உழைப்பாளர் தினம் (மே தினம்) என்பது உழைப்பாளர்களின் பாதுகாப்புச் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது. ஆனால் இவ்வாண்டு கடைப்பிடிக்கப்பட்ட தொழிலாளர் தினமோ முந்தையவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கின்றது. உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போக, அவர்களுடைய வாழ்வை நிலைநிறுத்திக் கொள்வதற்கே கூடுதல் அக்கறையைச் செலுத்தும்படி இந்த ஆண்டின் உழைப்பாளர் தினம் வலியுறுத்துகின்றது. கொரோனாத் தொற்றினால் ஏற்பட்டுள்ள நாடடங்கைச் சமாளிக்க வழியில்லாமல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்தக் கிராமத்திற்குச் செல்ல, 200 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்து சென்று கொண்டிருந்தபோது, பசியினால் வாடி வதங்கி வற்றிப்போன அவர்கள், பசி மயக்கத்தில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்துறங்க, அவர்களின் மீது ஒரு சரக்கு ரயில் ஏறியதால் அவர்களில் 17 பேர் காவு வாங்கப்பட்ட நிகழ்வு, இதயத்தை உறைய வைக்கக்கூடிய நிகழ்வு என்பதோடு, இதுதான் இந்தியத் தொழிலாளர்களின் தற்போதைய அவலநிலை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.

migrant workers going homeகடந்த ஏழு வாரங்களில் அமெரிக்காவில் மட்டும் 33 மில்லியன் மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலக அளவில் கடுமையான நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டு வரும் சூழலில், இது மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள், பசியின் கொடுமை தாங்க முடியாமல் தங்கள் சொந்த ஊர்விட்டு வேறு பல இடங்களுக்கு வயிற்றுப் பிழைப்பிற்காக புலம்பெயர் தொழிலாளர்களாக நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல கொரோனாத் தொற்று நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கும் முடக்கத்தினால் மேலும் நலிவடைந்துபோன புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இறுதிக் காலத்தையாவது தங்கள் சொந்த மண்ணில் கழிக்கலாம் என்றெண்ணி, அரசுகளின் உதவிகள் எதுவும் கிட்டாத நிலையில், சொந்தக் கால்களில் நடந்தாவது தங்கள் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கொரோனா கால நாடடங்கினால் நாடுமுழுவதும் நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; அவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாராத் தொழிலாளர்கள். அச்சம் தரும் இந்த எண்ணிக்கை, உள்ளபடியே மிகப் பெரியது என்ற பொழுதிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் உண்மையான வேலையின்மையைக் கண்டறிவதும் கணக்கிடுவதும் மிக சவாலான ஒன்றுதான் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

பொறுத்துக் கொள்ளவே இயலாத வறுமை நிலைக்கு தொழிலாளர்கள் ஆளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பெற்று வந்த அற்ப சொற்ப வருமானத்தையும் இந்தக் கொரோனாத் தொற்றுநோய் பரவலினால் இழந்திருப்பதோடு, கூடுதலாக வயிற்றுப் பசியினையும் எதிர்கொள்ள வேண்டிய அவல நிலை. வயிற்றுக்கு சிறிதும் ஈயாமல், எஞ்சியுள்ள ஒரு சில உடைமைகளைத் தோளிலும், மார்பிலும் தூக்கிக் கொண்டு நூறு, ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுகளை தத்தம் குழந்தைகளோடும் பெண்களோடும் கடந்து, தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் அவலமான சோகக்காட்சியை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. ஆனால், இவற்றைவிடக் கொடுமையான நிகழ்வு கருநாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஆங்கே கொத்தடிமைகளைப் போல உள்ள தொழிலாளர்கள், அம்மாநிலத்தை விட்டு வெளியேறி தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வதை அம்மாநில அரசு தடுத்திருக்கின்றது.

இந்தக் கொரோனா தொற்றுநோயானது இந்தியாவில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் உண்மையான அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது. முடிவின்றி நீளும் இந்தத் தொழிலாளர்களின் அவலநிலை, கடந்த 70 ஆண்டு கால விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் எப்படியெல்லாம் இருந்து வந்திருக்கின்றது என்று நம்மை எல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது.

