சகோதரர்களே!   சகோதரிகளே!

நீங்கள் இன்று மாலை சில மணி நேரங்களாக இங்கு நடத்தப்பட்ட சொற்பொழிவுகளை அமைதியுடன் கேட்டிருந்தீர்கள்.   எனக்கு இரண்டொரு தினங்களாக தேக அசௌக்கியமாயிருக்கின்றது.   ஆதலால் உங்களை நெடுநேரம் காக்க வைக்காமல் நான் சொல்ல வேண்டியவைகளைச் சுருக்கமாக விளக்கி விட உத்தேசித்திருக்கிறேன். இன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீங்களே நன்கறிவீர்கள். பின்னும் இத்தகைய சங்கங்களால் ஏற்படும் நற்பலன்களைக் குறித்து அறிவாளிகள் பலரும் நன்கெடுத்துப் பேசினார்கள்.   ஆதலால் இன்னும் நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. எனினும் நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு கூட்ட நடவடிக்கைகளை முடித்து விடுகிறேன்.

இதுகாறும் பேசியவர்கள் நம்மை பிராமணர்கள் மத சம்மந்தமான விஷயங்களிலும் அரசியலிலும் சமுதாயத் துறையிலும் ஏமாற்றி வருவதை அனுபவமாக எடுத்து நன்கு விளக்கினார்கள்.   அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் குறித்து பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் தோன்றலாம். சிலர் அவற்றை பிராமண துவேஷம் காரணமானதென்றும் சொல்லுவார்கள். மேலும் நம்மீது திருப்தியற்றவர்கள் இன்று மகாநாடு கூடி நாலு மணி நேரம் பார்ப்பன தூஷணையில்தான் காலங்கழிக்கப்பட்டதென்றும் சொல்லுவார்கள். உண்மையைச் சொன்னால் துவேஷமும், தூஷணையுமாகத்தான் தோன்றும், நாம் நம்முடன் பிறந்த சகோதரர்களை வையக்கூடிய மூடர்களல்லோம். உடன் பிறந்தானாயினும் அவனுடைய தீச்செயல்களையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டி கண்டித்துத் திருத்துவது சகோதர உரிமையின் முதற் கடமையன்றோ.   கொஞ்ச காலத்திற்கு முன் நாங்கள் சர்க்காரைக் குறை கூறித் திட்டியது கொஞ்சமல்ல. அது சர்க்கார் மீதிருந்த துவேஷத்தினாலா? பிசகைக் கண்டித்து ஆnக்ஷபிக்க வேண்டியது ஒவ்வொரு நகரவாசியின் கடமையாகும்.   சர்க்காரின் மீது விசேஷமாகப் பேசினவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அடக்கப்பட்டதேயன்றி தென்னாட்டில் ராஜதுவேஷ குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் வெகு சொற்பந்தான்.   பெரும்பாலும் சிறை சென்றவர்களெல்லாம் கள்ளுக்கடை மறியல் முதலானவற்றை முன்னிட்டுத்தானிருக்கும்.

  periyar 592நம் மனதில் குற்றமென்று தோன்றுவதை ஆnக்ஷபித்துக் கண்டிப்பது குற்றம் செய்தவர்களுக்கு தூஷணையாகவும் துவேஷமாகவும் கொள்ளுதல் அறிவுடைமையன்று. பஞ்சாபில் சர்க்கார் செய்த உபத்திரவம் அவர்களை எவ்வளவு கண்டித்தாலும் அவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்கச் செய்தது.   இத்தனை நாளில்லாமல் பிராமணர்கள் பேரில் இப்போது துவேஷத்திற்கும் தூஷணைக்கும் காரணமாக விருப்பதென்ன? நமக்குத் திடீரென்று துவேஷ உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதா?   இது யாராவது நம்பத்தக்கதாயிருக்கின்றதா? பிராமணர்கள் இருக்க வேண்டிய நிலையை மீறி வந்து நமது சுதந்திரத்திலும் தலையிட்டு நம்மை மேன்மேலும் அமிழ்த்த முயலுவதனால்தான் நாம் அவர்களுடைய நிலையையுணர்த்தி நம் சுயமரியாதைக்கு வழி தேடிக்கொள்ள வேண்டுமென்கிறோம்.

