புரட்சிக்கு முன்:

cuba women 450மெல்பா ஹெர்னாண்டஸ் 1921 ஜூலை 28 அன்று லாஸ் வில்லாஸ் மாகாணத்தின் குரூசஸில், மானுவல் - எலேனா இணையருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு தேசப்பற்றையும், நீதியுணர்வையும் ஊட்டி வளர்த்தனர். ஸ்பானியக் காலனியாதிக்கத்தை எதிர்த்து கியூபாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு குடும்பத்திலிருந்து உருவானவர்தான் மெல்பா.

மெல்பா குரூசஸில் உள்ள பொதுப் பள்ளியில் படித்தார், அது மார்த்தியைச் சேர்ந்த மாம்பிச வேர்களைப் போற்றும் ஒரு ஆசிரியரால் நடத்தப்பட்ட பள்ளியாகும். (மாம்பி என்ற கறுப்பின இராணுவ அதிகாரி ஸ்பானியர்களை எதிர்த்துப் போராடினார். ஸ்பானியர்கள் தங்களை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மாம்பிசஸ் என அழைத்தனர்.) குடும்பமும் பள்ளியும் ஒன்றுசேர்ந்து, விழிப்பூட்டியதால் மெல்பா தேசப்பற்றுடையவராகவே வளர்ந்தார்.

1943ஆம் ஆண்டில் மெல்பா ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார் பின்னர் சமூக அறிவியலிலும் பட்டம் பெற்றார். அரசின் சுங்கத்துறையில் வழக்கறிஞராக மெல்பா பணியாற்றினார். விளிம்பு நிலை மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் வழக்கறிஞராகவும் இருந்தார்.

புரட்சியில்:

எட்வர்டோ சிபஸின் பிரசாரங்களால் ஈர்க்கப்பட்ட மெல்பா ஊழல் எதிர்ப்பு, ஜனநாயக சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்ட அவரது ஆர்த்தடாக்ஸ் கட்சியில் உறுப்பினரானார். மெல்பா பாத்திஸ்டாவின் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். ஆனால் ஆர்த்தடாக்ஸ் கட்சியின் நிறுவனர் சிபஸ் தற்கொலை செய்து கொண்ட பொழுதும், பாத்திஸ்டா தன் இரண்டாவது சதித் திட்டத்தை அரங்கேற்றிய பொழுதும் எல்லா வழிகளும் அடைபட்டதாகவே மெல்பாவுக்குத் தோன்றியது. 1952 மே மாதத்தில் ஆர்த்தடாக்ஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அரசியல் நிகழ்வில்தான் ஹைடியின் சகோதரரான ஏபெல் சண்டமரியாவை மெல்பா சந்தித்தார். ஃபிடலின் கருத்துகளை அறியப்பெறும் வகையில் தன் வீட்டிற்கு வருமாறு மெல்பாவை ஏபெல் அழைத்தார். ஆனால் அன்று ஃபிடலால் கலந்து கொள்ள முடியவில்லை என்ற போதும் மெல்பா ஹைடியை சந்தித்தார். அதிலிருந்து மெல்பா ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டிற்கு சென்றார். அப்போதிருந்து, ஹைடியின் வீடும், மெல்பாவின் பெற்றோரின் வசிப்பிடமும், பாத்திஸ்டாவை எதிர்க்கும் புரட்சிகர இயக்கத்தின் தலைமையகமாக மாறியது. இவ்வாறு வழக்கறிஞர் மெல்பா, ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர இயக்கத்தில் இணைந்தார்.

