பேராசிரியர் டாக்டர் யூட் லால் பெர்னாண்டோ (Jude Lal Fernando) அவர்கள் யேர்மனிய நீதிமன்றில் 10.06.2022 அன்று வழங்கிய ஆய்வின் மீது சட்டவாளர்கள் கேள்வியெழுப்ப அனுமதி வழங்கப்பட்டது. எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே தொடர்கின்றன...
சட்டவாளர் கேள்வி: இறுதிப் போர் தொடர்பில் ஆய்வு முறைகள், வெளிநாட்டு ஆய்வுகள், செய்தித்தாள் கட்டுரைகள், விடுதலைப்புலிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் செய்திக் குறிப்புகள் உங்களிடம் உள்ளனவா? நீங்கள் 2004 வரை நேர்காணல்கள் மூலம் தரமான கள ஆய்வையும் நடத்தியுள்ளீர்களா?
பதில்: ஆய்வென்பது 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். முதலில், உங்களுக்குத் தெரிந்ததை எப்படி அறிவது? ஒருவர் வெவ்வேறு ஆதாரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும் நான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடனும் முக்கியமாக, சிறிலங்கா அரசால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுடனும் பல நேர்காணல்களை நடத்தியுள்ளேன்.
கேள்வி: புலி உறுப்பினர்களுடன் பேச உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்ததா?
பதில்: ஆம்.
கேள்வி: 2004-இல் நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினீர்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தீர்கள், இல்லையா?
பதில்: ஆம், நான் நேர்காணல்களைச் செய்து கொண்டே இருந்தேன். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தஞ்சக் கோரிக்கையாளர்களாக ஐரோப்பாவிற்கு வந்தனர். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அமைதிக்கான செயற்பாட்டுக் குழுக்களை Skype மூலம் அணுக முடிந்தது.
கேள்வி: இறுதிக் கட்டம் பற்றிய கேள்விகள். முதலாவதாக, பொதுமக்கள் மீதான இலக்குகளைத் தவிர்க்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்தின் போர் முறை பற்றி நீங்கள் ஏதேனும் அறிவீர்களா?
பதில்: சிறிலங்கா இராணுவம் பொதுமக்களை விட்டு வைக்கவில்லை. நான் அப்பகுதியில் போர் நடக்கும் வேளை இருக்கவில்லை. ஆனால் சிறிலங்கா அரசின் வரலாற்று நடத்தை முறையையும், ஐ.நா., ஆதாரங்கள், அரசச் சார்பற்ற நிறுவன ஆதாரங்கள், தேவாலய ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் சிறிலங்கா இராணுவமானது புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை, சிறிலங்கா இராணுவத்தால் மருத்துவமனைகளே கொடூரமாகத் தாக்கப்பட்டன என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சிறிலங்காவின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய தனது பத்திரிகையாளர் சந்திப்பில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அனைவரும் சட்டப்பூர்வமான இராணுவ இலக்கு என வெளிப்படையாகக் கூறினார்.
கேள்வி: இந்த அறிக்கை மருத்துவமனைகள், கோவில்கள், பள்ளிகள் போன்ற தெளிவாக அடையாளம் காணக்கூடிய இலக்குகளையும் குறிக்கிறதா?
பதில்: ஆம். ஐ.நா ஒருங்கிணைப்பாளராக அவ்வேளையில் செயற்பட்ட அவுசுத்திரேலியக் குடிமகன் கார்டன் வெய்ஸ் (Cordon Weiss), குறைந்தது 16 மருத்துவத் தளங்கள் தாக்கப்பட்டதாகக் கூறினார். அது ஜூன் 2008 முதல் மே 2009 வரையான காலமாகும். அப்போது அப்பிரதேசம் பாதுகாப்பு வலயம் (No Fire Zone) என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் அங்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அங்கு சென்ற பின்னர் அவர்கள் தாக்கப்பட்டனர். அதற்கு ஆதாரம் உள்ளது. குறிப்பாக, ஐ.நா., அறிக்கைகள்.
கேள்வி: 2008-க்கு முன் இராணுவத்தால் பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?
பதில்: ஆம், நிச்சயமாக! பொதுமக்களுக்கு எதிராகப் படுகொலைகள் நடந்தன. சிறுவர் இல்லத்தின் மீது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்க படுகொலை. அதை நடாத்தியது சிறிலங்காவின் விமானப்படை ஆகும். 60 இளம்பெண்கள் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர்.
