சேவாபாரதி என்கிற ஆர்.எஸ்.எஸ். நேரடி வழிகாட்டுதலின் பேரில் இயங்கும் தன்னார்வ அமைப்பு, சமீபத்தில் நிறைய செய்திகளில் அடிபட்டது.
அதுவும் சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற குண்டர்கள்தான் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்கிற செய்தி பரவலாகப் பேசப்பட்டது.
எங்களுக்கும் சாத்தான்குளம் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்று தமிழக சேவாபாரதி அமைப்பினர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
சேவாபாரதி அமைப்பு தன்னை, அடித்தள மக்களின் கல்வி, சுயசார்பு, சமுதாயநலன், மருத்துவம், பேரிடர் நிவாரணம் என்னும் ஐந்து துறைகளின் வாயிலாகப் பல்வேறு சேவைத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று வெளி உலகத்துக்குச் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் சேவா பாரதி அமைப்பு எப்படிப்பட்ட சமூக விரோதச் செயல்களைச் செய்கிறது என்று 2004 மார்ச் தலித் முரசு இதழில் ஒரு செய்தி வந்துள்ளது.
குஜராத் பூகம்பம் நிதிக்காகத் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான நிதியை இந்தியாவில் உள்ள சேவாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது இயக்க நோக்கங்களுக்காகச் செலவு செய்துள்ளது என்பது லண்டனிலுள்ள ஆவாஸ் தெற்காசியக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது என்பதே தலித் முரசில் வந்த தகவல்.
இங்கிலாந்திலிருந்த குஜராத் பூகம்பத்திற்குத் திரட்டப்பட்ட நிதியை அங்கு நடந்த கோத்ரா கலவரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது என்பதே ஆவாஸ் அமைப்பின் குற்றச்சாட்டு.
ஆவாஸ் அமைப்பின் குற்றச்சாட்டு உண்மை என்பது குஜராத் கலவரத்தை விசாரித்த 'குடிமக்களின் தீர்ப்பாயத்தின்' அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
அந்த அறிக்கையில், முஸ்லிம்களும் தலித்துகளும் நகர்ப் பகுதியில் அருகருகே ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற போதும் அவர்களிடையே வன்மத்தையும், பகைமையையும் இந்துத்துவா, சேவாபாரதி, பஜ்ரங்தள் அமைப்புகள் வளர்த்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலையற்ற தலித் இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் முதல் 5000 வரை சம்பளம் கொடுத்துக் கலவரத்தைக் கட்டமைத்தது.
சேவாபாரதி அமைப்புக்கு நிதி எப்படி வந்தது, அதை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று 'இந்துத்துவமும் சியோனிஸமும்' என்கிற புத்தகத்தில் அ.மார்க்ஸ் விரிவாக எழுதியுள்ளார், இரக்கத்தைத் தூண்டித் திரட்டிய பணம் இந்துத்துவ அமைப்புகளுக்கு விநியோகம் என்கிற கட்டுரையில்.
பிரிட்டிஷ் மக்கள் மனிதநேய நோக்கில் தந்த ஏராளமான நிதி இந்துத்துவா அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்கிற குற்றச் சாட்டை ஆவாஸ் அமைப்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆவாஸ் அறிக்கை இதுகுறித்து மேலும் சொல்வது என்னவென்றால் பிரிட்டனிலிருந்து செயல்படும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பு குஜராத் பூகம்பத்தில் திரட்டப்பட்ட 2 மில்லியன் பவுண்ட் நிதியை இந்தியாவில் இருக்கும் அதன் தாய் அமைப்பான சேவாபாரதிக்கு அனுப்பியது.
சேவா இன்டர்நேஷனல் அமைப்பு கொடுத்த பணத்தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்காமல் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை விதைக்கும் அரசியலுக்குச் செலவிட்டது சேவாபாரதி அமைப்பு.
பிரிட்டனில் செயல்படும் சேவா இன்டர்நேஷனல் அமைப்பும் வெளிப்படையான அமைப்பு அன்று. ஆர் எஸ் எஸ்., விசுவ இந்து பரிசத், கல்யாண் ஆசிரமம் டிரஸ்ட் போன்ற பதிவு செய்யப்பட்ட அமைப்புகளின் நிதி வசூல் செய்யும் ஒரு முகவராக சேவா இன்டர்நேஷனல் செயல்படுகிறது என்பதை ஆவாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் குரோவர் பத்திரிக்கையில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார் .
பிரிட்டனில் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு வெறுப்பையும் கலவரத்தையும் வட இந்தியாவில் விதைத்து 2014இல் மோடி பிரதமராக பிரிட்டன் நிதி வழிவகுத்ததால், 2015 நவம்பர் 10இல் மோடி இங்கிலாந்து சென்றபோது Modi not welcome என்கிற பிரச்சாரத்தை ஆவாஸ் அமைப்பு இங்கிலாந்து முழுக்க நடத்தினர்.
(Go back Modi, மோடியே திரும்பிப்போ என்கிற பிரச்சாரத்தைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு முன்பே Modi not welcome என்கிற பிரச்சாரம் பிரிட்டனில் தொடங்கப்பட்டது)
இப்படி வெளிநாடுகளிலிருந்து வசூலிக்கப்பட்ட நிதியைப் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்திய ஓர் அமைப்பு சேவாபாரதி என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், இந்த அமைப்பு நாடு முழுக்க ஆர். எஸ்.எஸ். தலைமையின் கீழ் செல்வாக்கோடு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
பொதுவாக இந்துத்துவ அமைப்புகள் தான் செய்யும் எந்த ஒரு கலவரத்தையும் நேரடியாகச் செய்யாது. ஆனால் செய்த கலவரத்திற்கு எங்களின் பங்களிப்பு உண்டு என்பதை மறைமுகமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தும்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலைகளிலும் அதுதான் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கிறது வழக்கம்போல. படுகொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ்.-இன் சேவா பாரதி சொன்னாலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு நாங்களே காரணம் என்ற கருத்துருவாக்கத்தையும் ஊடகவெளியில் செய்துள்ளது.
அச்சத்தையும், வதந்தியும் தொடர்ந்து பரப்பி வடஇந்தியாவில் வலுப்பெற்றது போல் தமிழகத்திலும் காலூன்றப் பார்க்கிறதா இந்துத்துவா அமைப்பு?
காலம்தான் பதில் சொல்லும்?!
-வேல்முருகன்