கொலை என்பது ஆதிகாலம் தொட்டு மனித இனத்தில் ஒரு குற்றமாகவே உள்ளது. உலகின் பல்வேறு மதங்களின் புனித நூல்களில் கொலைகள் அவரவர் மதம் சார்ந்து நியாயப்படுத்தப்பட்டுள்ளன. வேட்டைச் சமூகத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட போரில் கொத்துக் கொத்தாய் கொலைகள் நடைப்பெற்றுள்ளன. அவற்றைச் சமூகப் படுகொலை என்று சொல்லலாம். அரசர்களுக் கிடையே நடைபெற்ற போர்களில் செய்யப் பட்ட கொலைகள் வீரம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டன. குடும்ப உறுப்பினர் களிடையே ஏற்படும் சொத்துப் பிரச்சனை, பெண்வழி உறவுச் சிக்கல், பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறுப் பிரச்சனை களால் நடைபெறும் கொலைகள் எனப் பல்வேறு வடிவங்களில் படுகொலைகள் உலகம் எங்கும் நடைபெறுகின்றன.
சனநாயக ஆட்சிமுறை வந்தபின் போர்களால் ஏற்படும் படுகொலைகளைவிட அரசியல் கட்சிகளுக்கிடையிலானப் போட்டி யால் நடைபெறும் கொலைகள், பாலியல் வன்முறை சார்ந்த கொலைகள், போதைப் பொருள் பழக்கங்கள் சார்ந்த கொலைகள், சண்டியர் கும்பலுக்கிடையில் நடைபெறும் கொலைகள், கூலிப்படையை வைத்து நடத்தப்படும் பழிவாங்கல் கொலைகள், இவைதவிர பாலியல் உறவுச் சிக்கலால் அன்றாடம் நடைபெறும் பல கொலைகள், ஆணாதிக்கச் சமூகத்தால் பெண்கள் மீது நடத்தப்படும் வன்புணர்வுக் கொலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் கொலைகள் எனக் கொலைகளில் பல பரிமாணங்கள் உள்ளன.
கிருஷ்ணன் பூதகி, கம்சன் போன்றவர் களைக் கொன்றது, முருகன் தாரகாசுரனைக் கொன்றது. காளி மகிசாசுரனைக் கொன்றது என இந்து சமயக் கடவுள்கள் நடத்திய படுகொலைகள், சைவ, வைணவ சமயங்களை நிலைநாட்ட ஆசீவக, சமண முனிவர்களைக் கழுவேற்றிக் கொன்ற பெருங்கொலைகள், சைவ வைணவ சமயங்களிடையே ஏற்பட்ட மோதல் கொலைகள் என இந்து மதம் சார்ந்த கொலைகள் அவரவர் வேத நூல்களால் நியாயப்படுத்தப்பட்டன. யெகோவா என்னும் கடவுள் இசரவேலர்களுக்கு ஆதரவாக எகிப்தியர்கள் மீது இனப் போர் நடத்தி இனப் படுகொலைகளைக் செய்ததும், பைபிளில் முதல் கொலையாகக் காட்டப்படும் ஆதாம்ஏவாளின் மூத்தமகன் காயின் தனது தம்பியான ஆபேலைக் கொன்றதும், யூத பழைய ஏற்பாட்டுக்கு எதிராகப் புரட்சிச் செய்ததால் ஏசுவை யூதர்கள் கொன்றதும் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்த அறிஞர்களின் படுகொலைகளும் கிருத்துவ, இசலாமிய மோதலான சிலுவைப் போர்களால் நடந்த படுகொலைகள், கிறித்துவம் சார்ந்த படுகொலைகளில் அடங்கும். எங்களுக் கென்று ஒரு ஞாய உறுதிப்பாடு (பிரமாணம்) உண்டு. அதன்படி இவன் சாகத்தான் வேண்டும் என யூதக் கும்பல் நீதிபதி பிளாத்துவை நோக்கிக் கத்திக் கலகம் செய்து ஏசுவைக் கொல்ல வழிவகுத்தனர். ஆனால் ஏசுவைக் கொல்லுவதற்கான குற்றச்சாட்டு களும் இல்லை என்பதை உணர்ந்த நீதிபதி பிளாத்து ஏசுவுக்கு மரணத்தண்டனை வழங்க மறுத்து தண்ணீர் ஊற்றி தன் இரு கைகளையும் கழுவிவிட்டு நீதிபதி பொறுப்பிலிருந்து விலகினார் என பைபிள் கூறுகிறது.
