வட்டமேஜை மகாநாட்டின் முதல் சப்கமிட்டி கூட்டமானது முறிந்து முடிவு பெற்று விட்டது. எப்படி எனில் “இந்தியர்களாகிய நாம் நமக்குள் இருக்கும் வகுப்பு வித்தியாசங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ள நமக்குள் ளாகவே ஒரு பைசலுக்கு வரமுடியவில்லை” என்கின்றதான முடிவுக்கு வந்து விட்டது. எவ்விஷயத்தில் நமக்குள்ளாக நாம் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்கின்ற முடிவுக்கு வரப்பட்டது என்றால், நமக்கு அடுத்தாற்போல் பிரிட்டிஷாரால் வழங்கப்படப்போகும் சுதந்திரத்தையோ, அல்லது அவர்களிடம் இருந்து “கை பலத்தால்” தட்டிப் பிடுங்கிக் கொள்ளப் போகும் சுயேச்சையையோ நமக்குள் நாம் எப்படி பங்கிட்டுக் கொள்வது என்கின்ற காரியத்தில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று தீர்மானம் ஏற்பட்டு விட்டதோடு, இந்தியாவின் “ஏக தலைவர்” அல்லது “ஏகப்பிரதிநிதி” நானே தான் என்று சொல்லப்படும் - சொல்லிக் கொள்ளவும் உரிமை கொண்டாடும் திரு.காந்தியவர்களாலேயே “நமக்குள் நாம் ஒரு முடிவுக்கு வரும் விஷயத்தில் நான் எவ்வளவோ பாடுபட்டும் தோல்வி அடைந்து விட்டேன்” என்று விளக்கமாகத் தத்துவார்த்தத்திற்கு இடமில்லாமல் ஒப்புகொள்ளப்பட்டாய் விட்டது.
இந்த நிலைமையில் இனி மேலால் நடக்க வேண்டிய காரியம் என்ன என்கின்ற விஷயத்தில் ஒருவருக்கொருவர் தந்திரமும், சூக்ஷியும் செய்ய வேண்டியதவசியமாய் விட்டதுடன் திரு.காந்தி அவர்கள் தான் தோல்வி அடைந்து விட்டதற்கு ஏதாவது ஒரு சமாதானத்தை சொல்லித் தீர வேண்டி யதாய் விட்டது. இந்த இரண்டும் சேர்ந்து காங்கிரசினுடையவும், திரு.காந்தி யினுடையவும் உண்மையான நிறத்தையும், தத்துவார்த்தத்தையும் வெளி படுத்தி விட்டது.
அதென்ன வெனில்:-
திரு.காந்தி அவர்கள் இந்தியாவில் இருந்து சீமைக்குப் புறப்படும் விஷயத்தில் அவரது அபிப்பிராயத்தை கேட்ட போது “இந்து முஸ்லீம் பிரச்சினை ஏதாவது ஒரு வழியாய் முடிவு பெற்றாலொழிய நான் சீமைக்குப் போவதில்லை” என்று சொன்னதானது யாவருக்கும் தெரிந்ததேயாகும். ஆனால், உப்புப் போரானது பிராண அவஸ்தையில் இருந்து சிலேத்துமம் இழுத்துக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதா வது ஒரு வகையில் “உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்” என் கின்ற கவலையின் பேரில் லார்ட் இர்வினிடம் சென்று ராஜி பேச வேண்டி யிருந்ததால் உப்புப் போர் சம்பந்தமாய் “சிறை பிடித்தவர்களை விடுதலை செய்து அடக்குமுறையை நிறுத்திவிட்டால் உப்புப் போரை நிறுத்தி விடுவ தோடல்லாமல் நான் சீமைக்கும் போகத் தயாராய் இருக்கிறேன்” என்று வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றாமலிருக்க முடியாத மாதிரியில் திரு.காந்தியை லார்ட் இர்வின் வைத்து விட்டுப் போய்விட்டதாலும், லார்ட் வில்லிங்டன் திரு.காந்தியவர்களை “போகிறீரா? என்ன சொல்லுகிறீர்? இர்வின் பிரபு உப்புப் போரை அழிக்கவிட்ட பாணம் இதோ இருக்கின்றது” என்று காட்டி மிரட்டியதினாலும் திரு.காந்திக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் சீமைக்குப் போக இஷ்டமே இல்லாமல் இருந்தும் “கடவுள்” அவர்களது கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் வட்ட மேஜை மகாநாட்டில் உட்கார வைத்துவிட்டார்.