  பிராமணரல்லாத மக்களின் சுயமரியாதையைக் காத்துக்கொள்வதன் சம்பந்தமான உணர்ச்சி எனக்கு பாலிய முதற் கொண்டேயுண்டு.   பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே நான் பிராமணரல்லாத கட்சியின் கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கின்றேன்.   (கரகோஷம்) நம் பிராமணர்களை அவர்களுடைய தீக்குணங்களுக்காகக் கண்டித்து வருவதைப் பட்சபாதமற்ற அன்னியரும் பெரியோரும் இவர்கள் சொல்வது போலத்தான், பிராமணர்களுமிருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். அவர்கள் மரியாதையாயிருக்கக்கூடிய துறையைக் கடந்து தாங்கள் உயர்ந்தவர்களென்றும் நாம் தாழ்ந்தவர்களென்றும் சொல்லிக் கொள்வதுடனில்லாது, நமக்கு எஜமானர்களாயும் குருக்களாயும் ஆதிக்கமும் செலுத்த முற்பட்டதனால்தான் இதுகாறும் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த நம் மக்கள் இனி இவர்களுடைய கொடுமையையும் ஆதிக்கத்தையும் அடக்கி ஒழிக்க உறுதி செய்து கொண்டனர். இது இவர்களாகச் செய்து   கொண்ட வினையின் பயனேயன்றி வேறல்ல.

அவர்களை நாம் ஒன்றுக்கும் குறை கூற முன்வரவில்லை.   அவர்கள் இருக்க வேண்டிய நிலை கடந்துவிட்டதனால் தான் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டது. இது எங்குபோய் முடியுமென்பதைக் குறித்து எனக்கே பயமாகத் தானிருக்கிறது.   இத்தகைய கிளர்ச்சி ஏற்பட வேண்டுமா என்று கேட்கலாம். ஆம்! இத்தகைய கிளர்ச்சி அவசியமேயாகும். இக்கிளர்ச்சி ஒவ்வொர் யுகத்திலுமேற்பட்டுத்தானிருக்கிறது. கூடுமானால் இரண்டொருவரை அடக்கிவிடலாம். தேச மக்களுள் பிராமணரல்லாத சமூகத்திடை எங்கும் பரவி நிற்கும்   இக்கிளர்ச்சியை அடக்க முடியுமென்பது ஒரு போதும் சாத்தியமெனத் தோன்றவில்லை. அதற்கு என்ன காரணமென்று அவர்களும் யோசித்து சமரசமான முடிவுக்கு வந்தாலன்றி வேறுவகையில் இக்கிளர்ச்சியை அடக்குவது சாத்தியமன்று. ஆயிரக்கணக்கான வருடங்களாக மதத்தின் பெயராலும் பிறவழிகளிலும் மக்களை ஏமாற்றி வந்திருப்பதன் சம்பந்தமாக அப்போதைக்கப்போது இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டு அத்தீமைகளை ஒழிக்க முயற்சி செய்யப்பட்டிருக்கின்றது.

  ராமாயண பாரத யுத்தங்கூட பிராமணரல்லாதார் பிராமணர் சண்டை என்றே சொல்லப் போதிய ஆதாரமிருக்கின்றது. ராமன் முதலானோரை பிராமணராகவும் அரக்கர்களை பிராமணரல்லாதாராகவும் கொண்டு ராமாயண யுத்தமும் இத்தகைய கிளர்ச்சியின் பயனானதென்று கருதுகின்றனர். ராமாயண பாரதக் கொடுமைகளின் சம்பந்தமாக நமது அவமானங்களைக் கேட்க நாம் பணங்கொடுத்து காலட்சேபங்களை நடாத்தச் சொல்லுகின்றோம். சிறிது காலத்திற்குள்ளேயே இத்தகைய யோக்கியதைகளெல்லாம் வெளிப்பட்டு விடுமென்பதில் சந்தேகமில்லை. அரசியலிலும் மற்றைத் துறைகளிலும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் நாம் கீழ் நோக்கிப் போகின்றோம். இப்போது அத்தகைய சூழ்ச்சிகளும் ஏமாற்றங்களும் வெளிப்பட்டு வருகின்றன.   அவர்கள் வெளியில் பேசும் சமத்துவமும், சகோதரத்துவமும், ஜாதியில்லை குலமில்லை என்ற சமரசக் கொள்கையும், வீட்டுக்குப் போனால் கட்டி தெருவாயிற் படியில் வைக்கப்பட்டு விடுகிறதென்பது திண்ணம்.   அவர்களுக்கு பலவகைப்பட்ட உணர்ச்சிகளும் வேடமும் உண்டு. அவர்கள் உண்மையில் சொல்வது ஒன்று,   செய்வது வேறு என்பது கடவுளுக்கும் தெரியும்.   பழக்க வழக்கங்களில் இன்னும் மூடநம்பிக்கை கொண்டிருப்பது சரியல்ல. அதனைக் குறித்து எது சரி எது தப்பு என்று நன்காராய வேண்டுவது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். அபிப்பிராயங்களில்   பேதமிருந்தால் இங்கேயே தைரியத்துடன் வாதாடி முடிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு கேட்ட விஷயங்களை எல்லாம் இங்கிருக்கும் வரையில் சரி எனத் தலையை அசைத்து விட்டு வீட்டுக்குச் சென்ற பின் மறந்து விடக்கூடாது.

