இந்துக்கள் வெவ்வேறு சமூகத்தினரிடம் வெவ்வேறுவிதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்த அரசியல் சர்ச்சைக்கு இடையேயும் எவரும் காண முடியும். அரசியல் பாதுகாப்புகளைக் கோரும் மக்கள் இந்தியாவில் தீண்டப்படாதோர் மட்டுமே அல்ல. தீண்டப் படாதவர்களைப் போன்றே முஸ்லீம்களும், சீக்கியர்களும் தங்கள் அரசியல் கோரிக்கைகளை இந்துக்களிடம் முன்வைத்துள்ளனர். முசல்மான்களையும், சீக்கியர்களையும் எவ்வகையிலும் நிராதரவான சிறுபான்மையினர் என்று கூறிவிடமுடியாது. மாறாக அவர்கள் இந்தியாவில் மிக சக்திவாய்ந்த இரு சமூகங்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் கல்வித் துறையில் பெரிதும் முன்னேறியுள்ளனர்.

ambed ghandi 400

பொருளாதார ரீதியில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களுடைய சமூக அந்தஸ்தின் காரணமாக இந்துக்களைப் போன்றே உயர்நிலைமையில் இருக்கின்றனர். அவர்களது அமைப்பு வலுவான கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. ஆதலால் எந்த இந்துவும் அவர்களிடம் தன்னிச்சையான, அதிகார தோராணையான முறையில் நடந்து கொள்ள முடியாது; அவர்களுக்கு எத்தகைய தீங்கு இழைக்கவும் துணிய முடியாது.

முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களின் அரசியல் கோரிக்கைகள் என்ன? அவற்றை இங்கு விரிவாக எடுத்துரைப்பது சாத்தியமல்ல. ஆனால் அவை மிகவும் மிகையானவை, இந்துக்கள் அவை குறித்து பெரிதும் சீற்றம் கொண்டுள்ளனர் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக, தீண்டப்படாதோர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளும், அவர்களது நிலைமையும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளுக்கும் அவர்களது நிலைமைக்கும் நேர்மாறானவை. தீண்டப்படாதவர்கள் பலவீனமான நிராதரவான, இகழப்படும் சிறுபான்மையினர். அவர்கள் அனைவரது தயவையும் முற்றிலும் எதிர்பார்த்து நிற்கும் அவல நிலையில் பரிதாப நிலையில் இருப்பவர்கள். இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் ஒன்றுசேர்ந்து அவர்களை அடக்கும், ஒடுக்கும் சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எல்லா சிறுபான்மையினர்களிலும் அவர்களுக்குத்தான் மிகப் பெருமளவில் ஆதாரவு தேவை, பலமிக்க பாதுகாப்பு தேவை. அவர்களது கோரிக்கைகள் மிதமானவை; முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களது கோரிக்கைகள் போன்று அவை எவ்விதத்திலும் மிகையானவை அல்ல.

முஸ்லீம்கள், சீக்கியர்கள் தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகள் விஷயத்தில் இந்துக்களின் நிலை என்ன? முஸ்லீம்கள், சீக்கியர்களின் கோரிக்கைகள் மிகையானவையாக இருப்பினும் அவர்களுடன் அதிலும் முக்கியமாக முஸ்லீம்களுடன் சமரசம் செய்துகொள்ள இந்துக்கள் தயாராக இருக்கிறார்கள்; முசல்மான்களுடனான உறவு விஷயத்தில் சரியானபடி நடந்து கொள்ள அவர்கள் விரும்புவது மட்டுமன்றி, அவர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுக்கவும், தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவும் தயாராக இருக்கின்றனர். இங்கு திரு. ராஜகோபாலாச்சாரியரின் அரசியல் சாணக்கியங்களையும், சாகசங்களையும் எவரும் மறந்துவிட முடியாது. அவர் திடீரென்று தம்மை முஸ்லீம் லீக்கின் படைவீரராகப் பதிவு செய்து கொண்டார், தம் சொந்த இனத்தவர் மீதும், பழைய நண்பர்கள் மீதும் போர்ப்பிரகடனம் செய்தார்.

இவை எல்லாம் எதற்காக? முஸ்லீம்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படத் தவறியமைக்காக அல்ல, மாறாக அவர்களது மிகவும் மிகையான கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்பதற்காக. அந்தக் கோரிக்கை வேறொன்றுமல்ல, பாகிஸ்தான்!! அதேசமயம் தீண்டப்படாதவர்களின் கோரிக்கைக்கு திரு. ராஜகோபாலாச்சாரியாரின் பதில் என்ன? நான் அறிந்தவரை இது விஷயத்தில் அவரிடத்தில் எந்தப் பதிலும் இல்லை. இந்த நாட்டில் 6 கோடி தீண்டப்படாத மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதையும், அவர்களும் முஸ்லீம்களைப் போன்றே அரசியல் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பதையும்கூட அவர் அறிந்திருப்பதாகத் தோன்றவில்லை. திரு. ராஜகோபாலாச்சாரியரின் இந்தத் திட்டமிட்ட மெளனப் போக்கும், அலட்சிய நோக்கும் இந்து சமுதாயம் முழுவதன் நிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