1950களில் முதன்முதலில் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்த போது தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், தங்களுக்கான வழியைக் கண்டறிந்ததாக உணர்ந்ததாகவும் மெல்பா பின்னர் நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். ‘அந்த நேரத்தில் நிறைய இளைஞர்கள் நாட்டிற்கான தன் கடமையை அறிந்திருந்தனர்; ஆனால் நாங்கள் சரியான வழியைக் கண்டறியவில்லை. கூட்டத்தில் ஃபிடலின் பேச்சைக் கேட்ட போது எங்களை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதை ஃபிடல் அறிவார் என்பதே தனது உடனடி மனப்பதிவாக இருந்ததாகவும் புரட்சிகர போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை ஏபெலும், ஃபிடலும் வலியுறுத்தியதாகவும்’ பின்னர் மெல்பா குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்குழுவின் நான்கு உறுப்பினர்களாக ஃபிடல், ஏபெல், ஹைடி மற்றும் மெல்பா இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகளையும், நடத்தை குறித்தும் கலந்துரையாடினர். குழு பிரச்சார நடவடிக்கைகளை முன்னிலைப் படுத்தியது. ரால் கோமஸ், ஏபெலால் தயாரிக்கப்பட்ட ‘அவர்கள் ஒரே மாதிரியானவர்கள்’ எனத் தலைப்பிடப்பட்டு பிறகு ‘குற்றம் சுமத்துபவர்’ என மாற்றப்பட்ட ஆர்த்தடாக்ஸ் கட்சியின் அறிக்கையை மெல்பா விநியோகித்தார்.1952 ஆகஸ்ட் 16ல் அதன் மூன்றாவது(கடைசி) பதிப்பை 10,000 பிரதிகள் படியெடுத்த போது இராணுவ உளவுத்துறை அவர்களது இரகசிய அச்சகத்தைக் கண்டுபிடித்து, படியாக்க எந்திரத்தை அழித்தது. மெல்பா, எல்டா பெரெஸ் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இராணுவ அதிகாரி அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றும் இது போன்று செய்வதை நிறுத்த வேண்டும், அவர்களால் நாட்டை சரி செய்ய இயலாது என்றும், பெண்கள் இப்படி செய்வது சகிக்கவில்லை என்றும் பாடம் எடுத்து, பின்னர் தங்களை விடுவித்ததாக மெல்பா கூறியுள்ளார்.

1953 ஆம் ஆண்டு மன்கடா தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு வீராங்கனைகளில் ஒருவர் மெல்பா ஹெர்ணாண்டஸ். (மற்றவர் ஹைடி சண்டமரியா). ஜூலை 26 இயக்கத்தின் உருவாக்கத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மூன்று போராளிகளாக மெல்பாவும், ஹைடியும், ஏபெலும் இருந்தனர். மெல்பா சாட்டர்னினோ லோரா மாகாண மருத்துவமனையைக் கைப்பற்றுவதற்கான போராளிகள் குழுவை ஒருங்கிணைத்தார்.

இராணுவ வீரர்களைப் போல் கிளர்ச்சியாளர்கள் மாறுவேடத்தில் தாக்குதல் புரியத் தேவையான 100க்கு மேற்பட்ட இராணுவச் சீருடைகளை மெல்பா ஹெர்ணாண்டஸ் தங்கள்பால் ஆதரவு கொண்ட ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து வற்புறுத்திப் பெற்றுள்ளார். தாக்குதலுக்கு முந்தைய நாள் கிளர்ச்சியாளர்கள் பண்ணையில் மறைந்திருந்த போது, இரவின் மங்கிய வெளிச்சத்தில் மெல்பாவும், ஹைடியும் அந்த இராணுவச் சீருடைகளில் இராணுவத் தரவரிசைச் சின்னங்களைத் தைத்தனர். தாக்குதலில் பாத்திஸ்டா படைகளுக்கு இரையான போராளிகளுக்குக் கடைசி உணவை சமைத்துப் படைத்தது மெல்பாவும் ஹைடியும்தான்.

