ஈழத் தமிழ் உறவுகளுடன் இரண்டாண்டுகள் தங்கியிருந்த போது நான் கண்ட கிளிநொச்சியின் சிறப்பையும் இன்று கிளிநொச்சிக்கு நேர்ந்துள்ள கீழ்நிலையினையும் எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழீழத்தின் எழுபது விழுக்காடு நிலப்பரப்பு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு புலிகள் தமிழீழத் தனியரசை நடாத்தி வந்தனர். பிரபாகரன் அவர்களைத் தமிழீழத்தின் தேசியத் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அரிய வாய்ப்பு

தமிழீழத்தில் பிரபாகரன் அவர்கள் தலைமையில் தனியரசு நடந்து கொண்டிருந்த போது, கிளிநொச்சியில் இரண்டாண்டுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து தமிழ்ப்பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் கல்லூரி மாணவனாக இருந்த காலம் தொட்டு, ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்குத் துணை நின்றவன்-தொடர்ந்தும் துணை நிற்பவன் என்பதால் அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

வீரம் விளையும் தமிழ் மண்ணில் கால் பதிக்கவேண்டும்; இனமானச் சுடரொளி பரவியுள்ள தமிழீழத்தைக் கண்ணாரக் காணவேண்டும்; அங்கு வாழும் உணர்வுள்ள தமிழர்களோடு உறவாட வேண்டும்; புலிப்படை வீரர்களின் எழுச்சியைக் கண்டு பூரிப்படைய வேண்டும் என நெடுங்காலம் என் உள்ளத்தில் நிறைந்திருந்த வேட்கையைத் தணிப்பதாக அந்த வாய்ப்யு அமைந்தது.

நான், கிளிநொச்சி நகரை அடைந்தேன். தொடக்கத்தில் சில நாட்கள் கிளிநொச்சி நகரின் பல இடங்களையும் எனக்குக் காட்டினார்கள். பள்ளிகள், வணிக நிறுவனங்கள், கலைக் கூடங்கள், மருத்துவமனைகள், சட்டக் கல்லூரி-நீதிமன்ற வளாகங்கள், காவல்துறைத் தலைமையகம் முதலிய பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்ந்தேன். தொடர்ந்து, ஆனையிறவு, முகமாலை, தாழையடி, பரந்தன், முரசுமோட்டை, விசுவமடு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவிளை, தேராவில், திருவையாறு, வெள்ளாங்குளம், பூநகரி, முருகண்டி முதலிய ஊர்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினர். அந்த இடங்களுடன் தொடர்புடைய பல செய்திகளைத் துணையாக வந்த தோழர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

தமிழ்நாடும் தமிழர் நாடும்

பல இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்த நிலையில், “ஐயா, தமிழீழத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று பொறுப்பாளர் ஒருவர் என்னைக் கேட்டார். “தமிழ் நாட்டிலிருந்து தமிழர் நாட்டிற்கு வந்திருப்பதாக உணர்கிறேன்” என்று விடையளித்தேன். அவர் விளக்கம் கேட்டார்.

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்ற அவ்வையாரின் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் காட்டினேன். “எங்கு மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலமே நல்ல நிலம் என்று அவ்வையார் கூறுகிறார். அதன்படி, இங்கு வாழும் மக்கள் நல்ல உணர்வுள்ள தமிழர்களாக விளங்குவதால் இந்த நாட்டைத் ‘தமிழர்நாடு’ எனக் குறிப்பிட்டேன்” என்று நான் அளித்த விளக்கத்தைக் கேட்டு அந்தப் பொறுப்பாளர் பூரிப்படைந்தார்.

தமிழீழத் தனியரசு

தமிழீழ அரசியல் பிரிவின் தலைமைச் செயலகம் கிளிநொச்சியில் இருந்தது. தமிழீழக் காவல்துறை, நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, தமிழீழக் கல்விக் கழகம், கலைபண் பாட்டுத்துறை முதலிய பல்வேறு துறைகளுக்கான பணியகங்கள் அங்கு இருந்தன.

