கடந்த 05.01.2021 அன்று புது தில்லியில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் கேட்டுக் கொண்டார். ஒன்றிய உள்துறை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கோபமாக உதிர்த்த வார்த்தைகள் அவை. என்ன செய்தார்கள் ஆளுநரும் அமித்ஷாவும்?
பதவியேற்ற ஒரு மாதத்திலேயே நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையின் மூலம், நீட் தேர்வின் பாதகங்கள் நம் மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பைச் சீர்குலைக்கப் போவதைக் கேட்டு அறிந்து கொண்டார் முதலமைச்சர். தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சித்து மருத்துவத் துறையிலிருந்து விலக்கப் போகும் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் 19.9.2021 அன்றே தாக்கல் செய்து விட்டார். அந்த சட்டமுன்வடிவிற்கு வலு சேர்க்கும் விதமாக ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் 21.9.2021இல் வெளிவந்தது. சட்டமுன்வடிவு ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக முறையாக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகள் அந்தந்த மாநில ஆளுநர்கள் வழியாகவே ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அது ஒரு மரபு மட்டுமே. ஆளுநர் தன் பரிந்துரையை அல்லது வெறுமனே மேலனுப்புதல் மட்டுமே செய்ய வேண்டும். அதுவும் 3 மாதங்களுக்குள். ஆனால் நம் ஆளுநர் அதை அப்படியே வைத்து அடைகாத்துக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து முதலமைச்சர் 27.11.2021 அன்று ஆளுநரைச் சந்தித்து மீண்டும் ‘நீட்’ சட்ட முன்வடிவு குறித்து நினைவூட்டித் திரும்பினார். எந்தப் பயனுமில்லை. அதன் பின்னரே திரு.டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்தவற்றை விளக்கி, நீட் விலக்குக் குறித்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அளித்தார்கள்.
அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் பதில் அளித்தது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகத்துக்குப் படையெடுத்தார் டி.ஆர்.பாலு தன் குழுவோடு! ஆனால் அங்கிருந்து அவர்களைச் சந்திக்க மறுப்பும் கள்ள மவுனமுமே பதிலாக வந்தது. இறுதியாக, தங்கள் தரப்பில் ஒரு கடிதத்தை அமித்ஷாவின் அலுவலத்தில் கொடுத்துவிட்டு, செய்தியாளர் சந்திப்பில் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியே திரு.டி.ஆர்.பாலு அவர்கள் ஆளுநரின் ராஜினாமாவைக் கோரினார். அதே நாளில் 110 சிறப்பு விதியின் கீழ் 8 ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர். விடுதலைச் சிறுத்தைக் கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள்.
ஆளுநர் மேலனுப்பியிருந்தால், ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இந்நேரம் நம் மாணவர்கள் தலை மீது தொங்கும் கத்திகளும் கயிறுகளும் அப்புறப் படுத்தப்பட்டு இருக்கும். இது எதுவுமே நடக்காமல் செய்யும் ஆளுநரும் அமித்ஷாவும் பதவியில் இருந்தால் என்ன? இல்லாமல் போனால்தான் என்ன?
- சாரதாதேவி