நாம் முக்கியமாகக் கஷ்டப்படுவது சுயராஜ்யத்திற்காகவல்ல. ஆனால் சுயமரியாதையைக் காத்துக் கொள்ளவேயாம். சுயராஜ்யமென்பதன் உண்மை பொருளை இன்னும் எவரும் நன்கறியவில்லை. சுயராஜ்யம் பார்சலில் வந்து சேருமா அன்றி நாமாகவுண்டாக்கிக் கொள்வதாவென்று யாரும் இன்னும் வாஸ்தவத்தையறிந்து கொள்ளவில்லை. சுயராஜ்யமின்னதென்று மகாத்மா கூட இன்னும் சொல்லாமல் அதற்கு யோக்கியமாகப் பிரயத்தனப்படுங்களென்று தான் சொல்லுகின்றார். அத்தகைய சுயராஜ்யமென்னவென்றால் இன்று நீங்கள் இங்கு நிறைவேற்றிய தீர்மானங்களைக் கொண்டு அநுசரித்தடையும் பலனேயாகும். (கரகோஷம்) சுயராஜ்யமென்ற வார்த்தையைக் கொண்டு சாதித்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் நிர்மாணத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.   தெரியாத விஷயத்தைக் குறித்துக் கூச்சலிடுவதினால் பயனில்லை.   இதனால் ஏமாற்றமும் கஷ்டமும் தான். ஆனால் சூழ்ச்சிக்காரர்கள் சட்டசபைக்குள் நுழைந்து கொள்வதற்கும் வயிற்றுக்கில்லாதவர்கள் நாலு இரண்டு வாங்கி கோடாரிக் காம்புகளாக வயிறு வளர்த்து சமூகத் துரோகம் செய்வதற்குத்தான் வழியேற்படக்கூடும். உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு நன்மையில்லை.

நாங்களெல்லாம் காங்கிரசில் சேர்ந்துழைத்தது அங்கு அப்போது சுயமரியாதையைக் காத்துக் கொள்ளக்கூடிய தத்துவங்கள் பல அடங்கியதான கொள்கையிருந்ததனால்தான்.   அக்காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு உயர்ந்த உத்தியோகப் பதவிகள் சம்பாதிப்பதற்காகத் தானிருந்தது அப்போது காங்கிரஸ்காரர்களைத் திண்ணையிலும் உட்கார வைப்பார் யாருமில்லாதிருந்தனர். காங்கிரசை மகாத்மா கைப்பற்றி அதில் பல நிர்மாணத் திட்டங்களைச் சேர்த்து வேலை செய்ய முற்பட்ட பின்தான் அக்காங்கிரசுக்கு மதிப்பும் செல்வாக்கு மேற்பட்டது.   அதன் கொள்கைகள் சமத்துவ பலனளிக்கும் தத்துவமுடையதாயிருந்தமையினால் தான் நாங்களெல்லோரும் அக்காங்கிரசில் சேர்ந்துழைக்கச் சென்றோம்.   திடீரென்று அதன் போக்கில் வேறுபட்டு மகாத்மா காந்தியின் கொள்கைகள் ஒவ்வொன்றும் கை நழுவ விடப்பட்டதனால் தான் நாங்களும் அதனை விட்டுப்பிரிந்து சுயமரியாதையை காத்து சமத்துவமான தத்துவத்திற்காகப் பாடுபடும் இச்சங்கத்தில் சேர்ந்துழைக்க முன்வந்துள்ளோம். (கரகோஷம்)

