ஒரு நாட்டின் நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி, முற்போக்கு நிலையை அங்குள்ள பெண்களின் சமூகநிலையைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பது பொதுமொழியாக அறிந்தேற்கப்படுகிறது. பாலினச் சமத்துவமின்மையும், பாலின இடைவெளியும் சமூக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் முடக்கும் எதிர்மறை ஆற்றலாகச் செயல்படுகின்றன. நம் பெண்கள் எவ்வளவுதான் துரத்திப் பிடிக்க முயற்சித்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூடப் பாலினச் சமத்துவமும், பெண் விடுதலையும் நெருங்க முடியாத கனவுகளாகவே தொலைதூரத்தில் நிற்கின்றன. சமையல், வீட்டுவேலைகள், குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு என இத்தனை பாரங்களையும் முதுகில் சுமந்திருக்கும் பெண்கள், இத்தகைய சுமைகளில்லாத ஆண்களுக்கு இணையாக ஈடுகொடுத்து ஓட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்பேர்ப்பட்ட சமூக அநீதி என்பதை ஏன் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறோம்?
ஆனாலும் கூடப் பல பெண்கள் குடும்பப் பொதிகளுடன் ஆண்களுக்கு நிகராக மட்டும் இல்லாது, அவர்களைத் தாண்டியும் சாதனை படைக்கும் வீராங்கனைகளாகவும் இருக்கத்தான் செய்கின்றனர். வயிற்றில் குழந்தையுடன் ஓடும் ஒலிம்பிக் வீராங்கனைகளும் இருக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்குச் சம வாய்ப்புகளை அளிக்காமல், பெயரளவில் பசப்பிவிட்டு அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்துகிறது. "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் உள்ளார். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் தோல்விக்குப் பின்னும் குடும்பச்சுமை உள்ளது" என்பதுதானே உண்மையாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் அரசியல் அகதிகளாகவும், ஏன் சமூக அகதிகளாகவும் வீட்டில் முடங்கிக் கிடப்பதற்கு யார் காரணம்? இந்த ஆணாதிக்க சமூகம் அவர்கள் மீது திணிக்கும் இந்தக் குடும்பப் பாரங்களும், மதமரபுசார் கட்டுப்பாடுகளும்தானே முதன்மையான காரணமாக உள்ளன.
பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு வெளி வேலை, அலுவலக வேலை என்பது கூடுதல் சுமையாகவே உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் காலை நேரம் மிகக் கொடுமையானது. அதிகாலையில் எழுந்து இரண்டு வேளைகளுக்கும் அவசர அவசரமாகச் சமைத்து வைத்துவிட்டு அவதிப்பட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறார்கள். அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தால் அடுத்தடுத்து வேலைகள் கியூவில் (Queue) நிற்கும். இப்படித்தான் உழைக்கும் பெண்களுக்கு ஓய்வு என்பது ஓய்வாக இல்லை; ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவதாக உள்ளது.
இதனால் படித்த திறமைசாலியான பல பெண்கள் திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பின் சுமை தாங்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். முழு நேரமும் அடுத்த வேளைக்கு என்ன சமைக்க வேண்டும் என்ற சிந்தனையே பெண்களை ஆக்கிரமிக்கும் விதமாகச் சமூகத்தால் நிர்பந்திக்கப்படும் போது, எப்படி அவர்களால் மற்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட முடியும்? இதனால்தான் ஒரு சில பெண்கள் இந்தச் சுமைகளே வேண்டாம் என்று திருமணம் செய்து கொள்ளாது தனியாகவே இருந்து விடுகின்றனர். "பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தனியாகவே இருந்துவிட்டால் பிறப்புவிகிதம் குறைந்து விடும், அது நாட்டுக்கு நல்லதல்ல, ஆரோக்கியமான சமூகத்திற்கு இது அழகல்ல" என அக்கறை கொள்ளும் சமூகம், அதே அக்கறையைப் பெண்களின் குடும்பச்சுமையைக் குறைப்பதைப் பற்றி மட்டும் காட்டுவதில்லை.
இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) 2019-இல் முதன்முதலாக நேரப் பயன்பாட்டுக் கணக்கீட்டின் முடிவுகளை வெளியிட்டது. அது ஊதியமற்ற உழைப்பில் காணப்படும் பாலின இடைவெளியைத் தரவுகளின் அடிப்படையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. 2024-இல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கணக்கீட்டில் மொத்தம் 9 லட்சத்து 8 ஆயிரத்து 333 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வுமுடிவுகள்:
- பெண்களில் 87% பேர் ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
- ஆண்களில் 20.7% பேர் ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
- மாற்றுப்பாலினத்தவர்களில் 54.1% பேர் ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்கான ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடும் நபர்களின் விகிதாசாரம் பெண்களில் 34% ஆகவும், ஆண்களில் 17.9% ஆகவும், மாற்றுப்பாலினத்தவர்களில் 25.9% ஆகவும் உள்ளது.
