அண்மையில் நவம்பர் 15 ஆம் தேதி அன்று இந்திய ஒன்றிய அரசு “பழங்குடி கௌரவ தினம்” என்று அந்த நாளை அனுசரிக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதோடு, தானும் அந்த நாளைக் கொண்டாடியது. பழங்குடியினரின் கௌரவ தினம் என்று பெயரிட்டது சரி. ஆனால், பழங்குடியினரைக் கௌரவமாக இந்த நாடு கருதுகிறதா? அவர்களுக்கான சமத்துவத்தை அளிக்கிறதா என்றால், அவர்களை மனிதர்களாகவே கருதாமல் பாரபட்சமாகவே நடத்தியது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.Denotified Tribesசீர்மரபினர் என்று சொல்லப்படும் சொல்லுக்குப் பின்னால் மிகப்பெரும் காலனிய அரசியல் உள்ளது. சொந்த மண்ணில் அந்நியராக்கப்படுதல், வந்தேறிகள் ஆதிக்கத்தின் கோரமுகம், தொல்குடிகளுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயம், அவல நிலைக்குத் தள்ளப்பட்ட வாழ்க்கை, இரண்டாம் தரக் குடிமக்களாகச் சட்டத்தின் அடிப்படையிலேயே அவர்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கை ஆகியவை அவர்களின் வரலாறாக இருக்கிறது.

ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய வந்தபோது, தங்கள் மண்ணில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த மக்கள், வனங்களைத் தமது குடியிருப்பாகவும் வனவிலங்குகளைத் தமக்குள் ஒருவராகவும் கருதி வாழ்ந்தனர். இம்மக்கள் பிரிவினர் நாகரிகமான வாழ்க்கை என்ற பெயரில் அரசு அதிகாரம், ஆள்பவர்களின் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு வாழ்பவர்களிடமிருந்து விலகியே வாழ்ந்தனர். தமது இயற்கை வளம் தமக்கானது என்று போராடும் இம்மக்களை இந்நாட்டின் தொல்குடிகளின் இயற்கையான கோரிக்கைக்கான போராட்டம் என்று பார்க்காமல், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து விலங்குகளைப் போல் அடிமைப்படுத்தித் தளையிட்டுத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளுவதோடு, பல்வேறு மக்கள் குழுக்களைக் குற்றம் இழைப்பவர்களாக முத்திரை குத்தி அடையாளம் காட்டி, மிக மோசமான வன்முறைக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்துகிறது அதிகார வர்க்கம்.

தம்முடைய வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் உள்ளூர் அதிகார அமைப்பின் துணையோடு குறிப்பிட்ட மக்கள் இனக்குழுக்களை மனிதத்தன்மையற்ற வகையில் கையாளுவதற்காக ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலில் கொண்டு வந்த சட்டம்தான் 'தக்கீஸ் சட்டம்'. 1837 முதல் 1848 வரையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து நடைமுறையில், போராடும் மக்கள் பிரிவினரைத் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் வழிப்பறிக்காரர்களாகவும் உருவமைத்து, அதற்கான சட்ட அங்கீகாரம் கொடுத்ததுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் முன்னெடுப்பாக இருந்தது.

'தக்' (Thug) என்றும், 'தக்கீஸ்' என்றும் வரையறுக்கும் ஒரு நபர் பொதுவாகப் பிறருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய குற்றச்செயலைச் செய்யக்கூடிய போக்கிரி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இந்த மக்கள் பிரிவினர் இளைஞர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரைமுறையற்ற சுரண்டலுக்கு எதிராகத் தங்கள் நாட்டின் வளங்களைக் கொண்டு செல்லும் அறிவிக்கப்படாத திருடர்களாகப் பார்க்கப்பட்டனர். பாரம்பரியமாகத் தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களோடு கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளை, அவர்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய நிலக்கிழார்களை அல்லது பெரும் பணக்காரர்களை அச்சுறுத்தி, அவர்களின் சொத்தை, பணத்தைக் கொள்ளையடிப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டு, அவர்களைத் தடைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சட்டம்.

