கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கும் பல்வேறு முறைகளில் நடந்து கொண்டு இருக்கிறது. கலைஞர் வாழ்ந்த காலத்தை விட, ஆட்சியில் இருந்த காலத்தை விட, அவர் இயங்க முடியாமல் படுக்கையில் இருந்த காலத்தில் தான் அவரைப் பற்றி ஏராளமான பதிவுகள் முகநூலில், செய்தித்தாள்களில் வந்து கொண்டே இருந்தன. இதையெல்லாம் கலைஞர் செய்தார் என்று யாருக்கும் தெரியாது, சாதனை விளக்கக் கூட்டம் போடுவார்கள் ஆனால் முதன்மை செய்திகளாக பேசப்படாத செய்தி எல்லாம் அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அமலோற்பவன் நாதன் என்ற ஒரு மருத்துவர் சொல்லுகிறார், இரத்த நாளத்திற்கான  மருத்துவம், இந்தியாவில் எங்கும் இல்லாத அந்த பிரிவினை சென்னை மருத்துவக் கல்லூரியில் தான் முதல் முதலாக கொண்டுவரப்பட்டது என்ற செய்தியை அவர் சொன்னார். இவை 1970 களில் கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதில் முதலில் பயின்றவன் நான் என்றும் அவர் சொன்னார். இன்னும் இரண்டு மருத்துவ கல்லூரியில் மொத்தம் ஆறு மருத்துவ கல்லூரியில் அந்த சிறப்பு படிப்பு இருந்தது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பதை சேர்த்துச் சொல்கிறார். அது யாருக்கும் தெரியாத செய்தி.

தகவல் தொழில்நுட்ப துறைக்கு தனிக் கொள்கை வகுத்து அதற்கான கட்டிடங்களை எழுப்பி டைடல் பார்க் என்று கொண்டு வந்தார். அதற்கு முன்பு யாரும் செய்யவில்லை. ஒன்றியத்தில் மட்டும் தான் நுகர்பொருள் வாணிபக் கழகம் இருந்தது. கலைஞர் தனியாக இங்கு தமிழ்நாட்டுக்கு என்று நிறுவினர். அது வேறு யாரும் செய்யவில்லை, அதற்கு பின்னால் பலபேர் பின்பற்றியிருக்கலாம்.

periyar ambedkhar 350பெண்களுக்கான சொத்துரிமை பற்றி சொன்னார், அது பெரியார் செங்கல்பட்டு மாநாடு தீர்மானத்தைச் சொன்னார். புரட்சியாளர் அம்பேத்கர் இந்த சட்டத்தில் வடித்தது என்று சொன்னார். பெரியார் கூட சொல்லுவார் இதைப் பற்றி நினைக்கிற போது உங்கள் மனைவியை மனதில் கொண்டு நினைக்காதீர்கள், உங்கள் தங்கையை, மகளை மனதில் கொண்டு சிந்தியுங்கள் என்று பெரியார் சொன்னார். 1989இல் முதன்முதலாக பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் தான், அதற்கு பிறகு 2005 இல் தான் இந்தியா சட்டம் கொண்டு வந்தது.

புரட்சியாளர் அம்பேத்கரை பற்றி அவர் வாழ்ந்து இருந்த அல்லது பிறந்த மாநிலத்தில் கூட அவர் பெயரை வைத்ததற்கு எதிரான பெரும் போராட்டம் தீவைப்பு கலவரங்கள் எல்லாம் நடந்தன, மிக அமைதியாக தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து சட்டக் கல்லூரி பின்னாலே சட்டப் பல்கலைக்கழகம் இப்படி எல்லாம் சமுதாயத்தின் தலைவர்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களை மக்களுக்கு என்றும் நினைவில் வைத்திருக்கத்தக்க அளவில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

