கீற்றில் தேட...

தமிழ்நாடு முதல்வர் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தமிழகத்தின் தொழில் கட்டமைப்புகளை வளர்க்கத் துடிக்கிறார். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனுக்கு ‘உலக மாநாடு’ நடத்த முனைப்புக் காட்டுகிறார். கோயில் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அறநிலையத்துறை முருக பக்தியை மக்களிடம் பரப்புவதில் ஏன் இப்படி முனைப்புக் காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

‘திராவிட மாடல்’ ஆட்சி இந்து விரோதமானது என்ற பார்ப்பனியப் பரப்புரைகளை முறியடித்து அமைச்சர் சேகர்பாபு நடத்திவரும் கோயில் திருப்பணிகளே இதற்கு சரியான பதிலாக இருக்கும் போது இப்போது ஏன் இந்த மாநாடு? என்ற கேள்வியுடன் இந்த மாநாட்டை பரிசீலிப்போம்.

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன் ஆகமப் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறான். அன்றாடம் வேத மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, கும்பாபிஷேகம் என்று வேத சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஆகமப் பிடிக்குள் இருந்து ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்குள் முருகன் கொண்டுவரப்பட்டிருப்பதைக்கூட ஒரு வகையில் ஆகம எதிர்ப்பு தான் என்று கூற வேண்டி இருக்கிறது.

குறிஞ்சி நிலத் தலைவன் முருகன்

பார்ப்பனியம் தான் முருகனை சுப்பிரமணியனாக (சு-பிராமணன், அதாவது சுத்தமான பிராமணனாக) அடையாள மாற்றம் செய்தது என்பதற்கு தமிழ் அறிஞர்கள் ஏராளமானச் சான்றுகளை வழங்குகிறார்கள். இலக்கிய மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார்கள். திராவிடக் கடவுள்களைப் பார்ப்பனர்கள் வைதீகக் கடவுள்களாக மதமாற்றம் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் மயிலை சீனி வெங்கடசாமி. இது பற்றி தமிழ் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

மலையும் மலை சார்ந்த பகுதியும் தான் குறிஞ்சி. அந்த நிலத்தின் தலைவனாக இருந்தவன் தான் முருகன். அவன் கடவுளே அல்ல தமிழர்களின் நடுகல் வைத்து வணங்கும் மரபு வழியில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் வரிசையில் வணங்கப்பட்ட ஒரு தலைவன். ஆதிக்குடி தமிழ் நிலத்தின் தொன்மம்.

முருகன் கையில் உள்ள வேல் வேட்டுவர்களின் வேட்டையாடும் கருவி. முருகனோடு அடையாளப்படுத்தப்படும் மயில் குறிஞ்சி நிலப்பறவை. மயில் மேல் மனிதன் அமர்ந்தால் அது சுமை தாங்காது, மடிந்துவிடும். அதிக தூரம் அந்த பறவையால் பறக்கவும் முடியாது. ஆனாலும் அது குறியீடாக முருகனுடன் இணைக்கப்பட்டது. செங்குத்தான மலைகளில் சுமைகளைத் தாங்கிச் செல்ல முடியாது என்பதால் நீண்டக் கம்புகளின் இரு முனைகளிலும் சுமைகளைக் கட்டித் தோளில் காவடிப் போல் தூக்கிச் சென்றனர் குறிஞ்சி நில மலைவாழ் மக்கள். எனவே முருகனோடு காவடி இணைந்தது.

குறிஞ்சித்திணையின் கருப்பொருளாக இருந்தவைகள் முருகனின் அடையாளங்களாக மாற்றப்பட்டன.

மக்கள் ஒன்று சேர்ந்து நடுகல் தலைவன் முருகனுக்கு ஆடிப்பாடி இயற்கை வழிபாடுகளையே நடத்தி வந்தனர். அதனால் தான் முருகன் கோட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. முருகன் நடுகல்லை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம். கர்பக் கிரகமோ, ஆகமமோ, அர்ச்சனைகளோ அங்கே கிடையாது. இது தமிழ் ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்து.

முருகன் என்ற பெயரை சூட்ட பார்ப்பனர்கள் தயங்குவது ஏன்?

எந்தவொருப் பார்ப்பனனும் முருகன் என்று பெயர் சூட்டிக்கொள்வதில்லை. சுப்பிரமணியன் என்றே பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். சரி, முருகன் என்ற தமிழ் மூதாதை எப்படி சு-பிராமணனாக, சுப்பிரமணியன் என்ற வைதீகக் கடவுளாக மாற்றப்பட்டான்?

