கீற்றில் தேட...

தமிழைப் பரப்ப, உலக அளவில் ஏற்பாடு தமிழக அரசின் மோசடியான திட்டம்!

“தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்ப இந்திப் பிரச்சார சபை இருப்பதைப் போல், உலக அளவில் தமிழ் பேசும் மக்கள் உள்ள நாடுகளில் தமிழ் பேசப்படும் மொழியாகப் பரப்பப்பட எல்லா முயற்சிகளையும் இன் றையத் தமிழக அரசு செய்ய உள்ளதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராசன் அண்மையில் தெரிவித்துள்ளார்” (தினமணி, 9.9.2017).

இன்று உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் 9 கோடி பேர் தமிழ் பேசுகின்றனர். உலகில் அதிகம் பேர் பேசும் ஒரு மொழியாக 20ஆவது இடத்தில் இன்று தமிழ்மொழி இருக்கிறது. இதை 10ஆம் இடத்துக்குக் கொண்டுவருவது தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டமாம்.

இதுபற்றித் தமிழ்மக்கள் கவலையோடு சிந்திக்க வேண்டும்.

தமிழ்ப்பேசும் தனி மாநிலம் 01.11.1956இல் அமைக் கப்பட்டது. 1956 முதல் 5.3.1967 வரையில் தமிழ் நாட்டில் காங்கிரசு ஆட்சி நடந்தது.

6.3.1967 முதல் தொடர்ந்து 31.12.1976 முடிய தமிழ்நாட்டை தி.மு.க. ஆண்டது.

1977 முதல் கடந்த 40 ஆண்டுகளாக-அ.இ.அ.தி.மு.க. வும்-தி.மு.க.வும் தமிழகத்தை மாறி, மாறி ஆண்டன.

இவ்வளவு நெடிய ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில்,

1. எல்லா நிலைக் கல்வியையும் தமிழ்மொழி வழியில் தமிழக அரசு தர, ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு துறையிலும் அறிவு வளர்ச்சியில் ஏற் பட்டுள்ள முன்னேற்றக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற தமிழ்க்கருவி நூல்களை உருவாக்கியிருக்க வேண்டும். இது நடைபெறவில்லை.

தாய்மொழி வழியில்தான் எல்லா நிலைப் படிப்பு களும் கற்றுத்தரப்பட வேண்டும் என்ற கருத்து, இந்திய மொழிகளைப் பேசுவோரிடையே, வலிவாக ஊன்றப் படவில்லை. எவ்வளவு உயர்ந்த அறிவையும், அப்போது தான், ஒருமொழி பேசும் மக்கள் உண்மையில் பெறமுடியும்.

இந்தப் பேருண்மையை 1983 முதல் நாம் வலியுறுத்தி வருகிறோம்.

திராவிடக் கட்சி ஆட்சிகள் ஒருபோதும் இந்த நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

3.         தமிழகச் சிற்றூர் ஆட்சி முதல் தலைமைச் செயலகம் வரை எல்லா நிலையிலும் தமிழ் மட்டுமே நிருவாக மொழியாக-ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டி ருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை.

4.         கீழமை நீதிமன்றம் முதல் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றம் வரையில் வழக்காடும் மொழியாக - தீர்ப்புகள் எழுதும் மொழியாகத் தமிழே ஆக்கப் பட்டிருக்க வேண்டும்.

5.         பேசப்படும் மொழியாக, ஆங்கிலம் கலவாத, வட மொழி கலவாத தமிழ், தமிழ் மக்களின் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்த ஏற்ற கருவிச் சொற்களை உருவாக்கி, அவற்றைத் தொடக் கப் பள்ளி முதல் பல்கலைப் படிப்பு வரையில் கற்றுத் தந்திருக்க வேண்டும்.

இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும், நேற்றைய தி.மு.க. ஆட்சியிலும், உயர்கல்வி ஆங்கில மொழி வழியே தரப்பட்டது; ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது.

இன்றைய ஆட்சியில் அரசுத் தொடக்கப் பள்ளி முதல் எல்லாப் பாடங்களும் பல பள்ளிகளில் ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்படுகின்றன.

இந்த ஈனத்தனமான வழக்கத்தைத் தமிழ்நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். 2017இல் தமிழர்கள் இதில் திருந்தத் தவறினால், கி.பி. 2057இல், தமிழ்நாட்டில் தமிழ் பேசப்படும் ஒரு மொழியாக இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியே ஆகும். இது உறுதி.