இந்தியா விடுதலைப் பெற்ற 1947 ஆம் ஆண்டு காலத்தில் இருந்ததைப்போல நாட்டின் தற்போதைய நிலையில்லை என்பது ஓரளவுக்கு உண்மைதான். கல்வியும் சுகாதாரமும் பெருகி இருக்கின்றது. குழந்தை மரணங்கள் குறைக்கப்பட்டு சராசரி வாழ்நாள் அதிகரித்திருக்கின்றது. பெரும்பாலான ஏழை மக்களின் காலில் செருப்பு இருக்கின்றது, அவர்களது கையில் சொந்தமாகக் கைபேசி இருக்கின்றது.

1950 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியாவின் மொத்த உற்பத்தித் திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனானது, 32.2 மடங்கு அதிகரித்து இருப்பதும் தனிநபர் வருமானம் (per capita) அன்றைய நாளையைவிட 8.2 மடங்கு உயர்ந்து இருப்பதனாலும் இத்தகைய பொருளாதார நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், புல்லுக்கும் ஆங்கே பசியுமாம் என்பதைப் போல, தின்று கொழுத்தவன் மென்று வீசிய எச்சில் எலும்புகளைத் தின்று வளர்ந்த நாயின் நிலையைப் போல்தான் இந்த ஏழைகளின் வாழ்வில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்தச் சிறிய அளவிலான முன்னேற்றம் என்பதும். உண்மையில் வளர்ந்து வரும் இந்திய நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தித் திறனால் இலாபம் அடைந்தவர்கள், அடைபவர்கள் ஒரு சில மேல்தட்டு வருக்கத்தினரே.

இரக்கமின்றி அவமதிக்கப்படும் தொழிலாளர்கள்:

ஒரு மக்களாட்சி குடியரசு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்மானத்தோடு வாழ்வதற்கு உரிமை உண்டு என்று அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடியுரிமைகளெல்லாம் என்னவாயிற்று? இந்தக் கேள்வியை எழுப்பும்போதெல்லாம் ஆளும் அரசுகள் அதனைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதோடு மட்டுமல்லாது, தொழிலாளர்களுக்குப் போதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது நிலவி வரும் மிக மோசமான ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார அமைப்பு முறையைத் தொடர்ந்து வளர்த்துச் செல்ல விரும்பும் இவர்கள், தொழிலாளர்களின் இந்த மீச்சிறிய முன்னேற்றத்தினை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். தற்போதைய ஆளும் அரசிற்கோ பொருளாதார வளர்ச்சியில் சமத்துவம் என்பது ஒரு பொருட்டேயில்லை.

 ஆளும் உயர் வருக்கத்தினர், தொழிலாளர்களின் வறுமை நிலையையும் வாழ்வியலையும் தங்களது வளர்ச்சிக்கும் ஈட்டத்திற்க்கும் (இலாபத்திற்கும்) சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசோ பெருநிறுவனங்களோ தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கத் தயாராகயில்லை. அரசும் முதலாளித்துவமும் இணைந்து கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை மெல்ல மழுங்கடித்து வருகின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான உழைக்கும் கூலித்தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு உழைப்புக்கேற்ற ஊதியமோ பணிப் பாதுகாப்போ இருப்பதில்லை. இந்தியாவின் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை; அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதுமில்லை; சிக்கிக் கொண்ட பணிச்சூழலை விட்டு வெளியேறுவதற்கும் தற்பொழுது வாய்ப்பில்லாமல் செய்யப்பட்டு வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏனைய பிற தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் சொற்ப ஊதியத் தொகையானது, அவர்களை அழுக்கு மிகுந்த அடைசல் மிகுந்த, நெரிசல் மிகுந்த குடிசைப்பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கிறது. குடிப்பதற்கும் ஏனைய பிற குடிமைத் தேவைகளுக்கும் தேவையான தண்ணீர்கூட வழங்கப்படுவதில்லை. தூய்மையான கழிவறை வசதியின்மையால் நோய்ப்பரவுதல் அவர்களிடையே அதிகரிக்கின்றன. தங்களைச் சுற்றி சாக்கடையோடும் பகுதிகளில் அவர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலும் அவர்தம் குழந்தைகள் பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் வெளியே தான் இருக்கிறார்கள்.