சிலை வழிப்பாட்டுக்காரர்களான அரேபியர்களை ஓர் இறைக் கோட்பாட்டின் கீழ்க்கொண்டு வந்து இஸ்லாத்தை நிலைநாட்ட முகமது நபியும், அவரது தோழர்களும் நடத்திய போர்களில் நடைபெற்ற படுகொலைகள், இஸ்லாமிய அடிப்படை வாதத்தால் நடைபெறுகின்ற தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் படுகொலைகள் என இஸ்லாம் சார்ந்தும் பல்வேறு கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.
இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் அரசப் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் விடுதலைப் போராளிகள், காலிஸ்தான் விடுதலைப் போராளிகள், அசாம் விடுதலைப் போராளிகள், நாகலாந்து விடுதலைப் போராளிகள், தமிழரசன், அப்பு, பாலன் உள்ளிட்ட தமிழ்நாடு விடுதலைப் போராளிகள் போன்ற எண்ணற்றப் போராளிகளை இந்திய ஒன்றிய அரசு படுகொலை செய்தது.
உயர்கல்விக் கற்க வாய்ப்புகள் மறுக்கப்படும்போது மாணவ சமுதாயத்தினர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நிலையும் கல்விசார் அரசப் பயங்கரவாதப் படுகொலைப் பட்டியலில் அடங்கும். அனிதா தற்கொலையை நாம் அந்த வகையில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வு என்னும் மோசடிக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் பல்வேறு உயிர்கள் பழியாவது இந்திய ஒன்றிய அரசின் கல்விப்படுகொலையாகும்.
தற்காலத்தில் இந்துத்துவம் என்னும் கோட்பாட்டைக்கொண்ட ஸிஷிஷி அமைப்பால் நடத்தப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த்காந்தி படுகொலை, கௌரிலங்கேஷ், கல்புர்கி போன்ற சமூகச் சீர்த்திருத்தவாதிகள் கொலை என இந்துத்துவம் சார்ந்து இந்தியாவில் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
இவை அல்லாமல் மேல்சாதிக் கட்டுமானத்தை காப்பாற்றிக்கொள்ள தலித்துகள் மீது நடத்தப்படும் படுகொலைகள், சாதியைக் கட்டுடைக்கும் காதலர் மீது நடத்தப்படும் ஆணவப் படுகொலைகள் என கொலைகளின் விதங்கள் பலவாக உள்ளன.
இவை அல்லாமல் ஏகாதிபத்திய நாடுகளால் தங்களுக்குச் சாதகம் இல்லாமல் உள்ள மூன்றாம் உலகநாடுகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும் இதில் அடங்கும். மு. அம்மர் அல்கடாபி, சதாம் உசேன் போன்ற தலைவர்களின் படுகொலையும், ஒசாமாபின்லேடன் போன்றவர்களைக் கொன்றதும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் அச்சுறுத்தல் படுகொலைகளாகும்.
இந்தியாவின் தலைவர்களான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கொல்லப்பட்டது தேசிய இனச் சிக்கல்களில் தலையிட்டுத் தவறான அரசியல் முடிவுகளை எடுத்து, அதனால் பழிக்குப் பழியாக நடந்த படுகொலைகள் பட்டியலில் அடங்கும். இவையும் அரசியல் கொலைகள் வகைப்பட்டதாகவும், ஆலடி அருணா, தா.கிருட்டிணன், ஏழுமலை, லீலாவதி, யு.யு.ஆர். வரதராஷன் போன்றவர்கள் கொல்லப்பட்டது அரசியல் கட்சிகளிடையே ஆன மோதல்களால் நடைபெற்ற கொலைகளாகும். அந்த அரசியல் கொலை வரிசையில் பகுஷன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை அரசியல் வகையை முழுக்கச் சார்ந்தது அல்ல; கார்ப்பரேட் நிறுவனம் சார்ந்த கொலையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அவருடைய முன்னாள் ரவுடியிச செயல்கள் என கூறிச் சிலர் இக்கொலையை நியாயப்படுத்த பார்க்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ரவுடி நிலையில் இருந்து மாறி சமுகநீதி அரசியல் வழியும் பௌத்தத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு அரசியல் கட்சியின் மாநிலத்தலைவருக்கான அத்தனைத் தகுதிகளையும் பெற்றிருந்தார் என்பதே உண்மை.
