“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்”
“நாடென்ப நாடா வளத்தன..”
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.."
கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் 13 இலக்கம் கோடி கடன் வைத்து விட்டதற்கு அந்த அரசுகளின் செயல்திறன் இன்மை மட்டுமே காரணமா?..
ஒரு பக்கம் பலநூறு இலக்கம் கோடியை இந்திய அரசு சூறையாடிக் கொண்டு செல்வதற்கு வழி விட்டுவிட்டு, அவற்றைத் தடுத்து நிறுத்தத் துணிவின்றி வெளிநாடுகளிடமும் உலக வங்கியிடமும் கடன் பெறுவது தமிழ்நாட்டு அரசின் கோழைத்தனமான நடவடிக்கையில்லையா..
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசால் என்னென்ன வகையில் எல்லாம், எவ்வளவு அளவில் எல்லாம் செல்வம் சூறையாடப்படுகிறது என்பதைப் பாருங்கள்...
* ஜிஎஸ்டி வரி வழியாக மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரம் கோடி பறித்துச் செல்லப்படுகிறது..
* 68 சுங்கச்சாவடிகள் வழி ஆண்டுக்குத் தோராயமாக 4100 கோடி உருபா வழிப்பறிக் கொள்ளையடிக்கப்படுகிறது..
* நெய்வேலி நிலக்கரி வழியாக ஆண்டுக்குத் தோராயமாக 15,300 கோடி அள்ளிக் கொண்டு போகப்படுகிறது.. (1956 தொடங்கி இன்று வரை கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.. அதற்குத் தமிழ்நாட்டிற்கு ஒரு விழுக்காடுகூட பங்குத்தொகை (ராயல்டி) கிடைப்பதில்லை)
* நரிமணம் கன்னெய் (பெட்ரோல்) உள்ளிட்ட இந்திய எண்ணெய் நிறுவன வழியாக ஆண்டுக்குத் தோராயமாக 8 லட்சத்து 75 ஆயிரம் கோடி உறிஞ்சப்படுகிறது.. (நரிமணம் கன்னெய் நிறுவனம் 1993 முதல் செயல்படுகிறது..)
* சேலம் இரும்பு வழி ஆண்டுக்கு 3 இலக்கத்து 64 ஆயிரம் கல்லெடை (டன்) இரும்பு எடுக்கப்பட்டு, தோராயமாக அந்த நிறுவனத்தின் வழி ஆண்டுக்கு ஒரு இலக்கத்து 2500 கோடி கொண்டு செல்லப்படுகிறது.. (1981 ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது..)
இவையன்றி..
* கல்பாக்கம் (1970 முதல்), கூடங்குளம் (1997 முதல்) அணுமின் நிலையங்கள் வழியான வருவாய்கள்..
* நெய்வேலி உள்ளிட்ட பிற அனல் மின் நிலையங்கள் வழியான வரவுகள்.. (கழிவுகளாலும் கதிர்வீச்சுகளின் பாதிப்புகளாலும் தமிழ்நாடு அழிந்து கொண்டிருப்பது தனிச்செய்தி..)
* பெரம்பூர் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை (1955 ஆண்டு முதல்..) இன்றைய தேஜஸ், வந்தே பாரத் வண்டிகளின் தரம் வாய்ந்த பெட்டிகள் உள்ளிட்ட உருவாக்கப்படும் நிலையில் பெரும் ஊதியத்தில் நடந்து கொண்டிருக்கிற தொழில் நிறுவனத்தின் வருவாய்கள்..
* திருச்சியைத் தலைமையாகக் கொண்ட பாரத மிகுமின் (பி எச் இ எல்) தொழிலகத்தின் (1956 இல் தொடங்கப்பட்டதிலிருந்து) தோராயமாக ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி வருவாய் பெறுகிறது இந்திய அரசு...
* சென்னையில் உள்ள பாரத மின்னணுவியல் நிறுவனம் வழியான வருவாய்..
* சென்னை பெட்ரோலியம் நிறுவனம் வழியான வருவாய்..