இந்த நிலைமையில் என்ன செய் வார்! பாவம்!!. “கடவுளை” நோகவோ முடியவில்லை, தத்துவார்த்தங்களும் வில்லிங்டன் பிரபுவிடம் செல்லவில்லை. வேண்டுமானால் அஹிம்சை யைப் பற்றி பேசுவதால் மகாத்மாவாகலாம், கிறிஸ்துவாகலாம், உலகசிரேஷ் டராகவும் ஆகலாம். அதுவும் இவையெல்லாம் யாரிடத்திலாகலாம் என்றால் திரு.காந்தியவர்களை விட அதிகமான “கடவுள் பக்தர்களான” பாதிரிமார் களிடத்தில் ஆகலாம். தன் பேரில் சாமி வந்தது என்று சொல்லிக்கொண்டு பெருமை அடைகின்ற “வீர”ப் பெண்மணிகளை போல் “எங்கள் வீட்டிற்கு காந்தி வந்தார்” என்று சொல்லிப் பெருமையடையும் பெண்மணிகளிடம் ஆகலாம். ஆனால், “கடவுளோடு” போட்டி போட்டுக் கொண்டு உலகத்தில் பெரும் பாகத்தை ஆக்ஷிபுரியும் வெள்ளைக்கார அரசாங்கத்தினிடம் இந்த கடவுள் பக்தியும், அஹிம்சை பல்லவியும் எப்படிச் செல்ல முடியும்? அதனாலேயே ராம்சே மக்டானால்ட் அவர்கள் தைரியமாய் எழுந்து “திரு.காந்தியவர்களே! உம்முடைய தோல்விக்காக நீர் வெட்கப்படாதீர்கள். சட்டமறுப்புப் பூச்சாண்டியானது எல்லா காரியத்தையும் சாதித்து விடாது. பேசுங்கள், நாணயமாய் உண்மையாய் நடந்து கொள்ளுங்கள், நான் சொல்லுகின்றபடி கேளுங்கள்” என்று பொருள்பட அழுத்தமாய்ச் சொல்லிவிட்டார்.
மக்டானல்ட் துரை இப்படி சொல்லிவிட்டதால் திரு.காந்தி பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்தவர்களுக்கும் அவரால் மனிதராகலாம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கும் அவர் விக்கிரகத்தை வைத்து பூஜை, உற்சவம் செய்து ஜீவிக்கலாம் என்று இருந்தவர்களுக்கும் இது சற்று அவமானமாகக் காணப்படலாம். ஆனால், யார்தான் என்ன செய்ய முடியும்? முலாம் பூசின கள்ள நாணையம் எத்தனை நாளைக்கு செலாவணியாகக் கூடும்? பூச்சுத் தேயத்தேய உண்மை சொரூபம் வெளியாகித்தானே தீரும். இதை கருமத்தின் பயன் என்றாலும் சரி, சையன்ஸ் என்றாலும் சரி அதற்காக நாம் சண்டைக்கு வரவில்லை.
நிற்க, திரு.காந்தியவர்கள் “நமக்குள் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியா மல் போனோம்” என்பதற்கு காரணம் சர்க்காரார் பேரிலேயே பழி கூறிய தோடு நில்லாமல், மற்றும் ஒரு அடி முன் சென்று “இந்தியாவில் இருந்து சர்க்காரால் வரவழைக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியான பிரதிநிதிகள் அல்ல” வென்றும் “நமக்குள் நாம் ஒரு முடிவுபெறாமல் இருக்க வேண்டும் என்பதற் காகவே சர்க்காரார் பிரதிநிதிகள் அல்லாதவர்களாகப் பார்த்து பொருக்கி எடுத்து அனுப்பி இருக்கின்றார்கள்” என்றும் ஒரு அபாண்டமான குறை கூறியிருப்பதன் மூலம் சர்க்காராரை மாத்திரம் குற்றம் சொல்வதல்லாமல் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளையும் இழிவு படுத்திப் பேசி இருக்கிறார். இப்படிப் பேசியதானது அவர் இதுவரை பேசி வந்த - செய்து வந்த அக்கிரமங்களில் எல்லாம் இது ஒரு பெரிய அக்கிரமமான பேச்சென்றே சொல்ல வேண்டி இருக்கின்றது.
