கல்கத்தா பல்கலைக்கழகத்தார் மீது ஒரு சில மாணவர்களுக்கு அதிகக் கோபம் பிறந்து விட்டதாம். எம். ஏ. - எம். எஸ். சி.- ஆகிய தேர்வுகளில் பெண்களுக்கு மட்டும் உயர்ந்த மார்க்குகளை வழங்கி, ஓர வஞ்சனையாக நடந்திருக்கிறார்கள் என்பதே மாணவர்களின் குற்றச் சாட்டு!

kuthoosi gurusamy“ஆண்களையும்! பெண்களையும் கலந்து படிக்க வைக்கும் முறை ஒழிக!” “பெண்கள் திருத்துகிறவர்களின் மூளையைக் குழப்பி விடுகிறார்கள்!” என்றெல்லாம் பல்கைலைக் கழகச் சுவர்களில் எழுதி யிருக்கிறார்களாம்!

“பெண் என்றால் பேயும் இரங்கும்,” என்ற பழமொழியில் உண்மை யிருக்குமானால், தேர்வுதாள் திருத்துகிறவர்கள், மனமிரங்கிப் பெண்களை உயர்த்த வேண்டுமென்று கருதி, உயர்வு மார்க் அளித்திருந்தால் ஆச்சரியமில்லை!

-போகட்டும்! நம் சகோதரிகள்தானே! அதிக மார்க் வாங்கி முதல் வகுப்பு - இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறட்டுமே! என்று எல்லா மாணவர்களுமே பெருந்தன்மையுடன் இருந்துவிட முடியுமா?

“நாம் கஷ்டப்பட்டுப் படித்து நன்றாக எழுதியிருக்கும்போது, சேலை கட்டாத ஒரே காரணத்துக்காக குறைந்த மார்க் வாங்குவதா? இதென்ன அநியாயம்? பவுடருக்கும், பொட்டுக்கும் பாமரர்கள் தான் ஏமாறுகிறார்களென்றால், ப்ரொஃபசர்கள் கூடவா ஏமாறுவது? பெண்ணாய்ப் பிறக்காதது என் குற்றமல்லவே!”- என்பது மேற்படி சுவர் எழுத்து மாணவர்களின் மனக் குறையா யிருக்கலாம்!

“அண்ணன்மார்களே! நீங்கள்தான் சரியாகப் படிப்பதில்லையே! ஏதோ 100க்கு 2-3 பேர்தானே கவலையோடு படிக்கிறீர்கள்? மற்றவர்களுக்குத் தான் ஊர் அக்கப்போர், அரசியல் விவகாரம், கண்டன ஊர்வலம், தினசரி சினிமா, மணிக்கொரு சிகரேட், டென்னிஸ் - கிரிக்கெட், நாடகம் - குஸ்தி ஆகிய நூற்றுக்கணக்கான அலுவல்களைக் கவனிக்கவே நேரம் போதவில்லையே! எங்களுக்கு இதிலெல்லாம் ருசியில்லாதபடியால், பவுடர் போட்ட நேரம் போக மிச்ச நேரத்திலெல்லாம் புத்தகத்தைக் கரைத்துக் குடித்து வாந்தியெடுத்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறோம். எங்கள் மீது பொறாமைப்பட்டு என்ன பயன்?”- என்பது மேற்படி மாணவிகள் நினைப்பாயிருக்கலாம்.

இரண்டு பாலாருக்கும் பொதுவாக நான் ஒரு சமாதானம் கூறுகிறேன்!

மாணவிகளிலோ, 100க்கு 99 பட்டதாரிகள் திருமணம் செய்து கொண்டு அடுப்பங்கரை, அல்லது அகமுடையான் அல்லது அலங்காரம்- இம்மூன்று துறைகளில் இறங்கி விடப் போகிறவர்கள்! 100க்கு ஒருவர் தான் ஆண்களோடு போட்டி போடுவோர்! அதுவும் திருமணம் அல்லது பிள்ளை பிறக்கும் வரையில் தான்!

ஆதலால் இம்மாணவிகள், பாவம்! 100க்கு 70 அல்லது 80 மார்க் வாங்கட்டுமே! இதே ஆண்களுக்கு மனைவிகளாக (சில பேராவது) வந்து வாய்த்தாலும் வாய்ப்பார்களல்லவா? அப்போது யாராவது நண்பர்கள் தம் வீட்டுக்கு வரும்போது, “அதோ கையில் கரண்டியோடு நிற்கிறாளே! அவள்தான் என் ஒய்ஃப்! கெமிஸ்ட்ரி ஆனர்ஸ் படிப்பில் ப்ரெசிடென்சி ஃபஸ்ட்! கோழிக் குருமா செய்வதில் என் அம்மாளைக் கூடத் தோற்கடித்து விடுவாள், இன்னும் 7-8 வருஷங்களில்! இப்போதுதான் வெந்நீர் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறாள்!” - என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாமல்லவா?

குத்தூசி குருசாமி (28-2-1953)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It