இந்தக் கொரோனா காலத் தொற்றுநோய் நாடடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களுக்கு இருக்கக்கூடிய மிச்ச சொச்ச உரிமைகளையும் அடியோடு நீக்கி பெருமுதலாளிகளுக்கும் பெருவணிகத்திற்கும் ஆதரவாக ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தை தளர்த்தியும் நீர்த்துப் போகச் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தைப் பொருத்தமட்டில் பெருமுதலாளித்துவ மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உறுதிச்சட்டம் முதல் தொழிற்சாலை குளறுபடிகள் சட்டம் உட்பட கிட்டத்தட்ட பதினான்கு வகையானச் சட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் திருத்தியிருக்கின்றது அல்லது அவற்றைக் கைவிட்டிருக்கின்றது. குஜராத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் இதேநிலை காணப்படுகிறது. காரணம் கேட்டால், சரிந்து விழுந்திருக்கக்கூடிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் காரணம் கூறப்படுகிறது.

தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாறுதல்களால் மாநிலத்தை நோக்கி புதிய பொருளாதார முதலீடுகள் பெருகும் என அம்மாநிலத்தின் முதல்வர் கூறுகிறார். இந்தத் தொற்றுநோயினால் ஏற்பட்டிருக்கக்கூடிய நாடடங்குச் சூழலானது, ஏற்கனவே முடங்கிப் போய் இருக்கின்ற பொருளாதாரச் செயல்பாடுகளை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என்பதில் ஏற்பட்டிருக்கக் கூடிய சுணக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் பாதுகாப்பையும் தளர்த்துவதில் ஒவ்வொரு மாநிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு விதிகளை தளர்த்தி கொண்டும் நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கின்றன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வியல் நிலை மேலும் மேலும் மோசமான பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் தொழிலாளர்கள், அமைப்பு சார்ந்த, அமைப்புசாரா என இருவகையான தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள். பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்த இரு பிரிவினைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டத்தின்படி, ஏற்கனவே சில உரிமைகளைப் (அவற்றை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன) பெற்றிருப்பதால் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு அவை தடையாக இருப்பதாக பல ஆளும் அரசுகளும் பெருநிறுவனங்களும் கருதினர். இதனைத் தவிர, சிறு, குறு தொழில் நிறுவனங்களும் தங்கள் பணிமனைகளில் நிரந்தர தொழிலாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களை நியமித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களை அமர்த்தியதற்காக, அந்தந்த தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தொகையில் ஒரு சிறு பகுதியைத்தான் அவர்களின் கீழ் வேலை பார்க்கின்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கி வருகின்றனர். இதனைக் காரணமாகக் காட்டி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கின்ற கூலித்தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குகின்றோம்; ஆனால் அவை அந்தத் தொழிலாளர்களிடம் போய்ச் சேர்வதில்லை என்று கூறி வருகின்றன.

ஒரு கூலித்தொழிலாளி தன்மானத்தோடு வாழ்வதற்கு, உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலை இருக்கும்பொழுது, அவர்கள் பெரும் அற்ப சொற்ப ஊதியமானது அவர்களை மானத்தோடு வாழ அனுமதிக்கவில்லை. இந்நிலையில், குடியிருப்பதற்கு கொடுக்க வேண்டிய வாடகையும் மிக அதிகமாக இருப்பதனால், அந்த அளவிற்கு வாடகையைக் கொடுத்து குடியிருக்க முடியாத வருமானம் இன்மையால், நகர்ப்புறங்களை ஒட்டிய காலி நிலங்களில் குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். நகர்ப்புறங்களோடு ஒட்டிக் கிடக்கின்ற இதுபோன்ற குடிசைப் பகுதிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் காளான்களைப் போல அதிக அளவில் தோன்றியிருப்பதற்கும், அங்கு வாழும் தொழிலாளர்களின் நெரிசல் மிக அதிகமாகக் காணப்படுவதற்கும் இதுவே காரணம். மும்பையை ஒட்டிய தாராவிப் பகுதியை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அமைப்பு சார்ந்துள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் தொழிற்பாதுகாப்பும் ஓரளவிற்கு இருப்பதோடு அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் ஒப்பீட்டளவில் சற்றே அதிகமாக இருந்தாலும், அது அவர்களுடைய குடிமைச் சமூக வாழ்வியலுக்குரிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை.

