‘புகழுக்காக புலி வேஷம் போடும் சமுதாயக் காவலர்கள்' என்ற தலைப்பிட்டு, டிஎன் டிஜே என்ற அமைப்பு நடத்தும் பத்திரிகையில் விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியையும், வெறித்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை குறித்து தமிழகத்தில் நடந்த கண்டனக் கூட்டங்களில் ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரும், தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டனர். இதனை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

இலங்கை கிழக்கு மாகாணம் காத்தான்குடி பள்ளிவாசலில் 1990ம் ஆண்டு ஆகஸ்டு 4 அன்று முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் 147 பேரை புலிகள் சுட்டுக் கொன்றனர் என்பது உண்மை. இதனை விடுதலைப் புலிகளும் ஒப்புக் கொண்டு 2003ம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளுக்கும் - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது - முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவம் ஒரு வரலாற்றுப் பிழை; இனி அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாது என நடந்து விட்ட அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார் பிரபாகரன்.

அதேபோல பிரபாகரன் வன்னிக்காட்டிலிருந்து வெளியே வந்து சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் மேற்கண்ட படுகொலைச் சம்பவம் வரலாற்றுத் தவறு, அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

இவை வரலாற்றுப் பதிவுகள்! ஆயினும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட புலிகளின் தாக்குதல்களை எந்த முஸ்லிமும் மறக்க முடியாது. புலிகளுக்கு ஆதரவளிக்கவும் முடியாது என்பதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தீர்க்கமாக இருக்கிறது.

அதே சமயம் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் - அநியாயங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் குரல் கொடுப்பது தவறு என்று சொல்ல டிஎன்டிஜேவினருக்கோ, வேறு அமைப்புக்கோ தகுதி கிடையாது. அதனை ஏற்கவும் முடியாது.

அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களை அல்லது அதற்கெதிராக குரலெழுப்புபவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும், முஸ்லிம் புலிகள் என்பதும், முஸ்லிம்களைக் கொன்றவர்கள் புலிகள் என்று மீண்டும், மீண்டும் அதனை நினைவூட்டி தமிழ் மக்களுக்கும் - முஸ்லிம்களுக்குமிடையில் பகைமையை வளர்ப்பது அல்லது இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைப்பதும் கேவலமான சிந்தனையின் குரூர வெளிப்பாடாகும். இதனால்தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை பள்ளிவாசலில் வைத்து கொன்று குவித்த மாபாதகர்கள் புலிகள் என்று துணிந்து பச்சைப் பொய்யை அவர்களால் எழுத முடிகிறது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை எந்தெந்த ஊரில், எந்தெந்த பள்ளிவாசல்களில் புலிகள் கொன்றார்கள் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் பட்டியலிட வேண்டும்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொள்ளும் - தமிழ் அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் அவர்களுக்கு மத்தியில் நேருக்கு நேராக, "புலிகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்கள் மறக்க முடியாது. அந்தக் காயங்கள், லேசில் ஆறாதது. அது மன்னிக்க முடியாத குற்றம். அதே சமயம் புலிகளின் தவறுக்காக தமிழர்கள் மீது நடத்தப்படும் அக்கிரமங்களை கண்டிக்காமல் இருக்க முடியாது...'' என்று அவர்களது களத்திலே நின்று முழங்கி வருகிறார்.

இப்படி முகத்திற்கு நேராக தவறைச் சுட்டிக் காட்டும் திராணி டிஎன்டிஜே தலைவர்கள் மட்டுமல்ல; எந்த இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களும் சந்தித்திராத ஒன்று! சந்திக்கத் துணியாத ஒன்று!

கடந்த 17-05-2011 அன்று சென்னை காசிமேட்டில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கண்டனக் கூட்டம் கூட - நினைவேந்தல் நிகழ்ச்சியாக நடைபெற இருந்த வேளையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் - நினைவேந்தல் நிகழ்ச்சி எங்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று எஸ்.எம்.பாக்கர் மறுத்தபோது, பாக்கரின் பங்களிப்பு வேண்டும் என்று நினைத்த அவர்கள் கண்டனக் கூட்டம் என்று மாற்றியமைத்தனர்.

அதேபோல போஸ்ட்டர் வாசகங்கள் கூட நமது கொள்கைக்கு மாறாக இருக்குமானால் அது நமது கவனத்திற்கு வரும்போது அதையும் சுட்டிக் காட்ட நாம் தயாராகவே இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அவர்களும் நம் உணர்வுக்கு மதிப்பளித்து மாற்றங்களைச் செய்ய தயாராகவே இருக்கின்றனர்; செய்தும் இருக்கின்றனர்.

யதார்த்தத்தை சொல்ல வேண்டுமானால் எஸ்.எம்.பாக்கர் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘வணக்கம்' என்று சொல்லும்போது, "வணக்கம் என்பது இறைவனுக்குரியது; உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்'' என்று கொள்கை உறுதியோடு முகமன் கூறும் வழக்கமுடையவர் என்பதை தமிழக முஸ்லிம்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

அதே சமயம், டிஎன்டிஜே தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தேர்தல் நேரத்தில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முக சுந்தரம் இவரைப் பார்த்து, ‘வணக்கம்' என்று சொன்னபோது பதிலுக்கு கை கூப்பி ‘வணக்கம் சார்' என்று சொன்னதை தமிழகம் கண்டது.