- வீட்டு வேலைகள்: பெண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 4.82 மணி நேரம் (289 நிமிடங்கள்) வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் தராத வீட்டு வேலைகளைச் செய்துள்ளனர். ஆண் உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 1.46 மணி நேரமும் (88 நிமிடங்கள்), மாற்றுப்பாலினத்தவர் 3.97 மணி நேரமும் (238 நிமிடங்கள்) இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பெண்கள் ஆண்களைப் போல் 3.3 மடங்கு ஊதியம் பெறாத வீட்டுவேலைகளைச் செய்துள்ளனர். மாற்றுப்பாலினத்தவர் ஆண்களைப் போல் 2.7 மடங்கு ஊதியம் பெறாத வீட்டுவேலைகளைச் செய்துள்ளனர்.
- பராமரிப்பு வேலைகள்: பெண்கள் ஒரு நாளைக்கு 2.28 மணி நேரம் (137 நிமிடங்கள்) தங்கள் வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் செலவிட்டனர்; ஆண் உறுப்பினர்கள் 1.25 மணி நேரமும் (75 நிமிடங்கள்), மாற்றுப்பாலினத்தவர் 1.93 மணி நேரமும் (116 நிமிடங்கள்) தங்கள் வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் செலவிட்டனர். அதாவது, பெண்கள் ஆண்களைப் போல 2.61 மடங்கு பராமரிப்பு வேலைகளைச் செய்துள்ளனர். மாற்றுப் பாலினத்தவர் ஆண்களைப் போல் ஒன்றரை மடங்கு பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
- ஊதியமுள்ள வேலைகள்: ஊதியமுள்ள வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 7.73 மணி நேரம் (440 நிமிடங்கள்) இதற்காகச் செலவிட்டனர். இதில் ஆண் பங்கேற்பாளர்கள் 7.88 மணி நேரமும் (473 நிமிடங்கள்), பெண் பங்கேற்பாளர்கள் 5.68 மணி நேரமும் (341 நிமிடங்கள்), மாற்றுப்பாலினத்தவர் 7.33 மணி நேரமும் (440 நிமிடங்கள்) ஊதிய வேலைகளுக்காகச் செலவிட்டிருந்தனர்.
ஊதியமற்ற வேலை, ஊதியம் தரும் வேலை இரண்டையுமே கணக்கில் கொண்டால்:
- ஆண்கள் ஒரு நாளில் உழைப்பில் ஈடுபடும் நேரம்: 10.59 மணி நேரம்
- பெண்கள் உழைப்பில் ஈடுபடும் நேரம்: 12.76 மணி நேரம்
- மாற்றுப்பாலினத்தவர் உழைப்பில் ஈடுபடும் நேரம்: 13.23 மணி நேரம்
மொத்தத்தில் ஆண்களை விடப் பெண்களும், பெண்களை விட மாற்றுப் பாலினத்தவர்களும் அதிக நேரம் வேலையில் ஈடுபடுவதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். இது வெறும் மாதிரி ஆய்வுதான். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் நிலவரம் இன்னும் மோசமாக இருக்கும் என்பதை எளிதில் கணிக்க முடியும். நேரப் பயன்பாடு பற்றிய 2019, 2024 ஆய்வு முடிவுகள் இரண்டுமே வெறும் செய்திகளாக வெளிவந்தனவே தவிர, அவை இந்தியச் சமூகத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் உடனடி கவனத்துக்கு அவசியமில்லாத விஷயங்களின் பட்டியலுக்கு நகர்த்தப்பட்டதைத் தான் இந்த அலட்சியம் சுட்டிக்காட்டுகிறது.