சொந்த நாட்டில் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் மிகப்பெரிய மக்கள் பிரிவினரை அடக்கி ஆளுவதற்காகப் போடப்பட்ட சட்டம், 1871ஆம் ஆண்டுக் குற்றப் பரம்பரையினர் சட்டம் (Criminal Tribes Act) என இன்னும் விரிவாக்கப்பட்டது. இச்சட்டம், குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை, இனக்குழுக்களை அல்லது சாதிகளை ஒட்டுமொத்தமாக அவர்கள் பிறக்கும்போதே குற்றவாளிகள் என்கிற முத்திரை குத்தியது. இச்சட்டத்தின் நோக்கம், அதை உருவாக்க வேண்டிய தேவை ஆகியவற்றைப் பற்றிய ஆவணங்களைப் பார்த்தால் வில்லியம் ஹென்றி ஸ்லீமேன் (William Henry Sleeman) என்பவர்தான் இச்சட்டத்தை இயற்றவும், இதற்கு முன்னால் அடியெடுத்துக் கொடுத்த தக்கீஸ் சட்டத்தைக் கொண்டு வருவதற்கும், 1835-இல் தக்கீஸ் துறை என இதன் கீழ் கொண்டுவரப்பட்ட மக்களைப் பதிவு செய்யவும் கண்காணிக்கவும், அவர்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் காரணமாக இருந்தார்.

எனவே, குற்றப்பரம்பரையினர் சட்டத்தில், குற்றப் பரம்பரையைச் சார்ந்தவர் எனக் கூறப்பட்டவர் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆகியவற்றுத் தமது வாழ்வியலாகக் கொண்டவர்கள் என்றும், இப்பணிகளைத் தம்முடைய சடங்காகவும் மதமாகவும் போற்றுபவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் காளி என்கிற தெய்வத்தை வணங்குபவர்கள் என்றும், சுருக்கைப் பயன்படுத்தி எதிராளிகளைக் கொல்லக்கூடியவர்கள் என்றும், இவர்கள் சாதாரண மக்கள் பிரிவினராக இல்லாமல் தனித்து வாழும் நெறியற்ற ஒரு கூட்டத்தினர் என்றும், வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வாழும் குழுவினர்கள் என்றும், இயல்பிலேயே குற்றம் செய்வதைத் தொழிலாகவும் மதமாகவும் கொண்டவர்கள் என்றும், தமக்குத் தொழில் இல்லாத காலத்தில் குறுநில மன்னர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் என்றும் கிழக்கிந்தியக் கம்பெனி பதிவு செய்திருந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் இப்படி ஒரு சமூகம் இருப்பதாகவோ, இவர்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்ததாகவோ எவ்விதக் கருத்தும் நிலவவில்லை என்பதையும், வரலாற்றுப் பூர்வமான ஒரு கருத்தைத் தற்போதைய இந்திய ஒன்றிய அரசும் ஏற்றுக் கொள்கிறது (Dept of Denotified Tribes, Government of India).

1871ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றப்பரம்பரையினர் சட்டம் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1924ஆம் ஆண்டு “குற்றப் பரம்பரைச் சட்டம்” என்று ஏறக்குறைய இந்தியா முழுவதுமாக நடைமுறைக்கு வரும்படியாக மாற்றப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் இச்சட்டம் 1911-இல் இருந்து நடைமுறைக்கு வந்தது. அப்போது, இந்தச் சட்டத்திற்குக் கீழ் கொண்டுவரப்படுகிற மக்கள் பிரிவினர், செட்டில்மென்ட் (Settlement) பகுதிகளாகத் தனித்தனியாகத் தங்க வைக்கப்ப்பட்டனர். அவர்கள் தங்கள் கைவிரல் ரேகையை அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்வதோடு, எப்பொழுது எந்த ஊருக்குச் சென்றாலும் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றும், வந்த பின்னால் மீண்டும் ஒருமுறை கையொப்பம், கைரேகை பதிய வைக்க வேண்டும் என்றும் இச்சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராகவும், வாழ்வுரிமைக்கு எதிராகவும், தாங்கள் விரும்பிய தொழில் செய்யும் உரிமைக்கு எதிராகவும் பல பிரிவுகள் இருந்தன.