இப்போது சீமைக்கு சென்று இருக்கும் பிரதிநிதிகளில் திரு.காந்தியவர்களின் பிரதிநிதித்துவ யோக்கியதைக்கு குறைந்த பிரதிநிதித்துவ யோக்கியதை உடைய பிரதிநிதிகள் யாரும் இல்லை என்றே சொல்லுவோம். ஒரு சமயம் மற்ற காரியங்களில் அவரவர் களின் சொந்த விஷயத்தில் யார்யார் எப்படி எப்படி நடந்து கொள்ளுகின்ற வர்களாயிருந்தாலும், அவரவர்கள் மதத்திற்கும், அவரவர்கள் ஜாதிக்கும், அவரவர்கள் வகுப்புக்கும் திரு.காந்திக்கு உண்டான பொறுப்புக்கு குறை யாத பிரதிநிதிகள் என்றே சொல்லுவோம். திரு.காந்தியவர்களுக்கு இந்து மதத்தைக் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ பார்ப்பனீயத்தையும் முதலாளித் தன்மையையும் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ அவ்வளவு அக்கரை தங்கள் தங்கள் மதத்தைக் காப்பதிலும் முஸ்லீம் கிறிஸ்துவ பிரநிதிகளுக்கு முன்டென்பதை திரு.காந்தி அறிவாராக.
திரு.மாளவியாவுக்குப் பார்ப்பனீயத்தைக் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ அது போலவே பார்ப்பனீயத்தை ஒழித்து மனிதத் தன் மையைப் பெற திரு.அம்பெட்காருக்கும், திரு.சீனிவாசனுக்கும் அக்கரை உண்டு என்பதைத் திரு.காந்தி உணர்வாராக. இப்படி இருக்கும் நிலைமை யில் வட்டமேஜை பிரதிநிதிகள் சரியானவர்கள் அல்ல என்றும் கலகக்காரர் களென்றும் திரு.காந்தி அவர்கள் சொல்லுவதென்றால் அது குறும்புத்தன மானது என்று சொல்லுவதை விட வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இந்தியாவில் வகுப்பு சம்பந்தமான பேச்சுகளும், தீர்மானங்களும் வரும் போதெல்லாம் அவைகளைக் கொண்டு வருபவர்களை “வகுப்பு வாதிகள்” என்றும் “தேசீயத்திற்கு விரோதிகள்” என்றும் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும், சிஷ்யர்களும் பேசி மற்றவர்களை வாயடக்கி வெற்றி கொண்ட தந்திரத்தையும், சூக்ஷியையுமே சீமைக்குப் போய் அங்கும் காட்ட வேண்டியதாய் விட்டது.