உண்மையிலேயே அம்பேத்கர் புரட்சியாளராக இருந்தவர், பெரியாருக்கும் அவருக்கும் ஏராளமான ஒற்றுமைகள், சிற்சில வேறுபாடுகள் வந்திருக்கலாம். நாங்கள் உரையாடலின் போது சொல்வோம், அரசியல் நிர்ணயசபையில் அமர்ந்திருந்த காலத்தை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அவர் நம்முடைய ஆள்தான்.  சில நேரங்களில் பார்ப்பனர்களுடைய அழுத்தத்துக்கு ஆளாகி போய் சிலவற்றை செய்ய வேண்டிய நேர்ந்திருக்கிறது. அம்பேத்கர் பர்மாவில் நடத்திய புத்தர் மாநாட்டில் பெரியாரும் அங்கு அழைக்கப்பட்டிருக்கிறார், அம்பேத்கரும் போயிருக்கிறார், கேட்கும் போது சொன்னார், நான் பேனாவை பிடித்துக் கொண்டிருந்தேன், ஆட்டுவித்தது எல்லாம் பார்ப்பனர்கள் தான் என்று பதிலளித்தார். இதை பெரியார் சொல்லியிருக்கிறார்.

அம்பேத்கரும் பெரியாரும்  புத்தர் மாநாட்டிற்கு சென்றபோது உரையாடிக் கொண்டிருந்தனர்,   அப்போது  புத்த பிட்சு ஒருவர் வருகிறார்,  அவர் பெரியாரைப் பார்த்து கேட்கிறார் நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?  நான் மதராசில் இருந்து வருகிறேன் என்று பெரியார் பதில் கூறினார். மாநாட்டிற்கு வந்தோம் என்றார்,  அருகில் இருந்த ஒருவர் இவர் பெரியார் ராமசாமி தெரியாதா உங்களுக்கு என்று சொல்கிறார்.  நீங்கள் மதத்தைக் காப்பாற்ற வந்தீர்களா? ஒழிக்க வந்தீர்களா? என்று பெரியாரைப் பார்த்து அந்த புத்த பிட்சு கேட்கிறார், உடனே நீங்கள் பார்ப்பனராக இருந்து புத்த மதத்திற்கு வந்தவரா என்று பெரியார் கேட்கிறார்,   அவர் வங்காள பார்ப்பான் ஆமாம் என்கிறார்,  அம்பேத்கரிடம்  சொல்கிறார்,  இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்னை இந்த மதத்திற்கு வா என்று சொல்கிறீர்கள் என்று வேடிக்கையாக பெரியார் சொன்னார்.

புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை அவர்  மறைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் வேலூர் நகராட்சியில் பெரியார் திறந்து வைத்தார்.  அக்டோபர் மாதத்தில் படத்தை திறக்கிறார்கள்,  அம்பேத்கர் டிசம்பர் மாதத்தில் தான் இறக்கிறார்.   அந்த திறப்பு விழாவில் பேசுகிறார்,  புத்த மதத்தில் பார்ப்பனர்களை சேர்ப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.  குறைந்தபட்சம் தொடக்கக் காலங்களிலாவது அவர்களை சேர்க்கக் கூடாது என்று அம்பேத்கரும் பேசியிருக்கிறார்.  இருவரும் ஒரே கருத்தை தான் தனித்தனியாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்பேத்கரைப் பற்றி பல பேர் பல விதங்களில் பேசியிருக்கலாம் ஆனால் புரட்சிக் கவிஞரைப் பொறுத்தவரையில்

எரிமலை எண்ணமும் எழும் புயல் செயலும்

விரிவுலகத்தையே விழிப்புறச் செய்தன

ஆரியக் கொட்டம் அடியோடு அழிய

வீரியம் கொண்ட  வெஞ் சின வேங்கை முன்

மதத் திமிர் அழிந்தது சமயமும் மடிந்தது

என்று அவரைப் பற்றி கவிஞர் பாரதிதாசன் சொல்வார்.

அதோடு நாம் எப்படி அவரை இணைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறோம் என்பதுதான், திராவிடர் இயக்கமாக நாம் பார்க்கிற போது எப்படி இருக்கிறோம். அவர் ஆற்றிய உரைகள்,  எழுதிய நூல்கள் பல உண்டு. எல்லாவற்றிற்கும்  மேலாக அவர் எழுதிய ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ அந்த நூல் தற்போது தலித் முரசு ‘ஜாதி ஒழிப்பு’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.  அந்த உரை லாகூர் மாநாட்டில் பேசுவதற்காக தயாரிக்கப்பட்ட உரை.   அதை படித்துப் பார்த்து அதிர்ந்து போன மாநாட்டு பொறுப்பாளர்கள் வேண்டாம் என்று  சொல்கிறார்கள்.  அதைக் கூட பெரியார் வேலூர் படத்திறப்பு விழாவில் பேசுகிறார்,  அதற்கு முன்பு அந்த ஜாதி ஒழிப்பு  பேரவையில்   என்னையும் துணைத் தலைவராக வைத்துக் கொண்டிருந்தார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத  தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்  இங்கிருந்து கடிதம் எழுதினார்கள்,  உன் மதமே வேண்டாம் என்கிறான் அவனை போய் வைத்திருக்கிறாய் என்று எழுதினார்கள். பிறகு விட்டு விட்டார்கள் என்று பெரியார் சொல்வார்.   அந்த அமைப்பில் பெரியாரும் பங்கெடுத்திருக்கிறார்.

