Periyar with Sarangabani in Singaporeநமது நாட்டில் தற்சமயம் உண்மையானதும் சுயநலமற்றதுமான பொது நல சேவை செய்கின்றவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது நமது நாட்டு மக்களுக்குள் கற்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பு-உயர்வு-தாழ்வை ஒழித்து சமத்துவத்தை ஏற்படுத்தி அவர்களை சுயமரியாதையுடன் வாழச் செய்ய வேண்டியதேயாகும். இதை நாம் பல தடவைகளில் எடுத்துக் காட்டி வந்திருக்கின்றோம்.

எனினும் மக்களுக்குள் சமத்துவமும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டு விட்டால் வாழ முடியாத நிலையில் நமது நாட்டில் சில சமூகமும் சில தனிப்பட்ட மக்களும் இருப்பதால், அவர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையை இவ்வித்தியாசத்தின் மீதே நிலைநிறுத்திக் கொண்டதால், அவர்கள் மற்றவர்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமாக இருந்தே தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டியதான நிலைமை அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை நாம் மறைத்துப் பேசுவதில் பயனில்லை.

எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் இருந்தே வந்து தங்கள் சுயநலத்தின் பொருட்டு மக்களின் நலத்தை பாழ்படுத்தி வந்திருப்பது சரித்திர வாயிலான உண்மையேயாகும்.

எனினும் சமத்துவமும் சுயமரியாதையும் பெற்று முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் சரித்திரங்களைப் பார்ப்போமானால், முதலில் இக்கூட்டத்துடன் போர் புரிந்து அவர்களை அழித்த பிறகுதான் நாட்டினுடைய மக்களுக்கு சமத்துவம் கொடுத்து சுயமரியாதையைக் காப்பாற்றி தங்கள் தங்கள் நாட்டை முன்னுக்கு கொண்டு வந்திருப்பதாக அறியக் கிடக்கும். ஆதலால் நம் நாட்டிலும் பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்கள் இக்கூட்டத்தின் தொல்லைக்கு தலை கொடுத்துத்தான் ஆக வேண்டியவர்களாயிருக்கின்றார்கள் என்பதில் ஆnக்ஷபனை இல்லை.

அநேகமாக மற்ற நாட்டின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் தடை வேலைக்காரர்களாயிருந்து தீர வேண்டியவர்கள் பெரிதும் மதத்தின் பேரிலேயே தங்கள் தடை வேலைகளை செய்து வந்ததாக காணலாம். ஆனால் நமது நாட்டின் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் எதிர்த்து நிற்பவர்கள் பெரிதும் அரசியலின் பேரால் தடைகல்லாய் நிற்கின்றார்கள். மதக்காரர்கள் என்பவர்களைவிட அரசியல்காரர்கள் என்பவர்களே தொல்லை கொடுக்கின்றார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், நமது நாடு இப்போது மதத்திற்கு கட்டுப்பட்டிருப்பதை விட அரசாங்க சட்டத்திற்கே அதிகமாய் கட்டுப்பட்டிருப்பதேயாகும்.

எனவே எந்த சமத்துவமும் சுயமரியாதையும் இப்போது பெரிதும் அரசாங்க சட்டத்தைக் கொண்டே செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. அதனால் நாம் அரசாங்க சட்டமுறையில் சமத்துவம் கேட்கும் போது எதிரிகள் அரசியலின் மூலமாகத்தான் எதிர்த்தாக வேண்டும். எனவே அதை அரசியலின் பேரால் வாழ்பவர்கள்தான் எதிர்த்தாக வேண்டும். அன்றியும் மதக்காரர்களின் எதிர்ப்புக்கு நமது நாட்டின் மதிப்பும் குறைந்து விட்டதால் அரசியலின் பேரால் தடைவேலை செய்பவர்களுக்கு மதக்காரர்களின் பின்பலமும் தாராளமாய் இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது.

நிற்க, நம்முடைய நாட்டிலுள்ள உயர்வு தாழ்வு முதலிய வித்தியாசங்களைப் போக்க நம்மவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அதற்காக பட்ட கஷ்டங்களும் இந்நாட்டில் உள்ள யாவரும் அறிந்ததே யாகும். அவர்கள் வேறு எந்த விதத்திலும் முயற்சி செய்து முடியாததனா லேயேதான் நம் நாட்டு முதிர்ந்த அனுபவசாலிகளும் சுயநலமற்ற பெரியார்களுமாகிய பலர் சேர்ந்து சமத்துவத்தையும் சமசந்தர்ப்பத்தையுமே முக்கியக் கொள்கைகளாய்க் கருதி, அதற்காக நமது நாட்டு அரசியல் தொகுதிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பெறுவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயருடன் ஒரு ஸ்தாபனம் கண்டு, அதற்காகவே பலர் தங்கள் தங்கள் உயிரையும் கொடுத்து வேலை செய்து வந்தார்கள் என்பதும் பலர் உயிரைக் கொடுக்க இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடை மலை.