தொழிலாளர்களின் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் கொரோனா:

SARS CoV-2 எனப்படும் கொரோனா நச்சுக்கிருமியினால் தோற்றுவிக்கப்படும் COVID-19 எனும் தொற்றுநோயானது நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தொற்றுநோய்க்கு எதிராக எந்த மருந்தும், எந்தத் தடுப்பூசியும் இதுவரை இல்லாத நிலையில், நாடடங்குதான் இந்தத் தொற்று நோய் பரவலை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும். ஆனால், நாடடங்கு காலத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனித்திருப்பதும் தங்கள் உடலையும் கைகளையும் முகத்தையும் தூய்மையாக வைத்திருப்பது என்பதும் தவிர்க்க முடியாத நிபந்தனையாக இருக்கும்பொழுது, தாராவி போன்ற அடைசலும் நெரிசலும் மிகுந்த குடிசை வாழ்பகுதிகளில் இவை சாத்தியமில்லை.

தொற்றுநோயிலிருந்து ஒவ்வொரு குடிமகனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவி தூய்மை செய்ய வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் சோப்பும் இல்லாத சூழலில் இது எவ்வாறு சாத்தியமாகும்? ஆக, தங்களைத் தூய்மை செய்து கொள்வதற்கு வேண்டிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில்தான், இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை இதுகாறும் இருந்து வந்திருக்கின்றது என்பதைத்தான் இந்தக் கொரோனா தொற்றுநோய் இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றது.

ஓர் அறைக்குள் ஐந்து முதல் பத்து நபர்கள், வாரக் கணக்கில் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும்? தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது சாத்தியமற்றுப் போகும்பொழுது தொற்றுநோய் பரவல் என்பது மிக வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவி வருகின்றது. தாராவி போன்ற பகுதிகளில் நடப்பது இதுதான். மேலும், தொற்றுநோய் கண்டவர்கள் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் போதிய வருமானம் ஏதுமின்றி தவிக்கின்றனர்; இது அவர்களை மேலும் வாட்டி வதைக்கின்றது. அதோடு மட்டுமல்லாது, வாழ்வியலுக்கு ஏற்ற வருமானம் இல்லாததால் அவர்களுடைய உணவு முறையும் மிக மோசமானதாக இருப்பதால் அவர்களால் சத்துள்ள உணவை உட்கொள்ள முடியவில்லை; ஆதலால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே உள்ளது. நோயெதிர்ப்பு ஆற்றல் மிகக் குறைவாக உள்ளதால் தொற்றுநோயுடன் தொடர்புடைய பல்வேறு நோய்த் தாக்குதலுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுவதால் நோய்த்தொற்றின் தீவிரத் தன்மைக்குள் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

நாடடங்கு உத்தரவு நாட்டில் இயங்கி வந்த பல்வேறு தொழில்களையும் முடக்கியிருப்பதால் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இது, தொழிலாளர்களின் வாழ்க்கை முறை மிக மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை மேலும் உறுதிப்படுத்துகின்றது. தொழிலாளர்களின் வருமானம் மிக மிகக் குறைவு என்பதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சந்திப்பதற்கு உரிய சேமிப்புகள் எதுவுமின்றி பட்டினியில் வாடுகிறார்கள். மற்றவர்கள் உணவு அளித்தாலொழிய அத்தகையத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் பட்டினியால் வாடுவது தவிர வேறு வழியே இல்லை.

எனவே நாடடங்கு உத்தரவு என்பது பொருளாதார வழியில் வலுவாக இருக்கக்கூடிய உயர்தட்டு வகுப்பினருக்கும் நடுத்தர வருக்கத்தினருக்கும் மட்டுமே பொருந்தக்கூடியது. அவர்களுக்கு கீழேயுள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவிற்கும் அரசுகள் நடவடிக்கை எடுத்தாலொழிய அவர்களால் இந்த நாடு அடங்குச் சூழலை எதிர்கொள்ளவே முடியாது. இத்தகைய தொழிலாளர்கள் எங்கெல்லாம் காணப்படுகிறார்களோ அங்கெல்லாம் உடனடியாக அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளும், தொற்றுநோய் சோதனையை இலவசமாகவும் அவர்களுக்கு வேண்டிய உணவு ஏற்பாடுகளையும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களைத் தூய்மை செய்து கொள்வது அடிப்படை அவசியம் ஆதலால் அதற்கு உரிய தண்ணீர் வசதிகளையும் கிருமிநாசினிகளையும் உடனடியாக அரசுகள் வழங்க வேண்டும். மேலும் குடிசைவாழ்ப் பகுதிகள் மிகவும் நெரிசலடைந்து காணப்படுவதால் அதனால் ஏற்படும் தொற்றுநோய் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, அங்கிருக்கும் தொழிலாளர்களை வேறு பல புதிய குடியிருப்புகளுக்கும், பள்ளி, கல்லூரி வளாகங்களுகும் மாற்றப்பட வேண்டும்.