அந்த தயாரிக்கப்பட்ட உரையை பார்த்தவுடன் பெரியார், ‘இந்த உரையை நான்  தமிழில் வெளியிடலாமா’ என்று கேட்கிறார். பெரியாருக்கும் ஒரு படி அனுப்பி வைக்கிறார். உடனே  பெரியார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.  குடிஅரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டு, பின்னர் புத்தகமாக வெளியிட்டார்.  அது அவர் உரையாற்றிய இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளாகவே தமிழில் வெளிவந்து விட்டது.  இந்தியாவிலேயே அந்த உரை முதன் முதலில் வேறு மொழியில் வெளியானது, தமிழில் தான், வெளியிட்டவர் பெரியார் தான்.

நான் பல இடங்களில் சொல்லுவேன்,  பாரதியார் பாடினார்,  பன்னாட்டு சாத்திரங்கள்  தமிழில் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று. அவர் பாட்டு தான் பாடினான்.  காரல் மார்க்ஸின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பெரியார் தான் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.  இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது முதலில் தமிழில் தான், அதை பெரியார் செய்தார்.  லெனினும் மதமும்,  பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்  எல்லாவற்றையும் பெரியார் தான் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

பெரியாரும் அம்பேத்கரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே அவர்களிடையே புரிதலும் நட்பும் இருந்தது. பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் நட்பு என்று கூறுவார்களே, அதுபோல! இருவரும் சந்திக்காமலேயே அம்பேத்கர் மாநாட்டுக்கு பெரியார் வாழ்த்து அனுப்புகிறார், அம்பேத்கர் உரையை குடிஅரசு பத்திரிக்கையில் பம்பாயில் சுயமரியாதை முழக்கம் என்று தலைப்பிட்டு வெளியிடுகிறார்.தென்னாட்டில் இருந்து சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமி அனுப்பிய வாழ்த்து செய்தி என்று மாநாட்டில் அது படிக்கப்படுகிறது.   இப்படி அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது.

அதைவிட முக்கியமாக 1927 இல் மகத் சத்தியாகிரகம் என்று மகத் குளத்தில் நீர்  எடுக்கும் போராட்டத்தை அம்பேதகர் நடத்துகிறார்.  நீரை நெருப்பு பிடித்தது என்று பத்திரிக்கையில் எழுதுகிறார்.  அந்தக் குளத்தில் நீரை அள்ளிக் குடிக்கிறார்கள் அவ்வளவுதான் போராட்டம்,  அதற்கு அந்த நகராட்சி அனுமதி கொடுத்து விட்டது,  பின்னால் அனுமதியை ரத்து செய்கிறார்கள்,  உடனே அதற்குப் பிறகு அவர்கள் தாக்கப்பட்டார்கள்  என்பது அது ஒரு செய்தி,  அதை சுத்திகரிப்பதற்கு அவர்கள் செய்த வேலை,  மாட்டு சாணங்களைக் கொண்டு வந்து மாட்டு மூத்திரத்தையும் சாணத்தையும் ஏரியில் கொட்டி சுத்தம் செய்தார்கள்.  இவர்கள் தண்ணீர் எடுத்தது அசுத்தமாகி விட்டதாம்,  18 குடம் சாணியும் மூத்திரத்தையும் கொண்டு வந்து கொட்டிய உடனே மகத் குளம் சுத்தமாகி விட்டது.  அந்தக் கோஷ்டி தான் இப்பொழுது பாதயாத்திரை போய்க் கொண்டுள்ளது.

(தொடரும்)

கொளத்தூர் மணி

Pin It