கேள்வி: மேலும் உதாரணங்கள்? குடியிருப்பு வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதா?
பதில்: ஆம். வரைபடத்தைப் பார்த்தால் (Channel 4 திரைப்படமான No Fire Zone) அதைக் காட்டுகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவை கடலிலிருந்து, தரையிலிருந்து, வானிலிருந்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இது முக்கியமானது! ஏனென்றால் இந்தப் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களிடமிருந்து நான் சாட்சியங்களைத் திரட்டியிருக்கிறேன். அவர்களில் சிலர் அப்பகுதியை விட்டு உயிருடன் வெளியேற முடிந்தது. அவர்களுள் தமிழ் ஊடகவியலாளர்கள் இருந்தனர், கிறித்தவப் பெண் மதகுருக்கள், மற்றும் பாதிரியார்களும் இருந்தனர். அவர்களை 2010, 2013 ஆண்டுகளில் நடந்த மக்கள் தீர்ப்பாயங்களுக்கு அழைத்து சாட்சி சொல்ல வாய்ப்பளித்தோம்.
கேள்வி: மக்கள் ஏன் இந்தப் பகுதியில் நீண்ட காலமாகத் தங்கியுள்ளனர்?
பதில்: குறைந்தது, அரை மில்லியன் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை வசிக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர். அங்கு அவர்களுக்குப் பாதுகாப்பு இருந்தது. உணவு அல்லது மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருந்திருக்கலாம். ஆனால் பாதுகாப்பு நிறைவாக இருந்தது. குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைவாக இருந்தது. புலிகள் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் சிறிலங்காவின் அரசுப் பகுதிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கேள்வி: அந்தப் பகுதியில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டாலும் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தமிழ் சமூகத்தில் எண்ணம் இருந்ததா?
பதில்: ஆம். இதற்கான ஆதாரங்கள் 1986–இலிருந்து உள்ளன.
கேள்வி: ஐ.நா., பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 2008-இல் அவர்கள் தமிழர் பிராந்தியங்களிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இச்செயல்முறை பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும்? அந்த சமிக்ஞை என்ன?
பதில்: Channel 4 ஆவணப்படத்தைப் பார்த்தால் தமிழர்கள் ஐ.நா., அலுவலகங்கள் முன்னால் நின்று போராடுவதைக் காணலாம். ஐ.நா., அங்கேயே தங்கியிருக்க வேண்டுமென அவர்கள் கெஞ்சினார்கள். ஐ.நா., வெளியேறினால், தங்கள் மீது சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடாத்துமென்பது அவர்களுக்குத் தெரியும். இறுதியில் அதுதான் நடந்தது.
கேள்வி: 40,000 பேர் இறந்ததாக அரசு எப்படிச் சொன்னது?
பதில்: சிறிலங்காவின் சனாதிபதி ஒரு நேர்காணலில், இறப்புகள் வெறும் 5000 அல்லது 10000 என்று முதலில் கூறினார். ஆனால் அது 30000! அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி அரை மில்லியன் மக்களைக் காணவில்லை.
கேள்வி: சிறிலங்காவின் பிரதமர், மக்களை மீட்டதை வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை என்று அழைத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: ஆம், சர்வதேச சமூகம் இதை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அழைத்தது. மேலும் 2002-இல் இருந்த நிலைக்கு முரணான ஒரு நிலைப்பாட்டை, சமாதான முன்னெடுப்பிற்கு எதிராக எடுத்தது. யேர்மனியும் அதன் அமைப்பான GTZ-உம் புலிகளின் பகுதிகளில் ஏராளமான கட்டுமானத் திட்டங்களை நடாத்தின. ஆனால் புலிகள் மீதான தடைக்குப் பிறகு அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப் பெயர் மாற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை மீட்பதே மனிதாபிமான நடவடிக்கை என்று இலங்கை அரசு கூறுகிறது. சரி, அவர்கள் சொல்வது போல வைத்துக் கொள்வோம். 300,000 மக்கள் அரசாங்கப் பகுதிகளுக்கு வந்தபொழுது அவர்கள் 2 வருடங்களாக வதை முகாம்களில் (Concentration Camp) அடைக்கப்பட்டது ஏன்? அங்கு வைத்துப் பலர் காணாமலாக்கப்பட்டது ஏன்? அங்கு பாலியல் வல்லுறவுகள் நடந்தது எப்படி? வெளியாருடன் பேசுவதற்குக் கூட அவர்களுக்கு உரிமை இருக்கவில்லை.