திரு.காந்திக்கு “வகுப்பு வாதம் கூடாது, மதவாதம் கூடாது” என்றும் “காங்கிரசு தான் பிரதானமானது” என்றும் கருதி அந்தப்படியே உண்மையான எண்ணம் இருந்திருக்குமானால் திருவாளர்கள் மாளவியா, மூஞ்சே, சரோஜினி, எ.ரங்கசாமி அய்யங்கார் ஆகிய ஜாதிமத வகுப்பு வாதிகளைப் பார்த்து “மகாநாட்டில் உங்களுக்கு வேலை என்ன? நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள்?” என்று கேட்டு இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
மாளவியாவுக்கு இடமிருக்கும் மகாநாட்டில் அம்பெட்காருக்கு இடமிருப்பது தகுதி அற்றதென்றோ, மூஞ்சேயிக்கு இடமிருக்கும் மகாநாட் டில் சௌகத் அலிக்கு இடமிருப்பது தகுதி அற்றதென்றோ, ரங்கசாமி அய்யங்காருக்கு இடமிருக்கும் மகாநாட்டில் சீனிவாசனுக்கு இடமிருப்பது தகுதியற்றதென்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
வகுப்புக் கமிட்டியில் வகுப்புப் பிரதிநிதிகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தோல்வியுற்றதற்கு காரணம் வகுப்பு சம்பந்தமான அபிப்ராயங் களின் பலன் என்றோ, அல்லது பிரதிநிதிகள் ஒருவரால் ஒருவர் ஏய்க்கப்பட முடியாத சமஜோடியான வீரர்கள் என்றோ சொல்லப்படுமானால் அது மனித தன்மையின் மேன்மையான குணமாகும். அப்படிக்கு இல்லாமல் ஒரு பக்கத்துப் பிரதிநிதிகள் யோக்கியர்கள் என்றும், மற்றொரு பக்கத்துப் பிரதிநிதிகள் அயோக்கியர்கள் என்றும் சொல்லுவது ஒரு விதத்திலும் யோக்கியமான பேச்சாகா தென்பதோடு, இது ஒரு கோழைத்தனமான சமாதானம் என்றும் சொல்லுவோம். ஆகவே இதைப் பார்க்கும் போது திரு. ராம்சே மக்டனால்ட் துரை, திரு.காந்தியைப் பார்த்து “நாணயமாய் நடந்து கொள்ளுங்கள். உண்மையை மறைக்க முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள் பைசல் செய்து கொள்ள சக்தியில்லாவிட்டால் எங்கள் மீது குறை கூறாதீர் கள்” என்று சொன்னதோடு “இந்தியாவில் இல்லாத ஜாதி மத வகுப்புகளின் பிரதிநிதிகள் இங்கு யாராவது தருவிக்கப்பட்டிருக்கின்றார்களா?” என்றும் கேட்டிருப்பதானது மிக மிக பொருத்தமான பேச்சென்றே கருதுகின்றோம். இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த திரு.காந்தி அவர்கள் தன் தலையை தொங்கப் போட்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் போனதே இதற்கு சரியான உதாரணமாகும். தவிர திருவாளர்கள் மாளவியா, மூஞ்சே, சரோஜினி, ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் “காங்கிரசு பிரதிநிதிகளேயொழிய வகுப்புப்பிரதிநிதிகள் அல்ல” என்று சொல்லக்கூடுமானால் திருவாளர் காந்தி “என்னை ஒருவரை மாத்திரம் தான் காங்கிரசு பிரநிதியாய் அனுப்பிற்று” என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்? என்று கேட்கின்றோம்.
அன்றியும் திரு.காந்தி இருக்கும் போது இவர்கள் எல்லாம் எதற்காக வட்ட மேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்? அங்கு இவர்கள் பேசியது எதன் சார்பாக? எதற்கு பிரதிநிதித்துவமாக? என்கின்ற விஷயங் களை கவனித்துப் பார்த்தால் இதன் சூக்ஷி யாருக்கும் விளங்காமல் போகாது. அன்றியும் “இந்தியாவுக்கு பிரதிநிதி ஸ்தாபனம் காங்கிரசு ஒன்றே தான்” என்றும் “காங்கிரசுக்கு பிரதிநிதி திரு.காந்தி ஒருவரே தான்” என்றும் சொல்லுவதை காங்கிரசும் திரு.காந்தியுமாவது ஒப்புக்கொண்டிருப்பவர் களாயிருந் தால் வட்டமேஜை மகாநாட்டுக்கு மற்றும் சுமார் 10, 20 ஸ்தாபனங் களிலிருந்து 50, 60 பிரதிநிதிகளை சர்க்காரார் தெரிந்தெடுத்திருப்பதையும், அவர்கள் ஏற்கனவே சீமைக்கு ஒரு தரம் சென்று வந்திருப்பதையும் தெரிந்து கொண்ட பின்பும், அந்த பிரதிநிதித்துவங்களை கேன்சல் செய்யா மல் காங்கிரசும் திரு.காந்தியும் ஏன் தங்கள் பிரதிநிதித்துவங்களை ஒப்புக் கொண்டு அங்கு சென்று இருக்க வேண்டும்? என்றும் கேட்கின்றோம்.
