kuthoosi gurusamy 263பார்ப்பனரின் சுறுசுறுப்பையும் சமயோசித புத்தியையும் கண்டு பொறாமைப் படுகின்ற சிலர், எதற்கெடுத்தாலும் அவர்களைப் பற்றிக் குறை கூறுவதென்பது எனக்குப் பிடிப்பதில்லை! “ஓய்! கிருஷ்ணய்யர்வாள் அந்த வேலைக்கார ஆறுமுகம் எங்கேயோ போய்த் தொலைஞ்சுட்டான்! செட்டியார் வருவதற்குள்ளே சமையல் ஆகணும்! இன்னைக்கு மீன் குழம்பு வைக்கச் சொன்னார். மீன் வாங்கிவர யாரையுமே காணோம்! என்ன செய்யறது?”- என்று எஜமானியம்மாள் தம் வீட்டு குமாஸ்தாவை நோக்கிக் கேட்பாள்!

“இதென்ன பிரமாதம்? இதோ நானே போய் வாங்கி வர்றேன்! என்ன மீன் வேணுமம்மா? வஞ்சரமா? வவ்வால் மீனா? சுறாவா?”, என்று உடனே கேட்பார், குமாஸ்தா கிருஷ்ணய்யர்!

இந்த மாதிரியான சமயோசித குணத்தினால் தான், அந்த ஜாதியை வெல்வதற்கு மற்றவர்களால் முடிவதில்லை!

“என் அருமை மனைவி வேண்டுமானாலும் எங்கேயாவது தொலைந்து போகட்டும்; என் குமாஸ்தா அய்யரை மட்டும் என்னால் விட முடியாது” - என்று சொல்லக்கூடிய திராவிடப் பெருமுதலாளிகள் நூற்றுக்கணக்கில் இருப்பதைக் காணலாம்!

கோவில்களில் சதிர் ஆடி வந்த ஜாதியாரைச் “தேவடியாள்” (தேவர் அடியால்) என்று கேவலமாக அழைத்தார்கள், தமிழ் நாட்டார்!

இன்றைக்கும், சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் உள்ளவர்கள், யாரையாவது மிக ஆபாசமாகத் திட்டுவதென்றால், “தேவடியா மகன்” என்று தான் திட்டுவது வழக்கம்! அதாவது வசைச்சொல் அகராதி ஏணியின் உச்சிப்படியான சொல் இது என்பது இவர்கள் கருத்து!

இந்தத் தேவரடியார்கள் செய்த குற்றமென்ன? கோவில்களில் சதிர் (பரதநாட்டியம்) ஆடினார்கள்! அதைப் பார்ப்பதற்காகக் கடவுள் பக்தர்கள் அங்கு பெருங் கூட்டமாகச் சென்றார்கள். பணமுள்ளவர்கள் இந்த நாட்டியப் பெண்களைக் கண்டு, அவர்கள் கலையழகில் விழுந்து சொக்கினார்கள்! பிறகு தாங்களும் கலைஞர்கள் ஆக வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டுக்குச் சென்று நெருக்கத்திலிருந்து கொண்டு (கலையை) அநுபவித் துப் பரம ரசிகர்களானார்கள்! ஆனால் ஒருவனே கலாரசிகனாயிருப்பது சுயநலம் என்று கருதி, இந்தப் பரத நாட்டிய நிபுணர்கள், மேலும் பல பக்தர்களை வசப்படுத்தி கலாரசிகர்களாக்கிக் கொண்டார்கள்! அதாவது தங்கள் நடனக் கலையைப் பொதுவுடைமையாக ஆக்கினார்கள்.

இப்படி நான் மறைவாகக் கூறுவது சிலருக்குப் புரியாதாகையால், இவர்கள் யாவரும் திரௌபதைப் பத்தினிகளானார்கள்! அதாவது பெண் கிருஷ்ண பரமாத்மா ஆனார்கள்!

“ஆலயங்களில் நடனம் செய்வதைக் குற்றமாக்கும் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும். விழாக்களின் போது கோவில்களில் நடனக் கச்சேரிகள் நடைபெற அநுமதிக்க வேண்டும்,” - என்று ஒரு நடனக் கலை ரசகிர் பேசியிருக்கிறார்! தாசி குலப் பாதுகாவலராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர் காலஞ் சென்றுவிட்ட படியால், அவர் இனத்தைச் சேர்ந்த சாம்பமூர்த்தி அய்யர் (சென்னைப் பல்கலைக் கழக இசை இலாகாத் தலைவரான பேராசிரியர்) தான் இப்படிப் பேசியிருக்கிறார்!

ஆமாம்! அன்று “சதிர்க் கச்சேரி” யாக இருந்தது; இன்று “பரத நாட்டிய விழாவாக” ஆகி, பூதேவர் வீடுகளுக்குள் புகுந்து விட்ட தல்லவா? இனி அந்தக் கலைக்கு ஒரு தனி மதிப்புத்தான்!

தடைச் சட்டத்தை ரத்துச் செய்து விட்டால், அக்கிரகார அம்மாமிகளுக்குப் புது வேலை கிடைக்குமல்லவா? அர்ச்சகர் “கடவுளை” க் கவனித்துக் கொள்ளலாம்! அவர் வீட்டுப் பெண்கள் கடவுள் பக்தர்களை நடன ரசிகர்களாக்கலாம்! இல்லையா?

நாள் ஆக ஆக எந்தெந்தத் துறைகளிலெல்லாம் புகுவார்கள், தெரியுமா? சாம்பமூர்த்தி அய்யர் தவுல் வாசிப்பார்! கல்கி அய்யர் ஒத்து ஊதுவார்!

பலே கைக்கார இனமய்யா, இது! “ஆயிரம் நாக்குகள் அதி சேஷனுக்கு” இருப்பதாகச் சொல்வது திரிபுப் பழமொழி! ஆயிரம் நாக்குப் படைத்த அக்கிரகாரம் - என்பதே சரியான பழமொழி!

குத்தூசி குருசாமி (29-12-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It