கேள்வி: இறுதியாக சிறிலங்கா அரசின் வதை முகாம்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களிடம் பேசியிருக்கிறீர்களா? நிலைமைகளைப் பற்றி அவர்கள் உங்களுக்கு என்ன கூறினார்கள்?
பதில்: நாங்கள் ஜனவரி 2010-இல் எனது பல்கலைக்கழகத்தில் முதல் சர்வதேசத் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தோம். படுகொலைகள் நடைபெற்று 7 மாதங்களுக்குப் பிறகு மனிதநேயப் பணியாளர்களை அங்கிருந்து கத்தோலிக்கத் திருச்சபை வழியாக டப்ளினுக்கு அழைத்துச் சென்றேன். அயர்லாந்து அரசாங்கம் ஒரே நாளில் விசாக்களை வழங்கியது. மேலும் அவர்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் கடத்தல் பற்றிய தெளிவான ஆதாரங்களுடன் வந்தனர். மேலும் நான் முன்பே குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளுக்காக ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு சென்றாலும் நீங்கள் புலியாக எண்ணப்படுவீர்கள் என்பதே இலங்கை இராணுவத்தின் முடிவாகும்.
கேள்வி: இந்த மனிதாபிமானமற்ற நடத்தை, சித்திரவதை, பாலியல் வல்லுறவு என்பன கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டது என்றும், அதற்கும் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா இல்லையா என்பதற்கும் தொடர்பில்லை என்றும் நான் புரிந்து கொள்கிறேன். இது சரியானதா?
பதில்: ஆம், சரி.
கேள்வி: விசாரணைகளுக்கான கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: ஆரம்பத்தில் இந்த முகாம்களுக்குச் செல்ல சர்வதேசக் கண்காணிப்பாளர்களுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படவில்லை. ஐ.நா பொதுச்செயலாளர் ஒரு குழுவை நியமித்தார். அந்த அறிக்கை சில உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. ஐ.நா., குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியது ஏன் என்பது குறித்து உள்ளக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது. மேலும் அந்த அறிக்கை, ஐ.நா-வின் மதிப்பிற்குரிய தூதரக அதிகாரியான பெட்ரியால் எழுதப்பட்டது. மேலும் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா., தவறி விட்டது என்றும் அவர் கூறியிருந்தார். ஐ.நா., தனது சொந்த அதிகாரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பதே எனது முடிவு.
கேள்வி: இதற்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக் கூறுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன், இது சரியா?
பதில்: உள்ளக விசாரணையென்பது உலகப் போரின் குற்றங்களை விசாரிக்க நாசி ஆட்சியைக் கேட்பது போன்றது. மேலும் இந்த விசாரணைகள் நடக்கவே இல்லை.
எனது ஆய்வு மீதான உங்கள் கவனத்திற்கு நன்றி! இறுதியாக ஒரு விடயத்தைக் கூறுகிறேன். வரலாற்றினை ஒருபோதும் மாற்றி எழுத முடியாது. இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும். பேராசிரியர் ரோசல் (Rössel) வதந்திகளை மீண்டும் எழுத முயன்றிருக்கிறார். 40 வருட ஆராய்ச்சியின் அடிப்படையில் உண்மைகளை முன்வைப்பதே எனது முயற்சி. வரலாறு ஒருபோதும் பொய் சொல்லாது. நன்றி!
(அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையே தமிழினப் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிறுவுவதற்கான மக்கள் தீர்ப்பாய அமர்வு – 3 குறித்த தொடர் இத்துடன் நிறைவு பெற்றது. அடுத்து “தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியது குற்றம் அல்ல, அது எனது உரிமை” என யேர்மனிய (German) நீதிமன்றில் மனுத் தொடுத்திருக்கும் நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா மீதான விசாரணை அமர்வு குறித்த கட்டுரைத் தொடர் தொடங்கும்.)
- சபா