ஆயிரம் ஆண்டுகளாய் ஆரியம் செய்துவரும் கேடுகளாலும், நூற்றாண்டுகளாய்ப் பன்னாட்டு முதலாளியம் இழைத்து வரும் சுரண்டல் அதிகாரத்தின் கொடுமைகளாலும் ஏற்பட்டிருக்கிற நோய்கள் தமிழ்க் குமுகத்தில் முற்றி வருகின்றன..

சாதி வெறித் தாண்டவமாடுகிறது.. மதப்பித்தையும், மதவெறித்தனத்தையும் ஆர் எஸ் எஸ் இன் பரிவாரங்கள் திட்டமிட்டு வளர்க்கின்றன..

அரம்பத்தனங்களை அரவணைத்து வளர்க்கின்றன பாஜக உள்ளிட்ட சாதி, மதவெறிக் கட்சிகள்..

சாலைகளில் சுங்கச்சாவடி என்கிற பெயரில், ஜிஎஸ்டி என்கிற பெயரில், கனிம வளங்களை, கடல் வளங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போகிறது இந்திய அரசு..

தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவில் உள்ள மொழி மாநிலங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்கி அடையாளம் இல்லாமல் செய்து வருகிறது இந்தியப் பார்ப்பனியம். தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்கள், காஷ்மீரிகள் என்று யாரும் அவரவர் இனத்தின் பெயர்களைக் கல்விச் சான்றிதழ்களில், வேறு அரசு பதிவுகள் எவற்றிலுமே செய்து கொள்ள முடியாது..

கல்வி உரிமை, தொழில் உரிமை, வணிக உரிமை, கருத்துரிமை என அனைத்தையும் ஒடுக்கி இந்திய அரசு தன் அதிகாரத்தின் கீழ்க்கொண்டு போய் விட்டது..

ஆளுநரின் அடங்காப்பிடாரி அதிகாரத் தன்மைகள் மாநில அரசுகளை ஆட்டிப் படைத்து வருகின்றன..

மாநில உரிமைகளை முதன்மைப்படுத்திக் குரல் கொடுக்காத இந்தியக் கட்சிகள் எவற்றையும் மாநிலங்களில் செயல்படவிடக்கூடாது..

தமிழ்நாட்டின் அடையாளங்களையே தமிழ்நாட்டு அரசு முதன்மைப்படுத்திச் செயல்படுத்த வேண்டும்..

வேங்கைவயல் உள்ளிட்ட சாதி வன்மக் கொடுமைகள் நடந்த வெறியாட்டங்கள் மீது திமுக அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை..

பல்கலைக்கழக உரிமைகள், நீட் -உள்ளிட்ட கல்வி உரிமைகளை மீட்பதற்கு ஆளுங்கட்சியான திமுக அனைத்துக் கட்சிகளையும், இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு இந்திய அரசை எதிர்த்துப் பெரும் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்..

கஞ்சா உள்ளிட்ட வெறி மயக்கப் பொருள்களை இரும்புக் கை கொண்டு நசுக்கத் தவறி வருகிறது தமிழ்நாடு அரசு..

ஊடகவியலாளர் என்கிற போர்வையில் நடக்கும் அரம்பத்தனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, சாதி வெறி அரம்பத்தனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை..

கல்விக்கூடங்கள் கொள்ளையடிப்பதற்கான மிகப்பெரும் வணிக நிறுவனங்களாக மாற்றப்பட்டிருக்கிற நிலையில் அரசுப் பள்ளிகளின் தரங்களை உயர்த்தி அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்து வருகிற தமிழ்நாட்டு அரசின் சில நடவடிக்கைகளைப் பாராட்டும் அதே சூழலில், தமிழைப் பாட மொழியாக, பயிற்று மொழியாக ஆக்குவதில் எந்த முன்னெடுப்பையும் செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.. தமிழைப் பாட மொழியாகக்கூட வைக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்குவதைத் தமிழ்நாட்டு அரசு தடை செய்தாக வேண்டும்.

- தமிழ்நாடு ஆசிரியர் குழு