இது மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய - அவர்களுடைய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகியாக இருந்து மரணமடைந்த முருகன் என்பவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு இஸ்லாமியக் கொள்கையில் சமரசமானவர் டிஎன்டிஜேவின் தலைவர் பீ. ஜைனுல் ஆபிதீன். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

உண்மை நிலவரம் என்னவென்றால் இன்று இலங்கையில் புலிகள் இயக்கம் இல்லை. ஆனால் புலிகளை முன்னிலைப்படுத்தி அப்பாவித் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் மீது கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றை தட்டிக் கேட்பவர்கள் ‘புலிகள்' என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுத்து விடக் கூடாது என்கிற சிங்கள அரசின் சதிதான் இந்தப் 'புலி' முத்திரை. ஆக, சிங்கள அரசின் ஏஜெண்டாக செயல்படும் டிஎன்டிஜேவினரைப் போன்றவர்கள்தான் தமிழ் மக்களுக்கு எதிராக களமாடி வருகின்றனர்.

இவர்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்கிற அறிவு கூட இல்லாமல்தான் விமர்சனம் எழுதப் புறப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழர்களை புலிகள்தான் சுட்டுக் கொன்றார்களாம். முள்ளிவாய்க்காலின் கடைசி நேர போரின்போது தமிழர்களை வெளியேற விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டி சுட்டுக் கொன்றார்களாம் புலிகள். இது சிங்கள அரசு சொன்ன கதை. அதைத்தான் இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். ஏஜெண்ட் வேலையை சரியாகவே செய்கிறார்கள்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் ஆய்வு நடத்திவிட்டு, முள்ளிவாய்க்கால் - ரெட்டைவாய்க்கால் பகுதிகளில் யுத்தம் செய்ய தடை செய்யப்பட்ட - யுத்தத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு பகுதியான அபயமான இடத்தில் திரட்டப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது என அறிக்கை தந்தது. ஆனால் சென்னை அரண்மனைக்காரன் தெருவிலிருந்து கொண்டு புலிகள் கொன்றதாக அறிக்கை தருகிறார்கள் இவர்கள்!

காத்தான்குடி சம்பவத்தை மீண்டும் மீண்டும் கிளறி விட்டு, புலிகள் முஸ்லிம்களைக் கொன்றவர்கள் என்ற கற்பிதத்தைத் தொடர்ந்து செய்து வரும் இவர்கள்தான் கோவையில் 19 முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான கலைஞர் கருணாநிதியின் செயலை மறந்து விடுங்கள் என்று தமிழக முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி - திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருந்தவர்கள்.

காத்தான்குடி முஸ்லிம்களைக் கொன்ற புலிகள் எதிரிகள் என்றால்... அவர்கள் அச்சம்பவத்திற்காக வருந்தி தவறை ஒப்புக் கொண்ட பின்பும் அவர்கள் மாபாதகர்கள் என்றால்... கோவை முஸ்லிம்கள் 19 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான கருணாநிதி - அச்சம்பவம் நடந்த பின்பும் கோவைக்கு வந்து குறைந்தபட்சம் பார்வையிடக் கூட வராத கருணாநிதி மானசீக நண்பராம்! இவர்களின் வாதப்படியே பார்த்தாலும் 19 முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான திமுகவிற்கு எதிராக வாக்களியுங்கள் என்றல்லவா பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்? நாம் தமிழர் சீமானுக்கு இருந்த இன உணர்வு கூட இவர்களுக்கு இல்லையே!

'தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமான காங்கிரஸை தோற்கடியுங்கள்' என்று தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். அதில் கடுகளவாவது இவர்களுக்கு இன உணர்வு இருந்ததா?

அப்பாவித் தமிழர்களின் இனப்படுகொலைகளுக்காக நியாயம் கேட்கும் எஸ்.எம். பாக்கரையும், பேரா. ஜவாஹிருல்லாஹ்வையும் முஸ்லிம் புலிகள் என்று வர்ணிக்கும் இவர்கள், இலங்கையில் தமிழ் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு - தமிழ் - முஸ்லிம் இணக்கத்திற்கான முன்னெடுப்புகளை செய்து வரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை முஸ்லிம் புலிகள் என்று சொல்வதில்லையே ஏன்?

அந்தக் கூட்டணியை இலங்கை முஸ்லிம்களே ஏற்றுக் கொண்டிருப்பது - அவர்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து - இரு சமூகமும் ஒன்றாக இணைந்து சமூக - அரசியல் தளங்களில் இயங்குவதற்கு இசைந்துள்ளார்கள் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆக அவர்களே மறந்து போயிருக்கும் அவர்களின் காயங்களைக் கீறி நக்கிப் பார்ப்பது கேவலமான செயலல்லவா?

‘ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்' (5:08) என்று திருமறைக் குர் ஆன் கூறுகிறது. அந்தத் திருமறைக்குர் ஆனை கைகளில் ஏந்திக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவதும் இவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று அழைத்துக் கொள்வது வெட்கக் கேடு!

- ஃபைஸல்

Pin It