ஆனால், தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு நாடு அடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அடித்தட்டு மக்களுக்கு அதனால் ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகளை நிறைவு செய்து கொள்வதற்கு உரிய எத்தகைய ஏற்பாடுகளையும் போதுமான அளவிற்கு அரசுகள் மேற்கொள்ளவில்லை. மேலும் நாடு அடங்கையும் முழுமையாகச் செயல்படுத்தாமல் ஏனோ தானோவென்று ஒப்புக்காக ஓரளவே செயல்படுத்தியதனால் தொற்றுநோய் பரவல் தொடர்ந்து அதிகரிக்கவே செய்கிறது. நோய்த்தொற்றை கண்டறிவதற்கானச் சோதனைகளை மேலும் மேலும் அதிகப்படுத்துவது மிக மிக இன்றியமையாதது என்பதை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. ஏனென்றால் நம்மை அறியாமலேயே இந்த நோய்த்தொற்று பிறருக்கு பரவுகிறது. தொற்று நோயற்ற மாவட்டங்கள் என்பது இனிவரும் நாட்களில் இருக்கப் போவதில்லை. சில மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது; ஆனால் அவ்வாறு நிகழ்ந்ததற்கு என்னக் காரணம் என்று தெரியவில்லை.

வாழ்வா? வாழ்வாதாரமா?

இலாபம் ஈட்டுவதற்காக இல்லாவிட்டாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன்சுமையையும் நட்டத்தையும் குறைப்பதற்காகவாவது, நாடு அடங்கைத் தளர்த்தி மீண்டும் தொழில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றன. இது வாழ்வா? வாழ்வாதாரமா? என்ற சிக்கலுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது. கூலித் தொழிலாளர்கள் வேலையின்மையினால் பசியும் பட்டினியுமாக இருந்து மடிந்து போவார்கள் என்று இதனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த நோய்த்தொற்று சமூகத் தொற்றாகப் பரவி, அதனால் பெரும்பான்மை மக்களிடம் இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சத்தியை உருவாக்குவது தான் (herd immunity) இந்நோயை எதிர்கொள்வதற்கான வழிமுறை என்றும் இவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தப் பரிசோதனை முயற்சியில் எத்தனை பேர் இறந்து போவார்கள்? ஐக்கிய முடியரசு (UK) நாட்டில் இதேமுறையை கடைபிடித்தபோது ஏராளமான மரணங்கள் நிகந்ததால் இம்முறையைக் கைவிட்டார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் நிகழ்ந்த மிக அதிகமான மரணங்கள் இந்த முறையிலேயே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 3% பேர் இறந்தாலும் கூட எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது அது சில லட்சங்களை தாண்டிச் செல்லும். ஏற்கனவே நம்முடைய சுகாதார கட்டமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும்பொழுது இந்த மரண விகிதம் நம்மை மேலும் பலவீனப்படுத்தும். இந்த முறையை கடைபிடித்தால் அதனால் ஏற்படப்போகும் மரண எண்ணிக்கைக்கும், அவ்வெண்ணிக்கை ஏற்படுத்தப் போகின்ற தாறுமாறான சமூக கிளர்ச்சிக்கும் நாம் தயாராக இருக்கின்றோமா?

தற்பொழுது இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், இந்தக் கொரோனாத் தொற்று இல்லாத காலத்தில் அந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட்டவர்கள் இல்லை. இந்தத் தொற்றுநோய் நெருக்கடி இல்லாத இயல்பான காலங்களில், அந்தத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான கூலியைக் கொடுத்து மிக அதிகமான ஈட்டம் சம்பாதிப்பவர்கள் தான் இன்று அவர்களின் வாழ்வாதாரத்தை பற்றிப் பேசி வருகிறார்கள்.

அடிப்படை கீழ்த்தட்டு உழைப்பாளிகளின் தனிநபர் வருமானம் மிக மிக சொற்பமாக இருக்கும்போதும்கூட, உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட மிகப் பெரிய நான்காவது நாடாக இந்தியா திகழ்வது எப்படி? 

