chennai flood boat

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவு  மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். எண்ணற்றவர்கள் வீடிழந்து, வீட்டுப் உபயோகப் பொருட்கள் இழந்து, வீட்டை சுற்றிலும் நீரானது தீவு போல் சூழ்ந்த நிலையில் கைதிகள் போல் சிறை வைக்கப்படிருந்தனர். சில நாட்கள் வெளி உலகத்தோடு இருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனித்து விடப்பட்டனர். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் திண்டாடினர். வீடிழந்த ஏழை, எளிய மக்கள், பள்ளிகளிலும், இதர பொது இடங்களிலும் தஞ்சம் அடைந்தனர். எண்ணற்றவர்கள், வீட்டிற்குள் நீர் சூழ்ந்ததால், வீட்டின் மாடியிலும், மாடி இல்லாதவர்கள் அருகிலுள்ள மாடிகளிலும் தஞ்சம் புகுந்தனர். ஆக்கிரமிப்புகளும், ஆக்கிரமிப்புகளை காப்பாற்றுவதற்காக நீர் நிலைகள் உடைக்கப்பட்டதாலும் வெள்ள நீரானது நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பாய்ந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கும், வேறு பகுதிகளுக்கும் சென்றனர். விவசாயம், வணிகம், சிறுதொழில்கள் அனைத்தும் நாசத்திற்கு உள்ளாகின.

இத்தகைய, பெருநாசம் நிகழ்ந்த வேளையில் அரசானது, மெத்தனப்போக்காகவே இதனை அனுகியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததன் விளைவே இத்தகையப் பேரழிவிற்கு காரணம். முன்னெச்சரிக்கை எடுக்காதது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களை ஆபத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறியது. அரசும், அரசு எந்திரங்களும். அனைத்தும் ஜெயலலிதாவின் கண்ணசைவிற்காக காத்து கிடக்க வேண்டியுள்ளது. எந்த அமைச்சர்களும் சுயமான முடிவெடுத்து செயல்படுத்த திராணியற்று இருந்தனர். அதிகார வர்க்கமும் ஜெயாவின் கட்டளைகளுக்காகவே காத்துக் கிடந்தனர்.

இந்த அரசு செயல்படாததன் காரணம் இந்த அரசிடம் இருக்க கூடிய சர்வாதிகார தலைமை பண்பு மட்டுமல்ல, இந்த அரசின் வர்க்க தன்மைத்தான் பிரதான காரணம். ஜெயாவிற்கு பதிலாக கருணாவோ, வேறு யார் இருந்தாலும் இந்த நிலையே தான் நீடித்திருக்கும்.

2008ல் மும்பையில் டாடாவிற்கு சொந்தமான ஓட்டலுக்கு ஆபத்து ஏற்பட்டப்போது, மகாராஷ்டிர அரசும், இந்திய அரசும் எப்படி பதைப்பதைத்தன என்பது நமக்கு தெரியும். உடனடியாக அனைத்து அரசு எந்திரங்களும் மின்னல் வேகத்தில் செயல்பட்டன. பண முதலைகள் தங்குவதற்கான  உயிரற்ற அந்த ஆடம்பர மாளிகையை காப்பதற்காக இந்தியாவே (இந்திய அரசு, மக்களல்ல) துடித்துடித்தது. உலகமெங்கும் இந்த செய்தி பரப்பப்பட்டு, அதனை பெரிய செய்தியாக்கியது. ஆனால், இதே மும்பையில் தான் அவ்வப்பொழுது (2005, 2009, 2011) பெய்யும் கனமழையால், மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போது, இந்திய அரசும், மகாரஷ்டிர அரசும் மெத்தனமாகவே அதில் களமிறங்கின.

டாடாவின் ஓட்டலுக்கு ஆபத்து என்ற போது, இந்தியாவிற்கே பெரிய நெருக்கடி என்பது போல் சித்தரித்து ஒப்பாரி வைத்த ஊடகங்கள், மும்பை மழை வெள்ளத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவித்த போது வெறும் அனுதாப செய்தியாக்கியது.

மும்பையிலும் சரி, தமிழகத்திலும் சரி, இயற்கை பேரிடரால் மக்கள் சிக்கி தவித்த போது, இந்த அரசு ஏன் இத்தகைய மெத்தனப் போக்குடன் உள்ளது. இந்தக் கட்சிக்கு பதிலாக, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்படி இருக்காதா? நிலைமை மாறி மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படுமா?

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அவர்களின் நடவடிக்கைகள் இப்படி தான் இருக்கும். ஏனென்றால், அவர்கள் அனைவரும் சுரண்டல் வர்க்கத்தின் பிரதிநிதிகள். அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்த அரசும், அரசியலைமைப்பு சட்டமும் நாடாளுமன்ற அமைப்பும் சுரண்டல் வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. ஆனால், வெளிவேசத்தில் அனைத்து மக்களுக்குமான அரசு என்ற போர்வையில் முதலாளி வர்க்கத்திற்கும், அவர்களின் சொத்துடமைகளுக்கும் பாதுகாக்கும் கருவியாக உள்ளது.

