கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர்கள் இந்த நாட்டின் பழங்குடி மக்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். அவர்களுக்கு இன்று என்ன பெயர் இருக்கிறது என்றால் சூத்திரர்கள், பஞசமர்கள் என்பதுதான். இந்த நாட்டில் யார் யார் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் தான் திராவிடர்கள். அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால் 100க்கு 97 பேர்கள் இருக்கிறார்கள். உயர் ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் என்று கூறப்படுபவர்கள் 100 க்கு 3 பேர்தான் இருக்கிறார்கள். இவ்வளவு பெரும்பான்மையோராக இருக்கும் நாம் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரராகிய நாம் இந்த நாட்டை ஆண்டவர்களின் பரம்பரையிலே வந்த நாம் சூத்திரர்களாய், பஞ்சமர்களாய் ஆகியிருக்கிறோமே, இந்த இழிநிலையில் ஏன் இருக்க வேண்டும், மனிதர்கள் என்றுதான் இருக்க வேண்டும் என்று நாங்கள் பணி செய்து வருகிறோம்.

நம்முடைய நாட்டில் நாம் இழிந்தவர்களாய் கடைஜாதி மக்களாய் மதத்தால் ஆக்கப்பட்டிருப்பதால் தான் நமக்குப் படிப்பு வசதி இல்லாமல் போய்விட்டது. பார்ப்பான் எந்த ஊரில் இருந்தாலும் அக்ரகாரத்தில் மாடி வீட்டில் வசதியுள்ள இடத்தில் தான் வாழுவான். நம்மவர்களோ நாற்றமடிக்கும் சேரியில்தான் வாழ்ந்து வாடுவார்கள். காரணம் பார்ப்பனர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்பதால் அவர்களுக்குச் சகல வசதிகளும் கிடைக்கிறது. நம்மவர்களுக்கு இழிவின் காரணமாக கொடுமைகள் தான் நடைபெறுகின்றன. இன்றைய சர்க்காரும் அதையேதான் பாதுகாக்கிறது. இன்று பல காங்கிரஸ் தோழர்கள் எனக்கு ஜாதியில்லை என்று பேசலாம். நம் வீட்டுச் சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டுவிடுவான். ஜாதி, பேதம் இல்லை என்று கூறிக் கொண்டு. எனக்குத் தெரியும்.

அந்த காலத்தில் 1920, 24-இல் பஞ்சமர்களின் தண்ணீர் குடிப்பதற்கு என்று அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பணம் வசூலித்து அவர்களுக்குத் தனிக் கிணறு என்று செய்வார்கள். காங்கிரசிலேயிருந்து வெளியே வந்து, நாங்கள் "அவர்களுக்குத் தனிக் கிணறு என்று வைத்து, என்றைக்குமோ அவர்களின் இழி தன்மையை நிலை நிறுத்துகிறாயே" என்று கூப்பாடு போட்டதற்கு அப்புறம்தானே சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதுபோலவே ஆதிதிராவிடர்கள் கும்பிடுவதற்குத் தனிக்கோவில் கட்ட வேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் ஆரம்பித்தார்கள். 

அவர்களுக்கு மட்டும் தனிக்கோயில் என்று வைத்துக் கொண்டு அவர்களை என்றுமே தாழ்த்தி வைக்க முயற்சி செய்ததால் அதையும் நாங்கள் கண்டித்தோம். இன்று மட்டும் என்ன? கோவில்களில் சுங்கக்கேட்டு வரையிலும் தானே நம்மவர்களை விடுகிறார்கள். இன்னமும் தட்டும் மணியும் அவனிடத்திலே. தட்டில் விழும் காசை இடுப்பில் செருகுவதும் அவனே என்றுதானே இருக்கிறது.

ஆகவேதான் நாங்கள், சாதி, பேதங்கள் நம் இழிவுகள் ஒழிய வேண்டுமானால் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு ஆதாரமாயுள்ள கடவுள் மத சாஸ்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம்.

நம்மிலே ஒருத்தியை (கண்ணகியை) பத்தினியாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் புலவர்கள்? அவள் கணவனைத் தாசி வீட்டுக்குப் போகச்சொல்லி கண்ணகி அவனையே நினைத்து வாழச் செய்து, அவளின் துணி, நகை, நட்டு பொருள்களையெல்லாம் கணவனுக்குக் கொடுக்கச் செய்து இப்படியெல்லாம் பல கஷ்டங்கள் படச்செய்து அவளைப் பத்தினியாக்கினார்கள். ஆனால் ஆரியர்கள் அய்வருக்கும் மனைவியாய் இருந்தும் ஆறாவதாகக் காதலித்த பெண்ணை அதாவது நம்மில் அந்த மாதிரி இருந்தால் "குச்சுக்காரி" என்று சொல்லும்படியான பெண்ணாயிருந்தாலும் அவளைப் பத்தினியாக்கியிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் பண்பு அதுதான். நம் பண்பு ஒழுக்கப்பண்பு என்பதால்தான் ஒழுக்கமுடைய கதையைக் கற்பனை செய்தோம். அவர்களுக்கு எவ்வளவு மோசமான குணமாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை அவளைப் பத்தினியாக சித்தரித்துக் காண்பிப்பார்கள்.

இத்ததைய இழிவான பண்புகள் கொண்ட அவர்கள் பூசுரர்கள், உயர்ந்த பண்பாடுடைய நாம் சூத்திரர், பஞ்சமர் என்று கூறுகிறானே என்ன நியாயம்?

நம்மவர்கள் எவ்வளவு பொருள் சம்பாதித்தாலும், மந்திரியானாலும், எம்.எல்.ஏ வானாலும் வேறு எந்தப் பதவிகள் பெற்றாலும் அவர்கள் சூத்திரர்கள்தானே. அவர்களில் எவ்வளவு இழிமகனானாலும் பூசுரர்கள். ஆனால் நம்மை சூத்திரர்களாக்கியிருக்கும் இந்து மத, சாஸ்திரக் கடவுள்களை ஒழித்துவிட்டால் நமக்குப் பணமில்லாவிட்டாலும் பலம் பெற்று வாழலாம். 

பார்ப்பனன் என்ன பணக்காரனா? இல்லையே இருந்தும் வாடாமலர் போன்று வாழுகிறானே. ஆகவே நம்முடைய இழிதன்மை ஒழிய அந்த இழிதன்மைகளுக்கு எவையெவைகள் காரணமாய் இருக்கின்றனவோ அந்த ஆதாரங்களை அழிக்க வேண்டும்.

(தந்தை பெரியார்-29-5-1950)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா