இரத்தக் கறை படிந்த கொடுங்கரங்கள் இந்தியாவை ஆரத்தழுவி இராமனின் கோயிலுக்கு அனைவரையும் அழைக்கின்றன. பாபர் மசூதியின் அடியில் புதைந்து கிடப்பதாக பார்ப்பன இந்துமத வெறியர்களின் மூளையில் பல ஆண்டுகளாக சித்தரவதை செய்து கொண்டிருந்த இராமனின் பிறப்பிடம், பாபர் மசூதியின் கருப்பையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு அது இராமனிடமே ஒப்படைக்கப்பட போகின்றது.

சூத்திர சாம்புகனின் தலையை வெட்டி சனாதனத்தைக் காப்பாற்றிவிட்டு சரயு நதியில் தற்கொலை செய்து கொண்ட இராமனின் பிணம் கறை ஒதுங்கிய இடத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதால், ஆற்றில் அடித்துக் கொண்ட போன தன் மகனோ, அப்பனோ இன்னும் எங்காவது உயிர் வாழ்வார்கள் என நம்பிக் கொண்டு காத்திருக்கும் ஒரு எளிய மனிதனைப் போல இராம பக்தர்கள் இராமன் உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அப்படியே அவனின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டு எலும்புகளாவது மிச்சமிருந்தால் புத்தரின் பற்களைப் போன்று அதை காட்சிப்படுத்தலாம். முடிந்தால் கருவறையில் வைத்து பார்ப்பனர்களின் துணையுடன் அதற்கு உயிரும் கொடுக்கலாம்.modi ram mandirவாழும் மனிதர்களை பிணமாக்குவதும், பிணங்களை கடவுளாக்குவதும் மதவாதிகளுக்கு மிகவும் பிடித்த வேலை என்பதால், நிச்சயம் அவர்கள் அதை மனமுவந்து செய்வார்கள்.

ஜனவரி 22 ஆம் தேதி பாபர் மசூதியின் கருப்பையில் இருந்து இராமனின் கருவறை வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைப்பது போலவும், இந்த நன்னாளை காண்பதற்காவே பல இந்துக்கள் வாழ்வது போலவும் ஒரு பொய்யை அல்ல, ஓராயிரம் பொய்களை ஊடகங்கள் வாயிலாக சங்கிகள் உலாவவிட்டு இருக்கின்றார்கள்.

ஜனவரி 22 ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பற்றி நாம் இப்போதைக்கு கவலைப்படப் போவதில்லை. காரணம் எதுமே மாறப் போவதில்லை. ஆனால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு முன் என்ன நடக்கப் போகின்றது என்பதில்தான் நம் கவனம் சிந்தனை முழுவதும் பரவிக் கிடக்கின்றது.

காரணம் வரும் பாராளுமன்றத் தேர்தல் பாசிச பிஜேபிக்கும், ஜனநாயகத்துக்குமான ஒரு போராக இந்தியா கூட்டணியினராலும் அதன் பரப்புரை பீரங்கிகளாலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெவ்வேறு கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட 26 கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்., திரிணாமுல் காங்கிரஸ்., சிவசேனா, ஆம்ஆத்மி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலுங்கு தேசம், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவை ஆகும்.

இந்தியா கூட்டணியில் உள்ள இந்த முக்கிய கட்சிகளுக்கு ஏற்கெனவே இராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தவிர மற்ற பெரும்பாலான கட்சிகள் எதுவும் இராமர்கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவோ “அயோத்தி இராமர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்குண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத் துறை தயாராக இருக்கின்றது” என திருவாய் மலர்ந்திருக்கின்றார்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும் முற்போக்கு வேடம் போடும் பல யூடியூப் சேனல்களும் இதைப் பற்றி வாயே திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றன. நமக்கு பெரிய ஏமாற்றமெல்லாம் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கூட இதைக் கண்டிக்கவில்லை என்பதுதான்.