* உர நிறுவனங்கள் வழியான வருவாய்..
* சென்னை ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலைகள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலைகள் வழியான வரவுகள்..
* உதகையில் உள்ள இந்துஸ்தான் படச்சுருள் நிறுவனம் வழியான வருவாய்..
* சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் அவற்றிலிருந்து வரும் வருவாய்கள்..
* சென்னை, மதுரை, கோவை உள்ளிட்டுத் தமிழ்நாட்டில் இருக்கும் வானூர்தி நிலையங்களின் வழியாக வரும் வரவுகள்..
* தமிழ்நாடு முழுக்கச் செல்லும் தொடர்வண்டிகள் வழியான (தோராயமாக ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி) வரவுகள்..
* வானூர்தி நிலைய, துறைமுகங்கள் வழியாகக் கையாளப் பெறும் சரக்குகள் வழியானச் சுங்கவரி வழியான வரவுகள்..
* வருமான வரிகள் வழி (இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் வருமான வரி தமிழ்நாட்டில் பெறப்படுகிற வகையில் ஆண்டுக்கு இரண்டே முக்கால் லட்சம் கோடி அளவில்) வரும் வருவாய்கள்..
* கலால் வரிகள் வழியான வரவுகள்...
இவையன்றி..
* கடல் பரப்பு வழி வரவு, ஐஐடி, இந்தியப் பல்கலைக்கழகம், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வழி வரவு, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் வழி வரவு, ஐஎஸ்ஆர்ஓ உள்ளிட்ட வானியல் ஆய்வு நிறுவனங்கள் வழியான வரவு,
* இந்திய அரசு நிறுவனங்கள் ஆளுமைத் துறையில், கப்பல் போக்குவரத்துத் துறை, வான் துறை, படைத்துறை உள்ளிட்ட இடங்களுக்கான நிலப்பறிப்பு..
என்கிற வகையில் எல்லாம் பல நூறு இலக்கம் கோடித் தொகைகளை, செல்வங்களை இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து பறித்துக் கொண்டு செல்லுகிற பொழுது...
வளமான தமிழ்நாடு வருவாய் இழந்து எப்படித் தாக்கு பிடிக்க முடியும்..
அவற்றைத் தட்டிக் கேட்கிற துணிவு தேர்தல் கட்சிகள் எவற்றிடமும் இல்லை.. எல்லா தேர்தல் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் பங்கு பெறுவதும் பணிந்து போவதுமாகவே உள்ளன..
தமிழ்நாட்டு உரிமைகளுக்கான இயக்கங்களே இவற்றை உணர்ந்து மக்களிடம் உணர்த்தி மக்கள் போராட்டங்கள் வழி மட்டுமே மீட்டெடுக்க முடியும்.. தமிழ்நாட்டை அரசியலாக மட்டுமன்றிப் பொருளியலாகவும் காக்க முடியும்..
தமிழ்நாட்டின் இயக்கங்கள் சிந்தித்தாக வேண்டும்..
---
ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பே தமிழ்த் தேசியத்திற்கு வழி..
பார்ப்பனியம் என்பதைப் பார்ப்பனர்கள் என்ற அளவோடு சுருக்கிச் சிலர் கருத்துரைக்கிறார்கள்.. பார்ப்பனியம் என்பது ஐந்து கூறுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..
1. சமஸ்கிருத அதிகாரத்தை அனைத்து மொழிகளின் மீதும் அனைத்து மட்டங்களிலும் திணித்து அதிகார வெறித் தன்மையோடு நிறுவுவது.
2. வர்ண அமைப்பு முறையைச் சாதிய அமைப்பு நிலைகளோடு இணைத்து அடுக்கு முறைகளில் அதிகாரப்படுத்தி கட்டிக் காப்பது.
3. வேத, புராண, சாஸ்திரங்களை வரலாறு போல் புனைவுபடுத்தி நிலைப்படுத்திக் காட்டி அனைவர் அறிவையும் அனைத்து உண்மை வரலாற்றையும் மழுங்கடித்து அழிப்பது.