திரு.காந்தியவர்கள் தன்னோடு கூடவே திரு.மாளவியாவை அழைத்துச் சென்றார் என்பதையும் திரு.மாளவியாவை பிரதிநிதியாய் தேர்ந்தெடுக்க திரு.காந்தியவர்கள் முயற்சியும் உண்டு என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? அது மாத்திர மல்லாமல் முஸ்லீம் சமூகத்திற்கு டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுக்க திரு.காந்தியவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் முடியாமல் போனதால் அவர் பிரதிநிதியாய் வரவில்லையே என்று திரு.காந்தி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் யாராவது மறுக்க முடியுமா? இந்த நிலைமையில் வட்ட மேஜை மகாநாட்டை வகுப்பு மகாநாடாக்கு வதற்கு திரு.காந்தி அவர்களும் ஒரு பங்குக்காரர் தானா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் திரு.காந்தி அவர்கள் சரியாகவோ தப்பாகவோ தனது வாக்கினாலேயே, எப்பொழுது முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக் கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தனித்தேர்தல் தொகுதி மூலம் கொடுக்கின்றேன் என்றும், அதுவும் அதை காங்கிரசே அனுமதித்திருக் கின்றது என்றும் ஒப்புக்கொண்டாரோ அப்பொழுதே காங்கிரசும் காந்தியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதம் இல்லை என்பது முடிவு பெற்று விட்டது; அன்றியும் இந்த வகுப்புவாரி உரிமை யின்று நேற்றல் லாமல் சுமார் 20, 30 வருஷ காலமாகவே காங்கிரசில் இருந்தும் வருகின்றது. ஆகவே இருபது வருஷத்திற்கு முன்னாலேயே காங்கிரசு ஒப்புக் கொண்ட விஷயத்தைப் பற்றி இன்று புது விஷயம் போல் பேசுவதானது ஒரு சூட்சியே ஒழிய வேறு என்ன நாணயம் அதில் இருக்கக் கூடும்? என்று தைரியமாய் கேட்கின்றோம்.
தவிர இப்போது வகுப்புத் தகராறு என்பது முஸ்லீம்கள் விஷயத்தி லும், சீக்கியர்கள் விஷயத்திலும் இருந்து வருவதைப் பற்றி நாம் பேச வரவில்லை. ஆனால் தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் 7 கோடி மக்களுக்கு வரப்போகும் சுயராஜியத்தில் என்ன விமோச்சனம் செய்யப்பட்டிருக்கின்றது? என்று தான் கேட்கின்றோம்.
திரு.காந்தி அவர்களும் தீண்டாதாருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதை தான் ஒருபோதும் ஆட்சேபிக்க வில்லை என்றும் ஒப்புக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க வகுப்புவாதம் குறுக்கிட்டு திரு.காந்தியின் தேசீயத்தை எவ்விதத்திலும் கெடுத்து விட வில்லை. ஆனால் தீண்டப்படாதாருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்பதில் திரு.காந்தியோ, காங்கிரசோ சூட்சியும், ஏமாற்றுந் தன்மையும் இல்லாமல் உண்மையாய் நடந்து கொள்ளுகின்றவர்களாய் இருந்தால் முகமதி யர்களைப் போலவும், சீக்கியர்களைப் போலவும் பிரதிநிதித்துவம் அடையும்படி தாராளமாய் ஏன் விட்டுவிடக்கூடாது? அப்படிக்கில்லாமல் “நீயும் வீட்டுக்குள் வரலாம், உனக்கும் இடம் ஒதுக்கி வைத்திருக்கின்றது. ஆனால் வெளிக்கதவை மாத்திரம் தாராளமாய் திறந்து விடும்படி கேட்காதே” என்று சொல்லுவதானால் அது நாணயமானதா? என்று யோசித்துப் பாருங்கள்.