தலித்துகளின் மீதான தாக்குதலோ, சாதி ஆணவப் படுகொலைகளோ, கார்ப்ரேட் அடாவடித்தனங்களோ எதுவுமே இந்த இரண்டரை ஆண்டுகளில் குறையவில்லை. இதற்கு எதிராக எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் திமுக எடுக்கவில்லை.

நிலைமை இப்படி உள்ளங்கை நெல்லிகனி போல இருக்க, திமுகவை விட்டால் பாசிசத்தை எதிர்க்க வேறு கட்சியே இல்லை என வியாக்கானம் செய்தவர்கள் சேகர்பாபுவின் பாசிச ஆதரவு நடவடிக்கையைக் கண்டிக்கத் துப்பற்று அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

இன்னும் சிலரோ, 'எல்லாவற்றையும் மறப்போம். இஸ்லாமிய சமூகமே அமைதியாக இருக்கும் போது இவர்கள் ஏன் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள்?' என்கின்றனர்.

இதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்? பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு பழங்காலக் கட்டிடத்தின் இடிபாடுகளை மட்டும் குவியலாக விட்டுச் செல்லவில்லை. அது ஆயிரக்கணக்கான மனித உயிர்களை நாடு முழுவதும் பிணக் குவியலாக அல்லவா விட்டுச் சென்றது.

குறிப்பாக குஜராத்தில் 246, மத்தியப் பிரதேசத்தில் 120, மகாராஷ்டிராவில் 259, அசாமில் 100, மேற்கு வங்கத்தில் 32, உத்திரப் பிரதேசத்தில் 201 , ராஜஸ்தானில் 48, பீகாரில் 24, கேரளாவில் 12, ஆந்திராவில் 12, தமிழ்நாட்டில் 2 பேரும் உயிரிழந்திருக்கின்றார்கள்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் இத்தனை மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் போது, அந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அரசு அமைப்புகளின் துணையோடு இஸ்லாமிய மக்களை வஞ்சித்து கட்டப்பட்டிருக்கும் அந்த கோயிலுக்கு எவனாவது யோக்கியன் செல்வானா?

அப்படி செல்வதை நியாயப்படுத்துபவன் நிச்சயம் இந்துமதவெறியை மனதில் வைத்து வெளியே நாடகமாடும் கபடதாரியாகத்தான் இருப்பான். இல்லை என்றால் எவன் வீட்டி இழவு விழுந்தாலும் ஆளும் கட்சியின் அயோக்கியத்தனங்களை கண்டுகொள்ளாமல் அதற்கு ஜால்ரா போட்டு வயிற்றை கழுவும் எத்தனாகத்தான் இருப்பான்.

இராமர் கோயிலின் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு 3200 கோடிகளுக்கு மேல் வரும் எனச் சொல்கின்றார்கள். இந்தப் பணம் முழுவதும் தனி நபர்களாலும் இந்து பெருமுதலாளிகளாலும் கொடுக்கப்பட்டதாகும். அவர்களின் ஒரே நோக்கம் இந்தியாவை பார்ப்பனிய இந்து நாடாக மாற்றுவதுதான்.

மேலும் இராமர் கோயில் கட்டுமானத்தை நடத்தி வரும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோவில் கட்டுவதை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும், பிப்ரவரி 2020 இல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை மீது பல நிதி மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளன.

குறிப்பாக அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி நடைபெற்றது.

இராம ஜென்மபூமியின் நிலத்தை ஒட்டியுள்ள ஒரு நிலத்தை பூஜாரி ஹரிஷ் பதக் மற்றும் அவரது மனைவி, மார்ச் 18 ஆம் தேதி மாலையில், சுல்தான் அன்சாரி மற்றும் ரவி மோகன் ஆகிய இருவருக்கும் 2 கோடி ரூபாய்க்கு விற்றனர். அதே நிலத்தை சில நிமிடங்கள் கழித்து இராம ஜன்மபூமி அறக்கட்டளைக்காக 18.5 கோடி ரூபாய்க்கு சம்பத் ராய் வாங்கியுள்ளார்.