பல வழக்கறிஞர்களை உருவாக்கியதோடு பல மாணவர்களின் கல்விக்காகத் தொடர் உதவிகளைச் செய்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். மேலும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தால் ஏய்க்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று போராடி அவர்களின் பணத்தை மீட்டுத் தந்ததால் ஆத்திரமடைந்த அந்த நிறுவனம் ரவுடிகளைப் பயன்படுத்தி ஆம்ஸ்ட்ராங்கைப் படுகொலை செய்துள்ளது.
ரவுடி ஆர்க்காடு சுரேசைக் கொன்றவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் அடைக்கலம் கொடுத்ததாகக் கருதிக் கொண்டிருந்த ஆர்க்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலாவின் நிலைப்பாட்டை அறிந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொன்னை பாலாவின் தலைமையிலான ரவுடிக் கும்பலைப் பயன்படுத்தித் தனது பழியைத் தீர்த்துக்கொண்டது என்பதே உண்மை. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் பெண்களிடம் அளவுக்கு அதிகமாகக் கடன் கொடுத்து அவர்களை வாழ்நாள் கடன்காரிகளாக மாற்றிவிட்டுக் கடன் தவணையைக் கட்ட தாமதம் ஏற்படும்போது ரவுடிகளை ஏவி அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிகள் அன்றாடம் நடைபெறுகின்றன. சில ஊர்களில் கொலை மிரட்டல்களும் நடக்கின்றன. மெல்ல மெல்ல தமிழ்நாட்டுக் கிராமங்கள் கார்ப்பரேட் வளையத்துக்குள் சிக்க வைக்கப்படுகின்றன. அதை எதிர்க்கும் இயக்கத் தலைவர்களுக்கும் இதேபோன்று பேராபத்து உள்ளது.
இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சதிவலைப் பின்னலை காணத்தவறி ஆம்ஸ்ட்ராங் படுகொலையைச் சாதிய வளையத்துக்குள் அடைத்து அதைச் சுற்றித் தலித் அரசியல் என்று தொடங்கிச் சாதிய அரசியலையே மீண்டும் செய்யும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் போன்ற நபர்களும் சில சாதிய இயக்கத் தலைவர்களும் தங்களை அறியாமலேயே தலித்துக்களின் போர்க் குணத்தைக் காயடிக்கின்றனர். தலித் இளைஞர்கள் உண்மையான சமூக மாற்றம் வேண்டிப் புரட்சிகர கம்யூனிஸ்ட் அமைப்புகளின் பின்னால் அணிதிரள்வதைத் தடுக்கவே பா. ரஞ்சித் போன்ற நபர்களைப் பயன்படுத்தி வல்லரசிய நாடுகள் பின்னிருந்து இந்த சதி வேலையைச் செய்கின்றன.
1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி ஏற்பட்ட மராட்டிய தலித் எழுச்சியின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டிலும் தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் பண்பாடு என்கிற கோணங்களில் தலித் விடுதலைச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சாதியத்தை ஒழித்துக்கட்டும் புரட்சிகர நடைமுறைக்கு மாறாக எதிர்ப் பண்பாட்டுக் கூறுகளைப் புகழ்ந்து பேசுதல், தலித் சாதிகளின் உட்சாதிப் பிரிவுகளைப் புகழ்ந்து பேசுதல், அந்த உட்சாதிகளில் உள்ள அரசர்களைத் தேடுதல் எனத் தலித் அரசியல்வழி விலகல் ஆனது. சமூகத்தைச் சீரழிக்கும் பழக்க வழக்கங்களைத் தலித் பண்பாடு என வரையறுத்து ஒரு தலைமுறையே சீரழித்த “நிறப்பிரிகை” கும்பல் தலித் இளைஞர்களைத் திட்டமிட்டுக் காயடித்தது. அந்தக் கும்பலில் அ. மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கௌதமன், சிவகாமி, மிகிஷி உள்ளிட்ட பலர் இந்தப் புனிதப் பணியைச் செவ்வனே செய்தனர். அதனால் தலித் இளைஞர்கள் வழி விலகிப் புரட்சிகரத் தன்மையை இழந்து ஒன்றுக்கும் உதவாத உட்சாதிப் பெருமை பேசும் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். அறிவியல் வழிப்பட்ட பொருள் முதல் வாதத்திற்கு முற்றிலும் பொருந்தாத தலித்துகளின் விடுதலைக்குச் சிறிதும் உதவாத உண்மைத் தன்மை இழந்து திரிபுவாத நோயால் பாதிக்கப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத கொள்கைகளைக் கொண்ட புத்த மதத்தை தலித் விடுதலைக்கான வழி எனத் தவறாக நம்ப வைத்துத் தலித்துகளை திட்டமிட்டே ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுத்து வளர்த்து விடுகின்றன. அந்த வலைப்பின்னல்களில் வீழ்ந்து தங்களை அறியாமல் பலியாகும் தலித் தலைவர்களின் பட்டியல் இந்தியாவில் நீள்கிறது. அதில் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர்.