அதுபோலவே அவ்வியக்கத்தை, நாம் மேலே சொன்னது போல் உயர்வு தாழ்வு வித்தியாசத்தாலேயே தங்கள் வாழ்வையும் பிழைப்பையும் நிலை நிறுத்திக் கொண்ட சமூகமும் அவர்களுக்கு அனுகூலமாய் இருந்து வாழ வேண்டியவர்களான சில தனி நபர்களும் சேர்ந்து அக் கொள்கைகளை ஒப்புக் கொண்டது போல வேஷம் போட்டு பல சூழ்ச்சிகள் செய்து எதிர்த்ததும் இப்போது நேராகவே வெளிவந்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அரசியலின் பேராலும் எதிர்ப்பதும் வெள்ளிடைமலை. இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி அவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஒருவாறு வெற்றி பெற்று இந்தியா முழுவதிலும் அமுலில் இருப்பதும் வெள்ளிடைமலை.

அதனால் அவ்வுரிமை பெற்ற சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒருவாறு சமத்துவமும், சம சந்தர்ப்பமும், சுயமரியாதை உணர்ச்சியும் பெற்றிருப்பதும் வெள்ளிடை மலையேயாகும். ஆனாலும் இப்போது அதை மேலும் கேட்பதை மறுப்பதற்கும் உள்ளதையும் ஒழிப்பதற்கும் மேல் கண்ட கூட்டமே அரசியலின் பேரால் அதாவது சர்வ கட்சி மகாநாட்டின் பேராலும் தேசத்தின் பேராலும் செய்யும் சூழ்ச்சியும் வெள்ளிடை மலையேயாகும்.

நிற்க, தற்காலம் இந்தியாவுக்கு அளிக்கப்படப் போகும் அரசியல் சுதந்திரம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என்பதை விசாரித்தறிவதற்கென்று பிரிட்டிஷ் பார்லிமெண்டாரால் நியமித்தனுப்பிய சைமன் கமிஷனைப் பஹிஷ்கரிப்பது என்கின்ற ஒரு சூழ்ச்சியையும், குறிப்பாக இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டே ஆரம்பித்து மக்களை ஏமாற்றுவதும், தாங்கள் மாத்திரம் தங்களுடைய இஷ்டப்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஒழிந்த ஒரு அரசியல் சுதந்திர சட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, அதைப் பொது ஜனங்களின் பேரால் சைமன் கமிஷனுக்கு தெரியப்படுத்துவதுமான வேலையில் ஈடுபட்டிருப்பதும் வெள்ளிடை மலையேயாகும். இந்த நிலையில் இந்திய மக்களின் பொது அபிப்பிராயம் என்ன என்பதை அக் கமிஷனுக்கு வெளிப்படுத்த பொது ஜனங்களும், குறிப்பாக மகமதியர்களும் கிறிஸ்தவர்களும் பார்ப்பனரல்லாதார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் தீண்டப்படாதவர்கள் என்று விலக்கப்பட்ட மக்களும் மிகுதியும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

எனவே மேற்படி கமீஷன் சென்னைக்கு வரும்போது இக்கூட்டத்தவர்களுக்கு மனமார்ந்ததும் ஆடம்பரமும் பெருமையும் கொண்டதுமான வரவேற்பு அளித்து அவர்களை தங்கள் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டி யதுடன் தங்கள் தங்கள் குறைகளை தாராளமாய் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவர்களாகின்றார்கள் என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்பவர்களில் யாரும் இதுவரை அது கூடாது என்பதற்கு சரியான காரணமோ அல்லது எல்லா மக்களுக்கும் சமத்துவமும் சம சந்தர்ப்பமும் கிடைக்கும் படியான வேறு மார்க்கமோ எடுத்துச் சொன்னவர் யாரும் இல்லை.