தமிழீழத் தனியரசுக்கெனத் தனியே வகுக்கப்பட்ட சட்டங்களைக் கற்பிக்கின்ற சட்டக் கல்லூரி கிளிநொச்சியில் இயங்கியது. உரிமையியல், குற்றவியல் வழக்குகளை நடத்தித் தீர்ப்பு வழங்குவதற்கெனத் தமிழீழ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் துறையும் நீதித் துறையும் இணைந்து, குற்றங்கள் நிகழாமல் நாட்டைக் காத்து நின்றன. தமிழீழத்தில் இருந்த கல்விக் கூடங்களில் சிங்கள அரசின் பாடநூற் குழுவினர் ஆக்கிய நூல்களையே மாணவர்கட்குக் கற்பிக்கவேண்டிய நிலை இருந்தது. அந்த நூல்கள், தமிழினத்தின் தொன்மையைஇலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்த ஒன்பது மாவட்டங்கள் தமிழர்களின் தாயகம் என்ற உண்மையை மூடி மறைப்பனவாக இருந்தன. தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழர் வரலாற்றைத் தெளிவாக உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழக் கல்விக் கழகம் பல நூல்களை வெளியிட்டது. அந்த நூல்களின் அடிப்படையில் மாணவர்கட்குத் தமிழர் வரலாற்றைக் கற்றுக் கொடுப்பதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்  

கிளிநொச்சியிலும், தமிழீழத் தனியரசுக்கு உட்பட்ட பிற நகரங்களிலும் அரசின் சார்பில் பல வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேரன் வாணிகம், சோழன் வாணிகம், பாண்டியன் வாணிகம், இளந்தென்றல் வாணிகம் எனத் தூய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்பட்ட அந்த வணிக நிறுவனங்களின் சார்பாக உணவகங்கள், மருந்துக் கடைகள், வேளாண் பொருள் விற்பனையகங்கள், உந்துருளி (மோட்டார்பைக்) விற்பனைக் கூடங்கள், வண்ணப்படக் கலையகங்கள் முதலியன இயக்கப்பட்டன. திறமை மிக்க போராளிகளின் பொறுப்பில் அவை சீராக இயங்கின. தனியார் நிறுவனங்கள் சிலவும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவற்றின் பெயர்கள் நல்ல தமிழில் இருந்தால் மட்டுமே அந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. தமிழரசி நகைமாடம், ஈழநிலா நகை மாடம், தமிழ்ச்செல்வி புடைவையகம், தென்றல் காலணி அங்காடி, பொதிகை அழககம் (முடிதிருத்தகம்) என்பன போலத் தனியார் வணிக நிறுவனங்களும் நல்ல தமிழ்ப்பெயர்களைத் தாங்கி நின்றன.

தமிழமுதம் திட்டம்

தமிழர்கள், பிறமொழிச் சொற்களைத் தம் பெயர்களாகக் கொண்டிருப்பது தகாது என்பதால், “நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்; நானொரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்” என்ற முழக்கத்துடன், குழந்தைகட்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழீழத் தனியரசு ஒரு திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வந்தது. பிள்ளைக்குத் தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டதற்கான சான்றிதழைத் தமிழீழ வைப்பகத்தில் காட்டிப் பதிவு செய்து கொண்டால், அந்தப் பிள்ளையின் பெயரில் ஆயிரம் உரூகா வைப்புச் செய்து, பதினெட்டாம் அகவை நிறைந்தபின் அந்தப் பணத்தை வட்டியுடன் பெறலாம் என்பதே அந்தத் திட்டமாகும். தமிழீழத் தனியரசின் நிறுவனமாகிய தமிழீழ வைப்பகத்தால் செயற்படுத்தப்பட்ட அந்தத் திட்டம் ‘தமிழமுதம்’ என்ற அழகிய தமிழ்ப் பெயரைப் பெற்றிருந்தது.

கலை-பண்பாட்டுக் கழகம்

தமிழ்க் கலைகளையும் பண்பாட்டையும் காக்கும் நோக்குடன் தமிழீழக் கலை-பண்பாட்டுக் கழகம் செயற்பட்டு வந்தது. அந்தக் கழகத்தைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பொறுப்பாளராக இருந்து சிறப்பாகச் செயற்படுத்தினார்.கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் நுண்கலைக் கல்லூரிகள் இருந்தன. அங்கு ஆடல், பாடற் பயிற்சிகளும் இசைக் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

கிளிநொச்சியிலும், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரங்களிலும் ‘அறிவமுது புத்தக நிலையம்’ என்ற பெயருடன் நூல் விற்பனையகங்கள் சிறப்பாகச் செயற்பட்டு வந்தன. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் இலக்கண நூல்கள், வரலாறு, சமூகவியல், மொழியியல் தொடர்பான நூல்கள், அறிவியல் சார்ந்த நூல்கள் முதலிய பலவும் அறிவமுது புத்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆடவரும் மகளிரும் அணி அணியாக அறிவமுது நிலையத்திற்கு வந்து நூல்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். பலதுறை நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அந்த மக்களிடம் நிறைந்திருந்தது.