மேற்கூறியவாறு கைரேகை பதிவு செய்த குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளையும் கூடப் பதிவு செய்யும் வழக்கம் மிகக் கொடூரமானதாக இருந்தது. அடிப்படையில் பிறப்பிலேயே அவர்கள் குற்றம் செய்பவர்கள் என்பதுதான் சட்டத்தின் பார்வையாக இருந்தது. எனவேதான், இந்தக் குழந்தைகளும் சீர்திருத்தப் பள்ளிகளிலேயே சேர்க்கப்பட்டனர். சாதி இழுக்கு போல, பிறப்பிலேயே குற்றவாளி எனும் இழுக்கு அவர்களை மனித மாண்புகள் அற்ற வாழ்க்கையை வாழும்படி தள்ளியது. இதன் மூலம் இச்சட்டம் இந்தியாவெங்கும் ஏறக்குறைய 10 கோடி மக்களைக் குற்றவாளிகளாக ஆக்கியது. இச்சட்டத்தின் படி தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எனப் பல்வேறு படிநிலையில் இருந்த மக்களைக் குற்றப் பரம்பரையினராக ஆக்கியது இச்சட்டம்.

இச்சட்டத்தின் அடிப்படைக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட அரசும், அதிகார வர்க்கமும், நீதித்துறையும், குறிப்பாகக் காவல்துறையும் பல அநீதியான முன்முடிவுகளோடு இவர்களைக் கையாண்டன.

1947-இன் அரசியல் சுதந்திரம்

நாடு சுதந்திரம் அடைந்த பின், தன்னுடைய மக்களில் ஏறக்குறைய ஒரு கோடி பேருக்கும் மேலானவர்களைக் குற்றப் பரம்பரையில் பிறந்தவர்களாக மனித மாண்புகள் அற்றுச் சமத்துவமற்ற நிலையில் வைத்திருந்த இச்சட்டம் விவாதத்திற்கு உள்ளானது. 1952-இல் 'தொடர் குற்றவாளிகள் சட்டம்' (Habitual Offenders Act) என மாற்றியமைக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பழைய சட்டத்தின் கீழிருந்து அறிவிப்பு நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள்தான் டி.என்.டி (DNT - Denotified Tribes) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.

தொடர் குற்றம் இழைப்பவர்கள் சட்டம் 1952

ஆங்கிலேயக் காலனி அரசால் அறிவிக்கப்பட்ட குற்றப்பரம்பரையினரைச் சேர்ந்த மக்கள் அறிவிப்பு நீக்கம் செய்யப்பட்ட பின்னால், சுதந்திர மனிதர்களாக உலா வர முடியவில்லை. அதே காவல்துறை, அதே வர்க்கச் சார்புடன் கூடிய அதிகார வர்க்கம், மனித உரிமைகளைப் பற்றிய பார்வை சிறிதளவும் இல்லாத அரசியல் தலைமை, சாதி உணர்வுகள் மேலோங்கி இருந்த கட்சியின் தலைமையில் இருந்த ஒன்றிய அரசு ஆகியவை இச்சட்டத்தில் புரட்சிகரமான எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை.

இச்சட்டம், சில குறிப்பிட்ட மக்களைக் குற்றம் செய்யப் பழகியவர்கள், அதைத் தொழிலாகக் கொண்டவர்கள், அவர்கள் பிறக்கும்போதே இந்தக் குற்றம் செய்யும் தன்மையைத் தங்கள் மரபணுவில் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற தவறான கருத்துக்களை முன்முடிவுகளாக 1952-க்குப் பின்னாலும் தொடர்ந்தன. இதன் காரணமாக, இவர்களுடைய சுதந்திரத்திற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, தொழில் செய்யும் உரிமை ஆகியவை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிச் சமூக ஒதுக்குதலுக்கு ஆளாகியவர்களாக இருந்தனர்.