தற்போதுள்ள காங்கிரசினால் நாட்டுக்கு ஆபத்தேற்படுமென்பது உறுதி. நாம் நிறைவேற்றும் கொள்கையை மீண்டும் காங்கிரஸ் மேற்கொண்டு வேலை செய்ய முற்படுமாயின் பின்னும் நாங்களனைவரும் அக் காங்கிரசிலேயே சேர்ந்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.   காங்கிரசை தேசிய சபையென்றும் அதனை முன்னிட்டு அதில் எவ்வளவு குற்றமிருந்தாலும் அதனைக் குறை கூறுவது கூடாதென்பதும் முற்றுந் தவறு.   புரட்டும், பித்தலாட்டத்தையும்   வெளிப்படுத்தி அது காங்கிரசாயினும் மற்றெந்த சபையாயினும் அதனைக் கண்டிக்க வேண்டியதே உண்மை தேசாபிமானிகள் கடமை.   காங்கிரஸ் சபையோ அன்றி மற்றெந்த சங்கமோ மக்களின் நன்மையை உத்தேசித்தே ஏற்படுத்தப்பட்டதேயன்றி வேறல்ல.   ஒரு தீர்த்தத்தின் நீர்கெட்டு கிருமிகள் மிகுந்து அதில் குளித்தால் நோயுண்டாகுமென்று தெரிந்து கொண்டும், ஸ்தல புராணத்துக்குப் பயந்து அக்குளத்து நீரில் குளிப்பது கூடாது. (நகைப்பு)   அதனை உடனே மண்ணைப்போட்டு மூடி விட்டு வேறு தீர்த்தமொன்றை வெட்டிக் கொள்ள வேண்டும் (கரகோஷம்). அதுபோலவே யோக்கியமாயிருந்தால் காங்கிரசை மதிக்க வேண்டியது தான்.   இல்லாவிட்டால் அதனை ஒழிக்க வேண்டியதுதான் முறைமை.   ஒத்துழையாமை கைக்கொள்ளப்பட்டு நிர்மாணத் திட்டங்கள் பல ஊக்கத்துடன் அநுசரிக்கப்பட்டன.   ஆனால் பின்னர் அத்தகைய நிர்மாணத் திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டன.

காங்கிரசினால்தான் நமது தேசத்தில் இவ்வளவு கஷ்டங்களும் துவேஷமும் கூச்சலும் குழப்பமும் மேற்பட்டதென்பது தான் உண்மையான அபிப்பிராயம்.   மேலும் நம் தேசம் இக்கதியடைந்ததற்கும் பிராமண, பிராமணரல்லாதார் சச்சரவுக்கும் இத்தகைய காங்கிரஸ்தான் காரணமானது.   முப்பத்தாறு வருடங்களாக காங்கிரஸ் செய்ததை ஒழிக்கத்தான் மகாத்மா காந்தி பகிஷ்கார திட்டத்தைப் புகுத்தினார்.   சர்க்கார் பேரில் குற்றம் சொல்லும் விஷயங்களில் எல்லாம் இக்காங்கிரசுக்கும் பங்குண்டு.

  நடுநிலைமையில் நேர்மையாக ஆலோசிக்குமிடத்து காங்கிரசினால் ஏற்பட்டுள்ள பல கஷ்டங்களும் ஒருவருக்கும்   நன்கு புலனாகாமல் போகாது.   காங்கிரசுக்கு முன் கட்சிப்பிரதி கட்சி சச்சரவுகளும் துவேஷமும் இவ்வளவாக விருக்கவில்லை.   காங்கிரசின் உழைப்பின் பலனாகத்தான் அதிக உத்தியோகங்களும் அதற்கேற்ற வரியுமேற்பட்டது.   நாற்பது வருடங்களுக்கு முன் போலீஸில் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும், தாலூகாவில் தாசில்தாருக்கும் மேலில்லை. அப்போது அவர்களுக்கு சம்பளம் முறையே ரூபாய் 200ம் 150 ந்தான்.   அவ்வாறிருந்தும் அவர்களுக்குச் சட்ட மெம்பருக்குள்ள அதிகாரத்தைவிட நூறு மடங்கு அதிகாரமிருந்தது.   இக்காலத்திலோ கலெக்டரின் குசினிக்காரனுக்கு மனங்கோணும்படி தாசில்தார் ஏதாவது செய்தாலும் அவர் தலையில் கை வைக்கப்பட்டு விடும் நிலைமைக்கு வந்துவிட்டது.   (நகைப்பு)

