பெற்றுவிட வேண்டும்,
தமிழகம் பெற்றுவிட வேண்டும்,
தன்னாட்சி பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைத்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது! (பெற்று)
ஒற்றுமை ஒற்றுமை என்பதால் யார்க்கும்
உருவான பயனென்ன? யார்க்கது ஏற்கும்?
வெற்று நினைப்பினில் வாழந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)
கற்றும் கல்லாதவர் போல், இந்த நாட்டில்
கணக்கிலா மதங்களும் குலங்களும் கொண்டோம்!
தொற்றும் பிணிகளைப் போல்மூடப் பழக்கம்;
தொலையாத போராட்டம்; ஓயாத தொல்லை! (பெற்று)
தில்லிக்குப் போவதும் வருவதும் ஒன்றே
தெற்கினில் உள்ள அமைச்சர்கள் வேலை!
மல்லிக்குச் சுக்கொன்று வேண்டுவ தென்றால்
மாதங்கள், ஆண்டுகள் காத்திடல் நன்றோ? (பெற்று)
வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்;
வருமான வீழ்ச்சியோ தெற்கி னைத்தாக்கும்!
இடக்குசெய் இந்தியும் இடைஇடைத் தொல்லை!
எத்தனை நாளைக்கோ இத்துன்ப எல்லை? (பெற்று)
நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்;
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்;
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்! (பெற்று)
உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழவென்ன வாழ்வோ? (பெற்று)
இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்;
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்;
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்? (பெற்று)
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்