இந்துக்கள் ஒரு வேட்டை நாயின் விடாப்பிடியோடும், ஒரு கட்சி மாறியின் வக்கரிப்போடும் தீண்டப்படாதவர்களின் அரசியல் கோரிக்கைகளை எதிர்த்து வருகின்றனர். பத்திரிக்கைகள் அவர்களுடையவை; அவர்களுக்குப் பாசுரம் பாடுபவை; எனவே இவற்றின் உதவிகொண்டு தீண்டப்படாதோரை உதாசீனம் செய்வதற்கு, அலட்சியம் செய்வதற்கு திட்டமிட்ட முறையில் முயன்று வருகின்றனர்.

தீண்டப்படாதவர்களைப் புறக்கணிப்பதில், அலட்சியம் செய்வதில் தோல்வியுறும்போது, அவர்களது தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர்; எவரேனும் ஒரு தலைவன் அவர்களிடம் விலைக்குப் போகத் தயாராக இல்லை என்றால், அவர்கள் திட்டமிட்ட முறையில் அவனைப் பழிதூற்றுகின்றனர்; திரித்துப் படம் பிடித்துக் காட்டுகின்றனர், அவனை அச்சுறுத்துகின்றனர், அவனை அடக்கி ஒடுக்கிவதற்கும் அவனது வாயை அடைப்பதற்கும் தங்கள் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கின்றனர்; தீண்டப்படாதவர்களின் லட்சியத்துக்கு நல்வாழ்வுக்கு, உய்வுக்கு, உயர்வுக்குப் பாடுபட உறுதிகொண்டுள்ள இத்தகைய ஒரு தலைவனுக்கும், அவனைப் பின்பற்றுவோருக்கும் தேசவிரோதி என்ற முத்திரையைக் குத்திவிடுகின்றனர்.

தீண்டப்படாதவர்களின் அரசியல் கோரிக்கைகள் விஷயத்தில் இந்துக்கள் எந்த அளவுக்கு ஆத்திரமும் அங்கலாய்ப்பும் அடைந்திருக்கிறார்கள் தெரியுமா? ஒரு சில அரசியல் பாதுகாப்புகளுக்குப் பிரதியாக இந்துப் பெரும்பான்மையினரால் ஆளப்படுவதற்கு எவ்வளவு பெருந்தன்மையோடு தீண்டப்படாதவர்கள் சம்மதிக்க முன்வந்துள்ளனர் என்பதை தங்களது பெரும் சீற்றத்தில் இந்துக்கள் ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். ஐக்கிய அயர்லாந்து பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரெட்மாண்டிடம் கார்சன் என்ன கூறினார் என்பதை இந்துக்கள் அறியார் போலும். இந்த சம்பவத்தை இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும். கார்சனிடம் ரெட்மாண்ட் பின்வருமாறு கூறினார்; “அல்ஸ்டரின் சிறுபான்மை புராட்டெஸ்டன்டுக்களுக்காக நீங்கள் விரும்பும் எத்தகைய பாதுகாப்புகளை வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்; ஆனால் ஒரே அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட ஐக்கிய அயர்லாந்து உருவாக வேண்டும்.” கார்சன் இதற்குப் பண்பற்ற, முரட்டுத்தனமான பதிலை அளித்தார்.

இதுகுறித்துப் பரிசீலிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று கூடக் கேட்காமல், “உங்கள் பாதுகாப்புகளைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள், அவை யாருக்கு வேண்டும்? உங்களால் ஆளப்படுவதை நான் விரும்பவில்லை” என்று நெத்தியடியாகப் பதிலளித்தார். தீண்டப்படாதவர் கார்சன் மேற்கொண்ட போக்கை கைக்கொள்ளாததற்காக இந்துக்கள் அவர்களுக்கு உண்மையில் நன்றி கூறவேண்டும். ஆனால் நன்றி கூறுவதற்குப் பதிலாக அவர்கள் பெரும் சீற்றம் கொண்டனர்; அரசியல் உரிமைகளைக் கோருவதற்குத் தீண்டப்படாதவர்கள் துணிந்துவிட்டார்களே என்று அவர்களுக்கு அளவிட முடியாத ஆத்திரம். எந்த உரிமைகளையும் கோருவதற்கு தீண்டப்படாதவர்களுக்கு உரிமை ஏதும் இல்லை என்பது இந்துக்களின் கருத்து. பல்வேறு சமூகங்களின் அரசியல் கோரிக்கைகள் சம்பந்தமாக இந்துக்கள் வெவ்வேறு விதமான நிலையை மேற்கொள்வது எதைக் காட்டுகிறது? அது மூன்று விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது;

