கீழ்த்தர மக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும்போது பல அவதூறான பேச்சுக்களைக் கொட்டுவார்கள்! “நீ மண்ணாய்ப் போக!” என்பான், இந்த உலகில் என்றும் இமயமலையாகவே இருக்கப் போவதாகக் கருதியிருப்பவன்.
“நீ சாம்பலாய்ப் போக!” என்பான், காங்கிரஸ் ஆட்சியைப் போல நித்திய கண்டத்திலிருக்கின்ற மற்றவன்.
கவனித்துப் பார்த்தால் இதெல்லாம் வசவுச் சொற்களேயல்ல! இறுதியில் எல்லோருக்கும் நிகழப் போவதுதான்! புதைக்கப்பட்டால் மண்ணாய்ப் போக வேண்டும். எரிக்கப்பட்டால் சாம்பலாய்ப் போக வேண்டும்! கோடிகோடியாகப் பணம் குவித்திருப்பவனும் சரி! காந்தியாரைப்போல உலகப் புகழ் பெற்றவரும் சரி! எல்லோரும் இரண்டில் ஒன்றாக ஆகியே தீர வேண்டும்.
“ஒரு பிடி சாம்பல்” அல்லது “மண்ணாகும் சடலம்”-என்பன போன்ற வேதாந்தக் கருத்துக்களைப் படித்துக் கொள்க!
அவ்வளவு ஏன்? வடபழனி (கோடம்பாக்கம்)யின் கண் எழுந்தருளி யிருக்கின்ற (அதாவது அவ்விதம் சொல்லப்படுகின்ற) பழனியாண்டவனையே எடுத்துக் கொள்ளுங்களேன்! அவரைக்கூட பக்தர்கள் அவதூறாக நடத்துகிறார்கள்!
இம்மாதம் 25-ம் தேதியன்று அவருக்கு விபூதி அபிஷேகமாம்!
அட பழனியாண்டவா! சாம்பலையா உன் தலையில் கொட்டுவது? அதைக் காட்டிலும்,. “நீ சாம்பலாய்ப் போ!” - என்று திட்டிவிட்டால் கூடப் பொறுத்துக் கொள்வீரே!
“பக்தர்களே! உங்களுக்கு அசல்கிறுக்குப் பிடித்து விட்டதென்றே நினைக்கிறேன். எந்தச் சரக்கை என்ன செய்வது என்றுகூட உங்களுக்குத் தெரியவில்லையே! என் வாயில் ஊற்ற வேண்டிய பாலை என் தலையில் ஊற்றுகிறீர்கள்! வாயில் போட வேண்டிய பஞ்சாமிர்தத்தை என் காலடியில் கொட்டுகிறீர்கள்! பல் விளக்கவும் பாத்திரம் தேய்க்கவும் பயன்படுகின்ற விபூதியை (திருநீற்றை) என் தலையிலேயே கொட்டுகிறீர்கள்! “படுபாவிகளா! நீங்கள் மண்ணாய்ப் போக! உங்கள் தலையிலே மண்மாரி பொழிக!” என்று நான் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? இனி ஒரு நாளைக்கு மண்ணையே கொண்டு வந்து என் தலையில் கொட்டி “மண்ணாபிஷேகம்” செய்தாலும் செய்வீர்கள்! உங்களுக்குப் பிடிக்கின்ற எந்தச் சரக்கையும் என் தலையில்தானா கொட்ட வேண்டும்? அப்படியானால் ஒரு நாளைக்கு கத்தரிக்கோல் சிகரெட்டுகளாகவும், கரீம் பீடிகளாகவும் என் தலையில் கொட்டித் தீ வைத்தாலும் வைப்பீர்கள்! கோழி குப்பை அண்டா அண்டாவாக என் தலைமீது கொட்டினாலும் கொட்டுவீர்கள்! என் பக்தர்களாகிய உங்களில் முக்கால்வாசிப் பேர் இறைச்சி உணவுக்காரர்களாதலால், நான் இன்றுவரை மரக்கறி உணவுக்காரன் என்பதையும் மறந்துவிட்டு, இனிமேல் உங்களுக்குப் பிடித்தமான சுறாப்புட்டு உணவைக் கூடை கூடையாகக் கொண்டு வந்து, என் தலைமீது கொட்டினாலும் கொட்டுவீர்கள்! திடிரென்று ஆம்லெட் (முட்டை அடை) அபிஷேகம் செய்தாலும் செய்வீர்கள்! குப்பைமேட்டுச் சாம்பலைக் கொண்டுவந்து, என் தலை மீது கொட்டத் துணிந்த கொலைக்காரர்களான நீங்கள் என்னை என்னதான் செய்ய மாட்டீர்கள்?”- இவ்விதமாக மேற்படி பழனியாண்டவன் என் கனவில் தோன்றிக் கதறிவிட்டுச் சென்றார், என்று நான் சொன்னால் என்னைச் சேர்ந்த நாஸ்திகர்களைத் தவிர மற்றவர்கள் நம்பவே மாட்டார்கள்!
- குத்தூசி குருசாமி (21-1-1953)
நன்றி: வாலாசா வல்லவன்