தாக்குதல் முறியடிக்கப்பட்ட போது தங்கள் தோழர்களுக்கு மருத்துவ உதவி வழங்க அருகிலேயே காத்திருந்த மெல்பாவும், ஹைடியும் கைது செய்யப்பட்டு ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிடல் காஸ்ட்ரோ தாக்குதலுக்குத் தலைமை வகித்ததால் பாத்திஸ்டா அரசு அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மெல்பா பத்தாண்டுகளுக்கு மேலாக சட்டப் பணியில் ஈடுபட்டிருந்த போதும் மன்கடா விசாரணையின் போது, தனக்காக வாதிட வேண்டாம் என்றே முடிவு செய்தார், 1953 மன்கடா போராளிகளில் ஒருவராக, தனது தோழர்கள் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் ஆளானதற்கு அவர் சாட்சியளித்தார். அவர்களின் விசாரணையின் போது, ஏபெல், சண்டமரியா, மற்றத் தோழர்கள் கொல்லப்பட்டதை மெல்பா கண்டித்தார், மேலும் புரட்சி நடவடிக்கையின் போது ஃபிடல் இறந்ததாகக் கூறப்பட்ட்தையும் மறுத்தார். மெல்பாவுக்காக ஜார்ஜ் பக்லியேரி கார்டெரோ என்ற வழக்கறிஞர் வாதிட்டார். ஆண் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்னரே, மெல்பாவும் ஹைடியும் 5 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். ஃபிடல் காஸ்ட்ரோவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற உரையை ஹைடியுடன் சேர்ந்து மெல்பா தொகுத்து ஒழுங்கமைத்து வெளியிட்டார். அது கியூபா முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

சிறையிலிருந்து வெளியேறியபின் மெல்பா ஒரு வானொலி ஒலிபரப்பில் "சுதந்திரத்திற்கான புனிதமான அன்பினால், அதன் கொள்கைகளுக்காக நாங்கள் இறக்கத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் மெல்பாவும், ஹைடியும் ஃபிடல் மற்றும் அவரது தோழர்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட தன் தோழர்களை விடுவிக்கக் கோரி மெல்பாவும், ஹைடியும் ஆதரவுப் பேரணிகளை ஒழுங்கு செய்து ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கினர். 1954 ஜூலை 26 அன்று, மெல்பா, ஹைடியின் தலைமையில் கொலன் கல்லறையில் நடந்த ஆர்ப்பாட்டம் சர்வாதிகாரத்தின் காவல் படைகளால் தாக்கப்பட்டது.

சிறையில் இருந்து ஃபிடல் அடிக்கடி மெல்பாவுடன் கடிதத் தொடர்பு கொண்டார், இயக்கத்திற்கான வழிமுறைகளை வழங்கினார். 1954இல் ஃபிடல் காஸ்ட்ரோ சிறையிலிருந்த போது துணிச்சல் நிறைந்த மெல்பாவுக்கு எழுதிய கடித்தில் இவ்வாறு கூறியுள்ளார்: “தேவையற்ற எதிரிகளை உருவாக்க வேண்டாம், எல்லாக் கரப்பான் பூச்சிகளையும் ஒன்றாக நசுக்கப் போதுமான நேரம் பின்னர் கிடைக்கும்."
1955 மே15 அன்று ஃபிடல் காஸ்ட்ரோவும் பிற தோழர்களும் விடுவிக்கப்பட்டனர். மெல்பா தனது சக புரட்சியாளரான ஜீசஸ் மொண்டேனைத் திருமணம் செய்து கொண்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகள் "எல் பினெரோ" என்ற படகில் நடத்திய கூட்டத்தில் மெல்பாவும், ஹைடியும் பங்கேற்றனர், அங்குதான் ஃபிடலின் தலைமையில், புரட்சி இயக்கத்திற்கு ஜூலை 26 என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. ஓரளவு பணத்தைத் திரட்டிக்கொண்டு மெல்பா மெக்ஸிகோவுக்குச் சென்று அங்கு மற்றப் போராளிகளுடன் இயக்க வேலைகளைத் தொடர்ந்தார். நிதி உதவியுடன் மெல்பாவின் வருகை அவர்களின் பொருளாதாரத் துயரைத் தணித்தது.