1. எல்லா அதிகாரங்களையும் தாங்களே அனுபவிக்கவேண்டும் என்று இந்துக்கள் விரும்புகிறார்கள் 2. அவர்கள் தங்கள் அரசியல் அமைப்புகளை நீதி, நியாயம், நேர்மை என்னுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. 3. எங்கு தாங்கள் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டியிருக்குமோ அங்கு இரக்கமற்ற அரக்கத்தனமாக சக்திகளிடம் அதனை அவர்கள் ஒப்படைப்பார்களே தவிர நீதியின் ஆணைகளுக்கு ஒருபோதும் கட்டுப்பட மாட்டார்கள்.

இந்துக்களின் இந்தப் போக்கு இந்திய அரசியலின் ஒரு துன் பியல் நாடகமாக, இரங்கத்தக்க காட்சியாக அமைந்துள்ளது. துர திஷ்டவசமாக இந்திய அரசியலைப் பொறுத்துவரையில் இது ஒன்று தான் சோகக்காட்சி என்பதல்ல. இதேபோன்று இன்னொரு அவலக் காட்சியையும் காண்கிறோம். இது இந்துக்களின் அயல்நாடுகளி லுள்ள நண்பர்கள் சம்பந்தமானது. இந்துக்கள் தங்களுடைய திறமை யான, சூழ்ச்சிநயம் வாய்ந்த பிரசாரத்தின் மூலம் உலகெங்கிலும் அதிலும் குறிப்பாக “சுதந்திரபூமி” எனப்படும் அமெரிக்காவில் ஏராள மான நண்பர்களை வரித்துக் கொண்டுள்ளனர்.

இதிலுள்ள அவலம் என்னவென்றால் இந்துக்களின் நண்பர்கள் தாங்கள் எந்தத் தரப்பை ஆதரிக்கிறார்களோ அந்தத் தரப்பு நியாயமாகவே தங்களது ஆதரவைப் பெறத் தகுதி வாய்ந்ததுதானா என்பதை ஆராயமலே அந்தத் தரப்பை அவர்கள் குருட்டுத்தனமாக ஆதரித்து வருவதேயாகும். இந்துக்கள் எந்தக் குறிக்கோளுக்காகப் பாடுபடுகிறார்கள் என்று எனக்குத் தெரிந்தவரை அவர்களது எந்த அமெரிக்க நண்பர்களும் இதுவரை கேட்டதில்லை. அவர்கள் தேச சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்களா அல்லது தங்களது அதிகாரத்திற்காகப் போராடுகிறார்களா? இந்துக்கள் தங்களுடைய அதிகாரத்துக்காகப் போராடுகிறார்கள் என்றால் அமெரிக்கர்கள் அவர்களை ஆதரிப்பது நியாயமாகுமா? இந்துக்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் தங்களது போரட்ட லட்சியங்களை அறிவிக்கும்படி அவர்களிடம் கேட்கப்பட வேண்டாமா? இந்த அமெரிக்க நண்பர்கள் இதையாவது செய்ய வேண்டும். தங்களுக்கு ஆதரவளிக்கும்படி இந்துக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது ஏற்புடையது என்று அமெரிக்கர்கள் கருதும் நிலைமையில், இந்தியத் தரப்புக்கு வகை தொகையின்றி, குருட்டுத்தனமான முறையில் ஆதரவளிப்பதன் மூலம் சுதந்திர லட்சியத்துக்கு அவர்கள் எத்தகைய தீங்கை விளைவிக்கிறார்கள் என்பதை இந்துக்களின் இந்த அமெரிக்க நண்பர்களுக்கு ஆழமாக, அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பது அவசியம்.

இந்துக்கள் எத்தகைய வாதப்போக்கைக் கடைப்பிடித்தார்களோ அதே வாதப் போக்கையே நானும் பின்பற்ற விரும்புகிறேன். போர் ஆரம்பமானதும் பிரிட்டிஷார் தங்களது போர்க் குறிக்கோள்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரசுக்குள் இருக்கும் இந்துக்களும், வெளியே இருக்கும் இந்துக்களும் கோரினர். “எங்களது ஆதரவு உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் எதற்காகப் போரில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள். சுதந்திரத்திற்காக நீங்கள் போர் புரிந்து வருகிறீர்கள் என்றால், எந்த சுதந்திரத்தின் பெயரால் இந்தப் போரை நீங்கள் நடத்துகீறீர்களோ அந்த சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குவீர்களா என்பதைச் சொல்லுங்கள்” என்று இடைவிடாமல் அல்லும் பகலும் பிரிட்டிஷாரிடம் அவர்கள் கேட்டு வந்தனர்.

