பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்பட வில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை.

24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும் பணியாற்றுகிறார்கள். 24 அமைச்சகங்கள், மொத்தமுள்ள 37 அரசுத்துறைகளில் 24 துறைகள், சட்ட அங்கீகாரம் பெற்ற 8 அமைப்புகள் (பிரதமர் அலுவலகம், குடியரசுத் தவைர் செயலகம், பொருளாதாரம் தொடர்பான அமைப்புகள்) உள்ளிட்ட 54 நிறுவனங்கள், துறைகள் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் குரூப் ‘ஏ’ பிரிவில் 14 சதவீதம். ‘பி’, ‘சி’, ‘டி’ பிரிவுகளில் முறையே 15, 17, 18 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவைக்கான செயலகத்தில் (Cabinet Secretariat) 64 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில், ஒருவர்கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் இல்லை. 60 பேர் திறந்த போட்டியில் வந்தவர்கள் (இவர்கள் பார்ப்பனர், உயர் ஜாதியினர்) பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்தவர்கள் 4 பேர் மட்டுமே. தகவல் மற்றும் ஒலி/ ஒளி பரப்பு அமைச்சகத்தில் மொத்தமுள்ள 503 ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் 25 பேர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்கள்.

2015ஆம் ஆண்டில் இதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 12 அமைச்சகங்கள் 10அரசுத் துறைகள், மற்றும் சட்ட அங்கீகாரமுள்ள நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்களின் எண்ணிக்கை ‘ஏ’ பிரிவில் 10.71 சதவீதம், ‘பி’ பிரிவில் 7-18 சதவீதம்.

2013ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலின்படி 55 மத்திய அரசின் கீழ் உள்ள அமைப்புகளில் பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை 9.43 சதவீதம் மட்டுமே.

சென்னையைச் சார்ந்த சமூக செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், இந்த தகவல்களைப் பெற்றுள்ளார். முனைவர் முரளிதரன், சென்னை அய்.அய்.டி.யில் படித்து, முனைவர் பட்டம் பெற்றவர். சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தக் காரணத்தால் அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகம் பழி வாங்கியது. அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே அவர் நுழையக் கூடாது என்று உயர்நீதிமன்றம் வழியாக அய்.அய்.டி. நிர்வாகம் தடை வாங்கியது. தொடர்ந்து பார்ப்பன நிறுவவனங்களுக்கு எதிராக அவர் போராடி வருகிறார். ஏற்கனவே அய்.அய்.டி. நிறுவனங்களில் இடஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் முனைவர் முரளீதரன்.

இப்போது மத்திய வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் தந்துள்ள தகவல்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

“இப்போது தரப்பட்டிருக்கும் தகவல்கள் கூட முழுமையானவை அல்ல. இவற்றில் 11 அமைச்சகங்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டன. இந்தத் துறைகள்தான் வேலை வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும் துறைகள், தொடர்வண்டித் துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித்துறை போன்றவை தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டன. மத்திய அரசின் மொத்த வேலை வாய்ப்புகளில் 91.25 சதவீத வேலை வாய்ப்புகள் இந்தத் துறைகளில்தான் இருக்கின்றன. இப்போது தகவல் தெரிவித்துள்ள 24 அமைச்சகங்களில் மொத்த வேலைகளில் 8.75 சதவீதம் வேலைகள் மட்டுமே உள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொடர்வண்டித் துறையில் மத்திய அரசுப் பணியாளர்களாக பதிவு செய்தவர்கள் 13,28,199. இவர்கள் நிரந்தரப் பணியாளர்கள். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனப் பிரிவினர் குறித்த எந்தத் தகவலும் இல்லை.

மத்திய அரசுப் பணிகளில் 31 இலட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், இப்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாம் பெற்றிருக்கும் தகவல் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 735 ஊழியர்களைப் பற்றி மட்டுமே.

2015ஆம் ஆண்டில், நான் தகவல் கேட்டபோது, 40 அமைச்சகங்கள், 48 மத்திய அரசுத் துறைகள், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக் குறித்து, தகவல் தர மறுத்து விட்டன.

மத்திய வேலை வாய்ப்பு, பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஒரு தாக்கீதை பிறப்பித்தது. (O.M. No.43011.10.2002 Estt. Res) இதன்படி ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் பட்டியல் இனம், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப் பட்டோர் எண்ணிக்கை பிரதிநிதித்துவம் குறித்தத் தகவலைத் தெரிவிப்பது கட்டாயக் கடமை’ என்று இந்த தாக்கீது அறிவுறுத்தியது. ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது.

2013 ஜூன் மாதம் மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகம் விரிவான ஒரு தாக்கீதைப் பிறப்பித்தது. (No.36038/1(i) 2013 Estt. Res) அதில் பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோருக்கான நிரப்பப்படாத பணியிடங்களை, விரைவாகக் கண்காணித்து, உயர்மட்ட அளவில் முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியது. 6 மாதத்துக்குள் பணியிடங்களை நிரப்புவதற்கான விரைவான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும். அதற்காகத் தேவைப்பட்டால், விதிகளிலிருந்து விலக்குகளை வழங்கலாம் என்றும் தாக்கீது அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து மத்திய வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் நாடாளுமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சமூக நீதித் துறைஅமைச்சகத்தின் பரிந்துரைப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான முனைப்பான செயல்பாடுகள் 2014 நவம்பர் 11இல் தொடங்கி, ஆகஸ்டு 2016க்குள் முடிக்கப்படும் என்றார்.

இதற்கான செயல் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. அந்த செயல் திட்டங்கள் செயலாக்கம் பெற்றிருக்குமேயானால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. தாக்கீதுகளோ, செயல் திட்டங்களோ முழுமையாக அலட்சியப்படுத்தப் பட்டதைத்தான் இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன, என்றார் முனைவர் முரளீதரன்.

“காலி இடங்களை நிரப்புவதில் சுழற்சி முறை பின்பற்றப்படாதது தான் இதற்குக் காரணம்” என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன் கூறினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் செயலாளர் கே. தனசேகர் கூறுகையில், “23 வயதில் மத்திய அரசுப் பணியில் நுழையும் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே பதவி உயர்வுக்கான தகுதிகளைப் பெற்று, உதவி செயலாளர் அல்லது கீழ்நிலை செயலாளர் நிலைக்கு பதவி உயர முடியும். பலரும் 30 வயதில்தான் பணியில் சேருவதால் அவர்கள் ஓய்வு பெறும்போது கீழ்நிலை செயலாளர் என்ற நிலையைத் தாண்ட முடியவில்லை; இட ஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படாததே இதற்குக் காரணம்” என்றார்.

இடஒதுக்கீடு சட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் அதிகார மய்யம் பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில் இருப்பதால் சமூகநீதி சட்டங்கள் சவக்குழிக்கு அனுப்பப்படுகின்றன. 

Pin It