரும்புகிறேன். 13 ஆண்டு கால பள்ளி வாழ்க்கையில் என்ன மாதிரியான பாடப் புத்தகங்களை நம் குழந்தைகளுக்கு தருகிறோம். என்ன மாதிரியான வரலாற்றைக் கற்பிக்கிறோம், எந்த வகையான சமூக அறிவியலை, அறிவை பகிர்ந்து கொள்கிறோம்?

தமிழ் நாடு இந்த சூழலிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறேன். ஆனால் மகாராட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற இந்தியாவின் பிற பகுதி களில், நூற்றாண்டுகளாகத் தொடரும் சாதி எதிர்ப்பு இயக்கங்களின் போராட்டங்களுக்கு மிகச் சிறிய இடமே அளிக்கப்பட்டிருக்கிறது. உடல் உழைப்பு சார்ந்த தொழில்களுக்கு குறைவான மரியாதையே வழங்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் பாடப் புத்தகங்கள் உடல் உழைப்புத் தொழில்களை கீழ்த்தரமாகக் கருத கட்டாயப்படுத்துகின்றன. மிக மோசமான சாதிய அணுகுமுறை இது. குஜராத்தில் நிலைமை மிக மோசம். ஜெர்மனியையும் இத்தாலியையும் பொருளாதார ரீதியாக பலமிக்க நாடுகளாக்கியதற்காக ஹிட்லரும் முசோலினியும் புகழப்படுகிறார்கள். அதைப் போலவே நரேந்திர மோடி குஜராத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆக, என்ன மாதிரியான வரலாற்றை நம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம்? காலனிய ஆதிக்கவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு பழங்குடியினரும், சாதியும், சமூகமும் போராடி இருக்கிறது என்று நாம் குழந்தைகளுக்கு சொல்கிறோமா? இல்லை. வரலாற்று ரீதியாக, விடுதலைப் போரில் பெண்களுக்கு வலுவான பங்கிருப்பதை கற்றுத் தருகிறோமா? இன்றும் கூட சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள் என்பதை சொல்கிறோமா? காலனிய ஆதிக்கவாதிகள் வருவதற்கு மிக முன்பே கி.பி. 58இல் கிறித்துவம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்பதை சொல்வதில்லை. மலபார் கடற்கரை வழியாக புனித தாமஸ் என்பவர் கிறித்துவத்தை கொண்டு வந்தார். இஸ்லாம் வணிகர்கள் மூலம் வந்ததென்று நாம் கூறுவதில்லை. படையெடுப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே அதாவது 110 ஆண்டுகளுக்கு முன்பு பெருமான் என்ற அரசன் இஸ்லாத்துக்கு மாறினார். இதையும் நாம் சொல்வதில்லை.

வரலாற்றை குழந்தைகளுக்கு கற்பிக்கத் தவறுவதால், மத வரலாறு அவர்கள் மூளையில் வேரூன்றி வளர்கிறது. தங்களுக்கான தகுதியையும் விடுதலையையும் கோரும் தலித் மக்கள்தான் பெருமளவில் இஸ்லாத்திற்கும் கிறித்துவத்திற்கும் மாறியிருக்கிறார்கள் என்ற உண்மையை சொல்ல மறுக்கிறோம். கொத்தடிமைச் சட்டம் கேரளாவில் நீக்கப்பட்ட போது, அதிக எண்ணிக்கையில் மதமாற்றம் நிகழ்ந்தது. ஏனென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இஸ்லாம் அல்லது கிறித்துவ அமைப்பில் தங்களுக்கான சம உரிமைகள் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

பாபாசாகேப் அம்பேத்கர், ஜோதிபா புலே ஆகியோரின் கருத்துக்களை குழந்தைகளோடு நாம் பகிர்ந்து கொள்வதில்லை. பெரியாரின் சிந்தனைகள் தமிழகத்தை தாண்டி பரவவில்லை. இந்தியப் பிரிவினை நாளில் மவுலானா ஆசாத், ஜும்மா மசூதியின் படிகட்டுகளில் ஆற்றிய உரையை இன்று கேட்டாலும் உங்களையும் என்னையும் அழ வைத்துவிடும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் நாம் பேசுவதே இல்லை.