பிரிட்டிஷார் போரிட்டுவரும் சுதந்திரத்தின் பலன் இந்தியாவுக்குக் கிட்டும் என்று பிரிட்டிஷார் அளித்த வாக்குறுதியுடன் இந்துக்கள் திருப்தியடைந்த கட்டம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் இதற்கும் மேல் சென்றுள்ளனர். வெறும் வாக்குறுதியோடு திருப்தியடைய இனியும் அவர்கள் தயாராக இல்லை. அல்லது ஒரு காங்கிரஸ்காரரின் மொழியிலேயே இதைக் கூறுவதானால் “திவாலாகிக் கொண்டிருக்கும் ஒரு வங்கியின் முன்தேதியிட்ட காசோலை வாங்குவதற்கு அவர்கள் மறுக்கின்றனர்”. யுத்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்துக்கள் முன்வர வேண்டுமானால் இப்போதே, இந்த கணமே சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இதுதான் “இந்தியாவை விட்டுவெளியேறு” என்ற திரு காந்தியினது புதிய கோஷத்தின் சாராம்சம்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் பொறுப்பை ஏற்ற திரு சர்ச்சில் பகைவனைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடுவதே இந்த யுத்தத்தின் நோக்கம் என்று கூறினார். இது கேட்டு இந்துக்கள் திருப்தியடையவில்லை. அவர்கள் அவரிடம் பின்வருமாறு மேலும் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்; “வெற்றி பெற்றபிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? யுத்தத்திற்குப் பிறகு எத்தகைய சமூக அமைப்பை நிறுவ நீங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள்?” பிரிட்டிஷ் பாரம்பரியதை நிலைநாட்ட முடியும் என்று தாம் நம்புவதை திரு. சர்ச்சில் பதிலளித்த போது ஒரு பெரும் கண்டனப்புயல் எழுந்தது. இந்தக் கேள்விகள் எல்லாம் நியாயமானவையே என்பதை ஒப்புக் கொள்கிறேன். திரு. சர்ச்சிலிடம் கேட்கப்பட்ட இக்கேள்விகள் நியாயமானவை என்றால், திரு. காந்தியிடமும், இந்துகளிடமும் இதே கேள்விகளைக் கேட்பது நியாயமானதுதான் என்று இந்துக்களின் நண்பர்கள் நினைக்கவில்லையா? பிரிட்டிஷார் ஹிட்லருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார்கள். அதேபோன்று திரு. காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார்.

பிரிட்டிஷாருக்கு ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. அதேபோன்று இந்துக்களுக்கும் ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. அப்படியானால், இந்து சமயம் ஓர் ஏகாதிபத்திய வடிவமில்லையா, தீண்டப்படாதவர்கள் ஓர் அடிமை இனமில்லையா, அவர்கள் தங்களுடைய இந்து எஜமானர்களிடம் கடப்பாடு கொண்டு அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யவில்லையா? தம்முடைய போர்க் குறிக்கோள்களை அறிவிக்க வேண்டுமென சர்ச்சில் கேட்கப்பட வேண்டுமென்றால் திரு. காந்தியும் இந்துக்களும் தங்களுடைய போராட்ட இலட்சியங்களை அறிவிக்க வேண்டுமென அவர்களிடம் கோருவதை எவரும் எப்படித் தவிர்க்க முடியும்? தங்களுடைய போர், சுதந்திரத்திற்கான போர் என்று இருவருமே கூறுகின்றனர். அவ்வாறாயின் இருவருமே தங்களுடைய போர் இலட்சியங்களை அறிவிப்பது அவர்களது கடமை.

பிரிட்டிஷார்மீது வெற்றி பெற்ற பிறகு திரு. காந்தி என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்? அவர் வென்று பெறும் சுதந்திரத்தைக் கொண்டு தீண்டப்படாதவர்களின் விடுதலைக்கு வழிவகுப்பாரா? அல்லது இப்போது இந்துக்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தை விடவும் அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை வழங்கவும், தீண்டப்படாதவர்களை அவர்களது தொழும்பர்களாக நீடித்து வைத்திருக்கவும் இந்த சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொள்வாரா? திரு. காந்தியும் இந்துக்களும் ஒரு புதிய சமுதாய அமைப்பை உருவாக்குவார்களா? அல்லது சாதிகளும் தீண்டாமையும் மலிந்த, சுதந்திரமும் சமத்துவமும், சகோதரத்துவமும் மறுக்கப்படுகிற பழைய பாசி படிந்த இந்து இந்தியாவை ஏதோ ஒப்புக்கு சிறிதளவு செப்பம் செய்வதோடு திருப்தியடைவார்களா? அமெரிக்க நண்பர்கள் இந்தக் கேள்விகளை சுதந்திரப் போராட்டத்தில் எவர்களுக்குத் தங்கள் ஆதரவை அறிவித்திருக்கிறார்களோ அந்த இந்துக்களிடமும், திரு. காந்தியிடமும் கேட்க வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்தக் கேள்விகள் நியாயமானவை, பொருத்தமானவை, இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள்தான் திரு.காந்தியின் யுத்தம், சுதந்திர யுத்தமா அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான யுத்தமா என்பதை இந்த அமெரிக்க நண்பர்கள் தெரிந்து கொள்ளத் துணைபுரியும். இந்தக் கேள்விகள் உசிதமானவையும், நியாயமானவையும் மட்டுமல்ல, அவசியமானவையும் கூட. இந்துக்களைப் பற்றித் தெரிந்திருப்பவர்கள் இதற்கான காரணத்தை நன்கு அறிவார்கள். இந்துக்கள் மக்கி மசிந்து போன, வேரூன்றிவிட்ட பழைமைவாதத்தை உள்ளியல்பாகவே பெற்றிருக்கிறார்கள்; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு அதாவது ஜனநாயகத்துக்கு முரண்பட்ட ஒரு சமயத்தை அவர்கள் கொண்டிக்கிருகிறார்கள். ஏற்றத் தாழ்வு என்பது உலகில் எல்லா இடங்களிலும் இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.