பவுத்தமும், சமணமும் வேதப் பார்ப்பனியத்தை எதிர்த்தது. திராவிடத்தில் செல்வாக்கோடு வளர்ந்தன, வைதீகமோ வலுவிழந்தது. இந்தச் சவாலை சந்திப்பதற்காகப் பார்ப்பனியம் சதித் திட்டம் ஒன்றைத் தீட்டியது. தமிழர்களின் நடுகல் வழிப்பாட்டை வேத மதத்திற்குள் உள்ளிழுப்பதற்காகப் புராணக் கட்டுக்கதைகளை உருவாக்கினார்கள். 6 கை, 12 தலை, 18 கண் என்று முருகனின் உருவத்தையே மாற்றினார்கள். செயற்கை நுண்ணறிவு இல்லாதப் புராணக்காலத்திலேயே இப்படி நடந்துள்ளது.

அடுத்ததாக சிவனுக்கும் - பார்வதிக்கும் பிறந்தவன் தான் முருகன் என்று பிறப்புச் சான்றிதழையே தயாரித்தார்கள். அந்தப் பிறப்புக்கு மக்களின் மூடத்தனத்தைப் பயன்படுத்தினார்கள். வரலாறுகளைக் கற்பிதங்களோடு (Fantasy) இணைக்கும் இன்றையத் திரைப்படங்களின் முன்னோடிகளே இவர்கள் என்று கூறலாம்.

முருகன், சிவனுக்கும் - பார்வதிக்கும் பிறந்தவன். சிவனின் நெற்றியில் மூன்றாவது கண் ஒன்று இருந்தது. அது சுட்டெரிக்கும் சக்திக் கொண்டது. இந்தக் கண்ணில் இருந்து 6 விந்துத்துளிகள் நெருப்பு என்ற அக்னி பகவான் மீது விழுந்தது. அந்த விந்துக்கள் நெருப்பில் பொசுங்கிவிடாமல் தடுப்பதற்காக விந்துவை வாய் மூலமாக விழுங்கிக் கொண்டான் அக்னி பகவான். விழுங்கிய விந்துவை தர்ப்பைப்புல் நிறைந்த ‘சரவணக்’ காட்டுக்குள் சென்றுத் துப்பினான். அப்போது 6 குழந்தைகள் பிறந்தன. பிறகு 6 குழந்தைகளும் ஒரே குழந்தையாக உருவெடுத்தது. அவன் தான் ‘ஸ்கந்தன்’

குறிஞ்சி நிலத்தலைவன் ஸ்கந்தனாக சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பிறகு நடந்தது என்ன? ரஜினியும் விஜய்யும் பழிவாங்க நடத்தும் இரத்தக்கறை சினிமாக் காட்சிகளைப் போலக் கதைகளை உருவாக்கினார்கள். தேவ - அசுரப் போரில் பார்ப்பனியத்தை எதிர்த்த அசுரர்களைப் போல முருகன் இவர்களால் களமிறக்கப்பட்டான்.

சூர பத்மன் என்ற பார்ப்பனிய எதிர்ப்பு அசுரனை முருகன் ‘சம்ஹாரம்’ செய்தான். சூர பத்மன் பிராமணர்களை மதிக்க மறுத்தான் என்பது குற்றச்சாட்டு. முருகன் சூரபத்மனை இரண்டாக பிளந்தான். அதன் ஒரு பகுதி மயில் ஆனது, மறு பகுதி சேவல் ஆனது. உயர்திணை மனிதனை அஃறிணை பறவைகளாக்கி அவமதிக்கும் இந்தக் கொலைத் திருவிழா இப்போது ‘சூர சம்ஹாரம்’ என்ற பெயரில் திருச்செந்தூரில் அரங்கேற்றப்படுகிறது. இந்தக் கொலைக் களத்திற்கு சட்டம் அனுமதி தருகிறது. அழிந்தது சூரபத்மன் மட்டும் தானா? ஏமஊடம் என்ற ஊரில் வாழ்ந்த அசுரர்கள், அவர்களின் குழந்தைகள் அனைவரையும் கடலில் மூழ்கடித்து சாகடிக்கப்பட்டனர்.

வயநாடு நிலச்சரிவைப் போல அன்று பார்ப்பனர்கள் அரங்கேற்றிய கடல் மூழ்கடிப்பு அது. இந்தக் கொடூரத்தை கொண்டாட்டமாக்கியது தான் மிகப்பெரும் கொடுமை. நரகாசூரன் கொலையைத் தீபாவளியாகவும், பத்மாசூரன் மற்றும் அசுரர்கள் கொலையை சூரசம்ஹாரமாகவும் கொண்டாடுவதை ஒரு நாகரீகமான சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா?