வானொலி-தொலைக்காட்சி

‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியும், ‘புலிகளின் குரல்’ - வானொலியும் கிளிநொச்சியில் சிறப்பாக இயங்கின. தமிழின உணர்வைத் தட்டி எழுப்புகின்ற இனிய தமிழ்ப்பாடல்களும், ஆடல்களும், நேர்காணல்களும் மட்டுமே அந்த ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன. தமிழ்த் திரைப்படக் காட்சிகளும், பாடற்காட்சிகளும் முற்றாகத் தவிர்க்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் தொடர்பான குறும்படங்கள் அவ்வப்போது தொலைக் காட்சியில் ஒளி பரப்பப்பட்டன.

தமிழர் மறுவாழ்வுக் கழகம், பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்புகள் தமிழர்களின் நலவாழ்வுக்குத் தேவைப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன. தமிழீழத்தின் பல நகரங்களிலும் தமிழீழ அரசின் மருத்துவமனைகள் இயங்கின. புண்பட்டு வந்த போராளிகளுக்கும் நோய்ப்பட்ட பொதுமக்களுக்கும் மருத்துவர்கள் சிறப்பாகச் சேவை செய்தனர்.

‘சிவபாத’ கலையகம்

சிங்களர்களின் வன்முறைத் தாக்குதல்களால் மலையகப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களுக்காகத் தமிழீழ அரசு கிளிநொச்சியின் புறத்தே ஒரு குடியிருப்பை அமைத்துத் தந்திருந்தது. அந்தப் பகுதி மலையாளபுரம் என்று அழைக்கப்பட்டது. இடம் பெயர்ந்து வந்த மலையகத் தமிழர்களின் குழந்தைகள் பயில்வதற்காக ஒரு கல்விக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்விக் கூடம் ‘சிவபாத கலையகம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. சிங்களர் வன் முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் என்பதன் சுருக்கமே சி-வ-பா-த-கலையகம் என்று அழைக்கப்பட்டது.

செஞ்சோலை - அறிவுச்சோலை 

கிளிநொச்சியில் குழந்தை களுக்கான இரண்டு காப்பகங்கள் இருந்தன. பெண்குழந்தைகளுக்கான காப்பகம் செஞ்சோலை என்று அழைக்கப்பட்டது. ஆண் குழந்தைகள் காப்பகம், காந்தரூபன் அறிவுச்சோலை என்று பெயர் பெற்றிருந்தது. வீரச்சாவடைந்த காந்தரூபன் என்ற கரும்புலியின் கோரிக்கையை ஏற்று அந்த இரண்டு காப்பகங்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஓராண்டு கூட நிரம்பாத மழலைகள் முதல் பன்னிரண்டாம் வகுப்புப் படிப்போர் வரை ஒவ்வொரு காப்பகத்திலும் ஏறத்தாழ இருநூறு குழந்தைகள் இருந்தனர். அகவை ஐந்து நிறைந்த அனைவரும் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மழலைக் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதற்கும் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தனிப்பயிற்சி அளிப்பதற்கும் தகுதி வாய்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகள் வெவ்வேறு பணியகங்களில் வேலைக் கமர்த்தப்பட்டனர். உரிய அகவை எய்தியவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை அரசே ஏற்றுக் கொண்டிருந்தது.

நெஞ்சில் நிலைத்தவர்கள் 

அறிவுச்சோலை, செஞ்சோலை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தச் சோலைகளில் வாழ்ந்த பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் அரிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அப்பா என்றும் ஐயா என்றும் அழைத்து என்னிடம் அன்பினைப் பொழிந்த அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் என் நெஞ்சிற் பதிந்து நிலைத்துள்ளன. மலர்ச் சோலையினுள் மந்திகள் நுழைந்தது போலக் கிளிநொச்சிக்குள் நுழைந்த சிங்களப் படையினர், செஞ்சோலையில் இருந்த பெண் குழந்தைகளை எங்கோ கொண்டு சென்று விட்டதாகவும் ஆண் குழந்தைகளை முகாம்களில் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்துவதாகவும் வருகின்ற செய்திகள் நெஞ்சைத் துளைத்துப் புண்ணாக்குகின்றன.

கனவாய், பழங்கதையாய்.... 

கொடிய சிங்களரின் ஒடுக்குமுறை வெறியாட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கிறோம் என்ற களிப்புடனும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற பெருமிதத்துடனும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் இறையாண்மையுள்ள தமிழீழம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையுடனும் கிளிநொச்சியில் நான் கண்ட தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இன்று எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போயின.

தமிழீழத்திற் செயற்பட்டு வந்த பல்வேறு துறைகளுக்£ன பணியகங்கள் இன்று மூடப்பட்டுக் கிடக்கின்றன. கலை-பண்பாட்டுக் கழகம் நிலை குலைந்து கிடக்கிறது. ‘புலிகளின் குரல்’ வானொலி பொலிவிழந்து, ஒலியவிந்து விட்டது. தேசியத் தொலைக் காட்சி நிறுவனம் சிதைக்கப் பட்டுவிட்டது. தமிழீழ வைப்பகங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. வணிக நிறுவனங்கள் இருந்த இடம் தெரியவில்லை. மருத்துவ மனைகள், குண்டு வீச்சுகளால் குலைந்து போய்விட்டன. செஞ்சோலையும் அறிவுச்சோலையும் சீரழிந்துவிட்டன. விடுதலை வேட்கையுடன் நிமிர்ந்து நடை பயின்ற தமிழர்களின் நிலை கவலைக் கிடமாகிவிட்டது. அனைத்துப் பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. பிள்ளைகள் அனைவரும் இடம் பெயர்ந்த பெற்றோருடன் இணைந்து காடுகளில் வாட நேர்ந்தது. கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் காடுகளே புகலிடமாயின.

வன்னிப் பகுதியைச் சேர்ந்த ஐந்து இலட்சம் தமிழர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து முல்லைத் தீவுக் காடுகளுக்குள் புகுந்தனர். சிங்களப் படையினரின் கட்டுப்£ட்டில் இருந்து சீரழிவதைக் காட்டிலும் தமிழ்ப் போராளிகளுடன் சேர்ந்திருப்பதே தக்கது; வாழ்ந்தாலும் மடிந்தாலும் தமிழீழ விடுதலைக்காகப் பல ஈகங்களைச் செய்துள்ள புலிகளுடன் பொருந்தி நிற்பதே உகந்தது என எண்ணினர்.

படையினர் செய்த படுகொலைகள்  

இடம்பெயர்ந்து நின்ற தமிழ் மக்களை இலக்காக வைத்துச் சிங்களப் படையினர் கொத்துக் குண்டுகளை வீசினர்; பட்டவுடன் பற்றி எரிந்து உடலைக் கரிக்கட்டையாக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசித் தமிழர்களைப் படுகொலை செய்தனர். 2009-மே-15- ஆம் நாள், புண்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3500 போராளிகளையும் 8000 பொது மக்ளையும் ‘புல்டோசரை’ ஏற்றிக் கொன்று அழித்தனர். மே-17-ஆம் நாள், ஏறத்தாழ 20000 தமிழர்கள் பதுங்கு குழிகளுக்குள் தள்ளப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டனர்.

தமிழர்களை அழிக்க உதவிய இந்தியா

கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு தனியரசு நடத்தித் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களுள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த ஏப்பிரல்-மே மாதங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் படுகொலைகளைச் செய் வதற்கு, இந்திய அரசின் உதவிகள் சிங்கள அரசுக்குப் பெருமளவில் துணையாக இருந்தன. கொடியவன் இராசபக்சேயைக் கருவியாக்கி, ஈழத்தமிழினத்தை அழித்தொழிப்பதில் இந்திய அரசு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆறரைக் கோடித் தமிழர்களின் உணர்வை மதிக்காமல், நமது இனவழித் தொடர்புடைய ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் இந்திய ஆட்சியாளர்கள் முனைந்து நிற்கின்றனர்.