இது பெரும்பாலும் சுற்றுச்சூழல்களைப் பொறுத்துள்ளது. ஆனால் மதத்தின் ஆதரவு அதற்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால் இந்துக்கள் விஷயம் முற்றிலும் வேறுபட்டது. இந்து சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலவிவருவது மட்டுமல்ல, இந்த ஏற்றத் தாழ்வு இந்து மதத்தின் முறைமைப்பட்ட சித்தாந்தமாகவும் அமைந்துள்ளது. ஓர் இந்துவுக்கும் சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை. அவனுடைய மனச்சார்பும் மனப்போக்கும் ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்னும் ஜனநாயக சித்தாந்தத்துக்கு முரண்பட்டவையாக உள்ளன. ஒவ்வொரு இந்துவும் சமூக ரீதியில் ஒரு டோரியாகவும் (பழமைவாதி), அரசியல் ரீதியில் ஒரு ரேடிக்கல்லாகவும் (தீவிரவாதி) இருக்கிறான். திரு. காந்தி இதுவிஷயத்தில் எவ்வகையிலும் விதிவிலக்கானவர் அல்ல. அவர் தம்மை உலகிற்கு ஒரு முற்போக்காளராகக் காட்டிக் கொள்கிறான்; ஆனால் ஒரு மிதியடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசிபோல் பரந்த மனப்பான்மை என்பது அவரிடம் அணுவளவே ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அவரைக் கீறிப்பார்த்தார்களேயானால் அவரது பரந்த மனப்பான்மைக்குக் கீழே பிற்போக்கு உனர்வு பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் சாபக்கேடான சாதி அமைப்பு முறையை ஆதரிக்கிறார். அவர் இந்து சமயத்தைத் தாங்கிப் பிடித்து நிற்கும் வெறிபிடித்த இந்து. புகழ் பெற்ற 1776 ஆம் வருட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை இந்துக்கள் எந்த உணர்வோடு வாசிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். பிரகடனம் பின்வருமாறு கூறுவதை ஓர் இந்து படிக்கும்போது மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறான்.

“இந்தக் குறிக்கோள்களை அழிக்கக்கூடியதாக ஓர் அரசு மாறும்போது அதனை மாற்றுவதற்கும் அல்லது நீக்குவதற்கும், புதிய அரசை உருவாக்குவதற்கும், இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் இதற்கு அடித்தளங்கள் இடுவதற்கும், தங்களது பந்தோபஸ்துக்கும் நல்வாழ்வுக்கும் உத்தரவாதமளிக்கக்கூடிய அதிகாரங்களை அதற்கு வழங்குவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.”

ஆனால் அவன் இத்துடன் நிறுத்திக் கொள்கிறான். இந்தப் பிரகடனத்தின் முந்திய பகுதியைப் பற்றி அவன் அணுவளவும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அந்தப் பகுதி கூறுவதாவது;

“எல்லா மனிதர்களும் சமமானவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் பரம்பொருளால் சில மறுக்க முடியாத உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றனர், உயிர் வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்கும், நல்வாழ்வைத் துய்ப்பதற்குமான உரிமைகள் இவற்றில் அடங்கும். இந்த உரிமைகளை ஈட்டுவதற்கே மனிதர்களிடையே அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன, ஆளப்படுவோரின் இசைவோடு, இணக்கத்தோடு அவை தமக்குரிய நியாயமான அதிகாரங்களாகப் பெறுகின்றன.”