அதுபோல குளோன் செய்யப்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்களால் ரூ.6 லட்சம் ரூபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் மோசடி செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளது.

இப்படி மிகப் பெரிய அளவில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இராமனின் பெயரால் ரத்த ஆறை ஓடச் செய்ததோடு அவனுக்கு கோயில் கட்டுவதாக ஊழல் ஆறையும் ஓடச் செய்தனர் சங்கிகள்.

இத்தனை ஆயிரம் கோடி செலவு செய்து கோயில் கட்டுவதால் அயோத்தியின் பொருளாதாரமும் ஒட்டுமொத்த உத்திரப் பிரதேசத்தின் பொருளாதாரமும் உயரும் என்கின்றார்கள்.

கடந்த பல தசாப்தங்களாக சீரழிக்கப்பட்ட உபியின் நிலமையை ஒரு கோவில் மீட்டெடுத்து விடும் என்பதெல்லாம் கற்பனைக் கோட்டையாகும்.

யோகியின் உத்திரப் பிரதேசம் உலகின் மோசமான குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடமாகவும், மனித குல விரோத ஆட்சி நடக்கும் இடமாகவும் இருக்கிறது. 

சட்டம் ஒழுங்கின்மை, கொள்ளை, வகுப்புவாதம், சாதிக் கொலைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களை பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்துமே உபியில் தொடர்கின்றன. வறுமை, வேலையின்மை காரணமாக பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 24 கோடி பேர் உபியில் மட்டும் இருக்கின்றார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏறக்குறைய 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மிக மோசமான வறுமையில் உள்ளனர்.

கல்வி அறிவு விகிதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 67.7 சதவீதம் மட்டுமே. இது தேசிய சராசரியான 74 சதவீதத்தைவிட மிகவும் குறைவாகும்.

இப்படி மக்களை தொடர்ச்சியாக வறுமை வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை என வைத்திருந்தாலும் ஒவ்வொருவரின் மனதிலும் அடியாழம் வரை பதிய வைக்கப்பட்டிருக்கும் சாதி வெறியும் மதவெறியும் இன்னமும் சங்கிகளின் வெற்றியை உபியில் உறுதி செய்து கொண்டே இருக்கின்றது. எந்தெந்த மாநிலத்தில் எல்லாம் கல்வியறிவு விகிதம் அதிமாக இருக்கின்றதோ, அங்கெல்லாம் பிஜேபியின் செல்வாக்கு குறைவாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இராமர் கோயில் என்பது இராமனுக்காக அல்ல என்பதும், அது வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே என்பதும் மூளை சிந்திக்கும் ஆற்றல் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்கி கும்பலைப் பொருத்தவரை இராமன் என்பவன் மதவெறியில், சாதிவெறியில் ஊறிய சனாதனிகளிடமிருந்து ஓட்டுக்களை பெற்றுத் தரும் ஓர் ஓட்டு இயந்திரமாவான்.

ஓர் இயந்திரத்துக்கு என்ன மதிப்போ அதே மதிப்புதான் இராமனுக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் குதுகாலமடைகின்றார்கள். கும்மாளம் அடிக்கின்றார்கள்.

அம்பானிகளின், அதானிகளின், பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் சுரண்டலின் ஒரு கொழுத்த பகுதி இராம வியாபாரிகளுக்குச் செல்கின்றது. அப்பாவி தலித் மற்றும் சூத்திர இராம பக்தனோ ‘பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை! (பாபர் மசூதி உடைந்தது! காசியிலும், மதுராவிலும் பாக்கி உள்ளது!)’ என கையில் கடப்பாறையோடு உட்கார்ந்திருக்கின்றான்.

இன்று இராமர் கோயில் திறப்பு விழாவிற்குச் செல்லும் ஒவ்வொருவரும் நாளை மதுராவுக்கும், காசிக்கும் சென்று கரசேவை செய்வார்கள் என்பதை எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It