தேசியப் பட்டியல் இன ஆணையத்தின் உண்மை அறியும் அறிக்கை

2014 ஆம் ஆண்டு, தேசியப் பட்டியல் இன ஆணையம் 'குறவன்' எனும் பட்டியல் இன மக்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்களைக் குறித்து ஆய்வு செய்ய, கேப்டன் துரை என்பவருடைய தொடர்ச்சியான கோரிக்கை மனுக்களைக் கருத்தில் கொண்டு ஓர் உண்மை அறியும் குழுவை அமைத்தது. அக்குழுவில் தேசிய ஆணையத்தின் சார்பாகச் சில அதிகாரிகளும், மூன்றாம் தரப்பு உறுப்பினராக நானும் கள ஆய்வு செய்தோம். அதில் 5 மாவட்டங்கள், 10 காவல் நிலையங்கள், சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களின் மீதான வழக்குகள் என ஆய்வு செய்தபோது, கீழ்க்கண்ட உண்மைகள் ஆவணப்பூர்வமாகக் கண்டறியப்பட்டு, தேசியப் பட்டியல் இன ஆணையத்தின் முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டது:

  • குறவன் இன மக்களைக் காவல்துறை எவ்வித அடிப்படைச் சான்றும் இன்றிக் குற்றவாளிகளாக நடத்தியிருந்தது.
  • ஒவ்வொரு குறவன் இன ஆணின் மீதும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக 10 முதல் 30 வழக்குகள் வரை பதியப்பட்டிருந்தன.
  • பலர் கடந்த 10 / 15 வருடங்களாக நீதிமன்றங்களுக்கும் சிறைக்கும் சென்று வருவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
  • இளம் சிறார்களைப் பெற்றோர் காவல் நிலையங்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து, வேறு ஊர்களில் ஒளிந்து வாழ வைக்கிறார்கள்.
  • பெரும்பான்மையான திருட்டு வழக்குகளில், இந்த அறிவிப்பு நீக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த நபர்களைப் பல காவல் நிலையங்கள் பங்கு போட்டுக் கொண்டு, உண்மையான குற்றவாளி யார் எனத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இவர்கள் மீது வழக்குகள் போடுவதை வழக்கமாக்கி வைத்திருந்தன.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில், ஆயுத பூஜை அன்று காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அன்று மட்டும் குறவன் இன மக்களை லாக்கப்பில் உட்கார வைக்க வேண்டும் என்று சட்டத்திற்குப் புறம்பாக லாக்கப்பில் வைத்த சம்பவங்களும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
  • சித்ரவதை மற்றும் அச்சுறுத்தல் மூலமாகக் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, ஒரு நபர் அந்த ஊரில் அந்த நாளில் இல்லாவிட்டாலும்கூட, அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்த உண்மைகள் கண்டறியப்பட்டன.
  • இவ்வாறு பல போராட்டங்களுக்குப் பின்னால் படித்து முன்னேற்றம் காண்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறுத்து, உறவுகளையும் சொந்த ஊரையும் மறுதலித்து வாழ்வதை விரும்புகின்றனர்.

மேற்கண்ட உண்மைகள்தான் சீர்மரபினரின் வாழ்க்கை. இப்படி ஒரு சூழ்நிலை சுதந்திரத்திற்கு முன்னால் இருந்தபோதுதான், கள்ளர் மற்றும் மறவர் உள்ளிட்ட பல சமூகங்களைக் குற்றப்பரம்பரையினராக அறிவிப்புச் செய்ததை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தினார். அதன் காரணமாக, குறிப்பாகக் கள்ளர் மற்றும் மறவர் என்கிற சமூகங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டு, பின்னாளில் முக்குலத்தோர் என அறியப்பட்டு, அரசியல் ரீதியாகத் தங்கள் குரல் ஒலிக்கும் வகையிலும், பொருளாதார ரீதியாகப் பெரும் முன்னேற்றம் காணும் வகையிலும் உயர்ந்தனர்.