பல கூலிகள் மாத்திரம், மக்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதைப் பற்றி “தென்னாட்டில் ஒரு பகுதியில் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேரால் யாரோ சிலர் மாத்திரம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கின்றார்கள். அதுவும் சர்க்கார் தாசர்கள் கேட்கிறார்கள். பொது ஜனங்கள் கேட்கவில்லை” என்கின்ற ஒரு மந்திரத்தையே சொல்லிக் கொண்டு இதை பொது ஜனங்கள் நம்பும்படி பிரசாரம் செய்து இதனாலேயே சைமன் கமிஷன் கண்ணிலும் பொதுஜனங்கள் கண்ணிலும் மண்ணைப் போட்டுத் தெரியாமல் செய்து விடலாம் என்பதாக மனப்பால் குடித்துக் கொண்டு நமது நாட்டில் ஒருவாறு வயிற்றுப் பிழைப்புப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். ஆனால் இவர்களுக்குத் தக்க பதில் கீழ்க்கண்ட வார்த்தைகள் தான். அதாவது, எட்டு கோடி ஜனம் கொண்ட மகமதியர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா? என்பதும், ஐந்து கோடி சன சமூகங்கொண்ட தீண்டாதவர்கள் என்கிறவர்கள் எல்லோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா? என்பதும், பார்ப்பனரல்லாதார் இயக்கம் வகுப்புவாரி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டதா இல்லையா? என்பதும், கிறிஸ்தவர்களும் ஐரோப்பியரும் ஆங்கிலோ இந்தியரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கின்றார்களா இல்லையா என்பதுமேயாகும்.

குறிப்பாக மகமதியரில் மௌலானாக்கள் ஷவ்கத்தலி மகமதலி போன்ற வீரர்கள் சர்க்கார் தாசர்களா என்பதும், தீண்டாதவர்கள் என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட சுமார் 5 1/2 கோடி மக்கள் சர்க்கார் தாசர்களா என்பதும், பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பாலோர் அதாவது திருவாளர்கள் எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல், ஆரியா, எம்.ஏ. தண்டபாணி பிள்ளை, ஈ.வெ. ராமசாமி நாயக்கர், சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போன்ற கோடிக்கணக்கானவர்கள் அதாவது 1 வருஷம் 2 வருஷம் 10 வருஷம், ஒரு தடவை இரண்டு தடவை மூன்று தடவை நான்கு தடவை ஐந்து தடவை தேசத்திற்காக ஜெயிலுக்குப் போனவர்களும், பல வருஷம் இந்த மாகாண காங்கிரஸ் தலைவர்களாகவும், காரியதரிசிகளாகவும், மாகாண காங்கிரஸ், ஜில்லா காங்கிரஸ், தாலூகா காங்கிரஸ் மகாநாடுகளின் தலைவர்களாகவும் இருந்தவர்களும், ஒரு கோடி, இரண்டு கோடி, ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பெரிய ஜமீன்தாரர்களும் 1 லக்ஷம், 2 லக்ஷம் கிஸ்து கொடுக்கக்கூடிய மிராசுதார்களும், ஐம்பதினாயிரம், அறுபதாயிரம் ரூபாய் வருமானவரி கொடுக்கும் வியாபாரிகளும், பெரிய தலைவர்கள் என்று மதிக்கத்தக்கவர்களும், சாதாரண குடியானவர்களுமாகிய மக்கள் கூடிச் செய்யும் தீர்மானமும் மற்றும் அனேக சமூக மகாநாடுகள் செய்யும் தீர்மானமும் சர்க்கார் தாசர்களாலா? என்பதும், இதற்கு எதிரிடையாய் இதன் மூலம் தவிர வேறு மூலத்தில் ஜீவனத்திற்கு மார்க்கமே இல்லையென்று சொல்லக் கூடியவர்களும், சமயம்போல் பேசுகின்றவர்களும், காசு கொடுத்த பக்கம் பேசுகின்றவர்களும், தங்கள் சுயநலத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்களும், இதுவரை ஆயிரக்கணக்கானக் குட்டிக்கரணம் போட்டவர்களும் அவர்களாலேயே மேல்படி நிலையை மறுக்க முடியாதவர்களும் பொது ஜனங்களாகிவிடுவார்களா? என்பதும்தான்.

வார்த்தைகளைப் பேச கிளிப்பிள்ளைக்கும் மைனா குருவிக்கும் கூடத் தெரியலாம். அது இன்ன வார்த்தை என்று உணர்ந்து தன் புத்தியைக் கொண்டு தனக்காகப் பேசுகின்றதா என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயமாகும். ஆதலால் பொது ஜனங்கள் தங்கள் அறிவை இவ்விஷயத்தில் நிதானமாக உபயோகித்து சைமன் கமிஷனிடம் நடந்து கொள்ள வேண்டிய தைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும், சமீபத்தில் செங்கல்பட்டில் கூடப் போகும் மகாநாட்டில் எல்லோரும் கலந்து உண்மையான முடிவைச் செய்து, அதை சைமன் கமிட்டிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

பகிஷ்காரக் கூட்டத்திற்கு சென்னைதான் முதல் முதல் புத்தி கற்பித்த இடமாதலால் அதைப் பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை என்றே கருதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.12.1928)

Pin It