அறிவுத்தளத்தில் "புதுமலர்" இதழ் பெற்று வரும் பெரும் வரவேற்பு ஊக்கமளிக்கிறது. "ஒவ்வொரு இதழும் ஓர் ஆவணமாக இருக்கிறது" என நண்பர்கள் குறிப்பிடுவதை இதழுக்கான சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
அவ்வகையில் இவ்விதழில் கவிஞர் சிற்பி அவர்களின் விரிவான நேர்காணல் இடம் பெற்றுள்ளது. சிற்பி அவர்களின் பேட்டிகள் ஏற்கெனவே நிறைய வந்துள்ளன. எனவே அவற்றில் வந்த வினாக்களையே திரும்பத் திரும்பக் கேட்பதில் பயனேதும் இல்லை என உணர்ந்ததால், அதிகம் கேட்கப்படாத பல கேள்விகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. சில பழைய வினாக்கள் தவிர்க்க இயலாமல் இடம் பெற்றிருந்தாலும், சிற்பி அவர்களது பன்முக ஆளுமையை & பேருருவை - இந்நேர்காணல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது என்பதை வாசகர்கள் உணர முடியும்.
தோழர் தியாகு அவர்களின் "மண்ணுக்கேற்ற மார்க்சியம்" குறித்த கட்டுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எண்ணுகிறேன். தற்பொழுது பேசுபொருளாக இருக்கும் இப்பொருண்மை குறித்து மார்க்சிய வட்டத்தில் நிறையக் கேள்விகள் நிலவுகின்றன. அவற்றை எதிர்கொண்டு இக்கட்டுரை விடையளிக்கிறது. காலப்பொருத்தப்பாடு மிக்க இக்கட்டுரைக்கான எதிர்வினைகள் வரவேற்கப் படுகிறது.
அடுத்தடுத்த இதழ்களில் அவை இடம் பெறும்.
பேராசிரியர் சாய்பாபா அவர்கள் மனித உரிமைக்களத்தில் மாபெரும் அதிர்வுகளை உண்டாக்கிய பேராளுமை என்பதை அனைவரும் அறிவர். அவரது நிறுவனப் படுகொலை இந்தியாவின் மனசோட்சியை மட்டுமல்ல, உலகத்தின் மனசாட்சியையே உலுக்கி விட்டது. அவரது ஒரே மகள் மஞ்சீராவிடம், தனது தந்தை குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு அவரை நேரில் சந்தித்த பொழுது கோரியிருந்தோம். அதற்கேற்பக் கடித வடிவிலான, பெரும் நெகிழ்ச்சியை உண்டாக்கும், படைப்பை அவர் அனுப்பி உதவினார்.. நமது வேண்டுகோளை ஏற்றுப் புதுமலர் இதழுக்கெனவே இதை எழுதி அனுப்பிய மஞ்சீரா அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
களப்பிரர் காலம் குறித்துத் தமிழிலக்கியப் புலத்தில் நீண்ட காலமாகவே விவாதம் நிலவி வருகிறது. களப்பிரர் காலம் பொற்காலம் எனும் கருத்துத்தான் பெரும்பாலும் மேலோங்கி உள்ளது. ஆனால் அதற்கு மாறான கருத்தைப் பல்வேறு தரவுகள் மூலம் வழங்குகிறார் ஆய்வாளர் கணியன் பாலன் அவர்கள். எனவே இக்கட்டுரை குறித்தும் உரிய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
அகத்தியரது திடீர்த் திணிப்பு குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் அகத்தியர் பற்றி அகசோன்றுகளோடு வந்த தகவல்கள் மிகமிகக் குறைவு. வெறும் புராணக் குப்பைகள்தான் மண்டிக் கிடக்கின்றன. இத்தகைய இருண்ட சூழலில் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி அவர்களது கட்டுரை புத்தொளி பாய்ச்சுவதாக இருக்கும்.
ஆங்கிலேயரான ஜார்ஜ் ஹார்ட், ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். சமஸ்கிருதப் பேராசிரியராகவும் பணியாற்றிய இவருக்கு கிரேக்கம், இலத்தீன், இரசியன், செருமானியம், பிரெஞ்சு மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒப்பியல் நோக்கில் ஆய்ந்தவர். அவரது 80 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் இடம்பெற்ற அவரது இணைய வழி உரையைப் பேராசிரியர் கமலக்கண்ணன் அவர்கள் தமிழில் வழங்கியுள்ளார். அவருக்கு எம் நன்றி.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்களது அணுக்கத் தொண்டர் சதீஷ்குமார் அவர்கள். நாடக ஆசானது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் சதீஷ்குமாரது சுவையான கட்டுரை இவ்விதழில் வெளியாகி உள்ளது. எதிர்வரும் காலத்தில் கூத்துப்பட்டறை சார்ந்த கட்டுரைகள் வெளிவருவதற்கு இக்கட்டுரை முன்னோடியாகத் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாலியன் வாலாபாக் குறித்த ஆங்கில நூலைச் சிறப்பாக அறிமுகப் படுத்தும் பேராசிரியர் விஜயகுமார் அவர்களது கட்டுரை, இந்தித் திணிப்பு பற்றிக் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்களது நெருப்புக் கவிதை, யூஜிசி வரைவறிக்கை 2025 குறித்த எனது கட்டுரை மற்றும் வழக்கமான சில கூறுகளுடன் இவ்விதழ் அடர்த்தியாக வெளிவந்துள்ளது.
புதுமலர் இதழில் வெளியாகும் கட்டுரைகள், படைப்புகள் குறித்து வாசகர்கள் பலர் நேரிலும், கைபேசி வாயிலாகவும் கருத்துக்களை ஒவ்வொரு முறையும் தெரிவிக்கின்றனர். அதையே அவர்கள் மின்னஞ்சல் மற்றும் புலனம் வழியாகப் பதிவிடுமாறு கனிவுடன் வேண்டுகிறேன்.
- கண.குறிஞ்சி