ஆனால், பிற குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்ட சமூகங்கள், அரசியல் ரீதியான கவனம் பெறும் வகையில் தாங்களோ தங்கள் தலைவர்களோ எவரும் போராடாத காரணத்தால், ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுக்க வாய்ப்பற்ற பழங்குடித் தொல்குடிச் சமூகங்கள் இன்றளவும் ஒதுக்குதலுக்கும், குற்றப் பணிகளுக்கும், கொடுமையான வாழ்க்கைக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

பிர்சா முண்டா: தொல்குடிகளின் தலைவன்

ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துத் தங்கள் ஆயுதங்களைத் தரித்து, கவண்கல், கம்பு மற்றும் வில் அம்பு ஆகியவற்றைக் கொண்டு பெருவலிமை கொண்ட ஆதிக்க அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்கள் பலர். காலனி அரசின் பார்வையில் தொல்குடிகளின் தலைவனாக, தங்களின் வனம், நிலம் மற்றும் நீர் உரிமைகளுக்காகப் போராடிய பிர்சா முண்டாவும் அவரது தந்தையும் அவருடைய உறவுகளும் குற்றப்பரம்பரையினர் என்றும், சீர்மரபினர் என்றும் சொல்லப்படும் சமூகங்கள் இந்தியாவில் சுமார் 11 கோடி பேர் இருக்கிறார்கள்.

2000 ஆவது ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம், "இந்தத் தொடர் குற்றம் இழைப்பவர்கள் சட்டம் 1952, பல வகைகளில் குற்றவியல் சட்டத்தினுடைய அடிப்படைப் பாதுகாப்பை வழங்கவில்லை; மேலும் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்போடப்படும், குற்றம் சாட்டப்படும் நபர்களுக்குச் சாதகமாக இது பயன்படுத்தப்படுவதில்லை; சந்தேகத்தின் காரணமாக அடிப்படை இல்லாமல் குற்றவாளிகளாக நடத்தப்படுவதை" சுட்டிக்காட்டி இச்சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து 2007-இல் ஐநாவின் நிறப்பாகுபாடுகளுக்கு எதிரான அமைப்பு இந்தச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என இந்தியாவுக்குப் பரிந்துரை செய்தது.

தற்போது 2025 மார்ச் மாதம், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 14 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகக் கூறி, அறிவிப்பு நீக்கப்பட்ட மக்கள் சமூகங்களை, வரலாற்று ரீதியாகப் பாதிப்புக்குள்ளான அம்மக்களை மீண்டும் குறிவைப்பதாகக் கூறி, அச்சட்டத்தை நீக்குவது குறித்து அப்போதைய தலைமை நீதிபதி மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டபோது, குஜராத் போன்ற மாநிலங்கள் இவை முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அவற்றின் தேவை இன்னும் மாநிலத்தில் இருக்கிறது என்றும் வாதிட்டன. பல மாநிலங்கள் அச்சட்டம் வழக்கொழிந்து போனதாகவும் அது தற்போது தேவையற்றது எனவும் வாதிட்டன. தமிழ்நாட்டில் இன்னும் இச்சட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2014 தேசியப் பழங்குடிப் பட்டியல் இன மக்கள் ஆணையம் அமைத்த உண்மை அறியும் குழு கண்டறிந்த உண்மைகளும் அப்படித்தான் உள்ளன.

சீரற்ற வாழ்க்கையும், அரசால் சீரழிக்கப்படுகின்ற வாழ்க்கையையும் கொண்ட மக்களைப் பார்த்துச் 'சீர்மரபினர்' என்று சொல்வது ஒரு நகைமுரண்.

- அஜிதா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.