இந்தியா விடுதலை பெற்று, கடந்த 75 ஆண்டுகளில் குறிப்பாக 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதார வளர்ச்சியின் பெரும்பான்மை லாபத்தையெல்லாம் பெருவணிக நிறுவனங்களே அனுபவிக்கின்றன என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகின்றது. பொருளாதார வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்திலிருந்தும் அவர்கள் இலாபம் சம்பாதிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியின் மூலம் நேரடியாக வெள்ளையாக ஈட்டும் லாபம் இல்லாமல், மிகப் பெரும் அளவில் கருப்பு பணமாக இலாபம் ஈட்டுகிறார்கள்.

1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெருந்தொழில் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பொருளாதாரக் கொள்கைகளையும் திட்டங்களையும் வளைத்துக் கொண்டன. முதலாளித்துவத்தின் சந்தைப் பொருளாதாரம் எத்தகையத் தடையுமின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக, உழைப்பாளர்களின் உரிமைகளை நசுக்கி, ஒடுக்கி கொள்ளை முதலாளித்துவத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அரசுகளுக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தற்பொழுது இந்தக் கொரோனாத் தொற்றுநோயை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் நசுக்குவதற்கு இந்தப் பெரும் முதலாளித்துவ அமைப்புகள் நெருக்கடி கொடுக்கின்றன. இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையேயான பொருளாதார வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்குமான அளவில் வேறுபட்டு இருக்கும்போதும்கூட, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 6% மட்டுமே நேரடி வரி வசூலிலிருந்து பெறப்படுகிறது என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கடந்த 75 ஆண்டுகால விடுதலை இந்தியாவின் பொருளாதார மேம்பாடுகளையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உயர்தட்டு மக்களிடமிருந்து நேரடி வரி வசூலிப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களின் மீதும் மறைமுக வரிச்சுமை திணிக்கப்படுகின்றது.

இந்தத் தொற்றுநோய் நாடு அடங்கினால் எத்தனை ஏழைத் தொழிலாளர்கள் மடிந்து போவார்கள் என்பதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத இத்தகைய பெருவணிகங்கள், தங்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஆனால் அதனை நேரடியாகக் காட்டிக்கொள்ளாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ற பெயரில் நாடு அடங்கைத் தளர்த்தி மீண்டும் தொழில்களை முடுக்கிவிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நாடடங்குச் சமயத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி, இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்களைப்பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாத இந்த பெருமுதலாளித்துவ வணிகர்கள் தான், இந்த நாடு அடங்குச் சமயத்திலும்கூட தங்களுடைய இலாபம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக. அரசு தங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும் என அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களின் அடிப்படை வாழ்வியல் என்பது மிகவும் பரிதாபகரமான சூழ்நிலையில் இருந்து வருவதால்தான், நாட்டில் தற்போது பரவி வரும் இந்த கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் சமாளிப்பதிலும் இந்திய அரசிற்கு போதிய ஆற்றல் இருக்கவில்லை என்ற படிப்பினையை நாம் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் வாழ்நிலை மிக மோசமான நிலையில் இருக்கும்போது, அதனை மேலும் நலிவுறச் செய்யும் வகையில் தொழிலாளர் நல சட்டங்களை ஒவ்வொரு மாநில அரசும் திருத்தி, மேலும் நீர்த்துப்போகச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் விளைவாக கொரோனாவை அடுத்து நாடு முழுவதும் பசி, பஞ்சம் என மற்றொரு நோய்த் தொற்று பரவப் போகிறது. ஒரு சில பெரும் பணக்காரர்களின் இலாபவெறிக்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் நாட்டில் மிகப்பெரிய சமூக கிளர்ச்சி ஏற்படவும், இந்தியா அதனை எதிர்கொள்ளும் சூழலும் தலைப்பட்டிருக்கின்றது. ஆனால், தற்பொழுது நம்மை ஆளும் இந்த அரசையும் அதன் கொள்கைகளையும் அடியோடு மாற்றி மாற்றுக் கொள்கைகளையும் அரசையும் தோற்றுவிக்க வேண்டுமானால், அதற்கு நாம் மிகப்பெரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்.

கட்டுரையாளர்: அருண்குமார், சமூகவியல் ஆய்வு நிறுவனத்தில் (Institute of Social Sciences) உள்ள மால்கம் ஆதிசேசையா (Malcolm Adiseshiah ) இருக்கையைச் சேர்ந்த பேராசிரியர்.

தமிழில்: ப.பிரபாகரன்.

மூலம்: https://thewire.in/economy/covid-19-pandemic-indian-labour

Pin It