பட்டியல் இன மக்களின் உட்சாதிப் பிரிவுகளை அணிதிரட்டுவதன் மூலம் விடுதலை கிடைக்கும் என நம்புவது அபத்தமானது ஆகும். அப்படி இதுவரை ஏதும் நடந்ததில்லை. எந்தச் சாதியும் தனியாகத் திரண்டு தனக்கான விடுதலையை பெற்றுக் கொண்டதில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங் கொலையை மையப்படுத்தி அதன் மூலம் பட்டியல் இன மக்களின் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நடப்பதாக அறிகிறோம். இது மிகவும் பிற்போக்குத்தனமான முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாகும். இதனால் தலித்து விடுதலை ஒருபோதும் சாத்தியமாகாது. சாதி ஒழிப்பு சக்திகள் அனைத்துச் சாதிகளிலும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடன் ஒரு ஐக்கியத்தையும் அப்படிப்பட்ட அமைப்புகளுடன் ஒரு ஐக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாகவே சாதி ஒழிப்பு சாத்தியமே தவிர சாதிய ரீதியான அணித்திரட்சிகள் ஒருபோதும் பயன் தராது. தலித் சாதிகள் உட்பட பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட வேறு எந்த சாதிகளுக்குமே இது பொருந்தும். சாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கின்ற அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் சாதி ஒழிப்பு இயக்கங்களின் பின்னால்தான் அணிதிரள வேண்டும்.
தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை ஏற்கும் மார்க்சிய இலெனினிய புரட்சிகரக் கோட்பாட்டை ஏற்றுப் புரட்சிகரக் கம்யூனிச அமைப்புகளின்கீழ் அணிதிரளும் போர்க்குணம் மிக்க தலித் இளைஞர்களைத் திசைதிருப்பிப் போகாத ஊருக்கு வழிகாட்டும் இந்திய அளவிலான தலித் தேசம் கேட்கும் போலி அரசியல் மனநிலையை புத்தமதத்தை ஆதரிக்கும் தலித் இயக்கங்கள் செவ்வனே செய்கின்றன. இது மிகவும் ஆபத்தான போக்காகும். புத்த மதம் அரசு மதமாக மாறி தன் அகிம்சைக் கொள்கை இழந்து இனப்படுகொலைக்கு துணைபோகும் அவல நிலையை அடைந்து பலகாலம் ஆகிறது. அந்தக் காலாவதியாகிப் போனக் கோட்பாட்டைத் தலித் விடுதலைக்கான கருவி என்று கருதவைப்பது சமூக அரசியல் பெரும் குற்றமாகும். எந்த ஒரு தத்துவமும் மத நிலையை அடையும் போது அது விடுதலைக்கான கோட்பாடாக இருக்காது. அடிமைத்தனத்துக்கே அச்சாரம் போடும். அறிவியல் வழிபட்டு நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் உண்மையை ஏற்றுக்கொண்டும் இயங்கும் சமூக விஞ்ஞான கோட்பாடான மார்க்சியமும், இலெனினியமும் மட்டுமே தலித் விடுதலை உள்ளிட்ட அனைத்து வகை விடுதலைக்கும் அருமருந்தாகும்.
- தங்க குமரவேல், தமிழக மக்கள் விடுதலை இயக்கம்