சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையே பொருளாதார ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் போது, இருமுறை வரிவிதிப்பதைத் தவிர்ப்பதற்கான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய உடன்படிக்கைகள் வளரும் நாடுகள் / ஏழை நாடுகளின் வரிவிதிக்கும் உரிமையைப் பறிப்பவையாக உள்ளன. ஏனென்றால் பெரும்பாலும் இத்தகைய உடன்படிக்கைகள் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பின் வரி மாதிரியை (OECD Tax Model) அடிப்படையாகக் கொண்டவை.

un tax conventionபொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பின் வரி அமைப்பு (OECD Tax Model) பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் வருவாய் சென்றடையும் நாட்டில் வரிவிதிப்பதை அனுமதிக்கிறதே (Resident Country Taxing) தவிர அந்நிறுவனத்தின் வருவாய் உருவாக்கப்படும் நாட்டில் வரிவிதிப்பதை அனுமதிப்பதில்லை. ஆகவே இந்த வரிமுறை வளர்ந்த நாடுகளுக்கே சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் வளர்ந்த நாடுகள் பெருமளவில் மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன. மூலதன ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைப் பெறும் வளர்ந்த நாடுகளே அதன் மீது வரிவிதிக்கும் உரிமையைப் பெறுகின்றன. ஆகவே இத்தகைய வரிமுறையால் வளரும் / ஏழை நாடுகள் வரிவிதிக்கும் உரிமையை இழப்பதால் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைபாட்டையும் பாரபட்சமான அனுகுமுறையையும் களையும் விதத்தில் ஐக்கிய நாடுகள் வரி நெறிமுறை (UN Tax Convention) உருவாக்கப்பட்டது. இது வருவாய் உருவாக்கப்படும் நாட்டிற்கு வரிவிதிக்கும் உரிமையை வழங்குவதால் (Source Country Taxing) மூலதனம் இறக்குமதி செய்யும் நாடுகள் மூலதன வருவாய் மீது வரிவிதிப்பதை அனுமதிக்கிறது.

வரி நீதிக்கான வலையமைப்பு கூறுகிறது: .நா. வரி ஒப்பந்தத்தை உலகெங்கும் கடைபிடிக்கச் செய்வது சமமான சர்வதேச வரி விதிகள் உண்மையான பிரதிநிதித்துவச் செயல்முறை மூலம் நிறுவப்பட்டு சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படுவதை உறுதி செய்யும், வரி தொடர்பான ஐநா நெறிமுறையானது… நிறுவன வரிவிதிப்பு, நிதி வெளிப்படைத்தன்மை, வரிநீதி ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாகப் பிணைப்பதுடன், நாடுகளுக்குச் சமமான தரநிலைகள் அளிக்க முடியும்.

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம், சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் போன்ற .நா. ஒப்பந்தங்கள் சர்வதேச ஒப்பந்தங்களாகும், அதில் நாடுகள் கையெழுத்திட்டு, அங்கீகரிப்பதன் மூலம் அவை சர்வதேசச் சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட உடன்படுகின்றன. அதே போல் ஐ.நா நெறிமுறையையும் அனைத்து நாடுகளும் அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த 100 ஆண்டுகளாக, சர்வதேச வரி விதிகள் முதன்மையாகப் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பால் (OECD) தீர்மானிக்கப்படுகிறது, இது பணக்கார நாடுகளின் ஒரு சிறிய குழு ஆகும்; அவற்றில் உலகின் மிகப் பெரிய வரிப் புகலிடங்கள் உள்ளன. இந்த அமைப்பு கொண்டுவந்த உலகளாவிய வரிமுறையால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் $427 பில்லியனுக்கும் அதிகமான வரியைப் பெருநிறுவன வரி மோசடி, தனியார் வரி ஏய்ப்பு ஆகியவற்றால் இழக்கின்றன. இந்த வரி இழப்புகளில் கிட்டத்தட்டப் பாதி அளவுக்குப் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பின் நாடுகளே (OECD) பொறுப்பு என்று பகுப்பாய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. தற்போதைய சர்வதேச வரிவிதிகள் வேலை செய்யவில்லை என்பதை அவ்வமைப்பு ஒப்புக் கொண்டாலும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை வழங்குவதற்கான அதன் சமீபத்திய முயற்சிகள் சக்திவாய்ந்த உறுப்பு நாடுகளின் அழுத்தத்தால் தோல்வியடைந்துள்ளன.

ஐநா வரி நெறிமுறை மிகவும் அவசியமானது. இது பணம் படைத்தவர்களும் சக்தி வாய்ந்தவர்களுமான சிலரின் விருப்பங்களுக்குப் பதிலாக உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தேவைகளைப் பிரதிபலிக்கும்.

கோவிட்-19 பொருளாதார மந்தநிலையிலிருந்து சமூகத்தைக் காப்பதற்கான முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாக உடனடியாக வரி நெறிமுறைகளை அமைக்கும் பொறுப்பைப் பொருளாதார ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கான அமைப்பிடமிருந்து (OECD) ஐக்கிய நாடுகள் அவைக்கு (UN) மாற்றுவதற்கு வரி நீதிக்கான வலையமைப்பு அழைப்பு விடுத்தது.

ஐக்கிய நாடுகளின் நிதிப் பொறுப்பு, வெளிப்படைத் தன்மை மற்றும் ஒருமைப்பாடு (FACTI) குழுவின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமறு: ஐ.நா. வரி நெறிமுறையைச் செயல்படுத்துதல், சர்வதேச வரி விதிகளில் மேலும் மாற்றங்களை உருவாக்கும் பொருட்டு உடனடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேச அரசுகளுக்கிடையேயான ஐ.நா. மன்றத்தை உருவாக்குதல். சட்டவிரோத நிதிப் பாய்ச்சல்கள், வரி மோசடி குறித்த தேசிய பொறுப்புணர்வை உருவாக்குவதற்காக ஐ.நா.வில் வரிவிதிப்பு உரிமைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு மையத்தை நிறுவதல், பெருநிறுவனங்கள் மீது குறைந்த பட்சம் 25 விழுக்காடு வரி விதித்தல் ஆகியவையும் இப்பரிந்துரைகளில் அடங்கும்.

இந்தியாவின் நிலை

வரி நீதிக்கான வலையமைப்பு (Tax Justice network) சமூகத்தில் அனைவரின் தேவைகளுக்கும் சமமான மதிப்பைக் கொடுக்கும் ஒரு நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம் வரியமைப்புகளும், நிதி அமைப்புகளும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகள் என்று கருதுகிறது. வரி அமைப்பில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரச் சீர்திருத்தங்களை வலியுறுத்திப் பரவலாக விழிப்புணர்வு உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவின் செயல்பாடு குறித்து அளித்த மதிப்பீடுகள் பின்வருமாறு:

நிதிமுறை இரகசியத்திற்கான குறியீட்டின் தரவரிசையில் உலகளவில் இந்தியா 47ஆம் இடத்தில் உள்ளது. வரிப் புகலிடங்களால் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் $16,830,271,368 [டாலர்] நிதியிழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவால் மற்ற நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வரியிழப்பு சுழியம் எனவும், பெருநிறுவன வரிப்புகலிடத்திற்கான குறியீடு இந்தியாவுக்குப் பொருந்தாது எனவும் வரி நீதிக்கான வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.

- சமந்தா

Pin It