இந்தப் பிரகடனத்தின் செயலாக்கம் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு துன்பியல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த ஆவணம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது ஒரு மாபெரும் ஆன்மீக ஆவணம் என்று சிலர் கருதுகின்றனர். இது பல பொய்களை சாசுவதமாக்கி விட்டது என்று வேறு சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இது எப்படியிருந்த போதிலும் இந்த மனித சுதந்திர சாசனம் நீக்ரோக்கள் விஷயத்தில் செயல்படுத்தப்படவில்லை. எனினும் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்தப் பிரகடனத்துக்கு ஆதார அடிப்படையாக அமைந்துள்ள நல்லெண்ணமாகும். இது குறித்து எத்தகைய ஐயப்பாட்டுக்கும் இடமில்லை; அதேபோல் இந்தப் பிரகடனத்தின் பிதாமகரான ஜெபர்சனனின் நல்லெண்ணத்தைப் பற்றியும் எத்தகைய ஐயமும் இருக்க முடியாது. நீண்ட அடியெடுத்து வைக்கும் இந்தக் கோட்பாட்டை உருவாக்கும்போது இதனை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

ஆனால் அவரது நாடு குறுகிய அடியெடுத்து வைக்கத் தீர்மானித்தது. “என் நாட்டு மக்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று அவர் எழுதினார். இந்த ஆவணம் நீக்ரோக்களுக்குப் பெரிய நன்மை எதையும் செய்துவிடவில்லை. எனினும் நாட்டின் மனச்சான்று முற்றிலும் அழிந்துவிடவில்லை என்பதும், அநீதிக்கு எதிரான கோபாவேசத் தீ ஒருநாள் பெருநெருப்பாகக் கொழுந்து விட்டெரியும் என்பதும் சிறிதளவு ஆறுதலளிக்கக் கூடிய விஷயமாகும். நீக்ரோக்கள் இதைக் கேட்டு நகைக்கலாம். ஆனால் நீக்ரோக்களுக்குள்ள இந்த சிறு ஆறுதலைக்கூட தீண்டப்படாதவர்கள் இந்துக்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பது கசப்பான உண்மையாகும். இந்துக்கள் ஒரு முழுமையான அமைப்பாக இருக்கின்றனர் என்று மக்கள் இன்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் விந்தையானதாகத் தோன்றிலும் இந்தியாவிலுள்ள தீண்டப்படாத மக்களுக்கு இது ஆறுதலைவிட அச்சத்தைத் தரக்கூடிய விஷயமாகும்; அமெரிக்காவிலும் “ஒன்றுபட்ட தெற்கை” க் கண்டு நீக்ரோக்கள் அச்சமடைந்துள்ளனர். நீக்ரோக்களின் நிலைமை கண்டு ஜெர்னைப் போல் வெட்கித் தலைகுனிந்த, கழிவிரக்கங் கொண்ட ஒரு நபரையேனும் இந்தியாவில் இந்துக்களிடையே யாரும் காண முடியுமா? தீண்டாமை என்னும் வடு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையில் சுதந்திரக் கோரிக்கையை உலகின் முன்வைக்க இந்துக்கள் வெட்கப்படுவார்கள் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் சுதந்திரத்திற்காக கூச்சநாச்சமின்றி அவர்கள் ஆர்ப்பரித்து வருவதைப் பார்க்கும்போது - இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால் அவர்களை ஆதரிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பதுதான் - அவர்கள் மனச்சான்று செத்துமடிந்து விட்டது, அவர்கள் தீண்டாமை குறித்து எவ்விதத்திலும் கோபாவேசம் கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. தீண்டாமை என்பது அவர்களுக்கு தார்மீக ரீதியில் ஒரு பாவமாகவோ அல்லது சமூகக் குற்றமாகவோ தோன்றவில்லை. கிரிக்கெட் அல்லது ஹாக்கி போன்று அது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. திரு. காந்தியின் நண்பர்கள் அவரது வாழ்க்கையையும் பணியையும் சுட்டிக்காட்டலாம். தீண்டப்படாதவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதற்குச் சான்றாக திரு. காந்தியின் வாழ்வையும், பணியையும் ஜனநாயகவாதிகள் சுட்டிக்காட்டும் அளவுக்கு அவர் இந்து சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்கு என்ன செய்து விட்டார்? ஹரிஜன சேவா சங்கத்தைப் பற்றி அவருடைய நண்பர்களிடம் கூறப்பட்டிருக்கிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு ”ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்கு திரு. காந்தி பாடுபடவில்லையா?” என்று அவர்கள் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியா, அவர் பாடுபட்டாரா? இந்த ஹரிஜன சேவா சங்கத்தின் நோக்கம் என்ன? இந்து எசமானர்களிடமிருந்து தீண்டப்படாதவர்கள் சுதந்திரம் பெறுவதற்காகவும், சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்துக்களுக்குச் சமமானவர்களாக ஆவதற்காகவும் இந்த சங்கம் அவர்களைத் தயார் செய்து வருகிறதா? திரு. காந்தி இத்தகைய குறிக்கோளை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை; இதைச் செய்வதற்கு அவர் என்றும் விரும்பியதில்லை; இதை அவரால் செய்யவும் முடியாது. ஒரு ஜனநாயகவாதி, ஒரு புரட்சியாளர் செய்யக் கூடிய பணி இது. திரு. காந்தி இந்த இரண்டு பிரிவிலும் சேர்ந்தவர் அல்ல. அவர் பிறப்பிலும், சமய உணர்விலும் ஒரு பழமைவாதி. தீண்டப்படாதவர்களின் நிலைமையை மேம்படுத்துவது ஹரிஜன சேவா சங்கத்தின் குறிக்கோள் அல்ல, இந்தியாவை இந்துக்களுக்கும் இந்து சமயத்துக்கும் சொந்தமாக்குவதே அவரது பிரதான நோக்கம். சுயமாரியாதை உள்ள ஒவ்வொரு தீண்டப்படாதவனும் இதை அறிவான்.