இந்த நாட்டின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வெவ்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் எவ்வாறு பங்களிக்கிறார்கள்.... இவற்றை எல்லாம் நோக்கி நாம் நகரவில்லையெனில், நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மைக்கு எதிராக சிந்திக்கும் இளம் மூளைகளை நாமே உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.

தனியார் கல்வியில் இன்று மிகப் பெரிய அளவில் கொடிகட்டிப் பறப்பது கிறித்துவ நிறுவனங்களோ, மதச்சார்பற்ற தனியார் அறக்கட்டளைகளோ அல்ல. ஒரு பக்கம், சுயம் சேவக் சங்கின் சிசு மந்திர், சரஸ்வதி சிசு மந்திர், வி.எச்.பி.யின் ஏகல் வித்யாலயா ஆகியவை பேராபத்துகளாக வளர்ந்து நிற்கின்றன.

பழங்குடி இந்தியா, மத்திய இந்தியா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசாவில் உள்ள பழங்குடி மக்களுக்கு எந்த அரசும் கல்வி வழங்கத் தயாராக இல்லாத போது, வி.எச்.பி. ஏகல் வித்யாலாவை தொடங்கி கல்வி புகட்ட முன் வந்தால், குழந்தையை அந்தப் பள்ளியில் சேர்க்காதீர்கள் என்று அந்த பழங்குடியினரிடம் சொல்ல, நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

நமது நாடு இன்று எதிர்கொள்ளும் சவால்களை நாம் எதிர்கொள்ள விரும்பினால், சட்டத்தின் ஆட்சி தொடர்பான இந்த பிரச்சனைகளும், கல்விக்கான சமூக மாற்றம் குறித்தான பிரச்சனைகளும் - தேர்தலின் போது நமது அரசியல் கட்சிகளின் பிரச்சனைகளாக மாற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உங்களுக்கும் எனக்குமான பிரச்சனையாக மட்டும் இவை இருக்கக்கூடாது. அறிவுசார் தளத்திற்கு பிரச்சனையாக இவை இருப்பதில் பயனில்லை. தேர்தலைக் கோரும், தேர்தலில் மோதும் பிரச்சனைகளாக இவை மாற வேண்டும்.

எல்லா வகையான பயங்கரவாதத்தையும் அது எங்கிருந்து வந்தாலும், எல்லை தாண்டியதாக இருந்தாலும் நாம் எதிர்க்கிறோம். சமூகத்தைப் பிரிக்கும் வெறுப்பு பேச்சையும், பிரிவினை மொழியையும் உடனடியாக தடை செய்ய வேண்டியதே இன்றைய சூழலின் தேவை என்று நான் கருதுகிறேன். மும்பையில் நவம்பர் 26 அன்று உயிரிழந்த 180க்கும் மேற்பட்டவர்களில் 35 சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள்; சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இறந்தவர்கள் மட்டும் 56 பேர். பாய்ந்து வரும் தோட்டாவிற்கு ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என தெரியாது.

ஏழு நகரங்களிலும் இருந்த முஸ்லிம்கள் அத்தனை பேரும் அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எதிர்வந்த பக்ரீத் திருநாளை மிக அமைதியாகவும் துக்கத்தோடும் அவர்கள் கழித்தனர். நமது சிறுபான்மையினரை இது மாதிரி நாம் சோதித்துக் கொண்டே இருக்க முடியாது. அவர்கள் நம்மோடு நின்றார்கள்.

பயங்கரவாத தோட்டாவிற்கும், வெறுப்புணர்விற்கும் எதிராக அவர்கள் நம்மோடு தொடர்ந்து நிற்கிறார்கள். மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்கான நமது போராட்டத்தில் நாம் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

Pin It