விஷயங்கள் இப்படியெல்லாம் இருக்க வட்டமேஜை மகாநாட்டை சர்க்காரார் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்லுவதில் பயன் என்ன? திரு.காந்தியவர்கள் தனது ஆத்ம சக்தியாலும், அஹிம்சா தர்மத்தாலும், கடவுள் கருணையாலும் எந்த விதமான சுதந்திரம் பெற்று வந்தாலும் அதை இந்தியாவில் கொண்டு வந்து தான் செலாவணியாக்க வேண்டுமேயொழிய மற்றபடி வேறு எந்த நாட்டிற்கும் கொண்டுபோய் விடமுடியாது. இந்தியாவில் இருக்கும் வகுப்பு, மத, ஜாதிகளை மறைந்து போகும்படியாகவும் எதையும் கொண்டு வந்து விடமுடியாது. ஏனெனில் எல்லா மத வகுப்பு ஜாதிகளையும் காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்து விட்டே சீமைக்கு கப்பலேறி இருக்கிறார். இந்நிலைமையில் அந்த சுதந்திரத்தில் ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொறு ஜாதியும் பங்கு கேட்பதில் மாத்திரம் என்ன கெடுதி இருப்பதாக திரு.காந்தி சொல்ல முடியும்?
ஒவ்வொரு ஜாதியும், வகுப்பும், மதமும் சிறு சிறு கூட்டமாய் இருக்குமானால் ஒரு சமயம் அவர்களை ஏமாற்றிவிடுவது சாத்தியமாக இருக்கலாம். அப்படிக்கில்லாமல் 8 கோடி முஸ்லீம்கள், 7 கோடி தீண்டாதார், முக்கால் கோடி கிறிஸ்தவர், 3 கோடி பார்ப்பனர், 14 கோடி பார்ப்பனர் அல்லாதார் மற்றும் கால் கோடி, அரைக்கோடி, ஒரு கோடி, இரண்டு கோடி என்பதான சில்லரை மதங்களும், சில்லரை ஜாதிகளும், உள் வகுப்புகளும் எத்தனையோ இருக்கும் போது இவர்கள் இத்தனை பேர்களின் கண்களிலும் மிளகாய் பொடி போட்டு எப்படி ஏய்க்க முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஏதோ தந்திரத்தாலோ, ஏதோ கைபலத்தாலோ, ஏதோ மூடநம்பிக்கையாலோ ஒரு காலத்தில் ஒரு சமூகமோ, வகுப்போ, ஜாதியோ, மதமோ, உச்சஸ்தானமும், அதிகாரமும், ஆக்ஷியும், பணமும், படிப்பும் பெற்று விட்டால் அவைகள் அப்படியே அவர்களுக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படியாகவும், கீழ் மக்களாக, அடிமையாக, ஏழையாக, கூலியாக, படிக்காத தற்குறிகளாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் எப்போதும் அதுபோலவே கீழ்மக்களாக, தற்குறிகளாக, கூலிகளாக, ஏழைகளாக, அடிமைகளாக இருக்கும்படி செய்ய முயற்சிப்பதென்றால் அதை எப்படி சுதந்திரம் என்றும், சுயராஜ்ஜியம் என்றும், சுயேச்சை என்றும், சமத்துவம் என்றும், சமதர்மம் என்றும் சொல்லமுடியும்? என்று கேட்கின்றோம்.இம்மாதிரி விடுதலை முயற்சிக்கு பழைய சூக்ஷியையும், அயோக்கியத்தனத்தையும் நிலை நிறுத்தப்பாடுபடும் மற்றொரு புதிய சூக்ஷியும், அயோக்கியத்தனமும் என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் கொடுக்க முடியும்?