தீண்டப்படாதவர்களுக்காக நிச்சயமாக அவர் போராடிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, சேவா சங்கத்தின் மூலம் சுயநலமிக்க சில தீண்டப்படாதவர்களுக்கு அற்பப் பரிசுகளை அளிப்பதன் மூலம் தீண்டப்படாதவர்களின் எதிர்ப்பை முனை மழுங்கச் செய்ய முயன்று வருகிறார்; சாதி அமைப்பு முறையைச் சிதைத்து இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஒரே சக்தி தீண்டப்படாதவர்கள்தான் என்பதை அவர் அறிவார். ஆனால் திரு. காந்தியோ இந்து சமயமும், இந்து சாதி அமைப்பு முறையும் அப்படியே நிலைத்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறார். தீண்டப்படாதவர்கள் இந்து மத அரவணைப்பில் கட்டுண்டு இந்துக்களாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் திரு. காந்தி விரும்புகிறார். ஆனால் எந்த விதத்தில்? கூட்டாளிகாக அல்ல, மாறாக இந்துக்களுடன் ஏனோதானோவென்ற தொடர்புடையவர்களாக.

திரு. காந்தி தீண்டப்படாதவர்களிடம் அன்பு காட்டுகிறார். எதற்காக? ஏனென்றால் அன்பின் மூலம் அவர்களைக் கொல்லவும், இந்துக்களிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பும் அவர்களது இயக்கத்தை நசுக்கவுமே அவர் விரும்புகிறார். ஏமாற்றுவித்தையை வெற்றிகரமாகச் செய்வதற்கு திரு. காந்தி கையாண்ட பல உத்திகளில் ஹரிஜன சேவா சங்கமும் ஒன்று.

இனி அடுத்து ஜவஹர்லால் நேருவுக்கு வருவோம். அவர் ஜெபர்சனது பிரகடனத்திலிருந்து ஆதர்சத்தை, அகத்தூண்டுதலைப் பெறுகிறார்; 6 கோடி தீண்டப்படாதவர்களின் நிலைமை குறித்து அவர் எப்போதேனும் வெட்கித் தலைகுனிந்து இருக்கிறாரா? அதற்காக என்றேனும் கடுங்கழிவிரக்கத்தை வெளிபடுத்தி இருக்கிறாரா? அவர் பேனா முனையிலிருந்து நீரோடைபோல் பொழிந்த மலை, மலையான நூல்களில் எங்கேயேனும் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாரா? இந்தியாவின் இளம் தலைமுறையினரை எடுத்துக் கொள்ளுங்கள். பல்கலைக் கழகங்களை நிரப்பும் இளைஞர்கள், பண்டிட்டின் தலைமையைப் பின்பற்றும் இளைஞர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் அரசியல் போராட்டத்தில் பங்கு கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு தங்களுடைய முன்னோர்கள் இழைத்த தீங்குகளை, கொடுமைகளைக் களைவதற்கு வசதி படைத்த இந்துக்களின் இந்தக் குழந்தைகள் என்ன செய்தார்கள்? அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான இந்து இளைஞர்களைத் திரட்ட முடியும்; சாதி அமைப்பு முறையை மண்ணோடு மண்ணாக்குவதற்கு, அதனை உடைத்தெறிவதற்கு அல்லது தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே ஓர் இளைஞன்கூடக் கிடைக்க மாட்டான். ஜனநாயகக் கோட்பாட்டில் கொண்டுள்ள உறுதியான, திட்டமான நம்பிக்கையால் நிலைநாட்டப்படும் ஜனநாயகமும், ஜனநாயக வாழ்க்கையும், ஜனநாயக உணர்வும் ஓர் இந்து உள்ளத்துக்கு அந்நியமானவை. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் இத்தகைய பழைமைவாதிகளின், டோரிகளின் கைகளில் ஒப்படைப்பது ஜனநாயகவாதிகள் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும். எனவே தங்களுடைய போராட்ட நோக்கங்களை அறிவிக்கும்படி இந்துக்களின் அமெரிக்க நண்பர்கள் திரு. காந்தியையும், இந்துகளையும் கேட்பது மிகமிக அவசியம்; அப்போதுதான் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்கள் நடத்தும் போராட்டம் உண்மையிலேயே, எதார்த்தத்திலேயே சுதந்திரத்திற்கான போராட்டம்தானா என்பதை நிச்சயிக்க முடியும். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து காங்கிரஸ் இயற்றியுள்ள தீர்மானங்களைப் படித்துப் பார்க்கும்படி காங்கிரசும் இந்துக்களும் தங்களுடைய அயல்நாட்டு நண்பர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

