அண்மையில் ஒரு கருத்தரங்கில், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், "நாமெல்லாம் மக்களிடம் உரையாற்றுகின்றோம், பெரியாரோ மக்களோடு உரையாடினார்" என்றார். எளிய வரிகளில், ஓர் அரிய உண்மையை அவர் உணர்த்தினார் என்றே கூற வேண்டும்.

periyar 745உரையாடலின் சிறப்பு, எளிமையான மொழியிலும், ஆழமான பொருளிலும் உள்ளது. அவை இரண்டுமே பெரியாரின் உரையாடலில் இருந்தன. அதனால்தான், படித்தவர்களே புரிந்து கொள்ளவும், ஏற்கவும் தயங்கிய செய்திகளைப் படிப்பறிவு குறைந்திருந்த, உழைக்கும் கிராம மக்களிடமும்  அவரால் எளிதில் எடுத்துச் செல்ல முடிந்தது. 

கருத்துகளின் அடிப்படையில் அவரை எதிர்த்தவர்கள் கூட, அவர் பேச்சினால் ஈர்க்கப்பட்டனர். எழுத்தாளர் கல்கி அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாவார். அவர் ஒருமுறை  "நான் மதன் மோகன் மாளவியா, ஈ.வே.ரா ஆகியோரின் பேச்சை மட்டுமே மணிக்கணக்கில் கேட்டிருக்கிறேன். அதிலும், ஈ.வே.ரா.வின் பேச்சு எத்தனை மணி நேரம் கேட்டாலும் சலிக்காது"  என்று குறிப்பிட்டார்.

பெரியார் பல கூட்டங்களில், "தலைவர் அவர்களே, தோழர்களே" என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார். 'தாய்மார்களே' என்று கூடச் சில கூட்டங்களில்தான் கூறுகின்றார். தோழர்கள் அல்லது நண்பர்கள் என்னும் சொல்லுக்குள் பெண்களும் அடங்குவர் என்பது அவர் கருத்தாக இருந்திருக்கலாம். அது மட்டுமின்றி, அவரின் கவனம் எல்லாம் மக்களைப்  பற்றியதாகவே இருந்துள்ளது. மேடையில் உள்ளவர்களை மகிழ்விக்கும் போக்கில் பல சொற்களை அவர் சொல்வதே இல்லை. 

அய்யாவின் பேச்சில் தனித்தமிழ் நடையைப் பார்க்க முடியாது. அவர் அதற்கு எதிரி என்று கொள்ள வேண்டியதில்லை. அன்றைய நடை பொதுவாக அப்படித்தான்  இருந்தது. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியின் முதல் அச்சையும், இரண்டாவது அச்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை நன்றாகவே புரியும். முதல் அச்சில் பல வடமொழிச் சொற்களைக் காண முடிகிறது. அடுத்த அச்சு வரும்போது அதனை அவர் கவனமாக மாற்றியுள்ளார். 

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கத்தைப் போன்றே சமற்கிருதத் திணிப்பைக் கடுமையாக எதிர்த்த போதிலும், திராவிட இயக்கத்தினர் எழுத்திலும், பேச்சிலும் அச்சொற்கள், அன்றைய நடைமுறையையொட்டி  நிறையவே கலந்து கிடந்தன ஜில்லா, காரியதரிசி போன்ற சொற்கள் எல்லோருடைய மொழியிலும் காணப்பட்டன. "சபாஷ் அம்பேத்கார்", பகிஷ்காரப் புரட்டு", ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தர்களும்"  போன்ற தலைப்புகளை எல்லாம் பெரியாரின் எழுத்துகளில் பார்க்க முடிகிறது. பேச்சு நடையிலும் இவை உள்ளன.

இவற்றைக் காலத்தை ஒட்டிய போக்கு என்று கொள்ளலாம். அல்லது எளிய மக்களிடம் அவர்கள் புழங்கும் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கையாண்டிருப்பதாகக் கொள்ளலாம். பொதுவாகவே, சொற்களை விட, கருத்துகளில்தான் பெரியார் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். எனவே அவர் உரை  ஆழமான செய்திகளைச்  சுமக்கும் எளிய நடை உரையாகவே  இருந்துள்ளது.