அந்தக் காலத்தில் அவர்களெல்லாம் சுயமதிப்புடனும் கௌரவத்துடனும் நடந்து கொண்டார்கள். அக்காலத்தில் உத்தியோகத்திற்கிருந்த கௌரவத்திற்கேற்ற கண்யவானுக்குத்தான் அவ்வுத்தியோகமும் கொடுக்கப்படும். மேலதிகாரிகளுக்கும் அவர்களிடம் போதிய மதிப்பும் கௌரவமுமிருந்து வந்தது. காங்கிரஸ் ஏற்பட்டதன் பின் உத்தியோகத்திற்கு யோக்கியதையே வேறாகிவிட்டது.   அவ்வுத்தியோகங்கள் ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டு வந்ததால் பெரிய மனிதர்களும் யோக்கியப் பொறுப்புடையவர்களும் பின் தள்ளப்பட்டு விட்டனர்.   இதனால் பிச்சை எடுத்தவனும் லாந்தர் விளக்கில் படித்தவனும் பஞ்சாங்கக் கட்டுக்காரன் மகனும் ஆதிக்கம் செலுத்த வந்து   விட்டனர்.   இதன் பலனாய் உத்தியோகங்களின் மதிப்பும் கௌரவமும் இழிநிலையை யடைந்துவிட்டது.   மேலும் இழிந்த நிலையிருந்தவர்களும் கண்டபடி இவ்வுத்தியோகங்களுக்கு வந்துவிட்டனர்.

  அரசாங்கத்திற்கு உத்தியோகஸ்தர்கள்தான் முக்கியம்.   இதன் சம்பந்தமாக கண்யமும் மதிப்பும்   போய் அவ்வுத்தியோகத்தின் நிலையே அடியோடு திரும்பி விட்டது. காங்கிரசுக்குப்பின் தான் ஓட்டுச் சுதந்திரமும் விரிவாக்கப்பட்டது. மேலும் பிரதிநிதித்துவத்திலும் தொகை அதிகமாக்கப்பட்டது. அக்காலத்தில் சட்டசபையில் மூன்று பிரதிநிதிகளிருந்தனர். அவர்களும் கூடுமானவரையில் நல்ல வேலை செய்து வந்திருக்கின்றனர். காங்கிரஸ் ஏற்பட்டு ஓட்டுரிமையைக் கண்டபடி உபயோகிக்கப்பட்டது.  யாருக்காவது ஓட்டுக்கேட்டு வாங்கிக் கொடுக்கப்படுகிறதேயொழிய வாங்கிக் கொடுக்கப்படுபவரின் யோக்கியதை என்னவென்ற கவலையே கிடையாது. நமது ஓட்டுரிமைகளை உண்மைப் பிரதிநிதித்துவத்திற்கு உபயோகப்படுத்தும் முறைகளில் நாம் கவனம் செலுத்துவதேயில்லை.   

தேர்தல் வியாபாரத்தின் போக்கையும் ஓட்டுக் கொடுக்கும் ஊழல்களும் எவ்வளவு கேவலமாகிவிட்டதென்பதை நான் விளக்க வேண்டுவதேயில்லை.   இப்போதே இவ்வாறிருக்கையில் அதைவிட பெரிய சுதந்திரம் வந்து என்ன பயன்.   அப்போது மூன்று ஜில்லாவுக்கு ஒரு மெம்பராக விருந்தது,   இப்போது ஒரு ஜில்லாவுக்கு மூன்று மெம்பராகி விட்டது.   அப்போது மூன்று ஜில்லாவுக்கு எழுநூறு ஓட்டர்களென்றால் இப்போது ஒரு ஜில்லாவுக்கு ஏழாயிரம் ஓட்டர்களுமாக்கப்பட்டு விட்டது.   மேலும் ஓட்டர்களை ஒரு அணாவுக்கும் ஒரு சொப்பு காப்பிக்கும் ஓட்டுச் செய்யும் தன்மைக்கும் கொண்டு வரப்பட்டது. எல்லோருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டுமென்பது மேலான காரியந்தான்.   ஆனால் ஓட்டுரிமையின் மேன்மையையும் அதன் தத்துவத்தையுமுணறாமல் ஒரு சொப்பு கள்ளுக்கும் ஓட்டுக் கொடுத்து விடுபவர்களுக்கும் இவ்வுரிமையளிக்கப்படுவதனால் பயன் யாது?   (தொடரும்)

  - ( திராவிடன். )

குறிப்பு             : திருவண்ணாமலையில் 6.2.27 இல் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தலைமையுரையின் முடிவுரையாக ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 13.02.1927