4. அனைத்து வழிபாட்டு முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் சடங்குகள் என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி இந்து மதம் என்கிற போர்வைக்குள் அடைத்து அடக்கி வைத்திருப்பது.
5. அனைத்து மொழி இன அடையாளங்களையும் உரிமைகளையும் நசுக்கி அடக்கி இந்தியத் தேசம் (சமஸ்கிருதத்திற்கு என்று தனித் தேசம் இல்லாததால் இந்தியாவையே அதற்கான தேசமாக அடையாளப்படுத்துவது), இந்திய இனம் (சமஸ்கிருதம் - ஆரிய இனத்திற்கானது என்று சுருங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்திய அரசாட்சிக்குரிய மக்களை எல்லாம் சமஸ்கிருதத் தொடர்புடைய இன மக்கள் என்று இணைத்துக் காட்டுவது), இந்தியப் பண்பாடு (தமிழ்ப் பண்பாடு, கேரளப் பண்பாடு, பஞ்சாபியப் பண்பாடு, காஷ்மீரப் பண்பாடு என்ற பண்பாடுகளை எல்லாம் தங்களின் பண்பாடு என்று சொல்லிக் கொள்ள முடியாத பார்ப்பனியம் தனக்கான பண்பாடாக இந்தியப் பண்பாட்டை அறிவித்துக் கொள்வதுடன் அதையே அனைவருக்குமான பண்பாடு என்று கட்டாயப்படுத்துகிறது), இந்திய வரலாறு (வேத, வைதீகப் பார்ப்பனிய வரலாற்றையே இந்திய வரலாறென்று காட்டிக் கொள்கிறது) - என்பதான அதிகாரத்திற்குள் அடக்கி வைத்திருப்பது. அதன் வழி அந்தந்த மொழித்தேசங்களின் அடையாளங்களை உரிமைகளைப் பிரிவினைவாதம், தேசவிரோதம் என்று இழித்துரைப்பது.
ஆக, இந்த ஐந்து நிலைகளையும் தன் அதிகாரங்களாகக் கொண்டதே பார்ப்பனியம்.
அறியாமையின் காரணமாகவோ, அடக்குமுறைக்கு அடிபணிந்து போகிற காரணமாகவோ தமிழர்கள் பலரும் ஏதோ ஒரு நிலையில் பார்ப்பனியத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஐந்து நிலைகளிலிருந்தும் அந்தந்த அதிகாரப் போக்குகளை எதிர்க்காமல் ஆரியப் பார்ப்பனியத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளாமல் நம் இன உரிமையை, வாழ்க்கையை உறுதி செய்ய முடியாது.
பாரதிக்கும், உ.வே. சாமிநாதர்க்கும் தமிழ் மீது பற்றிருக்கலாம். தமிழ்ப் புலமையையும் அவர்கள் பெற்றும் இருக்கலாம். ஆனால் மேற்சொன்ன ஐந்து அதிகாரங்களில் ஒன்றைக்கூட அவர்கள் விட்டவர்கள் அல்லர்.. மறுத்தவர்களும் அல்லர்..
பார்ப்பனியத்தை எதிர்த்த நம் தமிழ் அறிஞர்கள் பலரும்கூட இந்த ஐந்து நிலைகளிலிருந்தும் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
ஆக, இந்த ஐந்து நிலைகளில் இருந்தும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் போனால் தமிழ்த் தேசிய இன உரிமைகளை மீட்கவும் முடியாது. அதன் அதிகாரத்தை நிறுவவும் முடியாது.
இந்த ஐந்து நிலைகளிலும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல், இந்தியப் பெருமுதலாளியத்தை எதிர்க்காமல், வல்லரசியத்தை எதிர்க்காமல் தமிழ்த் தேசம் பேசுவது வெற்று வாய்ச்சவடால் பேச்சாகவே இருக்கும்.
- தமிழ்நாடு ஆசிரியர் குழு