ஆனால் சமற்கிருத எதிர்ப்பு உணர்வை அதே பெரியார்தான் இம்மண்ணில் வலிமைப் படுத்தினார்  என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் மொழி கொண்டே அவர்களை எதிர்த்தவர் பெரியார்.

கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை ஆகியன மண்டிக் கிடந்த அந்த நாள்களில் அவற்றை எதிர்த்து மக்களிடம் பேசுவதற்கு, அவரின் மொழி பெரிதும் பயன்பட்டது என்றே கூற வேண்டும்.

1940களில்  ஒருமுறை, பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்குப் பெரியார், கி.ஆ.பெ போன்றவர்களுடன், ஒரு கூட்டத்திற்காகச் சென்றார். ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி  நின்றனர். வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம். கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர். பார்த்தவுடனேயே பெரியாருக்குப் புரிந்து விட்டது.

"எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது" அன்று அவர்கள் சத்தமிட்டனர். 'சரி, திரும்பி விடலாம்' என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை. காரை வீட்டுக் கீழே இறங்கினார். அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று. அவர்களைப்  பார்த்துப் பெரியார், "உங்களை மீறி, உங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் ஊருக்குள் நாங்கள் ஒருநாளும் வரமாட்டோம்" என்றார். சத்தம் கொஞ்சம் தணிந்தது.  "ஆனாலும், ஏன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போகிறோம்" என்றார்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், "கடவுள் இல்லேன்னு சொல்ற உங்களுக்கெல்லாம் எங்க ஊர்ல இடமில்லே" என்றார். "அப்டீங்களா?" என்று கேட்ட பெரியார், அவர்களுடன் மெல்ல உரையாடத் தொடங்கினார்  அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகவும், விளக்கமாகவும் விடைகளைச்  சொன்னார். அவருடைய விடைகளில் இருந்த நியாயம் அவர்களைச் சற்று அசைத்தது. கைகளிலிருந்த கம்புகளைக் கீழே போட்டுவிட்டு, 'உக்காருங்கப்பா, அவரு என்னதான் சொல்றாருன்னு கேப்போம்' என்றார் அந்தப் பெரியவர். எல்லோரும் அமர்ந்தார்கள். அந்த இடத்திலேயே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பல செய்திகள் குறித்துப் பெரியார் விளக்கினார்.

எல்லோருடைய மனநிலையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு விட்டது. அய்யாவின் கருத்துகளுக்குக் கைதட்டத் தொடங்கினர். பெரியார் பேசி முடித்தார். எல்லோரும், "அய்யா எங்க ஊருக்கு வாங்க, நாங்க தெரியாம உங்கள எதித்திட்டோம்" என்றனர். பெரியாரோ, "நான்தான் பேசவந்த எல்லாத்தையும் பேசிட்டேனே, இனி எதற்கு?" என்றார்.  மக்கள் விடவில்லை. நீங்கள் வந்தே தீர வேண்டும் என்று கூறி, ஆர்ப்பாட்டமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஊரை விட்டுத் துரத்த வந்தவர்கள், அவரை ஊருக்குள் ஊர்வலமாய் அழைத்துச் சென்ற இந்த நிகழ்ச்சி, பெரியாரின் கருத்துகளுக்கு மட்டுமின்றி, பெரியாரின் மொழி நடைக்கும் கிடைத்த வெற்றி என்று கூற வேண்டும்.

செய்யாறுக்கு அருகில் நடந்த ஒரு மணவிழாவில், அய்யாவே தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்துக் கட்டச்  சொல்லிவிட்டு, பிறகு அந்தத் தாலி எப்படிப் பெண்ணை அடிமையாக்குகிறது என்று மணிக்கணக்கில் பேசினார். கேட்டுக்கொண்டிருந்த மணமகள்,எழுந்து நின்று, எல்லோர் முன்னிலையிலும் தன் தாலியைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டார். இதனை விட, ஒரு பேச்சுக்கு உடனடிப் பயன் வேறு என்ன இருக்க முடியும்? 

பெரியாரைப் போல் எளிமையாகப் பேசுவது கடினமா என்று கேட்கத் தோன்றும். ஆம், எளிமையாகப் பேசுவதுதான் மிகக் கடினமானது!.                              

Pin It