சாதிய ஆணாதிக்க முதலாளித்துவச் சுரண்டல்
இந்தியாவில் குடும்பத்திற்கான பெண்களின் ஊதியமற்ற வீட்டுவேலைகள் குடும்ப நிர்வாகத்துக்கான செலவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது. இதுவே இந்தியாவில் குறைந்த கூலிக்கான கட்டமைப்பை உறுதிசெய்யும் முக்கியப் பொறிமுறையாக உள்ளது. இந்தியாவின் சாதிய முதலாளித்துவம் சாதிப் படிநிலைகள், ஆணாதிக்கம் ஆகியவற்றின் மூலமே மலிவான உழைப்புச் சக்தியையும், அதன் மூலம் கணிசமான இலாபத்தையும் நிலைநிறுத்தும் கட்டமைப்பாகவே உள்ளது. ஊதியமற்ற உழைப்பு, ஊதிய உழைப்பு என இரண்டு வகையிலும் சுரண்டும் கட்டமைப்பாக இந்தியாவின் சாதிய ஆணாதிக்க முதலாளித்துவம் செயல்படுகிறது. ஒவ்வொரு சாதிப் படிநிலையும் அதற்கு கீழே உள்ள சாதியினரின் உழைப்பைச் சுரண்டும் வகையில் செயல்படுகிறது.
இந்தியாவில் பெண்களின் சமூகநிலை என்பது அனைத்துப் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. அவர்கள் சார்ந்த சாதி, மதம், தொழில்முறை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்ட நிலைகளைக் கொண்டதாக உள்ளன. இந்தியாவின் சாதியக் கட்டமைப்பால் ஆணாதிக்கமும் சாதியப் படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு சாதிப் படிநிலையிலும் உள்ள பெண்கள் ஆண்களை விடக் கீழ் நிலையில் உள்ளனர். இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலினச் சமத்துவமின்மையும் சாதியப் படிநிலைகளைக் கொண்டதாகவே உள்ளது.
ஆண்களுக்கு நிகரான சம வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்றபோதும், பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அதிகம் பெறக்கூடிய நிலையில் உயர்சாதிப் பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களும், இவர்கள் அனைவரையும் விடப் பின்தங்கிய நிலையில் தலித் பெண்களும் உள்ளனர். தொழிலாளர் பங்கேற்பில் உயர்சாதிப் பெண்களை விடத் தலித் பெண்களே அதிகம் பங்கேற்றாலும் கூட, உயர் ஊதியம் தரும் வேலைகளில் ஈடுபடுபவர்களாக உயர்சாதிப் பெண்கள் உள்ளனர். குறைந்த ஊதியம் தரும் திறன் குறைந்த உடலுழைப்பு வேலைகளிலே தலித் பெண்கள் உள்ளனர். உயர்சாதி முதலாளித்துவப் பெண்ணும், தலித் தினக்கூலிப் பெண்ணும் வெவ்வேறு சமூக நிலையில் வாழ்பவர்கள். பாலினச் சமத்துவமின்மையின் தீவிரம் சாதிப்படி நிலையில் மேலிருந்து கீழே செல்லச் செல்ல அதிகமாகிறது. இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தில் பாலினச் சமத்துவமின்மையின் முதல் படியில் உயர்சாதி முதலாளித்துவப் பெண்ணும் கடைசிப் படியில் தலித் தினக்கூலிப் பெண்ணும் உள்ளனர். சாதி, பொருளாதார நிலை, பாலினத்தின் அடிப்படையில் சமூகத்தின் கடைசிப் படிநிலையில் உள்ள தலித் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை மூன்று முகங்களைக் கொண்டதாக உள்ளது.
ஆக்ஸ்ஃபாம் (Oxfam) இந்திய அறிக்கை - 2022
2022-இல் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவால் வெளியிடப்பட்ட பாகுபாட்டைப் பற்றிய அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்துள்ளது. 2005 முதல் 2020 வரை 15 ஆண்டுகளுக்கான தரவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் முழு வீச்சில் பாலினப் பாகுபாடு நடைமுறையில் இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் உள்ள அனைத்து வகை வேலைவாய்ப்புகளிலும் பாலின அடிப்படையிலான பாகுபாடு மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், தகுதிவாய்ந்த பெண்களில் கணிசமான பகுதியினர் “குடும்பப் பொறுப்புகள்" அல்லது சமூக விதிமுறைகள், சாதிக்குள் அந்தஸ்து, படிநிலை சமூக மற்றும் குடும்ப மரபுகள் போன்றவற்றுக்கு இணங்க வேண்டியதன் காரணமாகத் தொழிலாளர் சந்தையில் சேரத் தயாராக இல்லை. அவை பெரும்பாலும் தொழிலாளர் படையில் பங்கேற்பதற்கு முரணாக உள்ளன. ஆண்களைப் போலவோ அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைக் கொண்ட பெண்களில் பெரும்பகுதியை வேலைக்கு வெளியே தங்க வைப்பது ஆணாதிக்கமாகும்; இது காலப்போக்கில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்கிறது அறிக்கை.