பாத்திஸ்டாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட கியூபாவின் முன்னாள் அதிபர் கார்லோஸ் பிரியோ சோகாரெஸுக்கு பாத்திஸ்டா எதிர்ப்பாளர்கள் தரும் ஆதரவைத் திரும்பப் பெறச் செய்வதே மெல்பாவின் உடனடி வேலையாக இருந்தது. 1955 ஜூலையில், மெல்பா மெக்ஸிகோவில் கூடியிருந்த மற்ற தலைவர்களான ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஜீசஸ் மொன்டேன் மற்றும் இதர போராளிகளுடன் இணைந்து கெரில்லா இராணுவப்படையைக் கட்டமைத்து கியூப புரட்சியை தொடர்வதற்கான திட்டங்களைத் தீட்டினர். அவர்கள் கிரான்மா என்ற சிறிய படகை வாங்கினர், அதில் கியூபாவிற்கு சென்று புரட்சியின் இரண்டாம் கட்டமாக சியரா மிஸ்ட்ரா மலைகளிலிருந்து எழுச்சி மிக்க போராட்டங்களைத் தொடர உறுதியேற்றனர். மெல்பா கிரன்மாவில் சென்ற போராளிகளை வழியனுப்பினார்.

மெல்பா பின்னர் கியூபாவை அடைந்து போராளிகளுடன் இணைந்தார். தேசிய இயக்குநரகத்தின் உறுப்பினரான மெல்பா கெரில்லா இராணுவத்தின் மறைந்த தளபதி ஜுவான் அல்மேடா போஸ்கின் தலைமையில், மூன்றாம் கிழக்கு முன்னணியில் தீவிரமான கெரில்லாப் போராளியானார்.

புரட்சிக்குப் பின்:

melbacubaa 350புரட்சி அரசின் உருவாக்கத்திலும், நிர்வாகத்திலும் மெல்பா முக்கிய பொறுப்பேற்றார். மெல்பா கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். 1986இலிருந்து கட்சியின் 3ஆவது பேராயத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினரானார். 1960களின் முற்பகுதியில் அவர் கியூபாவில் பெண்களுக்கான சிறைகளுக்குப் பொறுப்பேற்று சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மெல்பா தேசிய மக்கள் அதிகார சபையில் 1976 முதல்1986 வரையும், பிறகு 1993 முதல் 2014 வரையும் ஆக்டூப்ரே 10 டி நகராட்சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

மெல்பா அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும், 1960-1970கள் வரை வியட்நாமுடன் ஒற்றுமைக்கான கியூப செயற்குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். வியட்நாமில் வெற்றிகரமாக போர் முறியடிக்கப்பட்ட பிறகு கம்போடியாவுடன் ஒற்றுமைக்கான கியூப செயற்குழுவின் தலைவராகவும், லாவோஸுடன் ஒற்றுமைக்கான கியூப செயற்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

வளரும் மூன்றாம் உலக நாடுகளில் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், சோசலிசத்தை ஊக்குவிப்பதற்காகவும், கியூபாவில் 1966இல் நிறுவப்பட்ட இயக்கமான ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்களின் ஒற்றுமைக்கான கூட்டமைப்பின் (OSPAAAL) பொதுச்செயலாளராக மெல்பா பணியாற்றினார். உலக அமைதிக்கான மன்றத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். வியட்நாம் மற்றும் கம்போடிய சோசலிசக் குடியரசின் கியூப தூதராகவும், ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் மெல்பா பணியாற்றினார்.

1960களில் மெல்பாவின் சர்வதேசியம் அவரை லாவோஸ் மலைகளுக்கு அழைத்துச் சென்றது. அங்கு லாவோஸ் மக்களுடன் அவர் குகைகளில் வாழ்ந்துள்ளார். மெல்பா திறந்த மனதோடு, உணர்திறன் மிக்கவராகப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க முயன்றார். வியட்நாமியர்கள் மெல்பாவை அம்மா என்றே அழைத்தனர்.

1975ஆம் ஆண்டில் வியட்நாமிய வெற்றியைத் தொடர்ந்து, மெல்பா ஏற்படுத்திய ஒற்றுமைக்கான செயற்குழு கலைக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிய நாட்டுடனும் நட்புறறை ஏற்படுத்தக் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன, அதே நேரத்தில் மெல்பா, ஆப்பிரிக்க மக்களுடன் ஒற்றுமைக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் தனது பணியைத் தொடர்ந்தார். ஏகாதிபத்தியப் போர்களால் துயருற்ற கொரியா, சிரியா, அல்ஜீரியா, லெபனான் மற்றும் பிற நாடுகளுக்கும் ஆதரவு அளிக்கும் திட்டமாக அக்கூட்டமைப்பு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.