முதலாளி வர்க்கத்தின் உடமைகளுக்கு சிறிய ஆபத்து வரும் என்றால் கூட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் களமிறங்குகின்றனர். தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடும் பொழுது அவர்களை அடித்து விரட்டும் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும், அதே நேரத்தில் ஆலை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு அரணாக நிற்கின்றனர். 

அப்படியானால் மக்களுக்கான அரசு என்பது எப்படி இருக்கும்?, ரசியாவில் சோசலிசப் புரட்சிக்கு பின்பு அமைக்கப்பட்ட சோவியத் வடிவங்களில் இருக்கும். அத்தகைய சோவியத் வடிவத்தின் அரும்பு நிலையை தான் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடரின் போது மக்கள் வெளிக்காட்டினர். பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அரசு செயல்படாமல் மெத்தனமாக இருந்த போது, மக்கள் தாங்களாகவே தங்கள் மக்களை காப்பற்றினர். 

மீனவர்கள் தங்கள் படகுகளை கொண்டு வெள்ளத்திற்குள் சிக்கிக் கொண்ட மக்களை காப்பாறினர். மற்ற பகுதிகளிலிருந்து மக்கள் உணவுப் பொருட்களை திரட்டிக் கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திரட்டிக் கொண்டு வந்து அவர்களாகவே நேரடியாக பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சேர்த்தனர். தண்ணீரிலே நீந்தி சென்றும், படகுகளில் சென்றும் அத்தியாவசிய பொருட்களை  வழங்கி தங்கள் நேசக் கரங்களை நீட்டினர். தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திராவிலுமிருந்தும் மக்கள் ஓடோடி வந்தனர்.

அரசு செய்ய வேண்டிய வேலைகளை மக்களே தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செய்தனர். மக்களின் அரசு என்பது இதுவே. தங்களிடம் அதிகாரம் இல்லாத பொழுதே இவ்வளவு துரிதமாகவும், வேகமாகவும் தங்களுடைய சகோதர மக்களுக்கு உதவுவதற்காக களத்தில் குதிக்க முடிந்தது.

மக்களின் இந்த செயலை கண்டு,  அரசு பின்னர் மெதுவாக களத்தில் இறங்கியது. முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு தங்களை வள்ளலாக காட்டிக்  கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் எந்த சாதி, மதம், இனம் என்று பார்க்காமல் மற்ற பகுதிகளிலிருந்த மக்கள் ஓடோடி வந்தனர். உழைக்கும் மக்களிடையே சாதி, மத, இனக் கூறுகளை கொண்டு  பிளவுகளை உருவாக்கி வந்தவர்கள் வெட்கி தலைக் குனிந்தனர். 

இந்தப் பேரிடரில் மக்கள் முன்னால் சென்றார்கள். இன்றைய அரசு அவர்கள் பின்னால் சென்றது. அனைத்து இடங்களுக்கும் அவர்களால் மட்டுமே செல்ல முடிந்தது. அவர்கள் மட்டுமே எத்தகைய பிரதிபலனும் எதிர்பாராமல் இதனை செய்ய முடியும்.  இதில் உச்சபட்சமாக உதவிக்கு வரும் பொருட்களையும் உதவி தேவைப்படும் இடங்களையும் இணைப்பதற்கான கட்டுப்பாட்டு அறையையும் மக்களே நிறுவினர். இப்படி மக்கள் தங்களுக்காக தங்கள் அரசாங்கத்தை நடத்திக் காட்டினர். ஆனால், அரசு என்னும் பொருளில் அல்ல.

ஒரு வேளை சோசலிச அரசு இன்று நிலவி இருக்குமானால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு இருப்பார்கள், பெரும் சேதங்கள் விளைவதை தடுத்து, சேதங்களின் அளவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்திருப்பார்கள், இந்த இடர்களுக்கு காரணங்கள் கண்டறியப்பட்டு நீண்ட கால நோக்கில் அவை சரி செய்யப்பட்டிருக்கும். மேலும் பாதிப்படைந்த மக்களை உடனடியாக பாதிப்பிலிருந்து மீட்பதற்காக, இதர பகுதிகளில் உள்ள மக்களைக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கும். அனைத்து சக்திகளையும் திரட்டி மக்களை இடரிலிருந்து காப்பாற்றி இருக்கும்.

எனவே, பெரும்பான்மையாக இருக்க கூடிய உழைக்கும் மக்களுக்கு சுரண்டல் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கக் கூடிய இன்றைய நாடாளுமன்ற, சட்டமன்ற ஆட்சி முறையானது எதையும் செய்யாது. இதற்கு மாற்று வடிவம் அனைத்து உழைக்கும் மக்களின் பங்கேற்பில் இருக்க கூடிய சோவியத் ஆட்சி முறையே சரியானது. சோவியத் வடிவிலான ஆட்சி ஒன்றே சுரண்டல் தன்மையை ஒழிக்கும், தனிச்சொத்துடைமையை ஒழிக்கும், உழைக்கக்  கூடிய அனைவருக்கும் உரிய பங்கை செலுத்தும், பொதுவுடைமை சமூகத்தை படைக்கும். அத்தகைய சோவியத் வடிவத்தின் எளிய, மிக மிகச் சிறிய, அரும்பு வடிவிலான செயல்பாட்டை தான் இப்பொழுது தமிழகம் பார்த்தது. 

- குறிஞ்சி

Pin It