சாதாரணமாக இனி வரப்போகும் சுயராஜ்ஜியமோ, சுயேச்சையோ எப்படிப்பட்டதாயினும் அதில் முதலில் பரிசோதிக்க வேண்டிய விஷயம் இரட்டமலை சீனிவாசப் பறைய வகுப்புக்கும், அம்பட்கார் பறைய வகுப்புக்கும் என்ன விடுதலையோ, யோக்கியத்தையோ, மாறுதலோ ஏற்படுமா என்று பார்ப்பது தான் முக்கிய பரீiக்ஷயாய் இருக்க வேண்டுமே அல்லாது ஏ.ரங்கசாமி அய்யங்கார் பிராமணருக்கும், மாளவியா பிராமணருக்கும் இனியும் என்ன புதிய யோக்கியதை ஏற்படும் என்பதைப் பார்க்க வேண்டியதாய் இருக்க கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றோம்.
சாதாரணமாக இந்தியா பூராவுக்கும் உள்ள 36 கோடி மக்களில் 12ல் ஒரு பாகமாகிய 3 கோடி மக்கள் வகுப்பாகிய பார்ப்பன ஜாதியாருக்கு அந்த வகுப்பில் மாத்திரம் எத்தனை பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். சாதாரணமாக நமக்கு தெரிந்த அளவில் நமது மாகாணத்தில் இருந்து மாத்திரம் திருவாளர்கள் சீனிவாச சாஸ்திரி, சர்.ராமசாமி ஐயர், ரங்கசாமி ஐயங்கார், ராமச்சந்திர ராவ், திருமதி ராதாபாய் அம்மாள், ராகவய்யா முதலியவர்கள் சென்றிருக்கின்றார்கள். மற்ற பங்குக்கு பிரதிநிதிகளாக திருவாளர்கள் ராமசாமி முதலியார், பாத்ரோ ஆகிய இருவர் மாத்திரம் இந்துக்கள் பார்ப்பனர் அல்லாதாருக்கும், திரு.பன்னீர்செல்வம் கிறிஸ்தவ வகுப்புக்கும், திரு.ஜமால் முகம்மது சாயபு மகம்மதியருக்கும், திரு.இரட்டமலை சீனிவாசன் தீண்டாதாருக்கும் பிரதிநிதியாக சென்று இருக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தம் 3 கோடி உள்ள சமூகத்திற்கு இந்த ஒரு மாகாணத்தில் இருந்தே, அதுவும் வகுப்புவாதம் பேசும் மாகாணத்தில் இருந்தே பார்ப்பனர்களில் 6 பேர்களும் பாக்கி 33 கோடிக்கு 5 பேரும் சென்றிருக்கிறார்கள் என்றால் இனி வகுப்புவாதத்தைப் பற்றி கவலையே இல்லாமல் இருப்பதாக சொல்லப்படும் மற்ற மாகாணங் களில் இருந்து எவ்வளவு மோசமாக பிரதிநிதித்துவங்கள் போயிருக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
ஆகவே வட்டமேஜை மகாநாட்டில் “வகுப்புவாதம் வந்து குறுக்கிடுகின்றது, குறுக்கிடுகின்றது” என்று கத்துவ தெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் மேலும் மேலும் தாழ்த்தவும், ஒடுக்கவும் செய்யப்படும் சூக்ஷியை வெளியாக்குவதும், உயர்த்தப்பட்டு உச்சம் பெற்ற வகுப்புகளை மேலும் மேலும் உயர்த்தவும் செய்யப்படும் சூட்சியை வெளியாக்குவதும்தான் குறுக்கிடுவதாய் காணப்படுகின்றனவே யொழிய வேறில்லை. ஆகவே வட்டமேஜை மகாநாடு முறிந்த வரையில் கஷ்டப்படும் மக்களுக்கு லாபமேயொழிய நஷ்டமில்லை. வட்ட மேஜை மகாநாடு வெற்றி பெற்ற வரையில் பார்ப்பனர்களுக்கும், பணக்காரர் களுக்கும் தான் லாபமேயொழிய வேறில்லை. ஆகையால் வட்டமேஜை மகாநாடு முறிந்து போய்விட்டதே என்று யாவரும் கவலைப்பட வேண்டியதில்லை, கவலைப்பட வேண்டியதில்லை.
(குடி அரசு - தலையங்கம் - 18.10.1931)