பல்வேறு தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கலைஞர்களை இந்த அமைப்புகளில் பங்களிக்குமாறு மெல்பா ஒருங்கிணைத்துள்ளார். கியூபத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வியட்நாமிய மற்றும் லாவோஸ் மக்களைப் பற்றி அறிந்திருப்பதையும், அவர்களைப் பற்றி அக்கறையோடு பேசுகிறார்கள் என்பதையும், கியூபா மூலம் சர்வதேச நிகழ்வுகளில் வியட்நாம்/லாவோஸ் மக்களின் குரல் கேட்கப்படுவதையும் மெல்பா உறுதி செய்தார் .இவ்வாறு உலகளாவிய ஒற்றுமையை ஏற்படுத்த மிகப்பெரிய மக்கள் இயக்கங்களைக் கட்டமைப்பதில் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் மெல்பா என அவருடன் பணி புரிந்த மிர்தா முனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கியூபப் புரட்சியின் ஒவ்வொரு தருணத்திலும் முக்கியப் பங்கேற்று, மிகச் சிறந்த வீராங்கணையாகத் தன் வாழ்வை அர்ப்பணித்த மெல்பா ஹெர்னாண்டஸ் கியூபப் புரட்சியின் நாயகியாகப் போற்றப்படுகிறார். ஹவானா பல்கலைக்கழகம் சர்வதேச உறவுகளுக்கான முனைவர் பட்டம் அளித்து மெல்பா ஹெர்னாண்டஸைச் சிறப்பித்தது. 1997ஆம் ஆண்டில், கியூபாவின் நீண்டகால நட்பு நாடான லிபியாவின் அதிபர் மும்மர் கடாபி, மெல்பா ஹெர்ணாண்டஸுக்கு மனித உரிமை விருது வழங்கிச் சிறப்பித்தார்.

எளிமை மிக்க மெல்பா தோழர் ரவுல் காஸ்ட்ரோவை தன் உடன்பிறவாத் தம்பியாகக் கருதி அன்பு செலுத்தினார். "கியூப மக்களைப் பொறுத்த வரை, மெல்பா புரட்சிகரச் செயல்முறையின் மிகவும் புகழ்பெற்ற, அன்பான போராளிகளில் ஒருவர், கியூபப் பெண்ணின் நித்திய உதாரணம்" என்று கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .மெல்பாவின் கணவர் ஜீசஸ் மொண்டேன் 1999இல் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். 2014 மார்ச் 9ஆம் தேதி மெல்பா 92 வயதில் நீரிழிவு நோயால் இயற்கை எய்தினார். அவரது விருப்பப் படியே, அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாண்டியாகோவில் மன்கடா போராளிகள் அடக்கம் செய்யப்பட்ட புனித இபிகேனியா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வியட்நாம்-கியூப நட்புறவிற்கான கூட்டமைப்பின் தலைவரும், தேசியச் சட்டமன்றத்தின் துணைத் தலைவியுமான நுயென் தி கிம் நாகன் வியட்நாமின் சிறந்த நண்பரான மெல்பா ஹெர்னாண்டஸின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மெல்பாவின் மரணம் வியட்நாமுக்கும் கியூபாவிற்கும் பேரிழப்பு. வியட்நாமிய மக்கள் மெல்பாவின் அன்பையும், வியட்நாமை ஆதரிக்கும் சர்வதேச இயக்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹனோயில் உள்ள கியூபத் தூதரகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக் குழு உறுப்பினர் லு ஹாங் அன் தலைமையில் மெல்பாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வியட்நாமிய மக்களின் சார்பில் மன்கடா நாயகியின் இழப்பிற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த அவர், தலைவர் ஹோ சி மினுக்கும் வியட்நாமிய தேசத்திற்கும் மெல்பா நெருங்கிய நண்பராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதியையும் மனித நேயத்தையும் தன்னிரு கண்களாய்க் கொண்டு சர்வதேசியம் காத்த புரட்சியாளர் மெல்பா ஹெர்ணாண்டஸை நம் செயல்பாடுகளால் என்றென்றும் போற்றிடுவோம்.