பெண் பாலினத் தொடர்புடைய தப்பெண்ணங்கள் காரணமாகப் பெண் விண்ணப்பதாரர்கள் முதலாளிகளால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பல முதலாளிகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இருந்தபோதிலும், தாமதமான வேலை நேரம், தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணம், வேலை நிலைமைகள் போன்ற வேலைத் தேவைகள் காரணமாகப் பெண்களை விட ஆண்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கருதுகின்றனர். 2019-20-இல் வேலைவாய்ப்பில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு 39.3% ஆகவும், முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு 3.7% ஆகவும், பெண்களுக்கு எதிரான பாகுபாடு 100% ஆக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு எதிரான பாலினப்பாகுபாடு 15 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு எதிரான பாலினப்பாகுபாடு 2004-05-இல் 100% ஆக இருந்தது, 2018-19-இல் 99.5% ஆகக் குறைந்து, 2019-20-இல் மீண்டும் 100% ஆக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடு மிக அதிகமாக உள்ளது என்பதையே பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. மதம் அல்லது சாதி அடிப்படையிலான துணைக் குழுக்களிடையே இதில் எந்த வித்தியாசமும் இல்லை; அதாவது, பெண்களின் சமூகப் பொருளாதார இருப்பிடத்தைப் பொரு்ட்டடுத்தாமல் அனைத்துப் பெண்களும் மிகவும் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்கிறது இந்த அறிக்கை.
வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய இடைவெளி (PLFS தரவுகள்)
2019-20 ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் (PLFS) தரவுகளின்படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளில் ஒரு பெரிய பாலின இடைவெளி காணப்படுகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 53.8% பேர் நிரந்தர ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், பெண்களில் 23.3% பேர் மட்டுமே நிரந்தர ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே கணிசமான ஊதிய இடைவெளியும் காணப்படுகிறது. 2019-20 ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் நிரந்தர வேலைவாய்ப்பில் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வருவாயில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுகிறது:
- நகர்ப்புற நிரந்தர வேலை: ஆண்களின் சராசரி வருவாய் 19,779 ரூபாயாகவும், பெண்களுக்கு இது 15,578 ரூபாயாகவும் உள்ளது.
- நகர்ப்புற சுயதொழில்: ஆண்களின் சராசரி வருவாய் 15,996 ரூபாயாகவும், பெண்களின் சராசரி வருவாய் 6,626 ரூபாயாகவும் உள்ளது. (ஆண்களின் வருவாய் பெண்களை விடக் கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகம்).
- நகர்ப்புற தற்காலிக வேலை: ஆண்களின் சராசரி வருவாய் 9,017 ரூபாயாகவும், பெண்களின் சராசரி வருவாய் 5,709 ரூபாயாகவும் உள்ளது.
நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் பாலின அடிப்படையிலான பாகுபாடு கடுமையாக உள்ளது. கெடுவாய்ப்பாக, 2004-05 முதல் கிராமப்புறங்களில் பாலினப் பாகுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது:
- கிராமப்புற நிரந்தர வேலை: ஆண்களின் சராசரி மாத வருமானம் 13,600 ரூபாயாகவும், பெண்களுக்குச் சராசரி மாத வருமானம் 9,757 ரூபாயாகவும் உள்ளது.
- கிராமப்புறச் சுயதொழில்: கிராமப்புறங்களில் சுயதொழில் செய்பவர்களில் ஆண்கள், பெண்கள் சம்பாதிப்பதை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள்.
- கிராமப்புறத் தற்காலிக வேலை: ஆண்கள் பெறும் சராசரி வருவாய் 7,463 ரூபாயாகவும், பெண்கள் பெறும் சராசரி வருவாய் 4,604.6 ரூபாயாகவும் உள்ளது.