காங்கிரசின் சிறுபான்மையினர் உரிமைகள் பிரகடனத்தில் “பகட்டாகவும் ஆடம்பரமாகவும்” பொதுமைப்படுத்திக் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம் என்று இந்துக்களின் அமெரிக்க நண்பர்களை எச்சரிக்க விரும்புகிறேன். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பிரகடனம் செய்வது என்பது வேறு, அவற்றைச் செயல்படுத்துவது என்பது வேறு. இந்துக்களின் நண்பர்கள் உண்மையிலேயே சுதந்திரத்தின் நண்பர்கள் என்றாக இந்த உரிமைகளை உடனே அமல்படுத்துபடி ஏன் வலியுறுத்தக் கூடாது? சுதந்திரம் வழங்குவதாக பிரிட்டிஷார் அளிக்கும் வாக்குறுதியோடு தாங்கள் திருப்தியடைய முடியாது என்று இந்துக்கள் கூறி வரவில்லையா? அந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றும்படி அவர்கள் கோரி வரவில்லையா? பிரிட்டிஷார் தங்களுடைய போர்க் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்று இந்துக்கள் விரும்பும்போது, அவர்கள் தங்கள் போராட்ட லட்சியங்களை நிறைவேற்ற ஏன் தயாராக இருக்கக்கூடாது? பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்கள் நடத்தும் இந்தப் போராட்டம் சுதந்திரத்திற்கான போராட்டம் என்ற இந்துக்களின் பிரசாரத்தைக் கண்டு இந்துக்களின் அமெரிக்க நண்பர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்துக்களுக்கு ஆதரவளிப்பதற்கு முன்பு, பிரிட்டிஷாருக்கு எதிராகத் தாங்கள் நடத்தும் போராட்டம் சுதந்திரப் போராட்டமே என்று சாதிக்கும் இந்துக்கள், தீண்டப்படாதோர் போன்ற லட்சக்கணக்கான இந்தியர்களின் போராட்டத்துக்குப் பகைவர்களாக மாறி விடமாட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வேண்டுகோளைத்தான் இந்தியாவின் 6 கோடி தீண்டப்படாதோரின் சார்பில் முன்வைக்கிறேன். இவற்றை எல்லாம்கூட முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்; போராட்டமானது மக்களால் நடத்தப்படுவதால், அதிலும் சுதந்திரத்தின் பெயரால் நடத்தப்படுவதால் அரசியலமைப்பில் கட்டுப்பாடுகளும் சரியீடுகளும் இடம் பெற வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்க நண்பர்கள் நினைக்கக்கூடாது; ஏனென்றால் இந்திய சூழ்நிலைமைகளுக்கு இசைந்த வகையில்தான் இந்தக் கட்டுப்பாடுகளும் சரியீடுகளும் கோரப்படுகின்றன. ஜான் ஆடம்ஸ் கூறியதை ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் நண்பர்கள் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். அவர் பின்வருமாறு கூறினார்;

“எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லாதபோது எந்த ஒரு மன்னனையும் அல்லது ஆட்சிமன்றத்தையும் போல் பலர் நேர்மையற்றவர்களாக, கொடுங்கோலர்களாக, இரக்கமற்றவர்களாக, பண்பற்றவர்களாக, காட்டுமிராண்டித் தனமுடையவர்களாக, குரூரமானவர்களாக மாறி விடுகின்றனர்; பெரும்பான்மையினரின் நிரந்தரமாகவும் எத்தகைய விதிவிலக்குமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளை தகாதவழியில் அபகாரித்துக் கொள்கின்றனர். வரலாற்றின் எந்த ஓர் ஏட்டை புரட்டிப் பார்த்தாலும் இதற்கு அசைக்க மறுக்க முடியாத சான்று இருப்பதை அவற்றில் காண்கிறோம்.”

எல்லாப் பெரும்பான்மையினரும் கட்டுபாடுகளுக்கும் சரியீடுகளுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்கிறபோது இந்த விதி இந்துக்கள் விஷயத்தில் இன்னும் பெருமளவுக்குப் பொருந்தும் அல்லவா?

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 10)

Pin It