தமிழர்க்கு இந்தியா சொல்லும் செய்தி  

ஆயுதம் ஏதுமின்றிக் காந்தியார் காட்டிய அறவழியில் விடுதலை பெற்ற இந்தியா, விடுதலை வேண்டி நின்ற தமிழர்களைக் கொன்று குவிக்க ஆயுதங்களைக் கொடுத்து உதவியிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான பேரெழுச்சியை அடக்கி ஒடுக்க ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறது இந்தியா. தமிழர்களை ஒழிக்கச் சிங்களர்க்குத் துணை போனதன் ஊடாக, இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடித் தமிழர்கட்கும் ஒரு செய்தியை அறிவித்துள்ளனர்.

“தமிழர்களே! தமிழர்களே! உங்கள் நாடு இந்தியா அன்று; தமிழ்நாடு, நீங்கள் இந்தியர்கள் அல்லர்; தமிழர்கள் இந்தியர் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தாலும் நாங்கள் உங்களை இந்தியர்களாக ஏற்கவில்லை; என்றும் ஏற்கப் போவதில்லை”  

இதுதான் இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்கட்கு விடுத்திருக்கும் செய்தியாகும்.  

நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்காக இந்திய அரசு, கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியராகத் தில்லிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இது சான்றாகும். 

இந்திய-சிங்கள அரசால் நேர்ந்த இழப்பு 

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதை ஏற்றுக்கொண்டும் தங்களை இந்தியர் என நம்பிக் கொண்டும் உள்ள மீனவத் தமிழர்கள் அழிக்கப்படுவதைப் பற்றியே அலட்டிக் கொள்ளாத இந்திய அரசு, ஈழத்தமிழரைக் கொன்று அழிப்பதற்குச் சிங்களர்க்கு உதவுகிறது என்பதில் வியப்பதற்கேதுமில்லை.

இந்தியா சிங்களர்க்குச் செய்த பல்வேறு உதவிகளல் ஈழத் தமிழினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. நல்லோர் போற்றும் வண்ணம் நடந்த தமிழீழத் தனியரசு இன்று இல்லாமற் போனதற்கு இந்தியாவே காரணம் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

கிளிநொச்சி நகரம் இன்று ஒளி இழந்து விட்டது. தமிழர்கள், தலைநிமிர்ந்து நடந்த கிளிநொச்சி வீதிகளில் இன்று சிங்களக் காடையர் செருக்குடன் திரிகின்றனர்.

தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் காத்துநின்ற கிளிநொச்சியை இன்று சிங்களச் சிறுமை சீரழிக்கின்றது.

“ஐம்பதாண்டுகளில் தமிழ்மொழி அழிந்துவிடும் என்று பன்னாட்டு (UNESCO) மன்றத்தின் பண்பாட்டுப் பேரவை அறிவித்துள்ளது. அதன்படித் தமிழ்நாட்டில் அழிந்தாலும் ஈழத்தில் தமிழ்மொழியை அழியவிட மாட்டோம்; கண்போலக் காத்து வளர்ப்போம்” என்று தன்நம்பிக்கையுடன் சொன்ன தமிழர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் இன்று தமிழினத்தை முற்றாக அழித்துவிடத் துடிக்கும் இராசபக்சேயின் எடுபிடிகள் இயங்கிக் கொண்டுள்ளன.

இன்று நம் இனத்தை அழிக்கத் துடிப்பவர்கள், மிக விரைவில் அழிவைக் காண்பார்கள். ஈழத்தமிழரை வீழ்த்தி விட்டோம் என விம்மிப் புடைத்து நிற்கும் வீணர்கள் மிக விரைவில் வீழ்ந்து படுவார்கள். ஒளிமிகுந்து விளங்கிய கிளிநொச்சியை இருட்டில் நிறுத்திவிட்டோம் என எக்காளமிடுவோர் மிக விரைவில் இருளில் தள்ளப்படுவார்கள். இன்று ஒளியிழந்து நிற்கும் கிளிநொச்சி, நாளை ஒளிதுலங்கும் நகராக உயர் தமிழீழத்தின் தலைநகராக உயர்வு பெறும். தமிழ்ப் புலிப் போராளிகள் மீண்டும் தமிழீழத் தனியரசை அமைப்பார்கள். இது உறுதி. உறுதி. உறுதி.