“நவசக்தி” ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்திர முதலியார் ஒரு பெரிய காங்கிரஸ் பக்தராம். காந்தியடிகள் கீறிய கோட்டைத் தாண்டாதவராம். இத்தகைய சீரியர் சின்னாட்களாக ‘காங்கிரஸ் தலைவர்’களெனப்படும் சிலருடன் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டில் திக் விஜயம் செய்து வருகின்றார். இவருடன் சேர்ந்து வருபவர்கள் உண்மையான காங்கிரஸ்வாதிகளா? என்பதையும், வாஸ்தவத்திலேயே தேசநன்மைக்கு பாடுபடுகிறவர்களாவென்பதையும் கவனிப்போம்.

உண்மையான காங்கிரஸ்காரர் யார் ? என்பதைப்பற்றி காந்தி அடிகள் கூறுவதாவது. காங்கிரஸ்காரருக்கு பின்வரும் லக்ஷணங்கள் இருக்க வேண்டும்.

1. கதரில் பூரண நம்பிக்கை கொள்ளவேண்டும். அவர் தற்காலிக உடையாகவோ அல்லது வெளி வேஷத்திற்கான உடையாகவோ கதரை அணிபவராக இருக்கக்கூடாது. உண்மையான ஆர்வத்துடன் கதர் அணிபவராக இருக்க வேண்டும்.

2. தீண்டாமை விலக்கில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். தீண்டத்தகாதவரென கூறப்படுகிறவருடன் அவர் தாராளமாகக் கலந்துறவாடக் கூடியவராயிருக்க வேண்டும். பல வகுப்பினருள்ளும் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவராக இருக்க வேண்டும்.

3. அஹிம்சை, சத்தியம் ஆகிய காங்கிரஸ் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவராயிருக்க வேண்டும்.

காந்தி அடிகளார் வகுத்துள்ள மேற்கண்ட நெறிப்படி திரு. முதலியாரைக் கூட்டிக்கொண்டு போகும் ஐயங்காரின் கோஷ்டியினருள் எவராவது இருக்கிறாரா? அந்நெறிப்படியே இருக்கிறவர்களாயிருந்தால் திரு. முதலியாரைப் பற்றியாதல், அவரால் துணை புரியப்பெறும் கோஷ்டியாரைப் பற்றியாதல் இங்கு எழுத நேரிடாது. அக்கோஷ்டியிலிருப்போர் அனைவரும் காங்கிரஸ் நெறிக்கு நேர்மாறாக நடப்பவரேயாகும். திரு. சீனிவாசய்யங்கார் கதரில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாதவர். சமீபத்தில் அவர் கோவைக்கு வந்திருக்கும்போது கதர் விஷயம் காங்கிரஸில் சேர்க்கப்பட்டதால்தான் காங்கிரஸ் குட்டிச்சுவராய்ப் போயிற்றென்றும் இன்னமும் நூல் நூற்போர் சங்கமும், கதர் போர்டும் காங்கிரசுடன் சம்பந்தம் வைத்திருப்பதாலேயே காங்கிரஸ் இயக்கம் க்ஷீணித்து வருவதாகவும் மற்றும் வேறு பலவாறாக தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாரென நம்பத்தக்க இடத்திலிருந்து நமக்கு செய்திவந்திருக்கிறது. இது முதலாவது லக்ஷணத்திற்கு முரணானது. குருகுலக் கிளர்ச்சி கிளம்பியபோது பிராமணரல்லாத குழந்தைகளுக்கு பிராமணக்குழந்தைகளுடன் சமபந்தி போஜனம் அளிக்கக்கூடாதென சிலர் வாதாடியபோது அதற்கு அனுகூலமாய் நடந்து கொண்டவர்.

இது மகாத்மா கூறிய 2-வது 3-வது லெக்ஷணங்களுக்கு முரணானது ஆகும். ஆகவே இவர் எப்படி காங்கிரஸ்காரராவார். இவர் தேச விடுதலைக்கும், பிராமணரல்லாதாருக்கும் முற்றும் நேர் விரோதியாவார். இதை திரு. முதலியாரால் மறுக்க முடியுமா? திரு. சத்தியமூர்த்தியும் கதரில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவரென்றே கூறவேண்டும். சமயத்திற்குத்தக்கபடி நடப்பவரேயாகும். திரு.எம். கே. ஆச்சாரியாரைப்பற்றி நாம் கூற வேண்டியதில்லை. பிராமணக் குழந்தை ஒன்று பிராமணரல்லாத குழந்தை முன் சாப்பிட்டதாக கேள்விப்பட்டால் ஒரு மாதம் உண்ணாவிரதம் அனுஷ்டிப்போம் என்று கூறிய மகான். இவர்தானா பல வகுப்பினரையும் ஒன்றுபடுத்தப்போகிறவர்? தீண்டாமையை விலக்கப்போகிறவர்? திரு.சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

காங்கிரஸ்காரர் என்று சொல்லிக்கொள்ளுவதற்கே கொஞ்சமும் யோக்கியதை இல்லாத இவர்களையெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று கபடு சூதற்ற பாமரர்களிடம் கூறி, அவர்களுக்கு வோட்டுச் சேகரித்துத்தர ஊர் ஊராய்த் திரியும் திரு. கலியாணசுந்தர முதலியாரது செய்கை எப்படி காந்தியடிகளை ஆதரிப்பதாகும்? “எம் காந்தியடிகளார்”, “எம் மகாத்மா”, “எம் சத்திய உரு”, “எம் சாந்தமூர்த்தி” என்று மகாத்மா காந்தியை தனக்கே சொந்தமாக்கிப் பேசிவரும் திரு. முதலியார், மகாத்மா கூறிய லக்ஷணங்களுக்கு எவற்றானும் பொருந்தாதவர்களை காங்கிரஸ் தலைவர்கள் என்று கூறி அவர்களுக்கு வோட்டு சேகரித்துத் தருவதின் ரகசியம் என்ன? என்பதை வாசகர்கள்தான் அறிய வேண்டும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.04.1926)

Pin It