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தற்காலிக வேலைகளில் ஈடுபடும் ஆண்கள், பெண்களுக்கு இடையிலான ஊதிய இடைவெளி 50% முதல் 70% வரை இருப்பது கவலையளிக்கிறது. நிரந்தர வேலைகளில் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையிலான வருவாய் இடைவெளி 20 முதல் 60% வரை அதிகமாக உள்ளது. இதற்குப் பெண்கள் கீழ்மட்ட வேலைகளைப் பெறுவதும், பதவி உயர்வுகளைப் பெறாததும் காரணமாக உள்ளது. சுயதொழில் செய்பவர்களைப் பொறுத்தவரை, இந்த வேறுபாடு மிக அதிகமாக உள்ளது; ஆண்கள் பெண்களை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் இரண்டிலும் உள்ள எல்லாவிதமான வேலைகளிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே காணப்படும் ஊதிய இடைவெளிக்கு 90%க்கும் மேல் பாலின பாகுபாடே காரணம் என்கிறது இந்தப் பகுப்பாய்வு. ஆகவே, இந்தியாவில் வேலைவாய்ப்புகளிலும், ஊதிய இடைவெளிகளிலும் காணப்படும் பாலினப் பாகுபாட்டை முற்றிலும் களையும் விதத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கியூபா தரும் முன்னுதாரணம்
இந்தியாவில் ஊதியமற்ற உழைப்பில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதால் அவர்கள் பொருளாதாரத் தற்சார்பு இல்லாமல் குடும்பத்தில் உள்ள ஆண்களைச் சார்ந்த வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜிடிபி (GDP) கணக்கீட்டு முறை பெண்களின் ஊதியமற்ற உழைப்பைப் புறக்கணிக்கிறது. குடும்பத்திற்கான பெண்களின் ஊதியமற்ற உழைப்பு, நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிக்கும் விதமாக உழைப்புச் சக்தியில் அதிகளவில் பங்கேற்க விடாமல் அவர்களை முடக்கிப் போடுகிறது.
குடும்ப வேலைகள், குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு ஆகிய பணிகளில் ஆண்களிடமும் சம பொறுப்பைக் கோரும் விதமான சட்ட முன்னெடுப்புகள் மிக அவசியமாக உள்ளன. அதை நாம் குடியுரிமையைப் பிடுங்கும் பாசிச நச்சு சக்திகளிடம் எதிர்பார்க்க முடியாது. இந்த விஷயங்களில் கியூபா நமக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
1975-இல் கியூபாவில் 'குடும்பச் சட்ட நெறிமுறை' (Cuban Family Code) உருவாக்கப்பட்டது. இது குடும்பத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தடைசெய்தது. கியூபப் பெண்கள் வீட்டுக் கடமைகளைத் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடன் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே 1975 குடும்பச் சட்டநெறிமுறை வடிவமைக்கப்பட்டிருந்தது. கணவன், மனைவி இருவரும் குடும்பத்தில் சமமான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும், அதுவே இளம் தலைமுறையினருக்குக் கல்வி அடிப்படையிலான முன்னுதாரணமாக அமையும் எனவும் 1975 குடும்பச் சட்ட நெறி குறிப்பிடுகிறது. கியூபப் பெண்கள் பல்வேறு சமூக இனப் பின்னணியிலிருந்து (ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா) வந்தவர்கள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள கியூபப் பெண்கள், எல்ஜிபிடி (LGBT) சமூகத்தினர் உட்பட அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமான உயர்கல்வியையும், சமமான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் கியூப அரசு வழங்கியுள்ளது.
ஆனால், இந்தியாவில் கல்வித்துறையில் அதிகரித்து வரும் தனியார்மயம் பெண்களின் கல்வி வாய்ப்புகளை, குறிப்பாகத் தலித் பெண்களின் கல்வி வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் தடுப்பதாக உள்ளது. கல்வி வாய்ப்புகளில் காணப்படும் பாலினப் பாகுபாடுகளை நீக்கத் தொடக்கக் கல்வியிலிருந்து, உயர்கல்வி வரை அனைவருக்கும் இலவசப் பொதுக் கல்வி அளிக்க வேண்டும்.
பெண்களின் அரசியல் பங்கேற்பில் கியூபா உலகளவில் முன்னிலையில் உள்ளது. கியூபாவில் தேசியச் சட்டசபையில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 55% ஆக உள்ளது. இந்தியாவில் மக்களவையில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 13.6% ஆகவும், மாநிலங்களவையில் 17% ஆகவும் மட்டுமே உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் அரசியல் அகதிகளாக இருப்பதற்குக் குடும்பச் சுமைகள்தான் முதன்மையான காரணமாக உள்ளன. கியூபாவைப் போல் இந்தியாவிலும் குடும்ப வேலைகளிலும், குழந்தைகளைப் பராமரிப்பதிலும் ஆண்களின் சம பங்களிப்பைக் கோரும் வகையில் குடும்பச் சட்ட நெறிமுறை உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது உடனடி அவசியமாக உள்ளது. அதுவே பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளைத் திறக்கும். அதன் மூலமே உழைப்புச் சக்தியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் பெண்களின் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்ய முடியும்.
- சமந்தா