சிலருக்கு ஏதாவதொரு புதுக் கிறுக்குப் பிடித்துக் கொண்டேயிருக்கும்! சும்மாயிருக்கவே முடியாது. மனதைக் குரங்குக்கு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள் - பல தமிழ்ப் பெரியார்கள், கிளைக்குக் கிளை தாவிக் கொண்டே யிருப்பதனால்! “மனக்குரங்கு” என்பது தமிழர்களுக்கு நன்றாகத் தெரிந்த சொல்!”

பால்காவடி, மச்சக்காவடி தூக்கிக் குரங்குபோல் ஆடுவான்! (பார்ப்பான் ஆட மாட்டான்; காரியக்காரன் ஆதலால்!) “பேய்” பிடித்து ஆடுவாள், தமிழச்சி! (பார்ப்பனத்தி ஆடுமாட்டாள், கெட்டிக்காரியதலால்!)

kuthoosi guruதலை மயிரை வளர்த்துக் கொண்டு போய்க் காணிக்கையாகத் தருவான், கடவுளுக்கு! முகரம் பண்டிகைக்குப் புலிவேஷம் போட்டு ஆடுவான் சந்தனக் கூடு தூக்குவான்! “சாமி” யாடுவான்! வேளாங்கண்ணி மாதாவுக்கு “மயிர்” கொடுப்பான்!

இவைகளைப் போன்ற பல திருவிளையாடல்கள்! இவைகளைக் கட்டியழுது பார்த்துவிட்டுப் பலனில்லை என்று கண்டவுடன் வேறு புதுக் கிளைகளுக்குத் தாவிப் பார்ப்பான்!

இதற்கெல்லாம் காரணமென்ன? ஏமாற்றம்! சுயநலம்! பயம்! பேராசை! குரங்கைப் போன்ற வெறும் பொழுது போக்கு விஷமத்தினால் அல்ல, மனக்குரங்கு தாவுவது. திடீரென்று அரவிந்தர் கிளைக்குத் தாவும், இந்தக் குரங்கு. அதன் பிறகு ரமணரிஷி கிளைக்குத் தாவிப் பார்க்கும்! அங்கிருந்து மெய்வழி ஆண்டகை கிளைக்குத் தாவிப்பார்க்கும்! அங்கிருந்து பண்டார சந்நிதி கிளைக்குத் தாவும்! அங்கிருந்து சிவானந்த சரஸ்வதி கிளைக்குத் தாவும்!

இப்படியாகத் தாவிக் கொண்டே யிருக்கின்ற மனக் குரங்குக்குச் சில ஆண்டுகளாக மற்றொரு புதிய கிளை அகப்பட்டிருக்கிறது. அதுதான் சாயிபாபா!

“நான் இருக்கப் பயமேன்?” என்று கூவிக் கூப்பிடுகிறதாம், இந்தக் கிளை! மனக் குறையுடைய மனக்குரங்கு பல ஊர்களில் இந்தப் புதுக் கிளைக்குத் தாவித் தொங்கித் தொங்கி விளையாடிப் பார்க்கிறது! நகர வட்டாரங்களில் பல இடங்களில் இந்தப் பைத்தியம் நன்றாக முற்றி யிருக்கிறது! பணம் படைத்தவர்களையும், “மேல் ஜாதிக்காரர்” என்பவர்களையும் பார்த்து ஒரு சில பாமரர்கள் கூட “க்யூ” வரிசையில் நின்று “சாயிபாபா” படதரிசனமும் பஜனையும் செய்து போகிறார்கள்!

அதாவது இவர்களுக்கெல்லாம் தங்கள் தங்கள் “கடவுள்” கம்bனி களிடமும், அவதார புருஷர்களிடமும் நம்பிக்கையில்லாது போய்விட்ட படியால், தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகப் “புதுக் கடவுளை”த் தேடிச் செல்கிறார்கள்.

ஒருக்கால் அதிவிரையில் மோட்சத்துக்குப் போவதற்காக “சாயிபாபா” வைத் தேடிப் பிடித்திருக்கிறார்களோ என்று சிலர் அய்யப்படலாம். அல்லவேயல்ல! நிச்சயம் அதற்காக அல்ல! பிள்ளைப் பேறு! உத்யோக உயர்வு! நோய்நொடித் தொல்லை! வழக்குகளில் வெற்றி பணக் கஷ்டம்! இவை போன்ற வாழ்க்கைத் தொல்லைகளுக்காகத் தான் மற்றக் கடவுள் பக்தர்களைப் போல “சாயிபாபா” பக்தர்களும் அவதிப்படுகிறார்களே யொழிய, மோட்சத்துக்குப் போவதற்கு எவருமே தயாராயில்லை!

“பக்தர்களே! உங்கள் பக்தியை மெச்சினேன்! புறப்படுங்கள் மேல் உலகத்துக்கு!!”- என்று சாயிபாபா சார்பில் திடீரென்று அழைப்பு வந்தால், ஒரு பக்தர் கூட அந்த இடத்தில் நிற்க மாட்டார்! ஒரே ஓட்டமாக அவரவர் வீட்டை நோக்கி ஓடிப் போய் விடுவார்கள்! சாயிபாபா பூஜை நடக்கின்ற வீட்டுக்காரர்கள் கூடத் தங்கள் வீட்டைப் பூட்டாமலே ஓட்டமெடுத்து விடுவார்கள்!

இதுவும் ஒரு பொழுது போக்கு! இந்த மருந்தோடு கூட அந்தப் புது மருந்தையும் சாப்பிட்டுப் பார்ப்போம்; எப்படியாவது இந்த மனக்குறை நோய் தீராதா? - என்ற ஆசைதான்!

மேல் நாடுகளிலெல்லாம் சாயிபாபாவோ, ஆயிபாபாவோ எதுவும் கிடையாதே! இங்கிலாந்திலும், ஃப்ரான்சிலும், ராஷ்யாவிலும், ஸ்விட்சர்லாண்டிலும் - ரமண ரிஷிகளும், அரவிந்தர்களும் இல்லையே! ஏன் என்று சிலர் கேட்கலாம்.

அங்கெல்லாம் மனிதர்களுக்குப் புதுப்புது ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புக்கள், விஞ்ஞான முயற்சிகள் - ஆகிய காரியங்களுக்கே நேரம் போதவில்லையே!

இங்கேதான் பாரத புத்திரர்களுக்கு ஒரு குண்டூசி கூடச் சரிவரச் செய்வதற்கு முடியவில்லையே! ஆகையால்தான் இங்குள்ளவர்களின் ‘மனக்குரங்கு’ இப்படிக் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டேயிருக்கிறது!

குத்தூசி குருசாமி (6-3-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It