அடையாள மாற்றம் செய்யப்பட்ட முருகன்

உருமாற்றம் - மதமாற்றம் - பெயர் மாற்றத்துடன் இதை விட்டார்களா என்றால் இல்லை. குடும்பத்தின் அடையாளங்களையும் அவர்கள் சிதைத்தார்கள். ‘வள்ளி’ என்ற ஒரு மனைவியுடன் இருந்த முருகனுக்கு ‘தெய்வானை’ என்ற இன்னொருப் பெண்ணையும் மனைவியாக்கினார்கள்.

திருத்தணி - பழனி - நாஞ்சில் குமரக் கோயில் - சுவாமிமலை என்று முருகனுக்கு ஆறுபடை வீடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. ஆறுபடை என்பது எண்ணிக்கையைக் குறிப்பதல்ல, அது ‘மனதை ஆற்றுப்படுத்த தலைவனை நோக்கிச் செல்லல்’ என்பதே பொருள் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள். ஆறுபடைக்கு 6 என்ற எண்ணிக்கையாகத் திரித்து, 6 ஊர்களை முருகனின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றினார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த ஊர்களில் திருத்தணி மற்றும் பழமுதிர்ச் சோலை ஆகியவை செயற்கையாக இணைக்கப்பட்டவையாகும். குன்றுகள் தோறும், பழமுதிர் சோலைகள் தோறும் முருகன் இருப்பான் என்ற பொதுவான கருத்தை உருவாக்கி நான்கு படை வீடுகளை ஆறுபடையாக மாற்றினார்கள். இப்படித்தான் முருகன், ஸ்கந்தனாக, சுப்பிரமணியனாக ஆள்மாறாட்ட மோசடிகளுக்கு உள்ளாகி கடவுளாக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. பழமுதிர்ச் சோலையில் முருகனுக்கு ஆடு வெட்டி வழிபாடு நடந்தது என்று நக்கீரரே பாடுகிறார்.

சுப்பிரமணியனிடம் இருந்து முருகனை மீட்டெடுக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறதா? கருவறை முதல் உச்சநீதிமன்றம் வரையில் பாதுகாப்புகளைக் கொண்டிருக்கும் ஆகமங்களை உடைத்து இந்த மீட்டெடுப்பை வெற்றிபெறச் செய்ய முடியுமா?

மீட்டெடுத்தாலும் வைதீகத்தில் மூழ்கடிக்கப் பட்ட முருகனை வைதீக எதிர்ப்புக்கு இழுத்துவர முடியுமா? எனவேதான் பெரியார் ‘தமிழ் அடையாள மீட்பு முயற்சிகளால் மக்களிடம் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது’ என்றக் கருத்தில் உறுதியாக இருந்து அத்தகைய முயற்சிகளை முற்றாகத் தவிர்த்தார்.

பெரியார் கூறுகிறார்..

“பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்தவிடக்கூடாது” - பெரியார் (குடிஅரசு 10.09.1943)

உலக மாநாட்டிற்கு விமானம் ஏறி உலக நாடுகளில் இருந்து முருக பக்தித் தமிழர்கள் வருகிறார்கள். அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைப்பார்களா?

1. தமிழ் முருகனிடம் தமிழ் வழிபாடு மட்டுமே நடத்த வேண்டும்.

2. பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும்.

3. ஒரு காலத்தில் தமிழ் பண்டாரங்கள் மட்டுமே வழிபாடு நடத்திவந்த பழனிக் கோயில், ‘திருமலை நாயக்கன்’ ஆட்சிக் காலத்தில் அவர்களிடம் இருந்து வழிபாட்டு உரிமைப் பறிக்கப்பட்டு பார்ப்பனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமலை நாயக்கனின் தளபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தான்.

500 ஆண்டுகால பாப்ரி மசூதியை இடித்தார்கள். இராமன் பிறந்த இடம் என்று கூறி ஆதாரங்கள் ஏதும் இல்லாமலேயே உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பெற்று கோயிலையும் கட்டிவிட்டார்கள். ஆனால் பழனி முருகன் கோயில் ஆகமக் கோயில் அல்ல, சித்தர்களின் கோயில். அங்கே பண்டாரங்கள் தான் அர்ச்சகர்கள் என்ற சான்றுகள் இருந்தும் ஏன் மீண்டும் பண்டாரங்களிடம் அர்ச்சகர் உரிமையை வழங்கக்கூடாது?

உலக முருகன் மாநாட்டு நினைவாக அர்ச்சகர் பயிற்சிப் பெற்றுப் பணிக்காகப் பல ஆண்டுகளாக வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு முழுமையாக அர்ச்சகர்ப் பணிக்கான நியமனங்களாவது செய்யப்படுமா?

- விடுதலை இராசேந்திரன்